நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Sunday, 6 March 2016

மேகங்கள் கலைந்த போது ..

''ஹாப்பி  மதெர்ஸ் டே  திவ்யா '', அந்தப் பக்கம் தொலை பேசியில் என் கணவர் எனக்கு வாழ்த்துச் சொல்கிறார். அவரது வியாபார அலுவலாக, இரண்டு நாள் முன்பு தான்  அவர் ஜேர்மனி போயிருந்தார். அங்கிருந்தாலும்,' மதெர்ஸ் டே' யையும் மறக்கவில்லை, என்னையும் மறக்கவில்லை யென்று சொல்ல இந்தத் தொலைபேசி அழைப்பு .' தேங்க்ஸ் ' என்கிறேன். மேலே என்ன பேசுவதென்று தெரியாத ஒரு பெரிய இடைவெளி. முன்னெல்லாம் இவர் என்னைப் பிரிந்து வெளிநாடு போகும் போதெல்லாம் இங்கு நடக்கும் சின்னச் சின்ன விடயங்களையெல்லாம் ஒன்றுவிடாமல் அவரிடம் கொட்டி மணிக் கணக்காய் கதைப்பேன். இப்போ என்ன கதைப்பது என்று தெரியாமல் அவர் கேட்கும் கேள்விகளு க்கு மட்டும் சுருக்கமாகப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். விரக்தி யுடன் தொலைபேசியை வைத்த போது எப்போ, எப்படி நாங்கள் இப்படி விலகிப்போனோமென்று மனது அலசத் தொடங்குகிறது.

இதுதான் காரணமெனச் சுட்டிக் காட்ட எனக்குத் தெரியவில்லை.பெரிதாக எதுவுமே நடக்காமல் கொஞ்சம் கொஞ்சமாய் நடந்த மாற்றம் இது. சில சமயங்களில் இந்தக் கல்யாணம் நடந்தே இருக்கக்  கூடாதோ! என்ற எண்ணம் தலை தூக்குகிறது . எங்களுக்குள் அப்படி என்ன பொருத்தம் இருக்கிறது என்று மனம் ஆராய்ச்சி  செய்கிறது. இந்தக் காதல் என்ற வார்த்தையே வெறும் பிதற்றல் என்று தோன்றுகிறது. வயது போகப் போகத்தான் தம்பதிகள் ஒருவர் ஒருவரை முற்றாகப் புரிந்து கொள்கிறார்கள் என்றும், மனதளவில் நெருக்கம் அதிகரிக்கும் என்றும் எங்கோ படித்த ஞாபகம். எங்கள் விடயத்தில் அது எதிர் மாறாக நடந்து கொண்டிருக்கிறது.

எனது ஒரே மகள் ரம்யா பல்கலைக்களகம் சென்ற போது அந்தப் பிரிவு என்னைப் பெரிதாகப் பாதித்து விட்டது. அது வரை என்னருகில் இருந்த உயிர்த் தோழி என்னைத் தவிக்க விட்டுப் போனது போன்ற உணர்வு. ஆனாலும் தினம் அவளை தொலை பேசியில் அழைக்கும்வரை நிம்மதியற்று , நிலை கொள்ளாமல் தவித்து , சின்னச் சின்ன விடயங்களைக் கூட அவளிடம் கேட்டுத் தெரியுமட்டும் எனக்கு நித்திரை வராது. அந்த மூன்று  வருடங்களும்  மூன்று யுகங்களாக ஓடிக் கடந்தது. போன மாதந்தான் அவள் படிப்பு முடிந்து வீடு திரும்பினாள். மும்முரமாக வேலை தேடியதில், அடுத்த மாதம் புது வேலையில் சேரப் போகிறாள். அவளது திறமையிலும், வெற்றியிலும் நான் ஒரு தாயாக மனங் களித்து, பெருமையடைந்து போனாலும், அவளில் நான் கண்ட மாறுதல் நெஞ்சைப் பெரிதாக நெருடுகிறது. 'மம்மி, மம்மி' என்று என் கழுத்தைக் கட்டிக் கொ ண்டிருந்த என் மகள் இப்போ மாறி விட்டாள் . இதைச் சொல்வோமா? விடுவோ மா? என்று யோசித்துப் பேசுகிறாள். தனது அறைக்குள்ளேயே பல மணி நேரம் அடைந்து கிடக்கிறாள். ஒரு வேளை இவளும் என்னைப் போலவே 'காதல்' என்ற வலையில் எவனிடமாவது சிக்கிக் கொண்டாளா? அப்படியென் றால் கூட 'உங்களிடம் தான் மம்மி முதலில் சொல்லுவேன்' என்று முன்னர் ஒரு நாள் அவள் சொன்னது கூட நினைவில் வந்து போகிறது. அவள் பேச்சு, நடத்தை எல்லாவற்றிலுமே எனக்கு இனம் தெரியாத மாற்றம் தெரிகிறது.. இவளுக்கு என்னதான் ஆச்சு? எதுவானாலும், ஏன்  என்னுடன் அதனை அவளால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை? நிலை கொள்ளாமல் தவிக்கிறேன். நானாகப் போய் எதையும் கேட்க, நிலைமை இன்னும் போசமாகி விடுமோ என்ற பயத்தில் பொறுமையா கக் காத்திருக்கிறேன்.

அவள் பல மைல் தூரத்தில் இருந்த இந்த மூன் று வருடங்களில் கூட ஒவ் வொரு ,'மதேர்ஸ் டே ' அன்றும் அதி காலையில் என்னை வாழ்த்தி விட்டுத் தான் வீட்டிலிருந்து புறப்படுவாள். இன்று ஒரே வீட்டில் நாங்கள் இருவர் மட்டும் தான் இருக்கிறோம். தானே செய்த வாழ்த்து மடலுடனும் , பரிசுடனும் என்னை அதிகாலையில் எதிர் கொள்வாள் என்று எதிர் பார்த்தேன் . பெரும் ஏமாற்றம் எனக்கு . இப்போ காலை பத்து மணி. இன்னும் எழுந்திருக்கவேயில்லை . இரண்டு தடவை கதவைத் தட்டி வேறு பார்த்து விட்டேன். விரக்தி உடம்பு முழுக்கப் பரவி கண்கள் கலங்க வைக்கிறது. ஒன்றே ஒன்று, கண்ணே கண்ணு என்று நான் பாசத்தைக் கொட்டி வளர்த்த என் மகள் , ஏன் இப்படி மாறிப் போனாள் ? நான் அவளுக்கு என்ன தப்பு செய்தேன் ? எனக்கு இந்த இடை வெளியைத் தாங்க முடியவில்லை.

ஒரு படியாக நெட்டி முறித்தபடி அறையிலிருந்து வெளியே வருகிறாள். 'ஹாப்பி மதெர்ஸ் டே மம்மி ' வாழ்த்து மடலைத் தந்து முத்தமிடுகிறாள். அதில் உயிரோட்டம் இல்லை.  'இன்று இரவு சமையல் வேண்டாம். வெளியே போய் சாப்பிடுவோம் ' என்றவள் குளிப்பதற்காகச் செல்கிறாள். ஆவலுடன் 'ஓகே' சொல்கிறேன். எனக்குத் தெரியும் . அவளிடம் ஏதோவொரு  ரகசியம் இருக்கிறது. மனம் விட்டுப் பேச வேண்டிய தருணங்களில் அவள் இப்படித்தான் வெளியே போக அழைப்பாள் . அது என்னவாக இருக்கும் என்ற ஆவல் மனதெங்கும் மேலோங்கி நிற்கிறது. அவள் குளியலறை சென்றால் ஒரு அரை மணி நேரத்துக்கு வெளியே வர மாட்டாள். இதுதான் சரியான சந்தர்ப்பம். இவளில் தெரியும் இந்த மாற்றத்துக்குக் காரணத்தைக் கண்டு பிடித்தேயாக வேண்டும். என்னால் முடிந்தவரை அவள் கணினியிலும் அறையிலும் தடயங்களைத் தேடுகிறேன். எந்தப் பலனும் இல்லை. எதுவும் என்  கண்ணில் படவில்லை.

அவளே தெரிவு செய்த அந்தச் சந்தடியில்லாத ஹோட்டலில், நிலா வெளிச்சத்தில், ஒருவரை ஒருவர் எதிர்கொண்டபடி அமர்ந்திருக்கிறோம். அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தபடி 'சரி இப்போ சொல்லு. என்ன விஷயம் ' என்கிறேன்.மிகவும் சங்கடப் படுகிறாள். 'எப்படிச் சொல்வெதென்று தெரியவில்லை மம்மி' என்கிறாள். 'எதுவென்றாலும் என்னிடம் சொல்லு. எந்தப் பிரச்சனையையும் என்னால் தீர்க்க முடியும். உனக்கு அது நன்றாகத் தெரியும்.'  அவளை ஊக்குகிறேன். நீண்ட  மௌனத்தின் பின்னர், திக்குத் திணறியபடி ' எனக்கு நீங்கள் செய்வது சரியாகப் படவில்லை'.என்கிறாள். திடுக்கிட்டு, இவள் என்ன சொல்ல வருகிறாள் என்று தெரியாமல் பார்க்கிறேன். நான் இவளுக்கு என்ன குறை வைத்தேன். என்னையறியாமலே ' நான் என்ன பிழை செய்தேன்?' வார்த்தைகள் வெளி வந்து விட்டன.

சில நிமிட மௌனத்தின் பின்னர் ' நீங்கள் டடியை வெறுப்பதும், அவரிடம் அதிகம் பேசாது இருப்பதும் , மற்ற உங்கள் நண்பர்களுடன் மட்டும் நீங்கள் மனம் திறந்து பேசுவதும் ,எனக்குப் பிடிக்க வில்லை. டடி நம்மிருவருக் காகத் தானே ஓடி ஓடி உழைக்கிறார்.' என்கிறாள். அவள் கண்கள் பெருக்கெடுக்க , தன்  கைகளுக்குள்  முகத்தைப் புதைத்துக் கொள்கிறாள். நான் எதிர் பார்த்தது ஏதோ. அவளிடமிருந்து வந்தது முற்றிலும் நான் எதிர் பாராதது. நான் அவளை வேவு பார்த்த மாதிரி, இவள் என்னை வேவு பார்த்திருக்கிறாளோ ? அவளது கேள்வியால் நிலை குலைந்தாலும், எதையும் காட்டிக் கொள்ளாமல் , 'இதுதானா உன் பிரச்சனை? நீ நினைப்பது போல ஒன்றுமேயில்லை. அப்பா அடிக்கடி வெளியில் போவதால் நாங்கள் சேர்ந்திருக்கும் நேரம் குறைந்து கொண்டு போகிறதே தவிர, எங்களிருவருக்குள்ளும் எந்தப் பிரச்சனையும்  இல்லை. நீ எதையோ கற்பனை பண்ணிக் குழம்பிப் போயிருக்கிறாய். நான் உனக்கு என்னவோ ஏதோ  என்று எப்படிப் பயந்து போனேன்' என்று பல பல சொல்லி அவளைச் சமாதானம் செய்கிறேன்.. 'நீங்கள்  சொல்வது எல்லாம் உண்மை தானே?  ப்ரோமிஸ் மீ ' என்று ஊர்ஜிதம் செய்கிறாள். ' சாரி மம்மி ' என்றபடி ஓடி வந்து என் கழுத்தைக் கட்டிக்  கொள்ளுகிறாள். அவள் முகத்தில் அதே பழைய புன்னகை.

அண்ணாந்து வானத்தைப் பார்க்கிறேன். அதுவரை  சூழ்ந்திருந்த மேகக் கூட்டம் கலைந்து போன உணர்வு. அதனாலோ என்னவோ  நட்சத்திரங்கள் அழகாகத் தெரிகின்றன. இரவு வீடு வந்து சேர்ந்ததும் , இதோ  என் தொலைபேசியிலும் , முக நூலிலும் இருந்த ஒரு பெயரைத் தேடி 'டிலீட் ' பண்ணுகிறேன்.








10 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் எழுத்தை வாசிப்பதில் மகிழ்ச்சி:)! தொடர்ந்து எழுதுங்கள்!

Kousalya Raj said...

பேஸ்புக், போன் இவற்றில் இருந்த பெயரை அழிப்பது சுலபம், மனதில் இருந்து அழிப்பது தானே சிரமம். :-) உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் அருமையாக இருக்கிறது.

மாதங்கள் வருடங்களை கடந்து இந்த பதிவை பார்த்ததும் சந்தோசமாக இருக்கிறது... அழகான எழுத்தாற்றல், நேரம் கிடைத்தால் தொடர்ந்து எழுதி வரலாமே தோழி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி. பல பல காரணங்களால் எழுதத் தருணம் அமையவில்லை.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றி கௌசல்யா. இத்தனை கால இடை வெளியின் பின்னரும் என்னை நினைவில் நிறுத்தியதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் .

Unknown said...

Good story with lot of turning point and lessons in life. Continiue happy writing.

தனிமரம் said...

முடிவில் நெகிழ்ச்சி தொடர்ந்தும் எழுதுங்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் கருத்துக்கு நன்றி ஜெயரட்ணம்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் வரவுக்கும் கருத்துக்கு நன்றி தனிமரம்.

நட்புடன் ஜமால் said...

இராகங்கள் மெளனமானதும் ஏனோ
.
எழுத்துகள் இன்னும் தொடரட்டும்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் கருத்துக் கண்டு மிக்க மகிழ்ச்சி ஜமால் .