நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Friday, 10 July 2009

என் பிரிய பபிதா -பகுதி 2

நந்தினி தன் அறைக்குள் பெட்டியடுக்குகிறாள். மெல்லப்போய் என்ன செய்கிறாள் என்று எட்டிப் பார்க்கிறேன். வரும்போது மாற்றிப் போட உடையில்லாமல்தான் இவள் வந்தாள். இப்போ இரண்டு பெட்டி நிறம்ப அமுக்கி அமுக்கி வைத்துக் கொண்டிருக்கிறாள். அத்தனையும் அம்மம்மாவின் பரிசு. அவளுக்கு இவள்மேல் அன்பும் அபிமானமும். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் தங்கத்தில் ஏதாவது போட்டு விடுவாள். தோடு, மோதிரம் , சங்கிலியென்று சேர்த்து விட்டாள். அவளை இங்கு வேலைக் காரியாக யாரும் நடத்தியதே கிடையாது. அவள் நினைத்த கறிதான் சமையல். நினைத்தபோது சமையல். புத்தகம் படித்துத் தான் சிற்றுண்டி பண்ணுவாள். சுருக்கமாகச் சொன்னால் இது அவள் வீடு. நாங்கள் எல்லாம் விருந்தினர் தான்.போங்கோ!
அந்த நேரம் பார்த்து என் அக்காவும் தங்கையும் அவள் அறைக்கு வர நான் மெல்ல நகரப் பார்க்கிறேன். அவள் என்னைக் கண்டு விட்டாள்.' வா தம்பி ' என்று கூப்பிடுகிறாள். நானும் போகிறேன். கண்கலங்கியபடி' உனக்கு மாசியிடிச்சு, ஒரு போத்தலில் போட்டு வைத்திருக்கிறேன். ஆத்தா உனக்கு சம்பல் போடுவாள்.' என்கிறாள். எனக்கு அழுகை வந்து விட்டது . அதை மறைக்க முயன்று கொண்டிருந்தேன்.' என் தங்கை பபிதா, இனி உங்க கூடத்தான் இருக்கப் போறாள். அவள் சின்னப் பொண்ணு .ஏதும் தெரியாம தப்புப் பண்ணினால் பொறுத்துக் கொள்ளுங்கோ. என்னைப் பார்த்ததுபோல் பார்த்துக் கொள்ளுங்கோ' என்கிறாள். எனக்கு இது புதுச் செய்தி. யாரும் என்னிடம் இப்படி நந்தினி தங்கை வேலைக்கு வருவதாகச் சொல்லவில்லை. அதைப் பார்த்தால் ஒரு சின்ன வட்டுப் போல் இருக்கிறது. அது இங்கு என்ன செய்யப் போகிறது என்று நினைத்துக் கொண்டு கூடத்தில் என்ன நடக்கிறதென்று பார்க்க ஓடுகிறேன்.

அங்கு அம்மாவின் குரல் பலமாகக் கேட்கிறது. ' இது சரிவராது. தயவு செய்து உன் பிள்ளையைக் கூட்டிப் போ. இன்னும் இரண்டு வருடத்தில் கூட்டி வா. நான் வைத்துக் கொள்கிறேன்' என்கிறாள். அம்மம்மாவும், 'உன் கஷ்டம் எனக்கு விளங்குதையா, ஆனால் இது சின்னப் பிள்ளை . இவளை நாங்கள் வைத்திருந்தால் சட்டப் படி குற்றம். எங்களை வம்பில மாட்டி விடாதேப்பா' என்கிறாள். அப்போதான் நான் அந்த சின்னப் பொண்ணைத் திரும்பிப் பார்த்தேன்.
என்னை விட இவளுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டு வயது கூட இருக்கலாம். அப்போ பதின் மூன்று வயதுதான் இருக்கும். அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது. இவர்கள் எல்லாம் இவளைக் கொண்டு போ என்று சொல்ல விஷயம் புரியாமல் அலங்க மலங்க முழித்துக் கொண்டு இருந்தாள். முகம் அதே கறுப்பு. குட்டி நந்தினியேதான். ஆனால் இவள் கண்ணில் தெரிந்த குறும்பு எனக்குப் பிடித்தது. இவள் நந்தினி மாதிரி என்னை மாட்டி விடமாட்டாள் என்று தோன்றுகிறது. அப்படியே ஜன்னல் அருகில் ஒரு கதிரையை எடுத்துப் போட்டு உட்கார்ந்து கொள்கிறேன்.

அப்போதான் நந்தினி பெட்டியுடன் வருகிறாள். வந்தவள் அம்மம்மா காலடியில் இருக்கிறாள். அவள் தலையைத் தடவிவிட்டபடி அம்மம்மா விக்கி விக்கி அழுகிறாள்.அவள் இப்படி அழுது நான் பார்த்ததேயில்லை. 'நந்தினி ஒரு தங்கம் ஐயா, நல்ல இடத்தில் தானே குடுக்கிறாய்' என்று தகப்பனிடம் கேட்கிறாள்.அவர் தன் சொந்தத்தில் தான் பார்த்ததாகச் சொல்கிறார். இப்போ நந்தினி வாயைத் திறக்கிறாள். '' என்னைப் பற்றிக் கவலைப் படாதே ஆத்தா! நான் ராசாத்தி போல இங்கே இத்தனை நாள் இருந்திட்டேன். என்னைப் பார்த்த மாதிரி என் தங்கச்சியையும் பார்த்துக் கொள் . இவள் மூன்று நேரம் சாப்பிட்டாலே போதும் எனக்கு' என்று அம்மம்மா காலைப் பிடித்துக் கொள்கிறாள். அதற்கு அவள் 'இவள் சின்னப் பிள்ளையடி. நான் பெரியவளைக் கொண்டு வருவீர்கள் என்றுதான் ஓமென்றேன்.' என்கிறாள். பெரியவளுக்கு ஆஸ்மா நோயாம் . அடிக்கடி ஏலாமல் போகிறதாம். அதனால்தான் இவளைக் கூட்டி வந்திருக்கிறார். தகப்பன் அழாக் குறையாக கெஞ்சுகிறார். எனக்குக் கண் கலங்கி விட்டது. அப்போதான் நந்தினி அவள் தங்கையின் காலை அம்மம்மாவிடம் காட்டுகிறாள். சூடு போட்ட காயமாம். எனக்குத் தூரத்தில் தெரியவில்லை. எங்கோ இவளை வேலைக்கு விட்டார்களாம். இவள் விலையுயர்ந்த பூச் சாடியொன்றை கைதவறிப் போட்டு உடைத்து விட்டாளாம். . அதற்குச் சூடு போட்டிருக்கிறார்கள். ' அட கடவுளே , இந்தப் பச்சைக் குழந்தைக்கு இப்படிப் பண்ணினார்களா , பாவிகள்' என்று திட்டுகிறாள் அம்மம்மா . அத்துடன் பபிதாவை வைத்திருக்க முடிவு செய்து விட்டாள் என்று தெரிகிறது.

'பிள்ளையோடு பிள்ளையாய் அது இங்கு இருந்திட்டுப் போகட்டும். அவள் இங்கு வேலைக்கு இருக்கிறாள் என்ற நினைப்பு உனக்கு வேண்டாம்' என்கிறாள். 'அவள் என்னைவிட சமத்து ஆத்தா, சொல்லிக் குடுத்தா கத்துப்பாள். நீ எனக்குச் செய்ததில் இது தான் பெரிய உதவி '' என்று அழுதபடியே புறப்படுகிறாள் நந்தினி. அவர்கள் பின்னால் அழுது கொண்டே ஓடுகிறாள் பபிதா. அம்மம்மா என்னை அவர்களுடன் ஸ்டேஷன் வரை போய் வரும்படி சொல்கிறாள். பபிதாவும் எங்களுடன் வருகிறாள். போகும் வழியில் நந்தினி இவளுக்கு எங்கள் எல்லோரையும் பற்றிச் சொல்லிக் கொண்டே போகிறாள். என்னைப் பற்றியும் நல்ல தனமாகத் தான் சொல்கிறாள். ஆனால் இவள் எதையும் கவனித்ததாக எனக்குத் தெரியவில்லை.திரும்பி வரும்போது இவளிடம் ' உனக்கு எத்தனை வயது' என்று கேட்கிறேன். 'பதின் நாலு' என்று சொல்கிறாள். நம்ப முடியாமல் ' பிறந்த திகதியச் சொல்லு' என்கிறேன். அதற்கு அந்த மண்டு ' சித்திரை வருசமன்று தான் நான் பிறந்தேன். எல்லாரும் என் பிறந்த தினத்துக்கு வெடி போடுவார்கள்' என்கிறாள். அடக்க மாட்டாமல் சிரிக்கிறேன். நான் சிரித்ததும் அவள் முகம் அப்படியே வாடிப் போய் விடுகிறது. 'நான் தப்பாய் ஏதும் சொன்னேனா? ' என்று கேட்கிறாள். ' இல்லை இனிமேல் நாங்களும் உன் பிறந்த தினத்துக்கு வெடி போடுவோம் என்று நினைத்துச் சிரித்தேன்' என்கிறேன்.

சும்மா சொல்லக் கூடாது. இவளும் நல்ல சுறு சுறுப்பு. நந்தினி மாதிரியே ஓடி ஓடித் திரிவாள். அம்மம்மா இவளைக் சமையல் கட்டுக்கு மட்டும் விட மாட்டாள். மரக் கறி கூட வெட்ட விடமாட்டாள். இவள் கொஞ்சமும் சுத்தம் கிடையாது. தினமும் காலையில் அம்மம்மா இவளிடம் பல்லுத் தீட்டு, குளிச்சியா?, தலை சீவினியா ? என்று கேட்கும் சத்தத்தில் தான் நான் கண் திறப்பேன். அம்மம்மா கத்திக் கத்தி இவளை உடுப்பு மாற்ற வைப்பாள். வில்லங்கத்துக்கு உடுப்பு மாற்றி வந்ததும் அடுத்த நிமிடம் மண்ணில் குந்துவாள். ஒரு வாரத்தில் எல்லோருடனும் சுமுகமாகப் பேசத் தொடங்கி விட்டாள். அவள் நல்ல வாயாடி கூட. எனக்கென்னமோ இவள் பையனாய்ப் பிறக்க வேண்டியவள் தப்பிப் போய் பெண்ணாகப் பிறந்து விட்டாள் என்று தோன்றுகிறது.

எங்கள் வீட்டில் பழ மரங்களுக்குக் குறைவில்லை. இவளுக்குப் பழமென்றால் உயிர். காலையிலிருந்து மாலைவரை பழம் தின்ற படியே இருப்பாள். ஆளைக் காணோம் என்று பார்த்தால் மாமரத்தில் இருப்பாள். இவள் இங்கு வந்த பின்னர் தான் பனங் கிளங்கைக் கண்டாள். எங்கள் வீட்டுக்குப் பின்னால் பனங் காடு. நானும் அவளும் போய் பனங் கொட்டை புறக்கி வருவோம். கிணற்றையும் துலாவையும் முதல் தரம் கண்டபோதும் துள்ளிக் குதித்தாள். ' இங்கே பார் தம்பி' என்று கூப்பிட்டு துலாக் கயிற்றில் தொங்கி மேலே போய் வித்தை காட்டுவாள். எதைக் கண்டாலும் கண்களை அகல விரித்து அவள் பார்க்கும் போது இது இவளுக்குப் புதிது என்று எங்களுக்குப் புரிந்து விடும்.

மூன்று மாதம் எப்படியோடியது என்று தெரியவில்லை. ' அடியே, பபி ' என்று அம்மம்மா பலமுறை கத்தியபின்புதான் என்னவும் செய்வாள். இண்டைக்கு உன்னை அனுப்புகிறேன், நாளைக்கு உன்னை அனுப்புகிறேன் என்று மிரட்டிக் கொண்டு இருந்தாலும் , அம்மம்மா பபிமேல்லுள்ள இரக்கத்தினாலும் ,அன்பினாலும்தான் அவளை எங்களுடன் சேர்த்துக் கொண்டாள் என்று எங்களுக்குப் புரிந்தது.
அன்று ஞாயிற்றுக் கிழமை , அம்மம்மா காலையில் சீயாக்காய் அவித்து விட்டாள். ஒவ்வொருவராக முழுக்கெடுத்த பின்னர் தான் சாப்பாடு தருவாள். இதுதான் எங்கள் வீட்டு வழக்கம். அன்று என் நண்பன் சிவாவின் பிறந்த தினம். அவன் வீட்டில் எனக்கு மதியச் சாப்பாடு. அதனால் நான் முதலே முழுகிவிட்டுப் புறப்படுகிறேன். நான் புறப்பட்ட போது பபி வாசலில் கோழிக் குன்சுகளைக் கலைத்துக் கொண்டு ஓடுகிறாள். அம்மம்மா தலைக்கு நிறைய எண்ணெய் வைத்து விட்டிருக்கிறாள். ''உன்னைப் பார்க்கச் சகிக்கலை.' என்று சொல்கிறேன்.
'நீயும்தான்' ' என்றவள், எனக்கு ' வெவ்வெவ்வே' என்கிறாள்.

நண்பன் வீட்டில் சுமார் மூன்று மணி நேரம் இருந்திருப்பேன். திரும்பி வந்தபோது தெருமுனையில் எங்கள் வீட்டுக்கு முன்னாள் அந்தத் தெருவே கூடி நிற்பது தெரிகிறது. நெஞ்சு பதைக்க பாய்ந்து ஓடுகிறேன். அம்மம்மா என்னைக் கண்டதும் ஓவென்று அழுகிறாள். என் அக்காவும், தங்கச்சியும் அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள். அப்பா அப்போ ஊரில் இல்லை. எங்கே பபி? திக்கென்று இருக்கிறது. 'என்னாச்சு அம்மம்மா?' என்று கலக்கத்துடன் கேட்கிறேன். ' அந்தப் பாவி மகள் இப்பட்டிப் பண்ணிட்டாளே!'' என்று ஒப்பாரி வைக்கிறாள். இவளிடம் கதை கேட்க முடியாது என்று தெரிய சித்தியிடம் ஓடுகிறேன். அவள்தான் தேம்பித் தேம்பிக் கதை சொல்கிறாள். குளிக்கப் போன பபி வழமை போல் துலாக் கயிற்றில் தொங்கி விளையாடி இருக்கிறாள். அப்போதான் அம்மம்மா கண்டு கிணத்துக்குள் விழப் போராயடி என்று கத்திவிட்டு வந்திருக்கிறாள். இவள் விழுந்த சத்தம் கேட்டு அம்மம்மா கூக்குரல் போட்டிருக்கிறாள். சித்தப்பா உடனே கிணற்றுக்குள் குதித்து அவளைத் தூக்கியிருக்கிறார். பலரும் வந்து கஷ்டப்பட்டு அவளைத் தூக்கியிருக்கிறார்கள். முதலுதவி செய்தபின் காரில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். அங்கு அவள் உயிர் போய் விட்டது.

பைத்தியம் பிடித்தவன் போல் ' எண்ட பபி ' என்று கத்திய படி கிணற்றுப் பக்கம் ஓடுகிறேன். அக்காவும் அம்மாவும் என் பின்னால் ஓடி வருகிறார்கள். கடைசியாக அவள் எனக்குச் சொன்ன 'வெவ்வெவ்வே' ' மனதில் கனக்கிறது. அவள் மாற்ற வைத்த உடை வேலியில் தொங்குகிறது. அவள் போய்விட்டாள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. சிலையாக கிணற்றையே பார்த்தபடி இருக்கிறேன். அதற்குள் அம்மம்மா மயங்கி விழுந்து விட்டாள். எல்லோரும் அவளைப் பார்க்க ஓடுகிறார்கள். என்னைத் தண்ணி கொண்டுவரச் சொல்கிறார்கள். செம்பை எடுக்கக் குசினிக்கு ஓடுகிறேன். அங்கே பபியின் சாப்பாட்டுத் தட்டில் அம்மம்மா போட்டு வைத்த சாப்பாடும் அவளுக்குப் பிடித்த பப்பாசிப் பழமும் என்னைப் பார்த்து ' வெவ்வெவ்வே'' என்கிறது..

28 comments:

sakthi said...

பைத்தியம் பிடித்தவன் போல் ' எண்ட பபி ' என்று கத்திய படி கிணற்றுப் பக்கம் ஓடுகிறேன். அக்காவும் அம்மாவும் என் பின்னால் ஓடி வருகிறார்கள். கடைசியாக அவள் எனக்குச் சொன்ன ' வெவ்வெவ்வே' மனதில் கனக்கிறது.

என் மனமும் கனத்துவிட்டது ....

உங்கள் கதையை படித்து....

அ.மு.செய்யது said...

சுவாரஸிய‌மா எழுத‌றீங்க‌ ஜெஸ்வ‌ந்தி..

//மாசியிடிச்சு, ஒரு போத்தலில் போட்டு வைத்திருக்கிறேன். ஆத்தா உனக்கு சம்பல் போடுவாள்' என்கிறாள். எனக்கு அழுகை வந்து விட்டது //

மாசி என்ற‌து ஒருவ‌கை மீன்ல‌ர்ந்து ப‌ண்ணுவாங்க‌ தானே..

எங்க‌ ஊர்ல‌ இது கிடைக்கும்.

ரங்கன் said...

சுவாரஸியத்துக்கு பஞ்சமில்லை.

தெளிவான நடைக்கு பாராட்டுக்கள்.

தொடருங்கள்... வாழ்த்துக்கள்

ஜெஸ்வந்தி said...

//sakthi said...
என் மனமும் கனத்துவிட்டது ....

உங்கள் கதையை படித்து....//

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சக்தி. உங்கள் மனங்களைக் கனக்க வைத்து அனுப்புகிறேன் என்று எனக்குக் கவலைதான்.

ஜெஸ்வந்தி said...

//அ.மு.செய்யது said...
சுவாரஸிய‌மா எழுத‌றீங்க‌ ஜெஸ்வ‌ந்தி..//

உங்கள் ரசனைக்கு நன்றி நண்பரே!

// மாசி என்ற‌து ஒருவ‌கை மீன்ல‌ர்ந்து ப‌ண்ணுவாங்க‌ தானே..
எங்க‌ ஊர்ல‌ இது கிடைக்கும்.//

சரிதான். மாசி tuna fish இலிருந்து தயார் பண்ணு வாங்க. இந்தியாவில் கிடைக்கும்.
மலிவும் கூட.

ஜெஸ்வந்தி said...

//ரங்கன் said...
சுவாரஸியத்துக்கு பஞ்சமில்லை.
தெளிவான நடைக்குபாராட்டுக்கள்.
தொடருங்கள்... வாழ்த்துக்கள்//

உங்கள் வருகைக்கும், ரசனைக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி ரங்கன்.

பா.ராஜாராம் said...

அற்புதம்..ஜெஸ்...
சர சரவென இழுத்து சென்று,
அடர் சோகத்தில் சொருகுறீர்கள்!
கதை முடிந்து நிமிரும் போது,
"நீ எனக்கு செய்ததில் இதுதான் பெரிய உதவி"..
என்று நந்தினி கேட்டுகொண்டது நமையறியாது
நினைவிற்கு வருகிறது-கண்கள் கலங்க இது போதுமானதாகிறது..

R.Gopi said...

ரெண்டாவது பாகம் போட்டாச்சா?? சூப்பர்.......

படிச்சேன்...மனம் மிகவும் கனத்தது......

அதுவும், அந்த முடிவு பாரா....... ஆ ஹா..........

ரொம்ப உணர்ச்சிகரமா இருந்தது......

வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்......

நட்புடன் ஜமால் said...

அவள் நினைத்த கறிதான் சமையல். நினைத்தபோது சமையல். புத்தகம் படித்துத் தான் சிற்றுண்டி பண்ணுவாள். சுருக்கமாகச் சொன்னால் இது அவள் வீடு. நாங்கள் எல்லாம் விருந்தினர் தான்.போங்கோ!\\


ஹா ஹா ஹா! சரியா சொன்னீங்க - இந்த நிலை தான் அதிகம் இடங்களில்.


மாசி - ரொம்ப டேஸ்ட்டாக இருக்கும் - வெங்காயம் வெட்டி போட்டு கொஞ்சம் எலுமிச்சை பிழிஞ்சி விட்டா - ஆஹா! அருமை ...

நட்புடன் ஜமால் said...

குளிக்கப் போன பபி வழமை போல் துலாக் கயிற்றில் தொங்கி விளையாடி இருக்கிறாள். அப்போதான் அம்மம்மா கண்டு கிணத்துக்குள் விழப் போராயடி என்று கத்திவிட்டு வந்திருக்கிறாள். இவள் விழுந்த சத்தம் கேட்டு அம்மம்மா கூக்குரல் போட்டிருக்கிறாள். சித்தப்பா உடனே கிணற்றுக்குள் குதித்து அவளைத் தூக்கியிருக்கிறார். பலரும் வந்து கஷ்டப்பட்டு அவளைத் தூக்கியிருக்கிறார்கள். முதலுதவி செய்தபின் காரில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். அங்கு அவள் உயிர் போய் விட்டது.\\மனசு கஷ்ட்டமா இருந்திச்சி ...

சப்ராஸ் அபூ பக்கர் said...

:-)

ஜெஸ்வந்தி said...

//பா.ராஜாராம் said...
அற்புதம்..ஜெஸ்...
சர சரவென இழுத்து சென்று,
அடர் சோகத்தில் சொருகுறீர்கள்!
கதை முடிந்து நிமிரும் போது,
"நீ எனக்கு செய்ததில் இதுதான் பெரிய உதவி"..
என்று நந்தினி கேட்டுகொண்டது நமையறியாது
நினைவிற்கு வருகிறது-கண்கள் கலங்க இது போதுமானதாகிறது..//

உங்கள் அழகான கருத்துக்கு நன்றி நண்பரே! உண்மைக் கதையென்றதினால் தான் மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். உண்மையில் நந்தினிக்கு என்ன சொல்வேன் என்றுதான் அம்மம்மா சொல்லிச் சொல்லி அழுதாள்.

ஜெஸ்வந்தி said...

//R.Gopi said...
ரெண்டாவது பாகம் போட்டாச்சா?? சூப்பர்.......
படிச்சேன்...மனம் மிகவும் கனத்தது......
அதுவும், அந்த முடிவு பாரா.....ஹா..........
ரொம்ப உணர்ச்சிகரமா இருந்தது......
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்......//

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி கோபி. மிகவும் ரசித்தீர்கள் போல் தெரிகிறது. மகிழ்ச்சி.

ஜெஸ்வந்தி said...

//நட்புடன் ஜமால் said...

மாசி - ரொம்ப டேஸ்ட்டாக இருக்கும் - வெங்காயம் வெட்டி போட்டு கொஞ்சம் எலுமிச்சை பிழிஞ்சி விட்டா - ஆஹா! அருமை ...//

வாங்க ஜமால், என்ன நான் பசியைத் தூண்டி விட்டேனா? ஹா ஹா ஹா

RAMYA said...

இப்போதைக்கு உள்ளேன் இருங்க அப்புறமா முழுவதும் படிச்சுட்டு பின்னூட்டமிடுகிறேன்!!

ராமலக்ஷ்மி said...

அற்புதம் ஜெஸ்வந்தி. வெகு அழகான நடை. அதற்காகவே இருமுறை வாசித்தேன். முடிவும் உலுக்கி விட்டது. இன்னும் இது போன்ற பல படைப்புகளை ஆவலுடன் எதிர் பார்த்து..

ஜெஸ்வந்தி said...

//RAMYA said...
இப்போதைக்கு உள்ளேன் இருங்க அப்புறமா முழுவதும் படிச்சுட்டு பின்னூட்டமிடுகிறேன்!!//

உங்கள் வருகைக்கும் என் வலையத்தைத் தொடர்வதற்கும் நன்றி ரம்யா. உங்கள் ஐம்பதாவது பதிவு படித்தேன். என் மனதைக் கவர்ந்தது.

ஜெஸ்வந்தி said...

//ராமலக்ஷ்மி said...
அற்புதம் ஜெஸ்வந்தி. வெகு அழகான நடை. அதற்காகவே இருமுறை வாசித்தேன். முடிவும் உலுக்கி விட்டது. இன்னும் இது போன்ற பல படைப்புகளை ஆவலுடன் எதிர் பார்த்து..//

உங்கள் பாராட்டுக்கும் தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கும் நன்றி தோழி.

ஜெஸ்வந்தி said...

//சப்ராஸ் அபூ பக்கர் said...
:-) //

நன்றி நண்பரே!

குடந்தை அன்புமணி said...

சுவாரசியமான நடையில் சென்ற கதையின் இறுதியில் கனக்க வைத்துவிட்டீர்களே...

ஜெஸ்வந்தி said...

//குடந்தை அன்புமணி said...
சுவாரசியமான நடையில் சென்ற கதையின் இறுதியில் கனக்க வைத்துவிட்டீர்களே...//

வாங்க அன்புமணி, உங்கள் மனத்தைக்க் கனக்க வைத்ததுக்கு மன்னிக்கவும். இது உண்மைக் கதை என்று சொன்னேனல்லவா!

பாலமுருகன் said...

உண்மையை கதையாய் படிக்கையிலேயே எனக்கு இத்தனை கனக்கிறது . தாங்களோ சம்பவத்தின் ஒரு பாத்திரமாய் எப்படி இதை தாங்கி கொண்டீர்கள் .

ஹேமா said...

தோழி ஜெஸ்வந்தி,சுவாரஸ்யத்தோடு மனதை இன்னும் பாரமாக்கும் கதை.'வெவ்வெவ்வே' பகிடியாய் இருந்தாலும் இந்த இடத்தில் கண்ணைக் கலக்கிட்டுது. இயல்பான வார்த்தைகள்.கதையை இலேசாகப் புரியவைக்கிறது.அருமை தோழி.

ஜெஸ்வந்தி said...

உங்கள் நெகிழ்வான கருத்துக்கு நன்றி பாலா. இது சின்ன வயதில் மனதை மிகவும் தாக்கிய ஒரு நிகழ்ச்சி. அதுதான் இத்தனை காலத்தின் பின்பும் இன்று நடந்தது போல் மனதில் நிற்கிறது.

ஜெஸ்வந்தி said...

//ஹேமா said...
தோழி ஜெஸ்வந்தி,சுவாரஸ்யத்தோடு மனதை இன்னும் பாரமாக்கும் கதை.'வெவ்வெவ்வே' பகிடியாய் இருந்தாலும் இந்த இடத்தில் கண்ணைக் கலக்கிட்டுது. இயல்பான வார்த்தைகள்.கதையை இலேசாகப் புரியவைக்கிறது.அருமை தோழி.//

உங்கள் கருத்துக்கும் ரசனைக்கும் நன்றி ஹேமா

" உழவன் " " Uzhavan " said...

கைபிடித்து கதையோடு அழைத்துச் செல்வதுபோன்று அழகாக இருந்தது உங்களின் எழுத்து. நீங்கள் உபயோகிக்கும் ஒரு சில சொற்களுக்கு பொருள் என்ன என்று தெரியாவிட்டாலும் இதுதான் அது என்று வாசிப்பவன் புரிந்துகொள்ளும் அளவிலும் இருந்தது. வாழ்த்துக்கள்.
 
அன்புடன்
உழவன்

Anonymous said...

Took me time to read the whole article, the article is great but the comments bring more brainstorm ideas, thanks.

- Johnson

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Thanks Johnson.