நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Friday, 27 November 2009

கரு சொன்ன கதை இது......


நானுதித்த நாள் முதலாய்
வானிடிந்து போனதுபோல்
உன்னுயிர் துடிப்பது -என்
மனதுக்குக் கேட்கிறது.

கண் விழிக்க முடியாமல்
உன் தரிசனம் கிடையாமல்
கறுப்பறை ஒன்றில் நான்
சிறைப்பட்டுக் கிடக்கிறேன்.

அள்ளி அணைக்க மாட்டாயா?
பிள்ளை நான் ஏங்குகையில் - உன்
விம்மி அழும் சத்தம்- என்னை
எம்பி எழ வைக்கிறது.

நான் ஓடி வரவேண்டும்.
உன் கண்ணைத் துடைக்க வேண்டும்.
என் அம்மா முகம் பார்த்து
நான் என்னை மறக்க வேண்டும்.

அன்று நீ டாக்டரிடம்
சென்றபோது நானறிந்தேன்
என் உயிரைப் பறிப்பதுதான்
உன் உயிர்காக்க வழியென்று.


பிள்ளை என்று நீயுருக
நாளை எண்ணி நானிருக்க
விதி செய்த சதியென்ன ?
மதி கலங்கி மாய்கின்றேன்.

வாய் விட்டுச் சொல்லாமல்
சேய் நான் இணங்குகிறேன்.
அம்மா நீ கலங்காதே!
சும்மா எனைக் கலைத்துவிடு.

இன்னொரு பிறப்பெடுத்து
உன்வயிற்றில் உருவெடுப்பேன்.
இக்கணத்தில் இழந்ததையும்
அப்போ நான் அனுபவிப்பேன்..

Monday, 23 November 2009

வாழ்த்துச் சொல்ல வாருங்கள் நண்பர்களே!


கார்த்திகை மாதம் 24 ந் திகதி
-----------------------------------
இந்த வலையுலகம் எனக்குத் தந்த நல்ல நண்பர் ஜீவனுக்கு ( வலையம் - கண்ணாடி) இன்று பிறந்த நாள். அவரது பிறந்த நாள் இனிதே நகரவும் அந்த இன்பம் வருடம் முழுவதும் நிலைக்கவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நீங்களும் வாழ்த்துச் சொல்லுங்கள் நண்பர்களே!


.

Sunday, 8 November 2009

நண்பிக்கு ஒரு கடிதம்

சின்ன மகள் அருகில் வந்து
சொன்னதையே சொல்கிறாள்.
என்ன சொல்லி என்ன பயன்
எனக்கு எங்கே நினைவிருக்கு?

பேரப் பிள்ளை கதை கேட்க
பேந்தப் பேந்த முழிக்கிறேன்.
பாதிக் கதை சொல்லி விட்டேன்
மீதிக் கதை நினைவில் இல்லை .

குளிர் பானப் பெட்டியருகில்
குனிந்தபடி நிற்கிறேன்.
பாலை எடுக்க வந்தேனா?
இல்லை வைக்க வந்தேனா?

மெல்ல மெல்ல நடந்து சென்று
கதவருகில் வருகிறேன்.
காற்று வாங்க வந்தேனா?
கதவைச் சாத்த வந்தேனா?

உனக்கு கடிதம் எழுதவென்று
உற்சாகமாய் வருகிறேன்
முன்னர் இதை எழுதினேனா?
முற்றாகவே மறந்து போச்சு.

வயசு போனால் போகட்டும்-இந்த
வருத்தம் தான் ஏன் எனக்கு?
கடிதம் எழுதி முடித்து விட்டேன்- ஐயோ
உன் முகவரியை எங்கே வைத்தேன்?.

Friday, 6 November 2009

ஒரு பிறப்பு


பெண்ணென்று ஒரு பிறப்பு

பெருமைதான் என்பார்

கண்ணென்று காத்து

கணவனிடம் ஒப்படைப்பார்


எங்கிருந்தோ வந்த சொந்தம்

எப்போதும் இனிப்பதில்லை

பெற்ற மனம் கலங்காது

பெண்ணவள் காத்திடுவாள்.


கழுதைக்குத் தெரியுமா

கத்பூர வாசனைதான்

புழுதியில் எறிந்து விட்டான்

புழுப்போல நினைத்து விட்டான்.


வாய் திறந்து பேசாது

வரும் பாதை அறியாது

ஏன் இந்தப் பிறப்பென்று

ஏங்குகிறாள் ஒரு மாது.