நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Sunday 6 March 2016

மேகங்கள் கலைந்த போது ..

''ஹாப்பி  மதெர்ஸ் டே  திவ்யா '', அந்தப் பக்கம் தொலை பேசியில் என் கணவர் எனக்கு வாழ்த்துச் சொல்கிறார். அவரது வியாபார அலுவலாக, இரண்டு நாள் முன்பு தான்  அவர் ஜேர்மனி போயிருந்தார். அங்கிருந்தாலும்,' மதெர்ஸ் டே' யையும் மறக்கவில்லை, என்னையும் மறக்கவில்லை யென்று சொல்ல இந்தத் தொலைபேசி அழைப்பு .' தேங்க்ஸ் ' என்கிறேன். மேலே என்ன பேசுவதென்று தெரியாத ஒரு பெரிய இடைவெளி. முன்னெல்லாம் இவர் என்னைப் பிரிந்து வெளிநாடு போகும் போதெல்லாம் இங்கு நடக்கும் சின்னச் சின்ன விடயங்களையெல்லாம் ஒன்றுவிடாமல் அவரிடம் கொட்டி மணிக் கணக்காய் கதைப்பேன். இப்போ என்ன கதைப்பது என்று தெரியாமல் அவர் கேட்கும் கேள்விகளு க்கு மட்டும் சுருக்கமாகப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். விரக்தி யுடன் தொலைபேசியை வைத்த போது எப்போ, எப்படி நாங்கள் இப்படி விலகிப்போனோமென்று மனது அலசத் தொடங்குகிறது.

இதுதான் காரணமெனச் சுட்டிக் காட்ட எனக்குத் தெரியவில்லை.பெரிதாக எதுவுமே நடக்காமல் கொஞ்சம் கொஞ்சமாய் நடந்த மாற்றம் இது. சில சமயங்களில் இந்தக் கல்யாணம் நடந்தே இருக்கக்  கூடாதோ! என்ற எண்ணம் தலை தூக்குகிறது . எங்களுக்குள் அப்படி என்ன பொருத்தம் இருக்கிறது என்று மனம் ஆராய்ச்சி  செய்கிறது. இந்தக் காதல் என்ற வார்த்தையே வெறும் பிதற்றல் என்று தோன்றுகிறது. வயது போகப் போகத்தான் தம்பதிகள் ஒருவர் ஒருவரை முற்றாகப் புரிந்து கொள்கிறார்கள் என்றும், மனதளவில் நெருக்கம் அதிகரிக்கும் என்றும் எங்கோ படித்த ஞாபகம். எங்கள் விடயத்தில் அது எதிர் மாறாக நடந்து கொண்டிருக்கிறது.

எனது ஒரே மகள் ரம்யா பல்கலைக்களகம் சென்ற போது அந்தப் பிரிவு என்னைப் பெரிதாகப் பாதித்து விட்டது. அது வரை என்னருகில் இருந்த உயிர்த் தோழி என்னைத் தவிக்க விட்டுப் போனது போன்ற உணர்வு. ஆனாலும் தினம் அவளை தொலை பேசியில் அழைக்கும்வரை நிம்மதியற்று , நிலை கொள்ளாமல் தவித்து , சின்னச் சின்ன விடயங்களைக் கூட அவளிடம் கேட்டுத் தெரியுமட்டும் எனக்கு நித்திரை வராது. அந்த மூன்று  வருடங்களும்  மூன்று யுகங்களாக ஓடிக் கடந்தது. போன மாதந்தான் அவள் படிப்பு முடிந்து வீடு திரும்பினாள். மும்முரமாக வேலை தேடியதில், அடுத்த மாதம் புது வேலையில் சேரப் போகிறாள். அவளது திறமையிலும், வெற்றியிலும் நான் ஒரு தாயாக மனங் களித்து, பெருமையடைந்து போனாலும், அவளில் நான் கண்ட மாறுதல் நெஞ்சைப் பெரிதாக நெருடுகிறது. 'மம்மி, மம்மி' என்று என் கழுத்தைக் கட்டிக் கொ ண்டிருந்த என் மகள் இப்போ மாறி விட்டாள் . இதைச் சொல்வோமா? விடுவோ மா? என்று யோசித்துப் பேசுகிறாள். தனது அறைக்குள்ளேயே பல மணி நேரம் அடைந்து கிடக்கிறாள். ஒரு வேளை இவளும் என்னைப் போலவே 'காதல்' என்ற வலையில் எவனிடமாவது சிக்கிக் கொண்டாளா? அப்படியென் றால் கூட 'உங்களிடம் தான் மம்மி முதலில் சொல்லுவேன்' என்று முன்னர் ஒரு நாள் அவள் சொன்னது கூட நினைவில் வந்து போகிறது. அவள் பேச்சு, நடத்தை எல்லாவற்றிலுமே எனக்கு இனம் தெரியாத மாற்றம் தெரிகிறது.. இவளுக்கு என்னதான் ஆச்சு? எதுவானாலும், ஏன்  என்னுடன் அதனை அவளால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை? நிலை கொள்ளாமல் தவிக்கிறேன். நானாகப் போய் எதையும் கேட்க, நிலைமை இன்னும் போசமாகி விடுமோ என்ற பயத்தில் பொறுமையா கக் காத்திருக்கிறேன்.

அவள் பல மைல் தூரத்தில் இருந்த இந்த மூன் று வருடங்களில் கூட ஒவ் வொரு ,'மதேர்ஸ் டே ' அன்றும் அதி காலையில் என்னை வாழ்த்தி விட்டுத் தான் வீட்டிலிருந்து புறப்படுவாள். இன்று ஒரே வீட்டில் நாங்கள் இருவர் மட்டும் தான் இருக்கிறோம். தானே செய்த வாழ்த்து மடலுடனும் , பரிசுடனும் என்னை அதிகாலையில் எதிர் கொள்வாள் என்று எதிர் பார்த்தேன் . பெரும் ஏமாற்றம் எனக்கு . இப்போ காலை பத்து மணி. இன்னும் எழுந்திருக்கவேயில்லை . இரண்டு தடவை கதவைத் தட்டி வேறு பார்த்து விட்டேன். விரக்தி உடம்பு முழுக்கப் பரவி கண்கள் கலங்க வைக்கிறது. ஒன்றே ஒன்று, கண்ணே கண்ணு என்று நான் பாசத்தைக் கொட்டி வளர்த்த என் மகள் , ஏன் இப்படி மாறிப் போனாள் ? நான் அவளுக்கு என்ன தப்பு செய்தேன் ? எனக்கு இந்த இடை வெளியைத் தாங்க முடியவில்லை.

ஒரு படியாக நெட்டி முறித்தபடி அறையிலிருந்து வெளியே வருகிறாள். 'ஹாப்பி மதெர்ஸ் டே மம்மி ' வாழ்த்து மடலைத் தந்து முத்தமிடுகிறாள். அதில் உயிரோட்டம் இல்லை.  'இன்று இரவு சமையல் வேண்டாம். வெளியே போய் சாப்பிடுவோம் ' என்றவள் குளிப்பதற்காகச் செல்கிறாள். ஆவலுடன் 'ஓகே' சொல்கிறேன். எனக்குத் தெரியும் . அவளிடம் ஏதோவொரு  ரகசியம் இருக்கிறது. மனம் விட்டுப் பேச வேண்டிய தருணங்களில் அவள் இப்படித்தான் வெளியே போக அழைப்பாள் . அது என்னவாக இருக்கும் என்ற ஆவல் மனதெங்கும் மேலோங்கி நிற்கிறது. அவள் குளியலறை சென்றால் ஒரு அரை மணி நேரத்துக்கு வெளியே வர மாட்டாள். இதுதான் சரியான சந்தர்ப்பம். இவளில் தெரியும் இந்த மாற்றத்துக்குக் காரணத்தைக் கண்டு பிடித்தேயாக வேண்டும். என்னால் முடிந்தவரை அவள் கணினியிலும் அறையிலும் தடயங்களைத் தேடுகிறேன். எந்தப் பலனும் இல்லை. எதுவும் என்  கண்ணில் படவில்லை.

அவளே தெரிவு செய்த அந்தச் சந்தடியில்லாத ஹோட்டலில், நிலா வெளிச்சத்தில், ஒருவரை ஒருவர் எதிர்கொண்டபடி அமர்ந்திருக்கிறோம். அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தபடி 'சரி இப்போ சொல்லு. என்ன விஷயம் ' என்கிறேன்.மிகவும் சங்கடப் படுகிறாள். 'எப்படிச் சொல்வெதென்று தெரியவில்லை மம்மி' என்கிறாள். 'எதுவென்றாலும் என்னிடம் சொல்லு. எந்தப் பிரச்சனையையும் என்னால் தீர்க்க முடியும். உனக்கு அது நன்றாகத் தெரியும்.'  அவளை ஊக்குகிறேன். நீண்ட  மௌனத்தின் பின்னர், திக்குத் திணறியபடி ' எனக்கு நீங்கள் செய்வது சரியாகப் படவில்லை'.என்கிறாள். திடுக்கிட்டு, இவள் என்ன சொல்ல வருகிறாள் என்று தெரியாமல் பார்க்கிறேன். நான் இவளுக்கு என்ன குறை வைத்தேன். என்னையறியாமலே ' நான் என்ன பிழை செய்தேன்?' வார்த்தைகள் வெளி வந்து விட்டன.

சில நிமிட மௌனத்தின் பின்னர் ' நீங்கள் டடியை வெறுப்பதும், அவரிடம் அதிகம் பேசாது இருப்பதும் , மற்ற உங்கள் நண்பர்களுடன் மட்டும் நீங்கள் மனம் திறந்து பேசுவதும் ,எனக்குப் பிடிக்க வில்லை. டடி நம்மிருவருக் காகத் தானே ஓடி ஓடி உழைக்கிறார்.' என்கிறாள். அவள் கண்கள் பெருக்கெடுக்க , தன்  கைகளுக்குள்  முகத்தைப் புதைத்துக் கொள்கிறாள். நான் எதிர் பார்த்தது ஏதோ. அவளிடமிருந்து வந்தது முற்றிலும் நான் எதிர் பாராதது. நான் அவளை வேவு பார்த்த மாதிரி, இவள் என்னை வேவு பார்த்திருக்கிறாளோ ? அவளது கேள்வியால் நிலை குலைந்தாலும், எதையும் காட்டிக் கொள்ளாமல் , 'இதுதானா உன் பிரச்சனை? நீ நினைப்பது போல ஒன்றுமேயில்லை. அப்பா அடிக்கடி வெளியில் போவதால் நாங்கள் சேர்ந்திருக்கும் நேரம் குறைந்து கொண்டு போகிறதே தவிர, எங்களிருவருக்குள்ளும் எந்தப் பிரச்சனையும்  இல்லை. நீ எதையோ கற்பனை பண்ணிக் குழம்பிப் போயிருக்கிறாய். நான் உனக்கு என்னவோ ஏதோ  என்று எப்படிப் பயந்து போனேன்' என்று பல பல சொல்லி அவளைச் சமாதானம் செய்கிறேன்.. 'நீங்கள்  சொல்வது எல்லாம் உண்மை தானே?  ப்ரோமிஸ் மீ ' என்று ஊர்ஜிதம் செய்கிறாள். ' சாரி மம்மி ' என்றபடி ஓடி வந்து என் கழுத்தைக் கட்டிக்  கொள்ளுகிறாள். அவள் முகத்தில் அதே பழைய புன்னகை.

அண்ணாந்து வானத்தைப் பார்க்கிறேன். அதுவரை  சூழ்ந்திருந்த மேகக் கூட்டம் கலைந்து போன உணர்வு. அதனாலோ என்னவோ  நட்சத்திரங்கள் அழகாகத் தெரிகின்றன. இரவு வீடு வந்து சேர்ந்ததும் , இதோ  என் தொலைபேசியிலும் , முக நூலிலும் இருந்த ஒரு பெயரைத் தேடி 'டிலீட் ' பண்ணுகிறேன்.








Friday 13 May 2011

அப்பாவைப் பார்த்தேன்


இரவு முழுதும் என்னால் கண்ணயர முடியவில்லை.புரண்டு புரண்டு படுப்பதும் எழுந்து தண்ணீர் குடிப்பதுமாயிருந்தேன். அம்மா இரவு வெகு நேரம் ஜெபித்த படியிருந்தாள். எப்போ வந்து படுத்தாள் என்று தெரியவில்லை. அவளும் புரண்டு கொண்டு தான் இருக்கிறாள் என்று தெரிந்தது. விடிந்தால் அப்பா எங்களையும் இந்த உலகையும் விட்டுப் போய் சரியாக ஒரு வருஷம்.

மனம் பின்னோக்கித் தாவியோடி அன்று நடந்த விடயங்களை அசை போடுகிறது.அன்று வழமைபோல் குளித்து விட்டு பள்ளிக்கூடம் போக ஆயத்தப் படுத்துகிறேன். அதற்கு முந்தின இரவு அப்பாவின் நண்பர் வீட்டில் ஒரு கொண்டாட்டம். அம்மாவுக்கு இடைக்கிடை வந்து சேரும் பயங்கரத் தலை வலியினால் அவள் போக முடியவில்லை. அப்பா குணம் தெரிந்ததால் அவள் போகாத இடங்களுக்கு நான் எப்பவுமே அப்பாவுடன் போவதில்லை. அங்கே அளவுக் கதிகமாகக் குடித்து விட்டு நள்ளிரவில் தான் வீடு திரும்பினார்.

விடிய ,அம்மா வேலைக்குப் போகத் தயாரான பின்பும் அப்பா எழுந்திருக்காததால் அவரை எழுப்பினாள். அதற்கு சத்தம் போட்டார். '' நான் இண்டைக்கு வேலைக்கு லீவு .நீங்க வீட்டைப் பூட்டிக் கொண்டு போங்கோ '' என்று அவர் குளறிய படி சொன்னது கேட்டதும், ''சரிதான் , இந்த நிலைமையில் இவர் வேலைக்கு எங்கே போவது?'' என்று நினைத்துக் கொண்டேன்.இந்த விஷயம் எங்களுக்குப் புதிசில்லை. அடிக்கடி அப்பா பண்ணும் கூத்திது. சில சமயம் இவர் அடுத்த நாள் போய் எப்படித் தான் வேலை செய்வாரோ ? என்று நினைத்துக் கொள்வேன்.

அப்பா ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்தார். அதனால் பலரையும் பின்னேரங்களில் சந்திக்க வேண்டியிருப்பதால் இரவில் பிந்தித் தான் வீடு வருவார்.அனேகமாய் அப்போ நான் படுக்கப் போகும் நேரமாயிருக்கும். சனி .ஞாயிறு கூட அவருக்கு வேலை என்று சொல்லிக் கொண்டு வெளிக்கிடுவார் . வீட்டில் நிற்க மாட்டார். ஆனால் வரும் போது அளவுக் கதிகமாகக் குடித்து விட்டு தள்ளாடிய படியே வந்து சேருவார். அம்மா '' சாப்பிட்டிங்களா?'' என்று கேட்டாலே அது சண்டை யாகிவிடும். அம்மாவுக்கு இவரைத் திருத்த ஏலாது என்று தெரிந்ததோ ! அல்லது இவர் கூத்துப் பழகிப் போனதோ ! என்னவோ தெரியவில்லை.சாப்பாட்டை மேசையில் மூடி வைத்து விட்டு என் கட்டிலுக்கருகில் பாயைப் போட்டுப் படுத்திடுவாள்.ஆனால் அப்பா வீடு வந்து சேர்ந்து கதவு திறக்கும் சத்தம் கேட்ட பின்னர் தான் நான் நித்திரை கொள்ளுவேன்.அதுவரை அம்மாவைப் போலவே நானும் கண்ணை மூடிக் கொண்டு நித்திரை போல பாவனை செய்து கொண்டு இருப்பேன்.

நானும் அம்மாவும் காலமையில் ஒன்றாகத்தான் நடந்து போவோம். அவளது அலுவலகம் எங்கள் பள்ளிக் கூடத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் தான் இருந்தது .அன்று எங்கள் விளையாட்டுப் போட்டியிருந்ததால் .அரை நாள் லீவு எடுத்துக் கொண்டு அம்மா பள்ளிக் கூட மைதானத்துக்கு கட்டாயம் வருவதாகச் சொல்லுறாள் . நான் அப்பாவிடம் '' நீங்களும் இந்த முறை விளையாட்டுப் போட்டிக்கு வாங்கப்பா'' என்று வெள்ளிக் கிழமை சொன்ன போது '' இந்த முறை கட்டாயம் வாறன் ராசா.'' என்று தான் சொன்னார். ஆனால் காலமை அவர் அம்மாவிடம் போட்ட சத்தத்தில் இதைப் பற்றி நினைப்பூட்ட எண்ணிய ஆசை இடந் தெரியாமல் பறந்து போய் விட்டது.

பக்கத்து வீட்டு சிவாவின் அம்மாவும் அப்பாவும் எந்த விளையாடுப் போட்டியையும் தவற விட மாட்டார்கள். அவன் ஓட்டப் பந்தயத்தில் மூன்றாவது இடத்தில் வந்ததுக்கு, அவர்களின் கை தட்டலையும் பூரிப்பையும் பார்க்க எனக்குக் கொஞ்சம் பொறாமையாய் இருந்தது. அதைக் கண்டு கொண்டதுபோல, எனது முதல் பரிசுக் கோப்பையை நான் கொண்டு வந்தபோது அம்மா என்னைக் கட்டி அணைத்து ''அடுத்த வருஷம் அப்பா கட்டாயம் வருவாரடா '' என்கிறாள். என் மனதை அம்மா அறிந்ததை எண்ணி நானும் சிரிக்கிறேன்.இதை அவள் ஒவ்வொரு வருசமும் தான் சொல்லுறாள்.

எல்லாம் முடிந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருக்கிறோம் .ஜோன்சன் மாமா சைக்கிளில் பறக்க விறைக்க ஓடி வாரார். ''என்னண்ணா?'' என்று அம்மா பதற '' அந்தப் படு பாவி இண்டைக்கு வேலைக்குப் போகாமல் கசிப்பைக் குடித்துப் போட்டு, ரோட்டில் ரத்தம் ரத்தமாய் சத்தி எடுத்திருக்கிறான்..இப்ப தான் கேள்விப் பட்டுக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்திட்டு ஓடி வாறன் '' என்று மூச்சு விடாமல் பொரிந்து தள்ளுகிறார்.எனக்கு சுரீரென்று நெஞ்சை வலிக்கிறது.'' நீ வீட்ட போய் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வாடா .நான் அம்மாவைக் கொண்டு போறேன் '' என்று என்னை விரட்டுகிறார். தலை தெறிக்க வீட்டுக்கு ஓடுகிறேன்.நான் அங்கு போனபோது அவர் அம்மாவுக்கோ எனக்கோ காத்திராமல் போய் விட்டார் என்றார்கள். எல்லாமே ஒரு கனவு போல , கிரகிக்க முன்னமே கன விசயங்கள் கிடு கிடுவென நடந்து போனது போல இருக்கிறது. அழக் கூடத் தெரியாமல் சிலையாகிப் போகிறேன்.

பிறகுதான் தெரிந்தது .அப்பா மட்டுமில்ல, அன்று அவருடன் சேர்ந்து குடித்த பல நண்பர்களும் இதைப் போல சத்தியெடுத்து அபாய நிலையில் ஆஸ்பத்திரியில் இருக்கிறார்களென்று. இது தான் செத்த வீட்டில் பெரிய விடயமாயிருந்தது. '' ராசாத்தி புருஷன் இண்டைக்கு காலையில் போயிற்றானாம் '' ,'' சிவாவுக்கு இன்னும் அறிவு வரவில்லையாம் '' இப்படி ஒரு பக்கம் புதினம் கதைத்தார்கள்.'' கசிப்புக் காச்சிறவன்களை எல்லாம் கூட்டில போடவேணும் '' என்று ஒரு பக்கம் சட்டம் கதைத்தார்கள். ''எல்லாரும் வெளியில போங்கடா '' என்று கத்த வேண்டும் என்ற மாதிரி எனக்குக் ஆவேசம் .கஷ்டப் பட்டு என்னை அடக்கிக் கொள்ளுறேன்.கூட்டத்திலிருந்தவர்கள் ஏதோ விதத்தில் எனக்குச் சொந்தக் காரர்கள்.என்னை விட பல வயது மூத்தவர்கள் .திடீரென அம்மா நினைவு வர அவளைப் பார்க்கிறன். கலைந்த தலையும் ,சிவந்த கண்ணுமாய் சுவரில் சாய்ந்த படி துவண்டு போய்க் கிடக்கிறாள். ஓடிப் போய் தேத்தண்ணி போட்டுக் கொண்டு வந்து ''அம்மா குடிம்மா '' என்கிறேன்.''எண்ட ராசா '' என்று என்னைக் கட்டிக் கதறி என்னை வெடித்து அழ வைக்கிறாள். இனி அவள் தான் எனக்குத் துணை. நான் தான் அவளுக்குத் துணை என்பதை உணர்கிறேன்.

அம்மா இயல்பில் சத்தம் போட்டுக் கதைக்க மாட்டாள்.அப்பா இல்லாத எங்கள் வீட்டில் இந்த வருடம் முழுவதும் மயான அமைதி. ஒரு வருடம் ஒரு யுகமாகப் போய் விட்டது. நாளைக்கு அப்பாவுக்காக செபிக்க கோயிலில் அம்மா பூசைக்கு ஆயத்தம் செய்திருந்தாள். எங்கள் ஊரில் இறந்த ஒரு வருட நினைவு நாளுக்கு வழமையாக உறவுக் காரர்களை அழைத்து ஒரு விருந்து குடுப்பார்கள். அம்மா எந்த ஏற்பாடும் செய்யவில்லை. நான் கேட்டதுக்கு ''ஒன்றும் வேண்டாண்டா. வாற சனம் அவரைப் பற்றி புரணி சொல்லிப் போட்டுத் தான் போகும்.'' என்று சொல்லி பெரு மூச்சு விடுறாள். விடியக் காலமை ஒழும்பி ''ராசா, கெதியா இவ்வளவு சாமானையும் வாங்கிட்டு வாடா '' என்று ஒரு பட்டியலுடன் என்னைச் சந்தைக்கு அனுப்பிறாள்.எதற்கு இத்தனை சமையல் சாமான்கள் இவளுக்கு ? ஒருவரையும் சாப்பாட்டிற்குக் கூப்பிடவில்லையே ? என்று குழம்பிய படியே சொன்னதைச் செய்யிறேன். இரண்டு மணி நேரத்தில் மத்தியானச் சாப்பாடு மணக்க மணக்க சமைத்து விட்டாள். ஆவலை அடக்க முடியாமல் ''என்னம்மா ? என்ன நடக்குது ?எனக்குச் சொல்லன் ?'' என்று கேட்கிறன்.''உனக்குச் சொல்லாமலா ராசா, ஓடிப் போய் கொஞ்சம் வாழையிலை வெட்டிக் கொண்டு வாடா. பாசல் கட்ட வேணும் '' என்கிறாள்.

அவள் சமைத்தது அறுபது பாசலுக்குச் சரியாக இருக்கிறது. ஏற்கனவே அம்மா வரவழைத்த காரில் அந்தோனியார் கோவிலடியில் வந்திறங்கினோம் . அப்போ அம்மாவின் நோக்கம் எனக்குப் புரிந்தது. சாப்பாட்டுக் கூடையைக் கண்டதும் அங்கே பிச்சை எடுக்கும் ஒரு கூட்டம் எங்களை மொய்த்துக் கொள்கிறது. என் கையால் அவர்களுக்குப் பார்சல்களைக் குடுக்கச் சொல்கிறாள். அந்தப் பட்டினியுடன் இருந்த பலருக்கு சாப்பாடு குடுத்த போது இருந்த சந்தோசம் எனக்கு வாழ்க்கையில் அதுவரை எப்போதுமே இருக்கவில்லை.
எல்லோருக்கும் குடுத்த பின்னர் என் கையில் ஒரு பார்சல் மட்டும் மிஞ்சியது.
''அம்மா, நீ இங்கேயே இரு. இதை யாருக்கும் குடுத்திட்டு வாறன் '' என்றவன் கோயிலின் மற்றப் பக்கம் போறன். அப்போ தள்ளாடியபடி வந்த அந்த மனிதரைக் கண்டு அதிர்ந்து போனேன். தூரத்தில் அவர் அப்படியே என் அப்பா போலவே இருந்தார்.ஏதோ ஒரு ஈர்ப்பில் அவரை நோக்கியோடினேன்.என்னைப் பார்த்த அவர் '' சரியான பசி ராசா, அதை எனக்கா கொண்டு வந்தாய் ?'' என்று கையை நீட்டுறார். குரல் கூட அவரது அதே கரகரத்த குரல் . எதுவும் சொல்ல முடியாமல் அதிர்ந்து போய் சாப்பாட்டை அவர் கையில் குடுத்திட்டு அம்மாவைக் கூட்டி வந்து அவரைக் காட்ட நினைத்து திரும்பித் திரும்பி அவரைப் பார்த்த படி ஓடுறேன். '' அம்மா ,அப்பாம்மா ....'' என்றவன் திக்கித் திணற ,அம்மா பயந்தே போனாள். '' என்னடா ஆச்சு ?'' அவள் கேள்வி கேட்க, பதில் சொல்லாமல் அவளை இழுத்துக் கொண்டு அங்கே போகிறேன். அந்தப் பக்கம் யாருமில்லை. பல முறை அந்தக் கோயிலைச் சுற்றிச் சுற்றி ஓடிப் பார்த்தேன். ஊஹும் ..அவர் என் கண்ணில் படவேயில்லை.
என் கண்ணில் கண்ணீர் மட்டும் தான் தேங்கி நிற்கிறது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பின் நண்பர்களுக்கு!
நீண்ட கால இடை வேளையின் பின்பு இப்போ தான் வலையத்தில் எழுத சந்தர்ப்பமும் கிடைத்தது.
எழுதாவிட்டாலும் உங்கள் எழுத்துகளைப் படிக்க நான் தவறவில்லை. என்னை வலிந்து எழுத அழைத்த அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
ஜெஸ்வந்தி


Sunday 13 March 2011

விடிந்து விடும் !!!!


தினமும் ஒரு ஊடல்
தீராத கோபங்கள்
முள்ளான படுக்கையிலே
முதுகு காட்டிப் படுக்கின்றோம்!

நீ திரும்ப மாட்டாயா ?
நித்தமும் நான் தவிக்க
உன் மனமும் அப்படியே
உருகுவது தெரிகிறது.

ஏக்கங்கள் ஆட்கொள்ள
எதிர் பார்த்து எதிர் பார்த்து
முத்தான இரவுகள்
முழுதாக விடிந்து விடும் !!

.

Thursday 30 December 2010

வியக்க வைக்கும் வீதிகள் 2



Skippers Road

இந்த வீதி நியுசிலாந்தில் உள்ளது .மிகவும் அகலம் குறைந்த இந்த வீதி மலைப்பாறையில் பல திடீர் வளைவுகளுடன் செல்கிறது. இந்தப் பாதையில் இரண்டுவாகனங்கள் ஒன்றையொன்று கடப்பது மிகவும் கடினம். பாதையோர பள்ளத்தாக்குகள் மிகவும் அபாயகரமானவை. ஓட்டுனர் சிறிது கவனம் குறைந்தாலும்உயிர் தப்ப முடியாது. கிட்டத்தட்ட இந்தப் பாதையை அமைக்க 22 வருடங்கள்எடுத்தது. அத்துடன் இந்தப் பாதை சீனாவை சார்ந்த வேலையாட்களால் கட்டிமுடிக்கப் பட்டதென்பது குறிப்பிடத் தக்கது.


Winter Road


உலகில் பல இடங்களில் , நதிகளின் மேல் உறைந்த பனிப் படலத்தின் மேல் பாதைகள் அமைப்பது ( Ice Roads) வழிமுறையில் இருந்தாலும் கனடாவிலிருக்கும் இந்த வீதி மிகப் பிரபலமானது.இதுவே உலகில் மிக நீண்ட ஐஸ் விதியாகும். இந்த வீதி கனடாவின் வடக்குப்பகுதியை கிழக்குப் பகுதியுடன் இணைக்கின்றது.பனிக் காலத்தில்இப்பகுதியிலுள்ள ஏரிகளும் ,நதிகளும் பனிக் கட்டியாகி ஒரு படலமாக உறைந்துவிடுவதால் , வருடத்தில் சுமார் இரண்டு மாதங்களுக்கு போக்குவரத்தை உண்டுபண்ண , கிட்டத்தட்ட பூச்சியத்திலிருந்து 30 தொடக்கம் 70 டிகிரி பரனைற் கீழுள்ள கடுங் குளிரில் மனிதர்களால் இந்தப் பாதை அமைக்கப் படுகின்றது . இந்தப் பாதைமுக்கியமாக வடக்கில் எடுக்கப் படும் விலை மதிப்புள்ள உலோகங்களையும் ,ரத்தினங்களையும் கிழக்குக்குக் கொண்டு வரவே முதலில் அமைக்கப் பட்டது.ஆனால் இப்போது பனிக் காலத்தில் அமைக்கப் படும் இந்தப் பாதையில் வடக்குப்பகுதிக்கு உணவுகளும் ,மற்றும் அத்தியாவசிய பொருட்களும் குறைந்த செலவில்எடுத்துச் செல்லப் படுகின்றன. மற்றைய பத்து மாதங்களிலும் இப்பகுதிக்குபோக்கு வரத்து விமானப் பாதை மட்டுமே.






ஜனவரி மாதம் 2000 ஆண்டு டீஸல் கொண்டு சென்ற ஒரு பாரிய வண்டியொன்றுமச்கேன்சி நதியில் மூழ்கியது .அதிஸ்டவசமாக வாகன ஓட்டுனர் காப்பாற்றப்பட்டார். இது வரை சுமார் 20 க்கு உட்பட்ட விபத்துக்கள் இந்த வீதியில் நடைபெற்றாலும் எந்த உயிரிழப்பும் இந்தப் பாதையில் நடை பெறாதது இதன்மகிமையாகும்.



Sichuan Tibet High way





ஆதாரம்

சீனாவிலுள்ள இந்த வீதி செங்க்டு ( Chengdu) என்ற இடத்திலிருந்து Tibet (திபெத் )வரை நீள்கிறது. இந்த வீதியில் நடைபெறும் மண் சரிவுகளும் , மலைகளிலிருந்து உருண்டு விழும் கற்களும், வெள்ளப் பெருக்கெடுப்புகளும் சீனாவில் வாகன விபத்துகளின் பெரும் பங்கை வகிக்கின்றது. 2412 கிலோ மீட்டர் நீளமான இந்த வீதி சுமார் 4000-5000 மீட்டர் உயரமான 14 மலைகளையும், பல நதிகளையும், அபாயகரமான காடுகளையும் கடந்து செல்கின்றது. இதில் பயணிப்பவர்கள் மிக அற்புதமான காட்சிகளை ரசிக்கக் கூடியதாயிருக்கும். மொத்த வீதியையும் கடந்து செல்ல சுமார் 15 நாட்கள் செல்லும். பயணிகள் இந்த 15 நாட்களில் பலவிதமான காலநிலையுள்ள பிரதேசங்களைக் கடந்து செல்வார்கள். அவர்கள் கண் முன்னாலே வெப்பநிலை குறைந்து ,இலையுதிர் காலம் வந்து , பனி கொட்டும் கடும் குளிர் பிரதேசமாகிப் போவதைப் பார்ப்பது மிகவும் ஒரு அற்புதமான அனுபவமாக விருக்கும்.



Monday 13 December 2010

வியக்க வைக்கும் வீதிகள் 1


வீதிகள் பலவிதம். ஆனாலும் எங்களை வியக்க வைக்கக் கூடிய , உலகிலே மிக நீண்ட சாலைகளிலும் , மிகச் சிக்கலான சந்திகளிலும், மிகவும் அகலங் குறைந்த சந்துக்களிலும், மிக அபாயகரமான வீதிகள் எனப் பெயர் பெற்ற இடங்களிலும், உயிருக்கு உத்தரவாத மில்லாத ,உடம்பில் அதிரீனலின் பாய வைக்கும் வகையில் அமைக்கப் பட்ட சில உலகப் பிரசித்தமான வீதிகளிலும் பயணம் செய்யும் வாய்ப்பு நம்மில் பலருக்கு கிடைத்திருக்காது என்று நம்புகிறேன். அத்தகைய சில விதிகளைப் பற்றி இந்தத் தொடரில் உங்களுடன் பகிர வந்துள்ளேன்.
பான் அமெரிக்கன் ஹை வே
Pan American High Way

இதுவே உலகின் மிக நீண்ட சாலையாகும். வட அமெரிக்காவின் உச்சியிலிருந்து தென்னமெரிக்கா அடிவரை பல தேசங்களை ஊடுருவு
ம் நீளும் இந்தப் பாதை சுமார்
29, 800 மைல்கள் நீண்டது.
இந்த நெடுஞ் சாலை பல காடுகளையும், நதிகளையும், பாலை வனங்களையும் கடந்து கிட்டத் தட்ட 15,000 அடிவரை உயரத்துக்குச் செல்கிறது. இவற்றின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே உல்லாசப் பயணிகள் பயணிக்கிறார்கள். பல பகுதிகள் நதிப் பெருக்கெடுப்பாலும், மண் சரிவுகளாலும் பாதிக்கப் படக் கூடிய அபாயகரமான பாதையாக விருப்பதால் கால நிலைமையைப் பொறுத்தே இந்த வீதியின் பல பகுதிகளிலும் பயணம் செ
ய்ய முடியும்.



பாராளுமன்ற வீதி
Parliament Street








உலகிலே மிகக் குறைந்த அகலமுள்ள வீதியென கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துக் கொண்ட இந்த வீதி இங்கிலாந்திலுள்ள எசெட்டர்( Exeter) என்ற நகரில் உள்ளது. இதன் அகலம் 25 அங்குலம் நீளம் 50 மீட்டர் .இந்த வீதி 1300 ஆம் ஆண்டிலிருந்து இருப்பதாகத் தெரிகிறது.

சாவுப் பாதை
Death Road (North Yangas Road)
முன்னர் வட யன்கஸ் ரோடு எனப் பெயர் கொண்ட இந்த வீதி உலகத்தில் மிக அபாயகரமான சாவுப் பாதை எனப் பெயர் பெற்று ''Death Road'' என அ
ழைக்கப் படுகிறது.பல அகோர விபத்துக்களைக் கண்ட வீதியிது. இது பொலிவிய ( Bolivia)என்ற இடத்தில் 1930 ஆம் ஆண்டு சிறைக் கைதிகளைக் கொண்டு அமைக்கப் பட்டது. அந்தக் கைதிகளில் பெரும் பாலார் இந்த வீதி அமைக்கும் போது விபத்தினால் இறந்தார்கள். தொடர்ந்து
அதில் பயணிப்பவர்கள் ஒவ்வொரு வருடமும் சுமார் 200 பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள்.
சுமார் 70 கிலோ மீட்டர் நீண்ட இந்த வீதி 3600 மீட்டர் உயரம் வரை வளைந்து நெளிந்து ( ஹேர் பின் வளைவுகள்) செல்கிறது.
கரணம் தப்பினால் மரணம் என்று இதைத் தான் சொல்லுவார்களோ !

























If you want to see more pictures please check this link.
Guoliang Tunnel Road
குஒலியங் குகை வீதி

இந்த வீதி சீனாவில் உள்ளது . இது அபாயகரமான வீதியானாலும் சாவுப் பாதை போலதல்ல. மலையைத் தோண்டி அதனுள் குகை போல பாதை அமைத்து வெளிச்சத்துக்காக வெவ்வேறு வடிவிலும் அளவிலும் முப்பது ஜன்னல்கள் அமைக்கப் பட்டுள்ளது. இதில் ஆச்சரியமான விடயமென்னவென்றால், 13 கிராம வாசிகள் சேர்ந்து இந்த வீதியை 5 வருடத்தில் கட்டி முடித்திருக்கிறார்கள்.



Spooky Guoliang Tunnel











.


Tuesday 23 November 2010

கணினியும் நாமும்!




இன்றைய நவீன லகில் கணினியின் பாவனை எவரும் எதிர் பாராத வகையில் முன்னேறி விட்டது. கணினி உபயோகிக்காதவனை கை நாட்டுக் காரன் போல் பார்க்கத் தொடங்கி விட்டது எங்கள் சமூகம் . நாங்கள் ஆபிசில் வேலை செய்பவர்களானால் தினமும் எட்டு மணி நேரம் சுமார் 270 நாட்கள் கணினி முன்னால் இருக்கிறோம். ஆனாலும் வீடு வந்த பின்னரும் அந்த உறவு போதாதென்று , கேம்ஸ் ,மெயில், ப்ளோக் என்று பல நோக்கங்களின் நிமித்தம் மேலும் சில மணி நேரம் கணினியுடன் இருக்கிறோம். ஒரு நாள் கணினி பழுதடைந்து விட்டால் வாழ்க்கையே போய் விட்டது போல் பதறிப் போகும் நிலைமையில் பலர் இருக்கிறோம். ( அனுபவம் பேசுதுங்கோ!)




Double vision

இப்படியான அதீத கணினிப் பிரயோகம் கண்களைப் பாதிப்பதை கண் வைத்தியர்கள் உறுதிப் படுத்துகிறார்கள். அமெரிக்காவில் செய்த ஒரு ஆய்வில் கணினியில் வேலை
செய்வோரில் 70% ஆனோர் கம்ப்யூட்டர் விஷன் சிண்றோம் ( Computer Vision Syndrome) எனும் ஒரு கண் பார்வைச் சோர்வு நோயால் பாதிக்கப் படுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.


இந்த நோய் பெரியவர்களை மட்டுமல்லாமல் பிள்ளைகளையும் பெரிதளவில் பாதிக்கிறது. தொடர்ந்து கணினித் திரையை பார்க்கும் போது பிள்ளைகளின் கண்கள் சாதாரண பார்வை வளர்ச்சியை
ப் பெறுவது தடைப் படுகிறது. இவர்கள் ஒரு நாளில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் கணினியில் இருந்தால் அவர்கள் பார்வை பாதிப்படைய வாய்ப்புள்ளது என்று கண்டுள்ளார்கள்.

இப்படி கண் சோர்வினால் பாதிப்படைந்தவர்கள் , தலையிடியினாலும், கண் அரிப்பு, கண்ணிலிருந்து நீர் வடிதல், வரண்ட கண்கள், கண் சோர்வு, இரட்டைப் பார்வை, மங்கலான பார்வை, தோள்
ட்டை நோவு என்று பல அறிகுறிகளினால் அவஸ்தைப் படுகிறார்கள்.
மேலுள்ள அறிகுறிகளைக் கொண்ட , பல மணி நேரம் வேலை செய்வதினால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் கண் சோதனை செய்தபின்னர் இதற்காக விசேடமாக தயாரிக்கப் படும் கண்ணாடிகளை அணிய வேண்டியிருக்கும்.
இன்றைய சமுதாயத்தை எதிர் கொள்ளும் ஒரு பாரிய மருத்துவப் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகும்.
இந்தியாவிலும் இதற்கு இப்போ சிகிச்சை உண்டு. எனக்குக் கிடைத்த ஒரு லிங்கை இங்கே இணைத்துள்ளேன்.

இப்படி கண்கள் பாதிக்கப் படாமல் தடுக்கச் செய்யக் கூடிய வழிகளைப் பார்ப்போம்.

* சரியான அளவில் ஒளியுள்ள இடத்தில் கணினி பாவிக்க வேண்டும். பிரகாசமான சூரிய ஒளியும் , இயற்கை ஒளியும் கண்களைச் சோர்வடைய வைக்கும்

* அடிக்கடி கணினியிடம் இருந்து எழுந்து இடைவேளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் வேலை செய்யும் போதும் அடிக்கடி கண்களால் வெளியே பசுமையான காட்சிகளைப் பார்த்து கண்களைக் குளிர்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.

* கண் யோகாசனம் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும், ஒவ்வொரு 30 நிமிடத்துக்கு ஒரு முறை மிகத் தூரத்திலுள்ள ஒரு பொருளை 5 -10 sec கூர்ந்தது பார்க்க வேண்டும் ( focus )

* கணினியில் வேலை செய்யும் போது நாம் இயற்கையாக கண் மூடித் திறப்பது ( blink ) தானாகக் குறைந்து விடுகிறது. கண் blink பண்ணும் போது கண்கள் வறண்டு போகாமலும் , கண் அரிப்பு வராமலும் இருக்கிறது. வலிந்து நாமாக blink பண்ணும் வழக்கத்தை உண்டாக்க வேண்டும். ( உங்களுக்கு வேறு ஏதாவது ஐடியா தோன்றினாலும் அதுவும் நன்மைக்கே )

(Blink every time you hit ' enter' key or click the mouse)



* மேலேயுள்ள படத்தில் காட்டியபடி உங்கள் இருக்கையின் உயரத்தையும் கணினித் திரைக்கும் கண்களுக்கும் இடையில் உள்ள தூரத்தையும் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.


மேலும் விபரங்களுக்கு இந்த லிங்கைப் பாருங்கள்



.