நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.
Monday, 7 September 2009
யார் குடியைக் கெடுத்தேன்?-பகுதி 2
பெடியங்களை ஊரில் வைத்திருக்கப் பயந்து , மூன்று சகோதரர்களை ஒன்றன் பின் ஒன்றாக பாரிஸ் அனுப்பிவிட்டு , கடைசித் தம்பியுடன் சென்னையில் என் அம்மா இருந்தாள் . என் அப்பா கொழும்பில் ஒரு நண்பர் வீட்டில் , ஒரு அறையில் தங்கியிருந்து வங்கியில் வேலை செய்து கொண்டிருந்தார். கல்யாணம் முடிந்து ஒரு வாரத்தில் என் அம்மாவும் தம்பியும் சென்னை போய் விட்டார்கள் . அவர்கள் புறப்பட்டு சில நாட்களில் நாங்களும் எங்களுக்கென வாடகைக்கு எடுத்திருந்த பிளாட்டுக்கு குடி புக இருந்தோம் . எனது பாடசாலையிலிருந்து எனது மாமனார் வீடு தொலைவில் இருந்ததால் , என் அப்பாதான் வலிந்து இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார். என் கணவருக்கோ, அவர் பெற்றவர்களுக்கோ இந்த ஏற்பாட்டில் முதலில் சம்மதமிருக்கவில்லை.'' ஏழு மணிக்கு வேலைக்குப் போவதானால் என் பிள்ளை நாலு மணிக்கு எழுந்து சமைத்து ஐந்தரை மணிக்கு விட்டை விட்டுப் புறப் பட வேண்டும். ஒன்று பிளாட் எடுத்து பாடசாலைக்கருகில் இருக்க வேண்டும். அல்லது என் மகள் வேலையை விடவேண்டும்'' என்று அப்பா தீர்க்கமாகச் சொன்ன பின்னர் எல்லோரும் உடன் பட்டார்கள். அப்போ நான் ஒரு பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தேன். இந்த அலைச்சல் என் படிப்பைக் குழப்பி விடும் என்ற ஆதங்கம் என் அப்பாவுக்கு.
ஒரு நல்ல நாள் பார்த்துக் குடி புகுந்தோம். அன்றே அவர் தன்னுடன் ஒருமுறை டாக்டரைப் பார்க்க வரும்படி சொன்னார். என்ன ஏது என்று கேட்க விரும்பாமல் அவருடன் கிளம்பினேன். போகும் வழியில் ஒவ்வொரு மாதமும் இவர் இந்த மனோதத்துவ டாக்டரைப் பார்ப்பதாகவும், கல்யாண வேலைகளினால் இம்முறை தள்ளிப் போய் விட்டதாகவும் சொன்னார். டாக்டரிடம் இவர் என்னை அறிமுகம் செய்து கொண்டார். எனக்கு என்னமோ அந்த டாக்டர் அதிர்ந்து போனது போல ஒரு உணர்ச்சி. எப்போ கல்யாணம் ஆனது என்று கேட்டார். முறைக்குக் கூட வாழ்த்துக்கள் சொல்ல வில்லை. மனதுக்குள் மனநோயாளிகளுடன் பழகி இந்த மனிதருக்கு மனம் மரித்துப் போச்சு என்று திட்டிக் கொண்டேன். அப்போதான் இவர் தொடர்ந்து மருந்து சாப்பிடுவது எனக்குத் தெரிய வந்தது. டாக்டரிடம் இவர் நித்திரைக்காகக் கொடுத்த மருந்தை இரண்டு வாரமாகத் தான் பாவிக்கவில்லையென்றும் ஆனால் நன்கு தூங்கியதாகவும் சொன்னார். அவர் மிகவும் கடிந்து கொண்டார்.'' நீ டாக்டரா அல்லது நான் டாக்டரா?'' என்று கூடக் கேட்டார். என்னை முதல் தடவையாக ஒரு பயம் கவ்விக் கொண்டது. அதைப் புரிந்து கொண்டவர் போல என்னைப் பார்த்து அமைதியாக விளக்கம் தந்தார். தான் தரும் மருந்துகளைத் தவறாமல் இவர் சரியான முறையில் எடுக்கிறாரா என்று கண் காணிப்பது இப்போ என் பொறுப்பு என்று சொன்னார். இந்த மருந்துகளை எந்த நிலைமையிலும் தனது அனுமதியின்றி நிறுத்தக் கூடாதென்றும், தவறினால் பழையபடி இவர் மனநோயாளியாக நேரிடும் என்றும் சொன்னார். இவர் நடத்தையில் சிறிய வேறுபாடு தென்பட்டாலும் உடனே தன்னிடம் வரும்படியும் சொன்னார். என் தலை எப்போதோ சுற்றத் தொடங்கியிருந்தது. அவர் சொன்னதில் பாதிதான் என் முளைக்குப் போய்ச் சேர்ந்தது. ஏதோ ஒரு உலகத்தில் ,முகம் தெரியாத மனிதர்கள் நடுவில் அகப்பட்டுப் போனதுபோல அதிர்ந்து கண்கலங்க டாக்டர் தந்த மாத்திரைத் துண்டை பெற்றுக் கொண்டேன். வீடு திரும்பியபோது இவர் என்னுடன் எதுவும் கதைக்கவில்லை. ஆழ்ந்த யோசனையில் இருந்தார். அந்த டாக்டர் தந்த அதிர்ச்சியில் நான் கதி கலங்கிப் போயிருந்தேன்.
மஞ்சள் , நீலம், கருப்பு, வெள்ளையென்று பல வண்ணத்தில் வாங்கிய மாத்திரைகள் என்னைப் பயமுறுத்தின. தலையிடி வந்தால் கூட மாத்திரை சாப்பிட்டால் உடம்பு கெட்டிடுமென்று தவிர்ப்பவள் நான். இத்தனை மாத்திரைகளை இவர் முழுங்குகிறாரா? என்று நினைத்துப் பதைத்துப் போனேன். அது மட்டுமல்லாமல் அத்தனை மருந்துகளும் இவர் இன்னும் சகல நிலைமைக்கு வரவில்லையென்பதை எனக்குச் சொல்லாமல் சொல்லின. வீடு வந்ததும் '' நீர் சரியாகப் பயந்து போனீரா?'' என்று கேட்டார். என் பதிலை எதிபார்க்காமலே அந்த டாக்டர்தான் தேவையில்லாமல் தன்னையும் பயப்படுத்தி தன் தாயாரையும் பயமுறுத்துவதாகவும் சொன்னார். இந்த மாத்திரை எல்லாவற்றையும் தூக்கி எறிந்தால்தான் தனக்கு நிம்மதியென்று இவர் சொன்னபோது , நான் விக்கித்துப் போனேன். எத்தனை பெரிய பொறுப்பு என் தலை மேல் இறங்கியிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். கடவுள் என்னைத் தேடியெடுத்து இவர் வாழ்க்கையை என் கையில் ஒப்படைத்திருக்கிறார் என்று நம்பினேன். என் அன்பினால் இந்த மாத்திரைகள் செய்ய முடியாத வித்தைகளைச் செய்து காட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டேன்.
காலையிலும், மாலையிலும் நானே வற்புறுத்தி மாத்திரை கொடுத்தேன். எனது மனக் கிலேசத்தை இவருக்குக் காட்டாமல் மறைப்பது பெரிய எத்தனமாக இருந்தது. சில சமயங்களில், என்னை முற்றாகப் புரிந்தது கொண்டவர் போல, நான் பேசத் தயங்கிய விடயங்களைப் பேசிக் கொண்டு, ''உமது படிப்பு என்னாச்சு? இன்று எவ்வளவு படித்தீர்?'' என்று என்னை மேற்பார்வை பண்ணிக் கொண்டு , சில சமயம் பெரிய மேதாவி போல பல விடயங்களை அலசிக் கொண்டு, மறு நிமிடம் ஒரு குழந்தை போல ' பிகு' பண்ணிக் கொண்டு, குலுங்கிக் குலுங்கி உரத்துச் சிரித்துக் கொண்டு ....இவை ஒன்றிலுமே முழுதாக ஈடுபட முடியாமல் , இவர் செய்வது அத்தனையும் இவரது இயல்பான செயல்கள் தானா? என்று தெரியாமல் நான் அல்லாடிப் போனேன். தனிக் குடித்தனம் வந்தது பெரிய தப்பு என்று தோன்றியது. இவர் எந்தக் கவலையும் இல்லாமல் மாத்திரையும் தூக்கமுமாக இருந்தபோது, என் எண்ணங்கள் யாவும் அவரையே சுற்றிவர , தூக்கம் கெட்டு ஒரு கனவுலகில் வாழ்வதுபோல் என் அன்றாட வேலைகளை ஓட்டிக் கொண்டிருந்தேன்.
எனக்கு என் மனப் பாரத்தை எங்கே இறக்குவது என்று தெரிவில்லை. அவர் அம்மா மட்டும் அடிக்கடி வந்து போனாள். அவளும் இரவில் வந்ததால் இவர் முன்பு எதுவும் கதைக்க முடியவில்லை. என் அப்பா அதிகமாக என்னைப் பாடசாலையில் சந்தித்தார். அவருக்குக் குடிப் பழக்கம் இருந்ததால் இதைப் பற்றி கதைக்கப் பயப் பட்டேன். இரண்டு வாரங்கள் இரண்டு வருடங்கள் போல் போய் முடிந்தது. அன்று எதேச்சையாக இவர் தாயார் வந்த போது இவர் வெளியே போயிருந்தார். இந்த சந்தர்ப்பத்தைத் தவற விடக் கூடாதென்று நினைத்து நான் அவர்கள் வீட்டுக்குக் குடி வரப் போகிறேன் என்று சொன்னேன். திடுக்கிட்டு அவள் என்னைப் பார்த்த போது, நடந்த விடயங்களைக் கட கடவெனச் சொல்லி முடித்தேன். இவர் இப்போ சாதாரணமாய் இல்லை என்று என் அடிமனம் சொல்வதையும் சொன்னேன். அவள் '' தப்பு செய்திட்டேன். என் பிள்ளைக்கு ஒரு நல்ல துணை கிடைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்துத் தான் இந்தத் திருமணத்தைச் செய்தேன்'' என்று சொன்னாள். ஆனாலும் நாங்கள் அங்கே குடிபோனால் என் அப்பாவுக்குக் காரணம் சொல்ல வேண்டியிருக்கும் என்று அவள் மிகப் பயப் பட்டாள். எதற்கும் பயப் பிடவேண்டாம் என்றும் தான் தினமும் வந்து பார்ப்பதாக உறுதி சொன்னாள். எனக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது போல் இருந்தது. சொன்னதுபோல் தினமும் வந்து போனாள், அவளும் ''உரத்துச் சிரிப்பது இவன் சுபாவமில்லை. இப்போதெல்லாம் நெடுகச் சிரிக்கிறான். அடுத்த முறை டாக்டரிடம் சொல்லிவிடு '' என்றாள். இவருக்கு தாயார் தினமும் வருவது பிடிக்கவில்லை. ''மாது என்னை நன்றாகவே கவனிக்கிறாள். நீங்கள் ஒன்றும் அவளை மேற்பார்வை செய்யத் தேவையில்லை'' என்று அவளோடு கோபித்துக் கொண்டார். சிரமப்பட்டு பயணம் செய்து , பார்க்க வரும் அவளிடம் இவர் சினந்து விழுவதைப் பார்த்து, அவளுக்கு வீண் சிரமம் கொடுக்கிறேனோ என்ற மனக் கவலை எனக்கு. '' தேவை என்றால் கூப்பிடுகிறேன். அப்போ வாருங்கள்'' என்று சொல்லி விட்டேன்.
ஒரு தடவை மாத்திரையைக் கொடுத்துவிட்டு கையலுவலாக சமையலறைக்குப் போனவள் ,இவர் விழுந்த சத்தம் கேட்டு ஓடி வந்தேன். உடம்பு கல்லுப்போல் விறைத்திருந்தது. பதறியபடியே முகத்தில் தண்ணீர் தெளித்தேன். மூச்சு இருந்தது. கலக்கத்துடன் இவர் தாயாரை தொலைபேசியில் அழைத்தேன். '' பயப்பிடாதே! இது சகஜம். தானாக எழுந்திருப்பான்'' என்று சொன்னார். அன்றிரவு முழுவதும் அவர் பக்கத்திலிருந்து அழுது கொண்டேயிருந்தேன். காலையில் தான் கண் விழித்தார். ''நீர் தூங்கவே இல்லையா?'' என்று இவர் பரிவுடன் கேட்டபோது எனக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை. சின்ன விடயங்களுக்கெல்லாம் பயந்து நடுங்கும் நான் இந்த ஒரு மாதத்தில் மிகத் தைரியசாலியாக மாறிவிட்ட உணர்வு.
(தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
இரண்டு பகுதிகளையும் படித்தேன். மிக நன்றாக வந்திருக்கிறது.
கல்யாணம் ஆனால் சரியாகிப் போய்விடுமென்று ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிவிட்டார்கள். தன்னிடம் மனநோயாளியாக வந்தவரை விரட்டிவிடாமல் மனிதராக அவரை மாற்றினாளா பெண் என அவள் பட்ட கஷ்டங்களை அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
இரண்டு பகுதிகளையும் படித்தேன். மிக நன்றாக வந்திருக்கிறது.//
உங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் நன்றி சுந்தர்
//வெ.இராதாகிருஷ்ணன் said...
கல்யாணம் ஆனால் சரியாகிப் போய்விடுமென்று ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிவிட்டார்கள். தன்னிடம் மனநோயாளியாக வந்தவரை விரட்டிவிடாமல் மனிதராக அவரை மாற்றினாளா பெண் என அவள் பட்ட கஷ்டங்களை அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
எனது பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதற்கும் உங்கள் நெகிழ்வான கருத்துகளுக்கும் நன்றி நண்பரே
படிக்கும் போதோ இனம் புரியாத பயம் ஒன்று சூழ்ந்து கொள்கிறது. அருமையாக எழுதுகிறீர்கள் ஜெஸ்வந்தி வாழ்த்துக்கள்!
ஜெஸி,கதையா உண்மையா எங்கேயோ யாருக்கோ நடக்கிற மாதிரி மனம் படக் படக் என்று அடிக்குது.
இந்தக் கதையில் வாறது போல இந்த டாக்டர்மார் மருந்துகளைக் கூடக் குடுக்கிறதாலயும் மன அழுத்தம்தானே.தொடருங்கோ.
உங்களது படைப்புகளில் ஒரு அர்த்தம் விளங்குகின்றது தனித்துவமான எழுத்து
நிஜத்திலும் நடக்கிறது என்பது விளங்குகின்றது
கதை ரொம்ப விறுவிறுப்பா போகுது ஜெஸ்வந்தி. டென்சன் அதிகமா இருக்கு
ஜெஸி வந்திடுங்கோ குழந்தை நிலாவுக்கு பத்து வரங்கள் எடுக்க.
உயிரோட்டமான கதை
//யாழினி said...
படிக்கும் போதோ இனம் புரியாத பயம் ஒன்று சூழ்ந்து கொள்கிறது. அருமையாக எழுதுகிறீர்கள் ஜெஸ்வந்தி வாழ்த்துக்கள்!//
உங்கள் தொடர்ந்த வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.
//ஹேமா said...
ஜெஸி,கதையா உண்மையா எங்கேயோ யாருக்கோ நடக்கிற மாதிரி மனம் படக் படக் என்று அடிக்குது.இந்தக் கதையில் வாறது போல இந்த டாக்டர்மார் மருந்துகளைக் கூடக் குடுக்கிறதாலயும் மன அழுத்தம்தானே.தொடருங்கோ.//
இது ஒரு யதார்த்தமான கதை. நீங்கள் ரசித்தால் போதும். கருத்துக்கு நன்றி தோழி.
//கவிக்கிழவன் said...
உங்களது படைப்புகளில் ஒரு அர்த்தம் விளங்குகின்றது தனித்துவமான எழுத்து
நிஜத்திலும் நடக்கிறது என்பது விளங்குகின்றது//
வாங்க கிழவனே! உங்கள் கருத்துக்கு மிக நன்றி. எங்கெல்லாமோ இப்பிடிக் கதை இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.
//S.A. நவாஸுதீன் said...
கதை ரொம்ப விறுவிறுப்பா போகுது ஜெஸ்வந்தி. டென்சன் அதிகமா இருக்கு//
நன்றி நண்பரே. கதையின் அடுத்த பகுதியைப் படிக்காமல் விடுங்கள் . உங்கள் டென்ஷன் ரொம்ப அதிகரித்து விடும்.
//ஹேமா said...
ஜெஸி வந்திடுங்கோ குழந்தை நிலாவுக்கு பத்து வரங்கள் எடுக்க.//
நன்றி தோழி. பல்லாயிரம் பேர் வரம் கேட்டால் எங்கள் நாட்டு நிலைமை மாறாதா?
முயன்று பார்ப்போம்..
//ஷஃபிக்ஸ் said...
உயிரோட்டமான கதை//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.
முதல் பகுதியை போலவே இதுவும் சுவாரஸ்யமா இருக்கு..ஜெஸ்
சுந்தர்,"மிக நன்றாக வந்திருக்கு" என்று சொன்னால் ஜெஸ்...great!நல்ல விமர்சகன் அவன்!மோதிரவிரல் குட்டு இது.சந்தோசமாய் இருக்கு.போக,என்னவோ மனசு பாரமாகிகொண்டிருக்கு தோழி.கதையாக இருக்கட்டும்.நடை அவ்வளவு அருமை!சூட்சுமம் சொல்லித்தாருங்கள் ஜெஸ்..fantaastic!
thodar romba veruveruppaga pogirathu....antha penin valiyum antha aanin nilaiyum azhaga eduthu solli eruka jes...antha characters karpanai panni parthal nijamavey manasuku kashtama eruku...kadavuley ithu verum kathaiya thaan erukanum nijama eruka koodathunu manasu patharuthu....
இரண்டு பகுதியும் படித்தேன்.
அருமையான எழுத்து நடை.
நல்ல விறுவிறுப்பு.
வாங்க வசந்த். நான் உங்கள் தேவதையிடம் வரம் கேட்டு நின்ற போது நீங்கள் என் வீடு வந்து போயிருக்கிறீர்கள். அந்தத் தேவதை தான் உங்களையும் இழுத்து வந்ததோ?...I don't think my story is better than your postings.
//பா.ராஜாராம் said...
சுந்தர்,"மிக நன்றாக வந்திருக்கு" என்று சொன்னால் ஜெஸ்...great!நல்ல விமர்சகன் அவன்!மோதிரவிரல் குட்டு இது.சந்தோசமாய் இருக்கு.போக,என்னவோ மனசு பாரமாகிகொண்டிருக்கு தோழி.கதையாக இருக்கட்டும்.நடை அவ்வளவு அருமை!சூட்சுமம் சொல்லித்தாருங்கள் ஜெஸ்..fantaastic!//
வணக்கம் ராஜா. உங்கள் அன்புக்கு நன்றி. எதேச்சையாக அனுஜன்யா கதைக்கு சுந்தர் அழுத்திய விமர்சனம் நேற்றுப் படித்தேன்.போன சுவடு தெரியாமல் வந்து விட்டேன். வரி வரியாக வாட்டுகிறார். அப்போ புரிந்தது.எனக்குக் கிடைத்த குட்டு மோதிரக் குட்டு என்று.
இப்போ முழுதையும் ஒழுங்கா எழுதி முடிக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது.
சோகக் கதை தானே எம் மனதில் நிற்கிறது. என் கதை உங்கள் மனத்தில் நிற்கட்டும்.
///சின்ன விடயங்களுக்கெல்லாம் பயந்து நடுங்கும் நான் இந்த ஒரு மாதத்தில் மிகத் தைரியசாலியாக மாறிவிட்ட உணர்வு.///
உண்மைதான் நாம் எவ்வளவு தைரியம் கொண்டவர்கள் என்பது நமக்கே தெரியாது!!
சில சம்பவங்களிலும் ,சில சந்தர்ப்பங்களிலும் அது வெளிப்படும்!!
நீங்கள் அருகில் இருந்து சொல்வதுபோல இருக்கிறது பதிவு ...! தொடருங்க ..!
//தமிழரசி said...
thodar romba veruveruppaga pogirathu....antha penin valiyum antha aanin nilaiyum azhaga eduthu solli eruka jes...antha characters karpanai panni parthal nijamavey manasuku kashtama eruku...kadavuley ithu verum kathaiya thaan erukanum nijama eruka koodathunu manasu patharuthu....//
வாங்க தோழி.ரசித்துப் படிக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி. அப்போ மனசைத் திடப் படுத்திக் கொண்டு தான் மீதிக் கதையைப் படிக்க வாங்கோ.
//துபாய் ராஜா said...
இரண்டு பகுதியும் படித்தேன். அருமையான எழுத்து நடை.
நல்ல விறுவிறுப்பு.//
வாங்க நண்பரே.நிஇங்கள் தரும் ஊக்கத்துக்கு நன்றி.
//ஜீவன் said...
/சின்ன விடயங்களுக்கெல்லாம் பயந்து நடுங்கும் நான் இந்த ஒரு மாதத்தில் மிகத் தைரியசாலியாக மாறிவிட்ட உணர்வு./
உண்மைதான் நாம் எவ்வளவு தைரியம் கொண்டவர்கள் என்பது நமக்கே தெரியாது!! சில சம்பவங்களிலும் ,சில சந்தர்ப்பங்களிலும் அது வெளிப்படும்!!
நீங்கள் அருகில் இருந்து சொல்வதுபோல இருக்கிறது பதிவு ...! தொடருங்க ..!//
வாங்க ஜீவன். சின்ன வயதில் என் அம்மம்மாவிடம் ஆவலோடு கதை கேட்ட போது
எனக்கு இருந்த ஆர்வத்தை போல, இப்போ நண்பர்கள் என்னிடம் கதை கேட்பதை நினைக்க .......மனதில் ஒரு திருப்தி.
Post a Comment