
இப்போ புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ஒருபடியாக ஐம்பதாவது பதிவை எட்டிப் பிடித்து விட்டேன். நீங்கள் ' சதத்தில்' அடியுங்கள். எனக்குப் பழகிப் போன ' '
பென்ஸ் ' இல் நான் அடிக்கிறேன்.
போன வருடம் மே மாதம் இந்த வலையத்தை ஆரம்பித்தேன். சாவகாசமாக வலையுலகில் அன்ன நடை போட்டதில் ஐம்பது பதிவு போட எட்டு மாதங்கள் ஆகி விட்டன. இதே கதியில் போனால் நூறாவது பதிவை எட்டிப் பிடிக்க இன்னும் எட்டு மாதம் ஆகலாம். அதனால் இப்போதே தாண்டிய இந்த மைல் கல்லில் சற்று நின்று
,வந்த பாதையையும், சந்தித்த மனிதர்களையும், பிரமிக்க வைத்த இந்த வலை யுலகைப் பற்றியும், நாலு வார்த்தை உங்களுடன் பேசலாம் என்று தோன்றியது.

நூறு , இரு நூறு , முன்னூறு என்று எழுதிக் குவித்துவிட்ட வலையுலக மேதைகளுக்கு இந்தக் குட்டி நாயின்
குலைப்பு நகைப்பைத் தரலாம் . ஆனால் சின்னச் சின்ன அனுபவங்களையும், அவை தந்த உணர்வுகளையும் , நெஞ்சத்தில் குறிப் பெடுத்து பொக்கிஷமாகப் போற்றிப் பாதுகாப்பவள் நான்.
இந்தப் புதுமையான வலையுலக அனுபவத்தை விட்டு விடுவேனா? என்ன?

போன வருடம் இந்நேரம் எனக்கு' ப்லொக்' பற்றியும் தெரியாது, இப்படிப் பரந்து விரிந்து கிடக்கும் ஒரு வலையுலகம் என் கணினிக்குப் பின்னால் ஒழிந்திருப்பதும் தெரியாது. என் வேலைகளுக்கும், வாரமொரு முறை மெயில்களை வாசிக்கவும் தான் கணினியை அணிகினேன். நண்பர் ஒருவர் மூலம் கணினியில் தமிழில் எழுதப் பழகிய பின்னர் தான் இந்த வலையுலகைப் பற்றி அறிந்தேன். கூடவே நானும் ஒன்றை ஆரம்பிக்கலாமே என்ற ஆசையும் எழுந்தது. இங்கிலாந்து வந்த புதிதில் என் அப்பப்பாவுக்கும் ,அப்பாச்சிக்கும் மட்டும் தான் தமிழில் கடிதம் எழுதினேன். அவர்கள் இறந்து பல வருடங்கள் ஆனதால் தமிழில் எழுதியும் பல வருடங்கள் ஆகியிருந்தன. முன்னர் எங்கும் எழுதிய அனுபவமும் கிடையாது. பாடசாலை நாட்களில் கட்டுரைப் போட்டிகளில் பெற்ற சில விருதுகளும், நண்பர்களினதும் ஆசிரியர்களின் பாராட்டுகளும் மட்டும் தான் எனது அனுபவம் . ஆனால் அப்போது கூட தன்னிலை மறந்து எழுதும் சுபாவம் எனக்கு இருந்தது. பத்தாம் வகுப்பில் படிக்கும் போது, கொழும்பு
பாடசாலைகளுக்கிடையிலான ஒரு கட்டுரைப் போட்டியில் நான் எழுதிய ' பாழடைந்த வீடு சொன்ன கதை ' பரிசு பெற்றதால் அதன் பிரதி எல்லா பாடசாலைகளுக்கும் மாதிரிக் கட்டுரையாக அனுப்பப் பட்டது. அதில் நான் பாழடைந்த வீடாகவே மாறி, பக்கத்தில் இருந்த பலாமரம் என் மேல் கொண்ட அளவு கடந்த ஒருதலைக் காதலைப் பற்றியும் , வீசும் தென்றலைச் சாக்காக்கி அது என் மேல் உரசிக் கொண்டு செய்த சில்மிசங்களையும், கடைசியில் சூறாவளியைச் சாதகமாக்கி கட்டித் தழுவி நொறுக்கியதையும் விபரித்திருந்தேன். ஏதோ விதமாக என் பெயரும் வெளி வந்து, கட்டுரையும் வெளி வந்ததால் தெருவில் கூட்டம் போடும் பையன்கள் குழு என்னைப் 'பாழடைந்த வீடு' என்று பட்டப் பெயர் சூட்டி அழைத்தார்கள். அழுது கொண்டு பாடசாலை செல்ல அப்பாவைத் துணைக்கு அழைத்துப் போன நாட்கள் இப்போ பசுமையாக நினைவில்.
ஏதோ ஒரு துணிவில் இந்த ' மௌன ராகம்' இசைக்கத் தயாரானது. முதல் காதல். முதல் முத்தம் போல மறக்க முடியாமல் கிடக்கும் சில
விடயங்களை இங்கே உங்களுடன் பகிர்கிறேன்.
முதன் முதலாக எழுதிய பதிவு
என்ன எழுதுவது என்று இரவு பகல் யோசித்து ஒரு கவிதையுடன் ஆரம்பித்தேன். நான் எழுதிய முதல் கவிதையும் இதுதான் .
கண்ணீர் வெள்ளம்வண்ண வண்ணக் கண்ணழகன்-என்
எண்ணம் எல்லாம் நிறைந்திட்டான்.
கண்ணன் ராதை என்றெண்ணி -நான்
விண்ணை மண்ணில் கண்டிட்டேன்.சுற்றிச் சுற்றி வந்து நின்றான்-என்
உற்றம் உறவும் மறக்க வைத்தான் .
கொற்றம் அவனே என்றெண்ணி- நான்
சுற்றுச் சூழல் மறந்து விட்டேன்.கண்ணன் மனதில் கள்ளமடி- அவன்
எண்ணம் எல்லாம் குற்றமடி.
வண்ணம் எல்லாம் கலைந்ததெடி- இந்தப்
பெண்ணின் கண்ணீர் வெள்ளமடி.முதன் முதலாக கிடைத்த கருத்து பதிவிட்ட அன்றே எனக்குக் கிடைத்த முதல் கருத்து மிகவும் பொன்னானது.
அந்தக் கருத்திட்டவர் யார் தெரியுமா? வேறு யாருமல்ல.
' கார்க்கி' தான். அப்போது எனக்கு இவர்தான் வலையுலக மன்னர் என்றோ, அவர் போட்ட குட்டு மோதிரக் குட்டு என்றோ தெரியவில்லை.
அன்று வந்த கார்க்கி அதன் பின்னர் என்றுமே என் வலயத்தை எட்டிப் பார்க்காவிட்டாலும், அந்த முதல் கருத்து மனதை விட்டு அகலாது. க்ளிக் பண்ணி கார்க்கி வலையத்துக்குப் போனேன்.அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும், பதிவுகளும், அதில் கண்ட கும்மிகளும் ஓரளவு என்னைப் பயப் படுத்தி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
முதன் முதலாக தொடர்ந்த நண்பர்என் முதல் பதிவுக்குக் கருத்திட்டு விட்டு என் வலையத்தை முதன் முதலாகப் பின் தொடர்ந்தவர் , அனைவருக்கும் பூங்கொத்து வழங்கும்
அன்புடன் அருணா.
முதன் முதலாக ஊக்கிய விருதுவலையம் ஆரம்பித்து இரண்டே வாரங்களில்
கவிநயா என்னிடம் பறக்க விட்ட பட்டாம் பூச்சி விருது தந்த பரவசம் அபாரம்.
அதைத் தொடர்ந்து நண்பர்கள் அனுப்பிய அத்தனை விருதுகளும் என் மனதையும் வலையத்தையும் அலங்கரித்து நிற்கின்றன.
முதன் முதலாக சஞ்சிகை அறிமுகம்புத்தாண்டில் தேவதை பொங்கல் சிறப்பிதழில் என் வலயத்தின் அறிமுகம் , ஒரு புத்துணர்ச்சி தருகிறது.
வலைச்சரத்தில் நண்பர்கள் தந்த முத்தான அறிமுகங்கள்
தமிழரசி.-------------- ஜூலை 2009
ஜீவன்-- -------------- அக்டோபர் 2009
பிரியமுடன் வசந்த்---டிசம்பர் 2009
தமிழரசி தந்த அறிமுகம்//வலைப்பூவின் புதுப்பூ அல்ல ஏற்கனவே வாசம் வீசிக் கொண்டு இருக்கும் மலர் இவர் எனக்கு இங்கு மேலும் ஒரு சிறந்த தோழி கிடைத்திருக்கிறார் என்ற பெருமிதம்இவர் கதைகளில் பெண்மை பேசும் விந்தை ஆம் அத்தனை அழகாக பெண்களின் நிலையை தன் கதையில் சொல்லியிருக்கிறார் நான் இங்கு தரும் இவருடைய அந்த பதிவைப் பார்த்தால் நீங்களும் இதைத் தான் நினைப்பீர்கள் இவரும் எனக்கு புதுமுகம் என்பதால் இன்னும் அதிகம் சொல்ல முடியவில்லை அதனால் என்ன ?
இனி மேல் நாங்கள் தான் நெருங்கிய தோழிகளாயிற்றே அறிந்துக் கொள்(ல்)வோம் ஹிஹி ஹி கவிதை சொல்லி உங்களை....இவர் தான் ஜெஸ்வந்தி மெளனராகங்கள்
இவருடைய பதிவுகளில் சில இங்கு அறிமுகப்படுத்துகிறேன்...
நான் அழுது கொண்டே சிரிக்கிறேன்..
நான் இப்ப ஏன் கண் கலங்குகிறேன் //
ஜீவன் தந்த அறிமுகம்//ஜெஸ்வந்திஒரு புதிய எழுத்து நடை..! ஒவ்வொரு வார்த்தையிலும் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் எழுதுகிறார் . இவரின் இந்த பதிவுகளை பொறுமையாக படியுங்கள்.
யார் குடியைக் கெடுத்தேன்- பகுதி 1
யார் குடியைக் கெடுத்தேன்- பகுதி 2
யார் குடியைக் கெடுத்தேன்- பகுதி 3 //
பிரியமுடன் வசந்த் தந்த அறிமுகம்// ஜெஸ்வந்தி
இவங்க மெளனராகங்கள் எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க
நான் இவங்களை ஜெஸ்ஸம்மான்னுதான் கூப்டுவேன்.
இவங்க ஒரு கவிஞர் நிறைய கவிதைகள் எழுதியிருக்காங்க வாழ்வியல் கவிதைகள் அத்தனையும்..அனுபவ பகிர்வுகளும் எழுதியிருக்காங்க இல்லையா ஜெஸ்ஸம்மா?
இவங்களோட இடுகைகள்

ஐந்து வாரங்கள் எந்தத் திரட்டியிலும் இணையாவிட்டாலும் எனது பதிவுகளுக்குக் கிடைத்த கருத்துக்கள் என்னைத் தொடர்ந்து எழுத வைத்தன.
தமிலிஷ் இல் முதலில் இணைந்தபோது கிடு கிடுவென நீண்டு சென்ற பின் தொடரும் நண்பர்களின் பட்டியலும், பதிவிட்ட சில மணி நேரத்தில் குவிந்து விட்ட கருத்துக்களும் என்னை வானத்தில் பறக்க வைத்தன என்று சொன்னால் மிகையாகாது. எட்டு மாதமும் ,ஐம்பது பதிவுகளும் ,108 தொடரும் நண்பர்களும் நான் எதிர் பார்க்காத வரப்பிரசாதங்கள்.
உங்கள் கருத்துகளும் , திரட்டிகளில் அளித்த வாக்குகளும் என்னைப் பல பதிவர்கள் அறிந்து கொள்ள வைத்தன. அதனால் பெற்ற ஊக்கம்தான் என்னை ஐம்பதாவது ப்திவு வரை கொண்டு வந்துள்ளது. இங்கே' நன்றி ' என்ற ஒரு வார்த்தை போதாது என்று எனக்குத் தோன்றுகிறது.

ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக , நான் யார் என்பதறியாமல், முகம் தெரியாமல் வெறும் எழுத்துக்களால் மட்டும் ஈர்க்கப் பட்டு , உலகின் வெவ்வேறு மூலைகளிலிருந்து வந்து சேர்ந்த அன்பு உள்ளங்கள் விலை மதிப்பற்றவை. மேடம் என்றும், தோழி என்றும், அக்கா என்றும் , அம்மா என்றும் வளர்ந்து விட்ட உறவுகள் பொன்னானவை. இரண்டு வாரம் பதிவிட வில்லையென்றால் '' என்னாச்சு ஜெஸ் '' என்று மெயிலனுப்பும் வலையுலக நண்பர்கள் தான் எனக்குக் கிடைத்த பெரும் விருது. நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பும் ஆசியும் மக்கா.
.