நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Friday, 26 June 2009

நான் அழுதுகொண்டே சிரிக்கிறேன்!

தூரத்தில் செல்லும் இரயில் சத்தம் என் தூக்கத்தைக் கெடுத்ததால் விழித்துக் கொண்டேன். இப்போதெல்லாம் இப்பிடித்தான் சின்னச் சின்னச் சத்தத்துக்கெல்லாம் என் தூக்கம் கெட்டுப் போகிறது. ஆழ்ந்த தூக்கம் என்றால்தானே விழிப்பது கடினம். மனம் நிறையப் பாரத்தை வைத்துக் கொண்டு அங்கலாய்த்துக் கிடப்பவளுக்கு எங்கே ஆழ்ந்த தூக்கம் வரப் போகிறது. ஜன்னலூடாகப் பார்க்கையில் இன்னும் விடியவில்லை என்று தோன்றுகிறது. முகட்டைப் பார்த்தபடி பழையதை அசை போடுவதை விட எழுந்து ஏதாவது செய்யலாம் என்று நினைத்தாலும் அது அயர்ந்து தூங்கும் என் மகள் பாரதியை எழுப்பிவிடும் என்ற கவலையில் அவள் பக்கம் திரும்புகிறேன். அந்த மங்கிய வெளிச்சத்தில் மெய் மறந்து தூங்கும் கள்ளம் கபடமற்ற அவள் முகத்தை இப்போதான் முதன்முறை பார்ப்பவள்போல் பார்க்கிறேன். இந்த வருடம் அவளுக்கு இருபத்தியாறு வயதாகி விட்டது. அப்படி இவளைக் கரை சேர்க்கப் போகிறேன் என்ற அடிப்பு என் நெஞ்சைக் கனக்க வைத்து என் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க வைக்கிறது.

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு அதி காலையில் என் கணவர் நெஞ்சைப் பிடித்தபடி என்னைத் துயில் எழுப்பியபோது அத்தனை அவசரமாக இந்த உலகத்தை விட்டுப் போகப் போகிறார் என்று நான் கனவிலும் நினைத்திருக்க வில்லை. எல்லாம் சில நிமிடங்களில் நடந்து முடிந்து விட்டது. அந்தத் திடீர் பிரிவு எனக்குத் தந்த அதிர்ச்சி என்னைச் சிறிது காலம் நடைப் பிணமாக ஆக்கி விட்டது. இழவு வீட்டில் குத்துக் கல்லாக அவர் உடலருகில் நான் இருந்ததைப் பற்றி இந்த ஊரே வாய் கிழியக் கதைத்து ஓய்ந்து விட்டது. ஆனால் மெல்ல மெல்ல அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு நான் வாய் விட்டு அழ ஆரம்பித்தபோது நான் ஏன் அழுகிறேன் ? என்று எனக்கே புரியாமல் போனது.

அவருடன் நான் வாழ்ந்த வாழ்க்கை அடிக்கடி என் மனதை ஆக்கிரமித்து அல்லல் படுத்துகிறது. ஊராரயும் உறவினர்களையும் பொறுத்த மட்டில் நாங்கள் பல வருடம் ஒற்றுமையாய் வாழ்ந்த அந்நியோனிய தம்பதிகள். ஆனால் நான் வாழ்ந்தேனா? என்ற கேள்விக்கு பதில் சொல்ல எனக்குத் தெரியாது. ஒன்று மட்டும் சொல்வேன் . என் உணர்ச்சிகளை மறைத்து என்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நான் எந்தக் குறையும் இல்லாமல் இருக்கிறேன் என்று நாடகமாட நான் கற்றுக் கொண்டேன். அதை விட வேறு நல்ல வழி எனக்குத் தெரியவில்லை.

என் பெற்றோரால் எங்கள் திருமணம் நிச்சயிக்கப் பட்டபோது , அவருக்கு இல்லாத குடிப் பழக்கமும் , பெண் சேர்க்கையும் அவர்கள் மனதில் பெரிய ஒரு இடத்தை இலகுவில் பிடித்துக் கொண்டது. ஆனால்கல்யாணமாகி , பெற்றோரைப் பிரிந்து, பல காத தூரத்தில் ,என் மாமனார் வீட்டில் முதல் மருமகளாக நான் குடியேறிய போது என்னைப் பல விடயங்கள் பலமாகத் தாக்கத் தொடங்கின. ஒரு பட்டாம் பூச்சியாகப் பறந்து திரிந்த நான் ஒரு கூட்டுக்குள் அடை பட்டுப் போன உணர்ச்சியில் தினம் தினம் அழுந்திப் போனேன். எனக்கும் ஆசைகளுண்டு எனக்கும் எண்ணங்கள் உண்டு என்ற நினைவே புறக் கணிக்கப் பட்டு ,என் கணவர் எடுக்கும் முடிவுகளுக்கு ' ஆமா' போட்டு என் உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக மடியத் தொடங்கின. அது போதாதென்று , அவர் எடுத்த முடிவுகள் எல்லாமே அவர் தாயாரின் முடிவுகள் என்பதை அறிந்தபோது ,அவற்றிற்கு மாற்று முடிவே கிடையாது என்பதை உணர்ந்தபோது என் வயிற்றுக்குள் பர பர வென்று கரப்பான் பூச்சிகள் ஓடத் தொடங்கின.

பெண்ணை நல்ல இடத்தில் கொடுத்து விட்டோம் என்று பூரித்த பெற்றவர்களைக் கவலைப் படுத்த முடியாமல், அடிக்கடி அவர்கள் வரும்போது உங்கள் பெண் சந்தோஷமாக இருக்கிறாள் என்று காட்ட அவர்கள் முன் நடிக்கத் தொடங்கியது இன்னும் மனதில் நிற்கிறது. வருடங்கள் ஓட அந்த வாழ்க்கை பழகிப் போனது. 'உனக்கு என்ன பிடிக்கும்?'' என்று கேட்க மாட்டாரா! என்று ஏங்கித் தவித்த மனம், எதுவும் எதிர்பாராமல் வாழப் பழகிக் கொண்டது. கடவுள் கிருபையால் மகனும் மகளும் என்று குடும்பம் பெருக அவர்களை வளர்ப்பதில் என் ஆசைகள் மங்கிப் போய்விட்டன.

திடீரென இவர் மறைந்தபோது என் மகன் இருக்கின்றான் என்ற துணிவில் நான் சிறிது சிறிதாக என்னைத் தேற்றிக் கொண்டேன். ஆனால் அவர் பிரிந்து ஒரு வருடம் ஓடமுதல் அவன் தான் விரும்பிய ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு , சாவகாசமாக என் முன் வந்து நின்ற போது, விக்கித்துப் போனேன். அது மட்டுமல்லாமல் தனிக் குடித்தனம் போகிறேன் என்று என்னையும் பாரதியையும் அவன் நட்டாற்றில் விட்டுப் போனபோது அப்பிடியே உடைந்து போனேன். வேறு வழியின்றி பாரதி வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்த பின் , அவள் உழைப்பில் நாங்கள் இருவரும் வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கும் நிலையில், நான் அவள் கல்யாணத்தைப் பற்றி எப்படி நினைத்துப் பார்க்க முடியும். எப்படி எனக்குத் தூக்கம் வரும்?

எனக்கு நினைவிருக்கிறது. எங்களுக்குக் கல்யாணமாகி இரண்டு வருடங்களின் பின்பு நான் என் மகன் ராஜாவைக் கருத் தரித்த போது , பல்வேறு உணர்ச்சிகளால் கொந்தளித்து , குமுறியழுது 'இப்படி அம்மா பிள்ளை ஆம்பிள்ளைகளைப் படைக்காதே ' என்று என்னைப் படைத்த ஆண்டவினிடம் பலமுறை முறையிட்டேன். அந்த உணர்ச்சிக் குமுறல்கள் அந்த ஆண்டவனுக்குக் கேட்டதோ என்னவோ ! ஆனால் நிச்சயம் என் உதரத்தில் இருந்த என் மகனுக்கு கருவிலேயே நன்றாகக் கேட்டிருக்கிறது. இப்போதான் உதரத்தில் இருக்கும் குழந்தை பாட்டெல்லாம் கேட்கும் என்கிறார்களே! அதனால்தான் பெற்றவள் உயிருடன் இருக்கிறாளா? என்று அறியக் கூட நேரமில்லாமல் கட்டியவளே கதியென்று போய் விட்டான்.

இதில் விசித்திரம் என்னவென்றால் என் கணவர் ராஜாவைப் போல் இருந்திருந்தால் அப்போ நான் ' கொடுத்து வைத்தவள் என்று நினைத்திருப்பேனோ? என்னவோ?இப்போ அவன் என மகனாக இருப்பதால் அந்த வேதனையைத் தாங்க முடியாமல் அழுகிறேன். இது எந்த விதத்தில் நியாயம். ஆண்டவன் எவர் முறைப்பாட்டைக் கேட்பான்? என் பிள்ளையை எனக்குக் குடு என்று அழும் தாய்க்கா? இல்லை , என் கணவரை முழுதாக எனக்குக் கொடு என வேண்டும் மனைவிக்கா?

யோசித்துப் பார்க்கையில் ஆண்டவன் என அலறலைக் கேட்டு நான் விரும்பிய ஒரு ஆண் மகனாய் என மகனை எனக்குக் கொடுத்திருக்கிறான் என்பது புரிகிறது.
இந்த இரண்டு சந்ததிக்கிடையில் அடிபட்டுப் போனவள் நானாக இருந்தாலும் ,என் அழுகைக்கிடையில் ஏதோ ஒன்று எனக்கு நிம்மதியை அளித்துச் சிரிக்க வைக்கிறது.


.

Monday, 22 June 2009

கேள்வி பிறந்தது அன்று!. பதில் கிடைத்தது இன்று!

என் நண்பர் மயாதி என்னை இந்தத் தொடர் பதிவுக்கு அழைத்து உங்களிடம் மாட்டி விடடிருக்கிறார்.

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?


இந்தப் பெயர் வரவில்லை. எனக்குப் பிடித்த பெயர்-அதனால் நானே இந்த வலையத்துக்காக வைத்துக் கொண்டது.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

தினம் தினம் அழும் பழக்கம் உண்டு. அதனால் சரியாகச் சொல்ல முடியவில்லை. மகிழ்ச்சி என்றாலும் ,கவலை என்றாலும் உணர்ச்சி வசப்படும் போது கண்கலங்குவது என் பழக்கம். சுருக்கமாய்ச் சொன்னால் ' ஒரு தொட்டாச் சுருங்கி'

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

மிகவும் பிடிக்கும். அழகாக குண்டு குண்டாக இருக்கும். கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து சரியாக வராது என்று சொல்வார்களே! கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

4).பிடித்த மதிய உணவு என்ன?

பசிக்குத்தான் உணவு. எதுவானாலும் சுவைத்துச் சாப்பிடுவேன். என் நண்பிகள் நான் தண்ணீரைக் கூட சுவைத்து அருந்துவதை பார்த்துச் சிரிப்பார்கள்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

இல்லை. நட்பாக நீண்ட காலம் எடுப்பேன். தேடிய நட்பை சாகும் வரை காப்பேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டுமே பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள் தான். அதன் பின்னர் பாவனை, குரல்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்தது : எதுவானாலும் நேருக்கு நேர் சொல்வது..பிரச்சனையை உடனுக்குடன் தீர்ப்பது.

பிடிக்காதது : பிறர் செய்யும் கெடுதியை மன்னித்தாலும் மறக்க முடியாதது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது: நான் சொல்வது அத்தனையையும் நம்பும் அப்பாவித்தனம்.
பிடிக்காதது: பிறரை நம்பும் அப்பாவித்தனம்.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

காலம் சென்ற என் அப்பா.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

தெரியாமல் தான் கேட்கிறேன். இது என்ன கேள்வி ?என்றாலும் சொல்லித் துலைக்கிறேன்.
கருப்பு நிற பாவாடையும் ஊதா நிற சட்டையும்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

பார்ப்பது .....கணிணி திரை...
கேட்பது ....'யாரோ யாரோடு' பாடல் அலைபாயுதே படத்திலிருந்து.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கோல்ட் நிறமாக... அப்போதான் மங்கள செய்தி எழுத உபயோகிப்பார்கள்.

14.பிடித்த மணம்?
எனக்குப் பிடித்த சென்ட் மணம் ..Anais Anais


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?


' செண்பகநாதன்'.........வலையம் ' உபாலி பக்கங்கள்'
என்னைப் பின் தொடரும் நண்பர்களில் இவர் இன்னும் இந்தப் பதிவுக்கு அழைக்கப் படவில்லை என்று நம்புகிறேன்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

மயாதி

என்னைப் பொறுத்தவரையில் எல்லா பதிவுகளுமே எனக்குப் பிடித்திருந்தது. ...பேய்க் கவிதைகள் உட்பட .....

17. பிடித்த விளையாட்டு?

விளையாட்டு பிடிக்காது.

18.கண்ணாடி அணிபவரா?

ஆம்.. கார் ஓட்டும் போது...தூரப் பார்வை குறைவு.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
மனதை அசை போட வைக்க வேண்டும். யதார்த்தமாக இருக்க வேண்டும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

'ராமன் தேடிய சீதை'

21.பிடித்த பருவ காலம் எது?

எல்லாக் காலத்திலும் பிடித்த விடயங்கள் இருக்கின்றன. அதனால் தெரிந்தெடுக்க முடியாது.


22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

'The Shack' by WM Paul Young

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

நான் மாற்றுவதில்லை. யாரும் மாற்றினால் நன்றி சொல்லிக் கொள்வேன்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம்: நீரோடும் ' சல சல' என்ற சத்தம்.
பிடிக்காதது: இடி முழக்கம்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

கனடா

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஏதோ ஒன்று இருக்கணும்....அப்படித்தான் எனக்குத் தோணுது.இல்லையென்றால் என் நண்பர்கள் என்னுடன் வருடக் கணக்காக ஒட்டிக் கொண்டிருக்க மாட்டார்களே!

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நம்பிக்கைத் துரோகம் -என்னால் மன்னிக்கவோ மறக்கவோ முடியாத விடயம்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
இன்னுமா தெரியல? இந்த 'ஜெஸ்வந்தி ' தான். இந்த வலையம் ஆரம்பித்த பிறகு நான் நானாகவேயில்லை.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கனடா-அமெரிக்க எல்லையில் அமைந்த 'நயாகரா நீர் வீழ்ச்சி'. மெய்மறக்க வைக்கும் தலமது.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
நல்ல மகளாய் , நல்ல மனைவியாய், நல்ல தாயாய் , நல்ல பாட்டியாய் , நல்ல பூட்டியாய்.............பேராசைதான் ..நீங்களும் எனக்காக கடவுளிடம் வேண்டிகொள்ளுங்கோ!

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

(ஒரு பட்டியலே இருக்கு. ஒரே காரியம் என்று கேட்டால் என்னத்தைச் சொல்வது.
இந்தக் கேள்வி எழுதின மனிதருக்கு அனுபவம் போதாது என்று நினைக்கிறேன்)
சரி ...ஒன்று சொல்கிறேன்
'பாலிய தோழிகளுடன் மணிக் கணக்கில் தொலை பேசியில் கதைப்பது'

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

(ஒரு வரியென்று எல்லை போட்டால் எப்படிச் சொல்வது?)
வாழ்க்கையென்பது பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் 'இன்பம்' ' துன்பம்' என்ற வெவ்வேறு மணிகளினால் கோக்கப் பட்ட மணிச்சரம்.


.

Thursday, 18 June 2009

கங்காரு பிறந்த கதை தெரியுமா?


பிரித்தானிய நாடோடிகள் முதன் முதலாக அவுஸ்திரேலியாவை வந்தடைந்தபோது ஆங்காங்கே ஒரு விசித்திர மிருகம் பல அடி உயரத்திற்கு துள்ளித் திரிவதைக் கண்டார்கள். அவர்கள் இப்படி ஒரு மிருகத்தை முன்னர் அறியாததால் அதன் பெயரைத் தெரிந்து கொள்ள முயன்றார்கள்.

அங்குள்ள ஆதிவாசிகளுடன் கதைப்பதற்கு இவர்களுக்கு அவர்கள் பாஷை தெரியாததால் சைகையினால் அதன் பெயரென்னவென்று கேட்டார்கள். அவர்கள் அதற்கு ' Kan Ghu Ru' என்று பதிலளித்தார்கள். அதைத்தான் ஆங்கிலத்தில் ' kangaroo' என்று இவர்கள் புரிந்து கொண்டார்கள். அதைத்தான் நாங்கள் கங்காரு என்று அழைக்கிறோம்.
உண்மையில் அந்த ஆதி வாசிகள் ' நீங்கள் கேட்பது புரியவில்லை ' என்பதைத்தான் தங்கள் மொழியில் ' Kan Ghu Ru' என்று சொன்னார்கள்.


.

Tuesday, 16 June 2009

பெண்களைப் பகைக்காதீர்கள் !!

( நான் ஆங்கிலத்தில் படித்து ரசித்த நகைச் சுவை இது. பலரும் ரசிக்க தமிழில் எழுதியுள்ளேன்)

ஒரு தம்பதிகள் ஓட்டு ரோட்டில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். மனைவி வாகனத்தை 60 மைல் வேகத்தில் ஓட்டிக் கொண்டிருக்கிறாள். கணவர் அவளைத் திரும்பிப் பார்த்துத் தெளிவான குரலில் பேசத் தொடங்கினார். 'எனக்குத் தெரியும் , நீ என்மேல் அளவில்லாத அன்பு வைத்திருக்கிறாய். நாங்கள் பதின் நான்கு வருடங்கள் தம்பதிகளாய் வாழ்ந்து விட்டோம். ஆனால் இப்போ என் மனம் மாறி விட்டது. எனக்கு உன்னிடமிருந்து விவாகரத்து வேண்டும்.'

மனைவி எதுவும் சொல்லவில்லை. மெதுவாக காரின் வேகத்தைக் கூட்டுகிரார். கணவர் துணிவுடன் தொடர்கிறார். ''என்னுடன் கதைத்து என் முடிவை மாற்றலாம் என்று நினைக்காதே! ஏனென்றால் கடந்த இரண்டு வருடங்களாக உனது நண்பியுடன் எனக்குத் தொடர்புண்டு. எல்லாவகையிலும் அவள் எனக்குப் பொருத்தமானவள் என்று எனக்குப் புரிகிறது .'' இப்பவும் மனைவி அமைதியாக இருக்கிறார். காரின் வேகம் மேலும் கூடுகிறது. கணவர் நிறுத்தவில்லை. ' என் வீடு என் உழைப்பில் வாங்கியது. அதனால் நீதான் வெளியேற வேண்டும்' என்கிறார்.
காரின் வேகம் இப்போ 80 மைலைத் தாண்டிவிட்டது. மனைவியின் பதிலை எதிர்பார்த்து '' உனக்கு எங்கள் சொத்தில் என்ன வேண்டும் ?'' என்று கேட்கிறார். மனைவி இப்போ வாய் திறக்கிறார். '' எனக்குத் தேவையான எல்லாம் என்னிடம் இருக்கிறது. உங்களிடம் இருந்து எதுவும் எனக்குத் தேவையில்லை '' என்று நிதானமாக சொல்கிறாள். எகத்தாளமாகச் சிரித்தபடி '' உன்னிடம் என்னதான் இருக்கிறது ?'' என்று கணவர் கேட்கிறார்.
காரை திசை திருப்பி ஒரு பாரிய சுவரில் மோதுவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு கணவர் பக்கம் திரும்பி '' என்னிடம் ' எயர் பாக்' (air bag) இருக்கிறது என்கிறாள்.

படிப்பினை.
பெண்களை அன்பினால் அடிமைப் படுத்தலாம். . ஆனால் சுரண்டிப் பார்த்தால் ஆளே இல்லாமல் பண்ணி விடுவார்கள்.ஜாக்கிரதை!!!


.

Thursday, 11 June 2009

சிறுவர்களுடன் ஜாக்கிரதை !

இவை நான் எங்கோ படித்து ரசித்த நகைச்சுவைத் துணுக்குகள். நீங்களும் ரசியுங்கள்.

ஒரு பாலர் வகுப்பில் சித்திர வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஆசிரியை அவர்கள் வரைவதை அவதானித்தபடி வகுப்பைச் சுற்றி வந்து கொண்டிருந்தார். அதில் ஒரு சிறுமி வரைவது என்னவென்று அவருக்குப் புரியாததால் ,'' நீ என்ன சித்திரம் வரைகிறாய்?' என்று கேட்டார். சிறுமி அதற்கு ' நான் கடவுளை வரைகிறேன்' என்று பதிலளித்தாள். ஆசிரியை விடவில்லை. ' கடவுள் எப்படியிருப்பார் என்று எவருக்கும் தெரியாது' என்றார்.
சிறுமி தன் கவனத்தை சித்திரத்தை விட்டு அகற்றாமல் 'இன்னும் சில நிமிடங்களில் எல்லோருக்கும் தெரிந்து விடும்' என்று பதில் சொன்னாள்.
==========================================================

ஒரு ஆசிரியை பாடசாலையில் எடுத்த வகுப்புப் புகைப் படத்தின் பிரதியை எல்லா மாணவர்களும் வாங்கும் வண்ணம் உற்சாகம் கொடுத்தார். அந்த முயற்சியில் அவர் 'பல வருடங்கள் ஓடிய பின் இந்தப் புகைப் படங்களை நீங்கள் பார்க்கும்போது இதோ இது மதன்-டாக்டர் ஆக இருக்கிறான், இது பாலா - இவன் லாயராக இருக்கிறான் ' என்று நினைவு கூருவீர்கள் என்கிறார். வகுப்பின் பின் வரிசையிலிருந்து ஒரு கீச்சுக் குரல் ' இது டீச்செர் -செத்துப் போய் விட்டார்.' என்றது.

===========================================================

பாடசாலையில் மதிய உணவின் பின் பரிமாறுவதற்கு ஒரு கூடையில் ஆப்பிள் பழங்களைப் போட்டு ' ஒன்று மட்டும் எடுங்கள் - கடவுள் அவதானிக்கிறார் ' என்று அதன் முன் ஒரு துண்டும் எழுதி வைத்திருந்தார்கள். அதே மேசையின் மறு பக்கத்தில் இனிப்புப் பலகாரம் வைத்திருந்தார்கள். ஆனால் அதற்கு துண்டு வைக்க மறந்து போனார்கள். ஒரு சிறுவன் அதற்கு முன் வைத்த நோட்டில் இப்படி எழுதியிருந்தான், 'வேணுமான அளவுக்கு அள்ளிக் கொள்ளுங்கள் .கடவுள் ஆப்பிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.'


.

Monday, 1 June 2009

வண்ணாத்திப் பூச்சி பறக்குது பார்!

வண்ணாத்திப் பூச்சி, வண்ணாத்திப் பூச்சி
பறக்குது பார், பறக்குது பார்,
அழகான செட்டை, அழகான செட்டை
அடிக்குது பார், அடிக்குது பார்.

பூக்கள் மேலே,பூக்கள் மேலே
பறந்து போய், பறந்து போய் ,

ேனதைக்
குடித்து, தேனதைக்
குடித்து
களிக்குது பார், களிக்குது பார்.

சிகப்பு மஞ்சள் கருப்பு வெள்ளை
பொட்டுக்கள் பார் , பொட்டுக்கள் பார்
தொட்டதும் விரலில் தொட்டதும் விரலில்
பட்டது பார், பட்டது பார்இந்தப் பாட்டு உங்களுக்கு நினைவிருக்கிறதா? பட்டாம்பூச்சி பாடல் நினைவுக்கு வந்து என்னை அந்த சிறு பிராயத்துக்குக் கொண்டு சென்று விட்டது.

அதுமட்டுமல்லாமல், அந்தப் பட்டாம் பூச்சிபோல் நாமும் பறக்க மாட்டோமா ? என்ற ஏக்கத்தையும் கொண்டு வந்து விட்டது. நான் தான் தப்பிப் போய் பெண்ணாய்ப் பிறந்து விட்டேனே.!

நீங்கள் என்னைத் திட்டுவதற்கு முன்பு விடயத்திற்கு வருகிறேன். என் ரசிகை கவிநயா (. உண்மையைச் சொல்லப் போனால்,அவர் என் கதையில் வந்த புரட்சிக் கதா நாயகனின் ரசிகை) எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். நான் இந்த வலையத்திற்கு கால் வைத்து இரண்டு வாரத்தில் மனமுவந்து ஒரு அழகான பட்டாம்பூச்சி ஒன்றை என் பக்கம் பறக்க விட்டிருக்கிறார், என் எழுத்து அவரைக் கவர்ந்ததை நினைத்து நான் பெரிமிதம் அடைகிறேன்.கவினயாவுக்கு என் அன்பு கலந்த வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த பட்டாம்பூச்சியை நான் பலர் வலையங்களில் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் இது யார் யாருக்குக் கொடுப்பாங்க ? ஏன் கொடுப்பாங்க ? என்ற கேள்விகள் மனதில் ஓடிய போதிலும், இப்போதானே இந்த வலையத்தை ஆரம்பித்திருக்கிறேன்! சாவகாசமாகத் தெரிந்துகொள்வோம் என்று நினைத்திருந்தேன். அதற்குத் தேவையே இல்லாமல் கவிநயா பண்ணிட்டாங்க. இப்போ இந்தப் பட்டாம்பூச்சி விருது விடயம் நன்றாகப் புரிகிறது. ஆனாலும் இதை யார் முதலில் ஆரம்பித்தார்கள்? என்று அறிய மிகவும் ஆவலாக இருக்கிறது. இதில் அழகான அம்சம் என்னவென்றால் ' யான் பெற்ற இன்பம் வையகம் பெற' என மற்றவைகளுக்குப் பட்டாம்பூச்சியைப் பறக்க விடுவதுதான். உங்களுக்குத் தெரியுமோ! என்னவோ! இங்கிலாந்து மக்கள் பாரம்பரியத்தில் இந்தப் பட்டாம்பூச்சி பறக்க வைத்தல் ஒரு முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது. இப்போதுகூட திருமணங்களிலும் ,வேறு நினைவு கூரும் வைபவங்களிலும் பட்டாம்பூச்சிகளைப் பறக்க விடுகிறார்கள். இல்லாவிட்டால் திருமணப் புகைப் படங்களில் பட்டாம் பூச்சி பறப்பது போல் பின்திரை போடுகிறார்கள்.
.

நான் பெற்ற ஒற்றைப் பட்டாம்பூச்சியை, வித்தை செய்து மூன்றாக்கி, புதிய பிளாக்கர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வெவ்வேறு திக்கில் பறக்க விடுகிறேன். அவை செட்டை அடித்துப் பறக்கும் திசை ..இதோ ...இதோ

.

' இவன்' ......பனித்துளியாய்

http://panithuliyaai.blogspot.com/

.

இவன் என்னும் மோகன் இராஜேந்திரன் நல்ல அழகான கவிதைகள் வடிக்கிறார். இந்த விருது இவரை நிச்சயம் ஊக்குவிக்கும் என்று எண்ணுகிறேன்.

.

' மயாதி' .... கொஞ்()சும் (வி)தைகள்

http://konjumkavithai.blogspot.com/

.

புத்தம் புதிய கவி இவர். இவரது கவிதைகள் வெள்ளமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மே மாதத்தில் மட்டும் 58 பதிவுகள் எழுதியிருக்கிறார் என்றால் பாருங்களேன். இவர் தொடாத தலைப்பே கிடையாது. புதுமையாய் இவர் சூட்டிய வலையத்தின் தலைப்பும் எனக்குப் பிடித்திருக்கிறது

.

'ஹேமா ........வானம் வெளித்த பின்னும்

http://kuzhanthainila.blogspot.com/


மிக அருமையான கவிதைகள் எழுதுகிறார். அண்மையில் அவர் எழுதிய ' தவிடு தின்னும் தமிழன்' கவிதை என் மனதைத் தொட்டது. அதில் ஒரு தமிழிச்சியின் வலி தெரிகிறது. ஏன் இவருக்கு விருது எவரும் தரவில்லை என்று ஆச்சரியமாகக் கூட இருக்கிறது.

அப்பாடா!! பறக்க விட்டாச்சு!!

, என் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் அவற்றிடம் செய்தியாக அனுப்பியுள்ளேன்


நான் விட்டதும் பட்டாம் பூச்சிகள் பறந்து விட்டன. ஆனால் அது தொட்டுப் போன என் நெஞ்சில் ,விட்டுப் போன தடயங்கள், பல வண்ணப் பொட்டுக்களாக இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறதே!!!

நன்றி நன்றி நன்றி கவிநயா

நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்

***

நீங்களும் உங்களுக்கு பிடிச்ச பதிவர்களின் பூக்கள்ல பட்டாம்பூச்சியை பறக்க விடுமாறு கேட்டுக்கறேன்!


.