நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Thursday, 3 September 2009

யார் குடியைக் கெடுத்தேன்?

வாடகை வண்டியிலிருந்து இறங்கி, அவசரமாக கொழும்பு விமான நிலையத்துக்குள் நுழைகிறேன். தோளில் நான் வழமையாகப் பாடசாலைக்கு எடுத்துச் செல்லும் கறுப்புத் தோள்பை . அது மட்டும் தான். வேறு பெட்டி எதுவும் கிடையாது. மூன்று, நான்கு பெட்டிகளைத் தள்ளுவண்டியில் ஏற்றி , கஷ்டப் பட்டுத் தள்ளிக் கொண்டு வரிசையில் நிற்கும் மற்றவர்களுடன் நானும் ஒருத்தியாகச் சேர்ந்து கொள்கிறேன். எங்கள் தெருவிலேயே வசித்த எங்கள் மாமா வீட்டில் ஒரு இரவு தங்குவதற்கு ஒரு பெட்டி நிறம்ப உடுப்பு, அது இது என்று சுமக்கும் நான் , இன்று .....மாற்றுவதற்கு ஒரு உடை தன்னும் இல்லாமல் ,இந்த ஊரை விட்டு, வீட்டை விட்டு, வேலையை விட்டு, சொந்தங்கள், நட்புகள் எல்லாவற்றையும் விட்டு ஓடிக் கொண்டிருக்கிறேன். என் தோள் பையிலிருப்பவை எனது ஒரு சில நகைகளும், நான் பெற்ற சான்றிதள்களும் தான். தற்சமயம் இவை மட்டும் தான் என் சொத்து . எனக்கே இப்போ நடப்பவை கனவா? அல்லது நனவா என்று தெரியவில்லை.

அழவும் தோன்றாமல் , சிரிக்கவும் முடியாமல் அலமந்துபோய் , என்னைச் சுற்றி எதையோ அவசரமாகப் பிடிக்கப் பறக்கும் அந்த மனித கூட்டத்தை வியப்புடன் அவதானிக்கிறேன். இவர்கள் எவருமே என்னைப் போல் வேதனையுடன், முடிவில்லாத பிரச்சனைகளை மூட்டை கட்டிக் கொண்டு இங்கு வந்த்திருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. பதற வேண்டியவள் நான்....மிக நிதானமாக கடவுச் சீட்டை நீட்டுகிறேன். லக்கேஜ் கேட்ட போது ' ஒன்றுமில்லை' என்கிறேன். எல்லோரும் என்னை விசித்திரமாகப் பார்ப்பது போல் ஒரு உணர்வு. நானிருக்கும் நிலைமையில் இதெல்லாம் ஒரு பொருட்டாகவே எனக்குத் தோன்றவில்லை. கையில்தான் பாரமில்லையே தவிர ,என் மனதில் பெரும் பாரத்தைச் சுமக்க முடியாமல் நான் சுமந்து நிற்பது, அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது.

செக்கின் ( check in ) பண்ணிய பின்னர் , பயணிகள் காத்திருக்கும் இடத்தில் தங்கியிருப்பது முள்மேல் இருப்பது போன்ற அவஸ்தையைத் தருகிறது. மெல்ல நகரும் அந்தக் கடிகாரத்தின் நிமிட முள்ளை வெறித்த வண்ணம் உக்காந்த்திருக்கிறேன். '' கடவுளே, இந்த விமானத்துக்குள் நான் ஏறும் மட்டும் என்னைத் தெரிந்தவர்கள் எவரும் இங்கு வந்து விடக் கூடாது . எந்த அசம்பாவிதமும் நடந்திடக் கூடாது'' என்று வேண்டிக் கொள்கிறேன். என் நிலைமையைக் காணக் கடவுளுக்குப் பொறுக்க வில்லை போல் இருக்கிறது. அவர் காப்பாற்றி விட்டார்.

ஒருபடியாக விமானத்தில் ஏறி , என் ஜன்னல் பக்க இருக்கையில் அமர்ந்து விட்டேன். இன்னும் ஒரு சில நிமிடங்களில் விமானம் பறக்கப் போகிறது. சில மணி நேரத்தில் நான் சென்னை போய் சேர்ந்து விடுவேன். ஜன்னலூடாக எட்டிப் பார்த்த போது ஏனோ காட்சிகள் மனதைப் பிசைகின்றன. இனிமேல் எப்போ? எப்படி?என் நாட்டில் காலடி வைக்கப் போகிறேன்? என்ற கேள்வி விஸ்வரூபமெடுத்து என்முன்னே நிற்கிறது. என் இருபத்தி எட்டு வருட நினைவுகளும், உறவுகளும், கனவுகளும் சிறிது சிறிதாகி , பின்னர் முற்றாக மறைந்த போது என் இதயத்தை யாரோ பிடுந்கியெடுத்தது போன்ற உணர்வில் ........வலியினால் துடித்துப் போகிறேன். வாய் விட்டு அழுது விடக் கூடாதென்று என் வாயை இறுகப் பொத்திக் கொள்கிறேன். ஆனாலும் என் கண்களின் பெருககைத் தவிர்க்க முடியவில்லை. என் பக்கத்திலிருந்த மனிதர் மிகவும் இங்கிதமானவர் போல் தெரிகிறது. கதை கொடுத்து என்னைக் கலக்காமல் ஒரு புத்தகத்துக்குள் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டிருக்கிறார். நடப்பவை எல்லாமே ஒரு கனவாக இருக்கக் கூடாதா ?என்று மனது ஏங்குகிறது. தப்புப் பண்ணுகிறோமோ என்று அடிமனது வேகுகிறது. ' இல்லை, இல்லவே இல்லை , இதைவிட நல்ல முடிவு கிடையாது' என்று மனச் சாட்சி கதறுகிறது. என் மனதுக்குள் இப்படி ஒரு பிரளயமே நடக்கிறது. இந்த உணர்வுகள் அத்தனையையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்து நடந்தவைகளை மெதுவாக அசை போடுகிறேன்.

நான் ஒரு பாடசாலை ஆசிரியை. வழமைபோல் பாடசாலைக்குப் போவது போல் ,எனக்குப் பிடித்த நீலச் சேலையைக் கட்டிக் கொண்டு , தயாராக மறைத்து வைத்திருந்த என் சான்றிதழ்களையும், விமானச் சீட்டையும் தோள்பையில் அவசரமாகத் திணித்துக் கொண்டு புறப்பட்டேன் . என் கணவர் வாசல் வரை வந்து விடை கொடுத்தார் . குற்ற உணர்வில் குறுகிப் போய் அவர் கண்களைச் சந்த்திக்காமல் தவிர்த்தேன் . தெருமுனையில் முன்னரே ஆயத்தப் படுத்திய வாடகைக் காரில் ஏறி விமான நிலையம் வந்து விட்டேன். என் கணவரை வெறுத்து , கோபித்துக் கொண்டு வீட்டையும் , நாட்டையும் விட்டு ஓடும் மண்டு என்றுதானே நினைக்கிறீர்கள். இல்லை....தப்பு. அப்படி இருந்தால் கூட பரவாயில்லை என்று நான் நினைத்ததுண்டு. என் கணவர் என் மேல் உயிரையே வைத்திருக்கிறார். எனக்கு வரும் கணவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று நான் கனவு கண்டேனோ, அதில் ஒரு குறை தன்னும் இல்லாமல் அவர் அமைந்ததில் நான் பூரித்துப் போனவள்.  பதினான்கு  மாதத்துக்கு முன்பு , எங்கள் கல்யாணத்துக்கு வந்தவர்கள் எங்கள் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து பேசித் தீர்த்ததோ! என்னமோ! கண்ணே பட்டதுபோல் விதி எங்களை இப்படி சித்திரை வதை பண்ணி சின்னா பின்னமாக்கி விட்டது.

எங்கள் திருமணம் பெற்றவர்களால் நிச்சயிக்கப் பட்ட பின்னர், அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரது உயர்ந்த குணங்களை அறிந்து நான் மகிழ்ந்து போனேன். என்னைப் போல் கல கலவென பேசா விட்டாலும், அவருக்கே உரித்தான அந்த நகைச் சுவையும், மிடுக்கான நடையும், சரளமாகப் பேசிய ஆங்கிலமும், முதல் சந்திப்பிலேயே என்னைக் கவர்ந்து விட்டன. ஆனால் எங்கள் கல்யாணத்தன்று இவர் முகத்தில் தெரிந்த குழப்பமும் , கலவரமும் என்னை திகைக்க வைத்தன . என்ன காரணமாக இருக்கும் என்ற சிந்தனையில் என்றைய தினத்தின் முழுமையான இன்பத்தை என்னால் அனுபவிக்க முடியவில்லை.

கல்யாண சந்தடியெல்லாம் முடிந்த பின்னர் அவரிடம் கேட்டேன். ஒன்றுமில்லை என்று மழுப்பப் பார்த்தார். நான் விடவில்லை. அப்போ தயங்கித் தயங்கி என்னிடம் ஒரு ரகசியம் சொன்னார். ஐந்து வருடங்களுக்கு முன்னால் நாட்டுக் கலவரத்தில், காடையர்கள் அவர் வீட்டையும் , அன்றுதான் புதிதாக வாங்கிய மோட்டார் வண்டியையும் சேர்த்து எரிப்பதை , பக்கத்து வீட்டு சிங்கள  நண்பர் வீட்டில் ஒழிந்திருந்து தன் கண்ணால் பார்த்து, அதிர்ந்து, கதறவும் பயந்து தவித்த பின்னர் , அவர் அவராகவே இல்லாமல் பித்துப் பிடித்ததுபோல் ஆகி விட்டாராம் என்று சொன்னார். அதை அவரது பெற்றவர்களும் உணர்ந்தபோது, டாக்டரின் உதவியால் கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய நிலைமைக்குத் திரும்பினார் என்றும் சொன்னார். இந்த விடயத்தை எப்படியும் திருமணத்தின் முன் எனக்குச் சொல்ல வேண்டும் என்று தவித்திருக்கிறார். பெற்றவர்கள் சொல்ல வேண்டாம் என்று தடுத்து விட்டிருக்கிறார்கள். அதனால் தான் கலவரமான முகத்துடன் இருந்திரு க்கிறார். நான் இதை அறிந்து நெகிழ்ந்து போனேன். இப்படி எனக்கு நடந்திருந்தால் நான் பைத்தியமாகவே போயிருப்பேன் என்று எனக்குத் தோன்றியது. அவர் மன நோயாளியாகி, சகல நிலைமைக்குத் திரும்பியதற்கு அவரது மனத் திடம்தான் காரணம் என்று நினைத்துக் கொண்டேன். அவர் கைகளைப் பரிவுடன் பற்றி ' இனி இதைப் பற்றி நீங்கள் கதைக்கக் கூடாது' என்று சொன்னேன். இந்த விடயத்தைப் பற்றி நான் என் குடும்பத்தவர்களுக்கு மூச்சு விடவில்லை. இதை அவர்களிடம் சொன்னால் இந்த அற்ப விடயத்தை பெரிதாக்கி ஒரு பூகம்பமே உருவாகியிருக்கும். எங்கள் வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் வந்து விடக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டேன்.

( விரைவில் தொடரும்)


38 comments:

ஜீவன் said...

என்ன சொல்வது என தெரிய வில்லை....! இனி நடப்பது எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும் ! உங்களுக்கும் மற்றும் நம்மவர்களுக்கும்.......!

Anonymous said...

ungallukku nallathe nadukkum

நட்புடன் ஜமால் said...

ரொம்ப நேரம் யோசிச்சேங்க

இது என்னவென்று விளங்கிடவே கன நேரம் ஆனது.

யாவும் நன்மையாய் அமைய எமது பிரார்த்தனைகளும்

எம்.எம்.அப்துல்லா said...

என்னவென்று புரியவில்லை.இறைவனை வேண்டுகின்றேன்.

வெ.இராதாகிருஷ்ணன் said...

அழகிய எழுத்து நடை. உண்மையோ என எண்ண வைக்கிறது. உண்மையாகவே இருக்கக் கூடாது என்றே தோன்றுகிறது. சிறுகதை என்றல்லவா இருந்தது?

இந்த நிலை எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என்பது போல் எழுதப்பட்ட வரிகள். கணவ்ரின் மேல் கொண்டுள்ள அன்பு என மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டிருப்பதில் இழையோடிக் கொண்டிருக்கும் வேதனை தெரிகிறது.

தொடருங்கள்.

ஜெஸ்வந்தி said...

//ஜீவன் said...
என்ன சொல்வது என தெரிய வில்லை....! இனி நடப்பது எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும் ! உங்களுக்கும் மற்றும் நம்மவர்களுக்கும்.......!//

உங்கள் நெகிழ்வான கருத்துக்கு நன்றி ஜீவன்..

ஜெஸ்வந்தி said...

//Anonymous said...
ungallukku nallathe nadukkum//

உங்கள் கருத்துக்கு நன்றி அனானி நண்பரே.

யாழினி said...

இது உண்மைக் கதையோ ஜெஸ்வந்தி, இல்லைத் தானே? உண்மையில் உங்களுக்கு இது போன்ற சம்பவம் நிகழ்ந்திருக்கவே கூடாது. மனதுக்கு பாரமாக இருக்கிறது!

ஹேமா said...

ஜெஸி தொடர்கதையா என்று கேட்டபடியே காலையிலும் வாசித்துவிட்டுத் திரும்பவும் இப்போ வந்து வாசிக்கிறேன்.ஒன்றுமே சொல்லாமல் போகிறேன்.தொடருங்கள்.

பா.ராஜாராம் said...

ரொம்ப நெகிழ்வான தொடக்கம் தோழி...சீக்கிரம் வரட்டும் இரண்டாவதும்,விடியலும் ஜெஸ்..

பிரியமுடன்...வசந்த் said...

இது உண்மையா இருக்க கூடாது இறைவா.....

Anonymous said...

நினைவுகளுக்குள் ஊடுருவும் வரை வலி வலி வலி...பின் என்ன நடந்திருக்கும் என திக் திக் திக்...ஒரு கதையை இப்படி இயல்பாய் உண்மை சம்பவம் போன்ற நடையில் சிறப்பாக கொண்டு சென்று இருக்கிறாய் ஜெஸ்.....

R.Gopi said...

//ஒரு இரவு தங்குவதற்கு ஒரு பெட்டி நிறம்ப உடுப்பு, அது இது என்று சுமக்கும் நான் , இன்று .....மாற்றுவதற்கு ஒரு உடை தன்னும் இல்லாமல் ,இந்த ஊரை விட்டு, வீட்டை விட்டு, வேலையை விட்டு, சொந்தங்கள், நட்புகள் எல்லாவற்றையும் விட்டு ஓடிக் கொண்டிருக்கிறேன்.//

படிக்கறப்போவே மனசு ரொம்ப கனக்குது ஜெஸ்....

//எனக்கே இப்போ நடப்பவை கனவா? அல்லது நனவா என்று தெரியவில்லை. //

க‌ன‌வாவே இருந்திருக்க‌லாம் ...

//கையில்தான் பாரமில்லையே தவிர ,என் மனதில் பெரும் பாரத்தைச் சுமக்க முடியாமல் நான் சுமந்து நிற்பது, அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது.//

மிக‌ ச‌ரி...

ஒவ்வொருவ‌ர் வாழ்விலும் தான் எத்தனை, எத்த‌னை சோக‌ம், ஏமாற்ற‌ம்.... இவை அனைத்தையும் தாங்கிக்கொண்டு தானே வாழ்க்கை வ‌ண்டி ஓடுகிற‌து...

வாழ்வில் விரைவில் விடிய‌ல் வ‌ர அந்த‌ ஆண்ட‌வ‌னை வேண்டுகிறேன்...

Kesavan said...

நல்லவை நடக்கட்டும், உங்களுக்கு இறை துணை இருக்கட்டும்.

ஜெஸ்வந்தி said...

//நட்புடன் ஜமால் said...
ரொம்ப நேரம் யோசிச்சேங்க
இது என்னவென்று விளங்கிடவே கன நேரம் ஆனது. யாவும் நன்மையாய் அமைய எமது பிரார்த்தனைகளும்//

வாங்க ஜமால். உங்களுக்குப் புரிந்ததில் மகிழ்ச்சி.ரசித்துப் படிப்பதற்கு நன்றி.

ஜெஸ்வந்தி said...

//எம்.எம்.அப்துல்லா said...
என்னவென்று புரியவில்லை.இறைவனை வேண்டுகின்றேன்.//

வாங்க அப்துல்லா ! கதைக்கெல்லாம் போய் கடவுளைத் தொந்தரவு பண்ணாதீர்கள். அவர் பார்க்க வேண்டிய அலுவல் இந்த உலகத்தில் எத்தனை கிடக்குது. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே..

ஜெஸ்வந்தி said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...
அழகிய எழுத்து நடை. உண்மையோ என எண்ண வைக்கிறது. உண்மையாகவே இருக்கக் கூடாது என்றே தோன்றுகிறது. சிறுகதை என்றல்லவா இருந்தது?
இந்த நிலை எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என்பது போல் எழுதப்பட்ட வரிகள். கணவ்ரின் மேல் கொண்டுள்ள அன்பு என மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டிருப்பதில் இழையோடிக் கொண்டிருக்கும் வேதனை தெரிகிறது.
தொடருங்கள்.//

உங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரே. என் கதை யதாத்தமாய் இருப்பதையிட்டு மகிழ்ச்சி.

ஜெஸ்வந்தி said...

//யாழினி said...
இது உண்மைக் கதையோ ஜெஸ்வந்தி, இல்லைத் தானே? உண்மையில் உங்களுக்கு இது போன்ற சம்பவம் நிகழ்ந்திருக்கவே கூடாது. மனதுக்கு பாரமாக இருக்கிறது!//

வாங்க தோழி, உங்கள் முதல் வருகை என்று நினைக்கிறேன். எனது முன்னைய கதைகளைப் படித்தவர்கள் கூட அது என் கதை தானோ என்று தான் நினைத்தார்கள்.
நீங்கள் இப்படி நினைத்ததில் எனக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை. முடிவையும் வந்து படியுங்கள்.

ஜெஸ்வந்தி said...

//ஹேமா said...
ஜெஸி தொடர்கதையா என்று கேட்டபடியே காலையிலும் வாசித்துவிட்டுத் திரும்பவும் இப்போ வந்து வாசிக்கிறேன்.ஒன்றுமே சொல்லாமல் போகிறேன்.தொடருங்கள்.//

வாங்க தோழி, இரண்டு தடவை படித்தும் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லையா உங்களுக்கு? கதை புரியாத மாதிரி எழுதி விட்டேனா? அல்லது முடிவு தெரிந்தால் தான் பாஸ் மார்க்ஸ் கிடைக்குமா? ஹா ஹா

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

ஜெஸ்வந்தி said...

//பா.ராஜாராம் said...
ரொம்ப நெகிழ்வான தொடக்கம் தோழி...சீக்கிரம் வரட்டும் இரண்டாவதும்,விடியலும் ஜெஸ்..//

வரவுக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி ராஜாராம். தொடக்கம் பிடித்திருந்தால் காணும் அதுதானே கதையின் முடிவும். விரைவில் தொடர்வேன்.

ஜெஸ்வந்தி said...

//பிரியமுடன்...வசந்த் said...
இது உண்மையா இருக்க கூடாது இறைவா.....//

எப்போ வசந்த் இப்படி உங்களுக்கு கடவுள் மேல் அதீத நம்பிக்கை வந்தது? என்ன பண்ணுவது? சில சமயம் இறைவன் ரெஸ்ட் எடுக்கும் போது பல விடயங்கள் நடந்து முடிந்து விடுகின்றனவே!

ஜெஸ்வந்தி said...

//தமிழரசி said...
நினைவுகளுக்குள் ஊடுருவும் வரை வலி வலி வலி...பின் என்ன நடந்திருக்கும் என திக் திக் திக்...ஒரு கதையை இப்படி இயல்பாய் உண்மை சம்பவம் போன்ற நடையில் சிறப்பாக கொண்டு சென்று இருக்கிறாய் ஜெஸ்.....//

வாங்க தமிழ், கதை பிடித்திருக்கிறதென்று தெரிகிறது. என் அடுத்த பதிவு வருமட்டும் உங்களுக்குத் திக் திக் என்றிருக்கப் போகிறதே!

தமிழ் முல்லை said...

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...!!

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நெகிழ்ச்சியாவும், அதே சமயம் ஒரு பயமும் இருக்கிறது. அடுத்த பகுதி விரைவில் வரட்டும் தோழி

ஜெஸ்வந்தி said...

/R.Gopi said...
/ஒரு இரவு தங்குவதற்கு ஒரு பெட்டி நிறம்ப உடுப்பு, அது இது என்று சுமக்கும் நான் , இன்று .....மாற்றுவதற்கு ஒரு உடை தன்னும் இல்லாமல் ,இந்த ஊரை விட்டு, வீட்டை விட்டு, வேலையை விட்டு, சொந்தங்கள், நட்புகள் எல்லாவற்றையும் விட்டு ஓடிக் கொண்டிருக்கிறேன்./
படிக்கறப்போவே மனசு ரொம்ப கனக்குது ஜெஸ//

எனக்கு எழுதும் போதும் மனது கனக்கத்தான் செய்தது நண்பரே.

ஜெஸ்வந்தி said...

//R.Gopi said...
/கையில்தான் பாரமில்லையே தவிர ,என் மனதில் பெரும் பாரத்தைச் சுமக்க முடியாமல் நான் சுமந்து நிற்பது, அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது./

மிக‌ ச‌ரி...ஒவ்வொருவ‌ர் வாழ்விலும் தான் எத்தனை, எத்த‌னை சோக‌ம், ஏமாற்ற‌ம்.... இவை அனைத்தையும் தாங்கிக்கொண்டு தானே வாழ்க்கை வ‌ண்டி ஓடுகிற‌து...
வாழ்வில் விரைவில் விடிய‌ல் வ‌ர அந்த‌ ஆண்ட‌வ‌னை வேண்டுகிறேன்...//

ஒவ்வொரு வரியையும் ரசித்துப் படித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.மேடும் பள்ளமும் நிறைந்தது தானே இந்த வாழ்க்கைப் பயணம். சிலருக்குப் பள்ளங்கள் சிறிது ஆழமாகி விடுகின்றன. அவ்வளவுதான்.

ஜெஸ்வந்தி said...

//Kesavan said...

நல்லவை நடக்கட்டும், உங்களுக்கு இறை துணை இருக்கட்டும்.//

உங்கள் வருகைக்கும் நெகிழ்வான கருத்துக்கும் நன்றி கேசவன்.

ஜெஸ்வந்தி said...

//S.A. நவாஸுதீன் said...
ரொம்ப நெகிழ்ச்சியாவும், அதே சமயம் ஒரு பயமும் இருக்கிறது. அடுத்த பகுதி விரைவில் வரட்டும் தோழி//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. விரைவில் தொடருகிறேன்.

நேசமித்ரன் said...

மிக அற்புதமாக சொல்லப் பட்டிருக்கும் வலி பதிவு செய்யப் பட்டிருக்கும் விதம் அழகு
ஜெஸ்.....

R.Gopi said...

//மேடும் பள்ளமும் நிறைந்தது தானே இந்த வாழ்க்கைப் பயணம். சிலருக்குப் பள்ளங்கள் சிறிது ஆழமாகி விடுகின்றன. அவ்வளவுதான்.//

ரொம்ப நிதர்சனமான உண்மை ஜெஸ்வந்தி.... ஆனாலும், இவ்வளவு ஏற்றத்தாழ்வு ஏன் என்றுதான் எனக்கு இதுவரை புரியவில்லை....

அதுவும், பள்ளம் அதிகமாக ஆழமாவது பார்ப்பின், சோகத்தின் அளவும் அதிகமாகி விடுகிறது..

ஜெஸ்வந்தி said...

//நேசமித்ரன் said...
மிக அற்புதமாக சொல்லப் பட்டிருக்கும் வலி பதிவு செய்யப் பட்டிருக்கும் விதம் அழகு ஜெஸ்.....//

உங்கள் வரவும் கருத்தும் பெரும் உற்சாகம் தருகிறது நேசன்.

Shan Nalliah / GANDHIYIST said...

Great! All are waiting for the rest!
All experiences,observations,feelings,expressions
of a writer can push the world to any corner,if it is written with thrill,sad,happiness,angry, fear,love or hatred! You have the writing ability to push the readers to any corner with shock or thrill!You shd write a book in English about SL-conflict in your view too!

ஜெஸ்வந்தி said...

//Shan Nalliah / GANDHIYIST said...

Great! All are waiting for the rest!
All experiences, observations, feelings, expressions of a writer can push the world to any corner,if it is written with thrill, sadness,happiness,anger, fear,love or hatred! You have the writing ability to push the readers to any corner with shock or thrill!You shd write a book in English about SL-conflict in your view too!

உங்கள் அதீத பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே. நான் ஏதோ மனதுக்குத் தோன்றுவதை எழுதிக் கொண்டிருக்கிறேன். பலர் ரசிப்பதில் மகிழ்ச்சி.

ஷ‌ஃபிக்ஸ் said...

மிகவும் உணர்வுப்பூர்வமா நெகிழ்சியாகவும் இருக்குஇருக்கு. பல வரிகள் மனதை தொட்டது, ஏதோ நேரில நடப்பதை பார்ப்பது போன்று உணர்வு. சோதனைகளை சாதனைகளாக்கி அவள் வெற்றிவாகை சூடட்டும். வாழ்த்துக்கள்.

ஜெஸ்வந்தி said...

//ஷ‌ஃபிக்ஸ் said...
மிகவும் உணர்வுப்பூர்வமா நெகிழ்சியாகவும் இருக்குஇருக்கு. பல வரிகள் மனதை தொட்டது, ஏதோ நேரில நடப்பதை பார்ப்பது போன்று உணர்வு. சோதனைகளை சாதனைகளாக்கி அவள் வெற்றிவாகை சூடட்டும். வாழ்த்துக்கள்.//

வாங்க நண்பரே! உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி .

ஜீவி said...

//கல்யாண சந்தடியெல்லாம் முடிந்த பின்னர் அவரிடம் கேட்டேன். ஒன்றுமில்லை என்று மழுப்பப் பார்த்தார். நான் விடவில்லை. அப்போ தயங்கித் தயங்கி என்னிடம் ஒரு ரகசியம் சொன்னார்.//

ஒரு விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும்.
மனத்தில் தைத்திருக்கிற முள்ளை மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுக்கிற மாதிரி சோகத்தைப் பிழியப் பிழியச் சொல்லத் தெரிந்திருக்கிறது உங்களுக்கு.

//கல்யாண சந்தடியெல்லாம் முடிந்த பின்னர் அவரிடம் கேட்டேன். ஒன்றுமில்லை என்று மழுப்பப் பார்த்தார். நான் விடவில்லை. அப்போ தயங்கித் தயங்கி என்னிடம் ஒரு ரகசியம் சொன்னார்.//

இந்த மாதிரி இடங்களையெல்லாம் சிறு சிறு வார்த்தைகள் கொண்ட உரையாடலாய் அமைத்தால் என்ன என்று தோன்றியது. ஒருவரே சொல்கிற மாதிரியும் இருக்கும். எதிராளியின் உணர்வுகளை அவர்களின் வார்த்தைகளிலேயே வெளிபடுத்திய மாதிரியும் இருக்கும், இல்லையா?.. ஆனால் இந்த முறையில் தனிமனித சோகத்தை சிறப்பாக வெளிப்படுத்த முடியாது என்று நீங்கள் நினைத்தால் அது சரியே.

கதையென்று தான் நினைக்கிறேன். அப்படியென்றால் பாராட்டுகள், சகோதரி!

ஜெஸ்வந்தி said...

//ஜீவி said...

...இந்த மாதிரி இடங்களையெல்லாம் சிறு சிறு வார்த்தைகள் கொண்ட உரையாடலாய் அமைத்தால் என்ன என்று தோன்றியது. ஒருவரே சொல்கிற மாதிரியும் இருக்கும். எதிராளியின் உணர்வுகளை அவர்களின் வார்த்தைகளிலேயே வெளிபடுத்திய மாதிரியும் இருக்கும், இல்லையா?.. ஆனால் இந்த முறையில் தனிமனித சோகத்தை சிறப்பாக வெளிப்படுத்த முடியாது என்று நீங்கள் நினைத்தால் அது சரியே.//

உங்கள் வருகைக்கும் அறிவுரைக்கும் நன்றி ஜீவி. உங்களைப் போல் எனக்கு எழுதத் தெரியாது. அடுத்த பகுதியில் நீங்கள் சொல்வதைப் போல் எழுத முனைகிறேன். தொடர்ந்து வருகை தாருங்கள்.