நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Friday 24 July 2009

இது அவள்தானா?


அலாரச் சத்தத்துக்கு திடுக்கிட்டு எழுந்தவன் அசதி மேலிட திரும்பவும் கட்டிலில் சாய்கிறேன். இன்று முப்பதாந் திகதி, ஆபீஸில் மாத இறுதிக் கணக்கு முடிக்க வேண்டும் என்ற நினைவு வர துள்ளியெழுகிறேன். குளியலறையில் பல் விளக்கிய வண்ணம் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தபோது , என் கண்ணுக்குக் கீழுள்ள மச்சம் கண்ணை உறுத்துகிறது. இந்த மச்சத்தைப் பார்க்கும் போதெல்லாம் என் ' மதி' நினைப்பு தென்றலாக வந்து வீசுகிறது. இந்த மச்சம் தான் என் அழகின் ரகசியம் என்று அவள் கிசுகிசுத்தது இன்று போல் நினைவில் நிற்கிறது. என் நண்பர்கள் 'சந்திரன்' 'மதி' என்ன பொருத்தமடா! என்று எங்களைச் சீண்டியது படம்போல் ஓடுகிறது. மதி! மதி! அவளின் நினைப்பு கொண்டு வந்த விரக்தியான சிரிப்பு கண்ணாடியில் பிரதி பலிக்கிறது.

'சும்மா மச மசவென்று நிற்காமல் கெதியில வெளியால வாங்கோ, நான் கிரியைக் குளிப்பாட்ட வேண்டும் ' என்று என் மனைவி கலா வெளியே கத்துவது கேட்கிறது. இப்படிக் காலையில் எதிலாவது ஆரம்பிக்காவிட்டால் அவளுக்குப் பொழுது விடிவதில்லை போலிருக்கிறது. தினம் ஒரு பிரச்சனையில் தொடங்குகிறாள். அதிலிருந்து இங்கு தாவி அங்கு தாவி கடைசியில் மின்னுவெதெல்லாம் பொன்னென்று நினைத்து என்னைக் கட்டி ஏமாந்து போனேன் என்று ஒரு ஒப்பாரியில் முடிக்கப் போகிறாள். இந்த எட்டு வருட திருமண வாழ்வில் நான் இவளிடம் வாங்கிக் கட்டிய வசவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவள் இன்று தொடங்குவதற்கு முன் வீட்டை விட்டுக் கிளம்பி விட வேண்டும் என்ற எண்ணத்தில் துரிதமாக என் வேலைகளை முடிக்கிறேன்.ஒருவேளை கலா என்னை அன்பாக, ஒரு மனிதனாக, நடத்தியிருந்தால் இந்தக் காலவோட்டத்தில் நான் மதியை முற்றாக மறந்திருப்பேனோ என்னவோ! இவளிடம் திட்டு வாங்கி மனதுக்குள் வெந்து அழும் போதெல்லாம் , எனக்கு ஆறுதல் சொல்ல , அவளது இதமான புன்னகையினால் என்னை மெய் மறக்கச் செய்ய , ' மதி' என்னையறியாமல் என் நெஞ்சில் தஞ்சம் கொள்கிறாள்.

நான் முதன் முதலாக மதியைச் சந்தித்தது பசுமையாக இன்னும் நினைவிருக்கிறது. பல்கலைக் கழக இறுதியாண்டுப் பரீட்சைக்கு நான் படித்துக் கொண்டிருந்த காலமது. இரவைப் பகலாக்கிப் படித்துவிட்டு ,பகலெல்லாம் தூங்கியெழுந்து , மதிய உணவுக்காக சரஸ்வதி லாட்ஜை நோக்கி நடை போட்ட போது, நான் எதேட்சையாக அவளை பஸ் தரிப்பு நிலையத்தில் பார்த்தேன். கண்டவுடன் அவளிடம் என் மனதைப் பறி கொடுத்து விட்டேன். பல திட்டங்கள் தீட்டி ,அவள் பின்னால் திரிந்து அவள் அன்பைத் தேடியது ஒரு பெரிய கதை. மறக்க எத்தனித்தாலும் , அவளுடன் சேர்ந்து களித்த நாட்கள் படம்போல் மனத் திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவள் சிரித்த முகத்தை , எவர் மனதையும் புண் படுத்தாமல் ஒவ்வொரு வார்த்தையையும் அவள் தெரிந்தெடுத்து பேசும் லாவகத்தை,........எப்படி நான் மறப்பேன். அவளுடன் பழகத் தொடங்கிய பின்னர் அவள் புற அழகைவிட உள்ளழகை நான் மிகவும் நேசித்தேன். மூன்றே வருடப் பழக்கமானாலும் , என் அம்மாவுக்குப் பின்னர் என்னைப் புரிந்து கொண்டவள் அவள் ஒருத்திதான். விதி சதி செய்து , உள் நாட்டுக் கலவரமென்ற பெயரில் எங்களைச் சிதறடித்து என் மதியை என்னிடம் இருந்து பிரித்து காணாத தூரம் கொண்டு சென்று விட்டது . ஒரு பிரியாவிடை தன்னும் சொல்லிக் கொள்ள முடியாமல் நாங்கள் பிரிந்து போனது என்னை அழவைத்து வேதனைப் படுத்தியதென்பதை அவள் அறிவாளா? என் மதி இப்போ எங்கிருக்கிறாள் என்பது கூட எனக்குத் தெரியாது.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக , வேலை விடயமாக சிங்கப்பூர் போயிருந்தேன். அன்று முழுவதும் அலைந்து திரிந்த களைப்பில் நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விரைந்தேன். நான் உள்ளே சென்றபோது ,பக்கத்திலிருந்த கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு ஒரு பெண் வெளியேறினாள். எதேச்சையாகத் திரும்பியவன் திடுக்கிட்டுப் போனேன். அசப்பில் மதி மாதிரியே இருந்தாள். இல்லை , நிச்சயம் அது மதியேதான். அவள் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தாள். என் பக்கம் திரும்பவேயில்லை. ஆர்வத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் , முடுக்கி விட்ட இயந்திரம் போல வேகமாகப் பின் தொடர்ந்தேன். நொடிப் பொழுதில் வந்து சேர்ந்த டக்ஸியில் ஏறிப் போய் விட்டாள். அந்த நிகழ்ச்சி எரியும் தீக்கு எண்ணை வாற்றது போல் ஆக்கி விட்டது. அன்றிலிருந்து ஏனோ இரவும் பகலும் அவள் நினைவு என்னைத் தொடரத் தொடங்கியது. யாரிடமாவது என் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளாவிட்டால் என் தலையே வெடித்துவிடும் போலிருந்ததால், என் நண்பன் ரகுவிடம் சிங்கப்பூரில் நடந்த விடயத்தைச் சொன்னேன். அவன் ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்த விதமே என்னைச் சங்கடப் படுத்தி விட்டது. '' என்னடா மச்சான் எத்தனை வருடமாச்சு . இன்னுமா நீ அவளை மறக்கவில்லை?'' அதோடு நிறுத்தாமல் ''நீ அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறாயென்று நினைக்கிறேன். அதுதான் யாரையோ பார்த்து மதியென்று நினைத்துவிட்டாய்.'' என்றான். ஒரு வேளை அவன் சொன்னது சரியாகக் கூடவிருக்கலாம். இல்லாவிட்டால் என் மச்சத்தை வைத்தே மதி என்னை அடையாளம் கண்டு கொண்டிருப்பாளே!

பேருக்குச் சாபிட்டுவிட்டு , வேலைக்கு ஓட்டமும் நடையுமாகப் புறப்படுகிறேன். ஏதேதோ நினைவுகளைச் சுமந்து கொண்டு காலை எட்டுமணி பஸ்வண்டியைப் பிடிக்கும் நோக்கத்தில் விரைந்து கொண்டிருக்கிறேன். எதேச்சையாகத் தெருவின் மறுபக்கம் அவளைக் காண்கிறேன். அவள்...அவள்...என் மதி தானே! ஓ , என் மதி என்றா சொல்கிறேன். இப்போ என் மதி கெட்டுத்தான் போய்விட்டது. இதயத் துடிப்பு அதிகரித்து , என்னையறியாமல் கையிலிருந்த ப்ரிவ்கேஸ் தவறி விழுகிறது. பட படப்புடன் அவளருகே யார் நிட்கிறார்களென்று பார்க்கிறேன். பஸ்தரிப்பு நிலையத்தில் பலர் அவளருகே நின்றதால் அவள் யாருடன் வந்திருக்கிறாளென்று சரியாகச் சொல்ல முடியவில்லை. இந்த ஒன்பது வருடங்கள் அவளில் பெரிதாக எந்த மாறுதலையும் ஏற்படுத்தவில்லை. அவள் பார்வை வராத அந்த பஸ் வரும் திசையிலேயே இருக்கிறது. என் பக்கம் திரும்புவாள் என்ற நம்பிக்கை நகர்ந்து போக , பெரும் எத்தனிப்புடன் அந்த வீதியைக் கடந்து மறு பக்கம் ஓடுகிறேன். எப்படியும் அவளுடன் கதைத்து விட வேண்டுமென்ற அவா மட்டும்தான் மனமெல்லாம் ஓங்கி நிற்கிறது. எனக்குத் தெரியவேண்டும் மதி. இத்தனை வருடங்களாக என் மனதில் தேங்கிக் கிடக்கும் என் கேள்விகளுக்கெல்லாம் இன்று எனக்குப் பதில் வேண்டும் மதி. உனக்குக் கல்யாணமாகி விட்டதா? உன் கணவர் உன்னை நன்றாக வைத்திருக்கிறாரா? நாங்கள் மானசீகமாக வாழ்ந்த வாழ்க்கை உனக்கு இன்னும் நினைவிருக்கிறதா? நீ என்னை வெறுத்து விட்டாயா? தினம் நான் உன்னை நினைப்பது உன் நெஞ்சுக்குத் தெரியுமா? எனக்குப் பதில் தெரியவேண்டும்.

இன்னும் சில அடிகள் தான். நான் அவள் முன் போல் நின்று விடுவேன். அப்போதான் அந்தப் பாழாய்ப்போன பஸ்வண்டி வந்து நின்றது. அவள் ஏறிவிட்டாள். ஓடிபோய் அதே பஸ்ஸில் ஏறப் போன என்னை '' கவனம் மதி'' என்று தாங்கியபடியே அவள் பின்னே ஏறிய அவள் கணவனின் (??) குரல் , தடுத்து நிறுத்தி, சுய நினைவுக்குக் கொண்டு வருகின்றது. பஸ்வண்டி பல சுமைகளுடன் புறப்படுகிறது. அதைவிடப் பெரும் சுமையுடன் நான் அது போகும் திசையில் வெறித்துக்கொண்டிருக்கிறேன்.




.

39 comments:

அன்புடன் அருணா said...

நல்லா இருக்கு..!

நட்புடன் ஜமால் said...

'' கவனம் மதி'' என்று தாங்கியபடியே அவள் பின்னே ஏறிய அவள் கணவனின் (??) குரல் , தடுத்து நிறுத்தி, சுய நினைவுக்குக் கொண்டு வருகின்றது]]


அருமை.

துபாய் ராஜா said...

இயல்பான எழுத்துநடையில் காட்சிகள் கண்முன்.

வாழ்த்துக்கள்.

ஹேமா said...

ஜெஸி,கதை இயல்பாக அழகாய் இருக்கு.நகர்த்திய விதமும் அருமை.தமிழ் எழுத்துக்கோர்வைகள் முழுமையான தமிழின் தேர்ச்சியைக் காட்டுது.பாராட்டுக்கள்.

முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது என்பார்கள் ஜெஸி.

ப்ரியமுடன் வசந்த் said...

மதியால் நாயகனுக்கு மதி கெட்டதோ

கதை சுவாரஸ்யமாய் முதல் காதலை ஞாபகப்படுத்துகிறது............

பா.ராஜாராம் said...

முதல் சிநேகம்...நாட்காட்டி தாளை கிழிப்பது போல் நாளை கிழிக்க முடியாத...தவிப்பு... உணர செய்கிறீர்கள் ஜெஸ்!மற்றுமொரு வாழ்த்தும் அன்பும்...

sakthi said...

மிக அழகான கதை

உங்கள் நடை அருமை

தொடர்ந்து எழுதுங்கள் ஜெஸ்

அ.மு.செய்யது said...

சூப்பரா எழுதியிருக்கீங்க ஜெஸி...

எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது....

நாம் எதிர்பாராத "இன்று"....ஆனா கடைசில ரொம்ப சீக்கிரமா முடிச்சிட்டீங்களே !!!!

SUFFIX said...

முழுதையும் படிக்க வைத்து விட்டீர்கள். ஆக்கம் மிக அருமை.

Shan Nalliah / GANDHIYIST said...

Great! good memories and good people are always good to remember!write more..and publish your story book!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//அன்புடன் அருணா said...
நல்லா இருக்கு..!//

வாங்க அருணா, உங்கள் கருத்துக்கு நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நட்புடன் ஜமால் said...
'' கவனம் மதி'' என்று தாங்கியபடியே அவள் பின்னே ஏறிய அவள் கணவனின் (??) குரல் , தடுத்து நிறுத்தி, சுய நினைவுக்குக் கொண்டு வருகின்றது]]
அருமை.//

வருகைக்கும் ரசனைக்கும் நன்றி ஜமால்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//துபாய் ராஜா said...
இயல்பான எழுத்துநடையில் காட்சிகள் கண்முன்.
வாழ்த்துக்கள்.//

உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஹேமா said...
ஜெஸி,கதை இயல்பாக அழகாய் இருக்கு.நகர்த்திய விதமும் அருமை.தமிழ் எழுத்துக்கோர்வைகள் முழுமையான தமிழின் தேர்ச்சியைக் காட்டுது.பாராட்டுக்கள்.
முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது என்பார்கள் ஜெஸி.//

உங்கள் பாராட்டுக்களினால் திணறடித்து விட்டீர்கள் தோழி. நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பிரியமுடன்.........வசந்த் said...
மதியால் நாயகனுக்கு மதி கெட்டதோ

கதை சுவாரஸ்யமாய் முதல் காதலை ஞாபகப்படுத்துகிறது............//

அடடே, நீங்கள் ஏதோ சுவாரசியமான கதை சொல்ல வந்தீர்கள் போல் இருக்கிறதே.
ஹா ஹா ஹா

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பா.ராஜாராம் said...
முதல் சிநேகம்...நாட்காட்டி தாளை கிழிப்பது போல் நாளை கிழிக்க முடியாத...தவிப்பு... உணர செய்கிறீர்கள் ஜெஸ்!மற்றுமொரு வாழ்த்தும் அன்பும்...//

வாங்க நண்பரே, வந்து நிதானமாகத் தேனீர் அருந்தித்தான் போங்கள்.இல்லாவிட்டால் மறந்து போய் விடிவீர்கள். உங்கள் பதிவை நான் மிகவும் ரசித்தேன் நண்பரே.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//sakthi said...
மிக அழகான கதை

உங்கள் நடை அருமை

தொடர்ந்து எழுதுங்கள் ஜெஸ்//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி. எனக்கு இனி எதைப் பற்றி எழுவது என்று தெரியவில்லை. கரு இருந்தால் தெரியப் படுத்துங்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//அ.மு.செய்யது said...
சூப்பரா எழுதியிருக்கீங்க ஜெஸி...
எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது....
நாம் எதிர்பாராத "இன்று"....ஆனா கடைசில ரொம்ப சீக்கிரமா முடிச்சிட்டீங்களே !!!!//

வாங்க நண்பரே! கதையை ரசித்ததற்கு நன்றி. என்ன? கதை கடைசியில் விரைவாக முடிந்து விட்டதா? அது என் தப்பில்லை. அந்த பஸ்வண்டி மிக அவசரமாகப் புறப் பட்டிட்டுது பாருங்கள்.
நான் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி முடித்து சனிக்கிழமை பிரசுரித்தது மட்டும்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஷ‌ஃபிக்ஸ் said...
முழுதையும் படிக்க வைத்து விட்டீர்கள். ஆக்கம் மிக அருமை.//

வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Shan Nalliah / GANDHIYIST said...
Great! good memories and good people are always good to remember!write more..and publish your story book!//

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே. கதைகளை பிரசுரிக்க வைத்து என்னை பிரச்சனையில் மாட்டி விடப் போகிறீர்கள் போல் தெரிகிறது. நான் இந்த வலையத்தில் சேகரித்த ரசிகர்களே எனக்குப் போதும்.

அப்துல்மாலிக் said...

அதைவிடப் பெரும் சுமையுடன் நான் அது போகும் திசையில் வெறித்துக்கொண்டிருக்கிறேன்.


என் மனதிலும் ஒரு சோகம் அப்பிருக்கு

அழகான வரிகள் ஜெஸ்வந்தி

Jackiesekar said...

நல்ல நடை,அற்புதமாக இருந்தது... உள் நாட்டு போர் மனிதர்களின் வாழ்க்கையில் எப்படி எல்லாம் சடுகுடு ஆடுகின்றது....

Anonymous said...

வீழ்த்தி விட்டாய்..வார்த்தை நயம் படைப்பு திறன் கதை நகர்த்திய விதம்...கைத்தேர்ந்த கதாசிரியர் போல....வாழ்த்துக்கள் ஜெஸ்....

நேசமித்ரன் said...

உங்கள் மொழி நாளுக்கு நாள் அழகாகிக் கொண்டே போகிறது ..!
ஒரு பாத்திரத்தை தானாய் உணர்ந்து அல்லது தன்னுணர்விலிருந்து மீட்டு எழுதுகையில் மிளிரும் அழகு உங்கள் கதைகளில் ஜெஸ்வந்தி !

ஆதவா said...

நன்றாக இருக்கிறது ஜெஸ்வந்தி.. எழுத்து நடை பிரமாதமாக வந்திருக்கிறது. அவசரத்தில் படித்தேன்.. மீண்டுமொருமுறை நிதானமாகப் படிக்கிறேன்!!

ஆதவா

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//அபுஅஃப்ஸர் said...
/அதைவிடப் பெரும் சுமையுடன் நான் அது போகும் திசையில் வெறித்துக்கொண்டிருக்கிறேன்./

என் மனதிலும் ஒரு சோகம் அப்பிருக்கு
அழகான வரிகள் ஜெஸ்வந்தி//

உங்கள் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி நண்பரே.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//jackiesekar said...
நல்ல நடை,அற்புதமாக இருந்தது... உள் நாட்டு போர் மனிதர்களின் வாழ்க்கையில் எப்படி எல்லாம் சடுகுடு ஆடுகின்றது....//

உங்கள் முதல் வருகைக்கும் நெகிழ்வான கருத்துக்கும் நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//தமிழரசி said...
வீழ்த்தி விட்டாய்..வார்த்தை நயம் படைப்பு திறன் கதை நகர்த்திய விதம்...கைத்தேர்ந்த கதாசிரியர் போல....வாழ்த்துக்கள் ஜெஸ்....//

வாங்க தோழி, சுகமா இருக்கிறீர்களா? புகழ்ச்சியால் அடித்து விழுத்தி விட்டீர்கள்?
.தாங்காது தாயி .

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நேசமித்ரன் said...
உங்கள் மொழி நாளுக்கு நாள் அழகாகிக் கொண்டே போகிறது ..!
ஒரு பாத்திரத்தை தானாய் உணர்ந்து அல்லது தன்னுணர்விலிருந்து மீட்டு எழுதுகையில் மிளிரும் அழகு உங்கள் கதைகளில் ஜெஸ்வந்தி !//

உங்கள் புகழ்ச்சியில் குளிர்ந்து போயிருக்கிறேன் நண்பரே. நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஆதவா said...
நன்றாக இருக்கிறது ஜெஸ்வந்தி.. எழுத்து நடை பிரமாதமாக வந்திருக்கிறது. அவசரத்தில் படித்தேன்.. மீண்டுமொருமுறை நிதானமாகப் படிக்கிறேன்!!//

இந்த வாரம் உங்களுக்கு கருத்துப் போட நேரம் கிடைக்காது என்று நினைத்திருந்தேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

vasu balaji said...

தெள்ளிய ஓடையாய் நடை. அருமை. அசத்துங்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பாலா... said...
தெள்ளிய ஓடையாய் நடை. அருமை. அசத்துங்கள்.//

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாலா.

ராமலக்ஷ்மி said...

அருமையான நடை. முடிவு அசத்தல். பாராட்டுக்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

எங்கே ஆளைக் காணோம் என்று நினைத்தேன். தாமதமானாலும் வந்து படித்துக் கருத்துப் போட்டதுக்கு நன்றி நண்பி.

இராயர் said...

அருமையிலும் அருமை
ஒரு "முத்து" என்றே சொல்லலாம்.
ரொம்ப தாமதாக படித்ததற்கு வருத்தம் தான்.உங்கள் நடை மெருகு ஏறி விட்டது.
ரொம்ப நன்றி.
இந்த கதை இல்லை ,இல்லை. கதை என்றே சொல்ல முடியாது.இது எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு மறக்க முடியாத, நடந்து முடிந்த சம்பவம் தான்.

எது எப்படியோ என்னுடைய மஞ்சரியை ஞாபக படுத்தி விட்டிர்கள்.

குறிப்பு:

நான் அடுத்த வாரம் இந்தியா போகிறேன்
தொடர்ந்து எழுதுங்கள்
நேரம் கிடைத்தால் உங்கள் எழுத்துக்களைப் படிக்கிறேன்

அன்புடன்
இராயர்

ஜீவி said...

சின்னக் கதைக்குள் அங்கங்கே அழகாகத் தெரியும் பல வரிகள், பிரமாதமாக நகர்த்திச் சென்ற லாகவம்
எல்லாமே மனசைக் கவர்ந்தது.
பாராட்டுகள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//இராயர் அமிர்தலிங்கம் said...
அருமையிலும் அருமை
ஒரு "முத்து" என்றே சொல்லலாம்.
ரொம்ப தாமதாக படித்ததற்கு வருத்தம் தான்.உங்கள் நடை மெருகு ஏறி விட்டது.
ரொம்ப நன்றி.
இந்த கதை இல்லை ,இல்லை. கதை என்றே சொல்ல முடியாது.இது எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு மறக்க முடியாத, நடந்து முடிந்த சம்பவம் தான். எது எப்படியோ என்னுடைய மஞ்சரியை ஞாபக படுத்தி விட்டிர்கள்//
உங்களுக்கு இந்தக் கதை பிடிக்கும் என்று எதிர்பார்த்தேன். நன்றி இராயர்.
வாய் தவறி சொல்லி விட்டீர்களா? யார் அந்த......முதல் காதலா?
நீங்கள் சொல்வதுபோல் எல்லோருக்கும் ஒரு கதை இருக்கும். Wish you a safe journey.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஜீவி said...
சின்னக் கதைக்குள் அங்கங்கே அழகாகத் தெரியும் பல வரிகள், பிரமாதமாக நகர்த்திச் சென்ற லாகவம்
எல்லாமே மனசைக் கவர்ந்தது. பாராட்டுகள்.//

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே! தொடர்ந்து வருகை தாருங்கள்.

butterfly Surya said...

அருமை.

ப்ச்.. ஏதோ ... நினைவுகள்....