நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Sunday, 31 May 2009

நான் ஏன் இப்போ கண் கலங்குகிறேன்?


பிள்ளைகள் வெளியில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். குளிர் காலம் முடிந்து இன்றுதான் ஓரளவு வெட்கையாக இருக்கிறது. இதற்காகவே காவல் இருந்ததுபோல் காலை முதல் இவர்கள் வெளியில் உருண்டு பிரண்டு விளையாடுகிறார்கள் . சமையலறையில் பாத்திரங்களைக் கழுவியபடி ஜன்னல் வழியாக எனது ரோசாத் தோட்டத்தைப் பார்க்கிறேன். எல்லாச் செடிகளும் ஒரே நேரத்தில் பூத்து ஒரு கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. இந்த வீட்டுக்கு நாங்கள் குடிவந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது. நான் இங்கு வந்ததும் நாட்டிய ரோசாத் தடிகள் இப்போதான் முதல் முறையாகப் பூக்கத்
தொடங்கியிருக்கின்றன. என் கண்ணே பட்டிடும் என்றெண்ணி என் கவனத்தை பிள்ளைகள் பக்கம் திருப்பினேன் .

எனது கடைக்குட்டி விஜி எப்படியோ ஆப்பிள் மரத்தில் ஏறியிருந்தாள். கீழே இறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன் .சின்ன வயதில் நானும் தம்பியும் மாமரத்தில் ஏறி பஸ் வண்டி விளையாட்டு விளையாடியது நினைவு வந்தது. இங்கு இவர்கள் சூரியனைக் கண்டதும் வருடத்தில் இரண்டு மூன்று மாதங்கள் தோட்டத்துக்கு ஓடுவதைக் காணப் பரிதாபமாக இருந்தது. விஜியை மரத்திலிருந்து இறக்கிவிட்டு கவனமாக அவர்களை விளையாடச் சொல்லிவிட்டு உள்ளே வந்தேன்.அவர்களுக்குப் பிடித்த கொத்து ரொட்டி செய்யலாம் என்று தோன்றியது. எனக்கும் கூட சூரியனைக் கண்டால் தான் வேலை செய்யும் மூடே வருகிறது.

ஒரு மணிநேரும் போயிருக்கும் என்று நினைக்கிறேன். சமையலை முடித்துவிட்டு பாத்திரங்களைக் கழுவப் போனபோது எதேச்சையாக என் ரோசா தோட்டத்தை பார்த்து அப்படியே அதிர்ந்து போனேன் .மரத்தில் ஒரு பூ தன்னும் இல்லை.நடந்ததை என்னால் ஊகிக்க முடிந்தது. ஆனாலும் என்னால் அதனைத் தாங்க முடியவில்லை.

கல்யாணம் ஆன புதிதில் என் கணவர் எனக்கு ஒரு நாள் கஷ்டப்பட்டு வீட்டை அலங்கரித்திருந்தார். வீட்டுக்குள் நுழைந்தபோது கம கம என வாசனை வந்தது. கூடம் பளீர் என்று இருந்தது . எனக்காக ரொம்ப நேரம் ஒதிக்கி அத்தனையும் செய்திருந்தார் என்று தெரிந்தது. இவருக்குக் கூட இப்படியெல்லாம் செய்ய தெரிகிறதே என மகிழ்ந்து முத்தமிட்டு நன்றி சொன்னேன் . சாப்பாட்டு அறைக்குள் புகுந்ததும் மேசையில் அழகாக என்னைப் பார்த்து சிரித்த சிகப்பு ரோஜாக்கள் என்னை நிலை குலைய வைத்தன.அதிர்ந்து போய் என் செடியைப் பார்த்தபோது என் கண் கலங்கி விட்டிருந்தது . எனது திடீர் மாற்றத்தைக் கண்டு என் கணவர் பதறிப் போய் விட்டார். அந்தப் பூக்கள் செடியில் தான் மிக அழகாக இருந்தன என நான் விளக்கியபோது அவரால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை .இனி எப்பவுமே என் செடியில் இருந்து பூப் பறிக்க மாட்டேன் என்று சொன்னார்.

வெளியே போய் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் அவர்களைக் காணவில்லை .கவலையும் கோபமும் முட்டி மோத வீட்டின் முன்பக்கம் போகிறேன் .பக்கத்துக்கு வீட்டிலிரிந்து அவசரமாக ஓடி வருகிறார்கள் . ‘ யாரைக் கேட்டு பக்கத்துக்கு வீட்டுக்குப் போனீர்கள்? விளையாடியது காணும் உள்ளே வாருங்கள்" என்கிறேன்.என் பின்னால் வருகிறார்கள் ."தோட்டத்திலிருந்த பூக்கள் அனைத்தையும் யார் பறித்தது? என்று கேட்கிறேன்.ஒருவரை ஒருவர் திரு திரு என்று பார்க்கிறார்கள். ஒரே நேரத்தில் 'விஜி தான்' 'இந்து தான் ' என்று தொடங்குகிறார்கள். 'போதும் ,போதும் இப்போதான் பார்த்து ரசித்தேன் .அதற்குள் இப்படிப் பண்ணிவிட்டீர்கள் ' சொல்லும் போதே என் கண் கலங்கி விடுகிறது. 'மம்மி டோன்ட் கிறை ‘என்றபடி ஓடிவந்து என்னைச் சுத்தி பின்னிக் கொள்கிறார்கள் .அவர்களின் அன்புப் பிணைப்பில் என் அசடுத்தனம் அப்படியே காற்றில் பறந்து விடுகிறது. ஒரு சின்ன விடயத்துக்கு என் குழந்தைகளை இப்படிக் கலங்க வைக்கிறேனே என என் மேலேயே எனக்கு கோபம் வருகிறது.

அவர்கள் கைகால் அலம்பி வந்ததும் இரவு உணவு பரிமாறுகிறேன். சாப்பிடும் போது தயங்கித் தயங்கி 'மம்மி .பூக்களை நாங்கள் என்ன செய்தோம் என்று நிங்கள் கேட்க இல்லையே' என்கிறாள் இந்து. பார்வையாலே’ சொல்லு’ என்கிறேன். பக்கத்துக்கு வீட்டு அண்டி மரியா வாசலில் நாங்கள் பூக்களால் கோலம் போட்டோம் .’இட் இஸ் சோ பிரிட்டி ' என்கிறாள் இந்து. மனதுக்குள் 'ஒ மை கோட் 'என்கிறேன். மரியா இந்த வருடம் எண்பத்தி ஆறு வயதாகி விட்டார். சில மாதங்களாக உடம்புக்கு முடியாமல் போய், வீட்டு வேலைக்கு ஒரு பெண்ணை ஒழுங்கு பண்ணி இருக்கிறார்.ஷாப்பிங் செய்யவும் தோட்டம் செய்யவும் அவரது மகன் அப்பப்ப வந்து போவார். மரியா வாசலில் இவர்கள் விளையாடி குப்பையைப் போட்டு வந்திருக்கிறார்கள் என்று ஆதன்கித்து விடிந்ததும் போய் துப்பரவு செய்து வர வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்.
அடுத்தநாள் காலை சண்டே என்பதால் மிக தாமதமாக எல்லோரும் எழுந்திருக்கிறோம் . கதவடியில் ஒரு சின்னப் பார்சல் என் கண்ணை கவர்கிறது.என் பிள்ளைகள் பேருக்கு மரியா இடமிருந்து வந்திருக்கிறது. அவசரமாக அதனைப் பிரிக்கிறேன். அதற்குள் மணிகளால் கோத்துக் கட்டிய மூன்று கைச்சங்கிலிகள் இருந்தன. தனது நினைவாக இதனை வைத்திருக்கும் படியும் தன் வாசலை அலங்கரித்ததுக்கு நன்றி சொல்லியும் ஒரு செய்தி அதற்குள் இருந்தது. நான் இதனை எதிர்பார்க்கவே இல்லை.அப்படியே அதிர்ந்து போனேன். எப்போதும் என் கணிப்புத் தான் சரி என்ற என் நினைப்புக்கு இது ஒரு நெத்தி அடி. அவர்கள் போட்ட கோலத்தைப் பார்க்காமலேயே எடை போட்ட என் அசட்டுத் தனத்தை நொந்து கொள்கிறேன். ஓடிப்போய் மரியா வாசலை எட்டிப் பார்க்கிறேன். மிக அழகான பூக் கோலமொன்று அவர் வாசலை அலங்கரித்து இருந்தது. இப்போ நான் ஏன் கண் கலங்குகிறேன்?

உள்ளே சென்றபோது இந்துவும் விஜியும் ஷங்கவியும் ஓடி வருகிறார்கள். 'உங்கள் கோலத்தைப் பார்த்தேன் மிக அழகாக இருக்கிறதுஎன்று சொல்லி மரியாவின் பரிசை அவர்களுக்குக் கொடுக்கிறேன். அவர்களது மலர்ந்த முகங்கள் அந்த ரோசாப் பூக்களை விட அழகாக இருக்கின்றன.18 comments:

புதியவன் said...

குழந்தைகள் போட்ட மலர்க் கோலத்தைப் போலவே அழகாக இருக்கிறது குட்டிக்கதை...வாழ்த்துக்கள் ஜெஸ்வந்தி...

ஆதவா said...

நல்ல கதை.. ஆனால் காலத்தில் கோட்டை விட்டுவீட்டீர்கள். முதலில் இறந்த காலமாக ஆரம்பித்து, பின் நிகழ்கால கதை சொல்லியாக மாறிவிட்டீர்கள். அதைத் தவிர்த்து ஒரு நல்ல மனப்போராட்டம். இன்னும் கொஞ்சம் விளக்கி, புதிய சொற்களோடு பயணித்திருந்தால் நல்ல இலக்கிய ரக சிறுகதையொன்று கிடைத்திருக்கும்!

எனிவே.. உங்கள் கதை பாராட்டுதலுக்குரியது!

நட்புடன் ஜமால் said...

ஆதவன் சொல்லும் அளவுக்கெல்லாம் தெரியாது

ஆனால்!கதை என்ற எண்ணத்தில் படிக்க இயலவில்லை

ரொம்ப டச்சிங்காக இருந்தது ...

ஜெஸ்வந்தி said...

கருத்திற்கு நன்றி புதியவன். நீங்கள் தரும் ஊக்கத்தை மறக்க மாட்டேன்

ஜெஸ்வந்தி said...

நன்றி ஆதவா! திரும்பக் கதையை வாசித்தேன். காலங்கள் சில இடங்களில் பிழைத்தது தெரிகிறது. நிகழ் காலத்தில் தான் கதையை ஆரம்பித்தேன். இடையில் ஒரு பிளாஷ் பக் போடப் போய் கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறேன். உன்னிப்பாய் கவனித்திருக்கிறீர்கள். உங்களைப் போல் ஒருவர் எனக்கு proof reader ஆகத் தேவை .
உங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி.

ஜெஸ்வந்தி said...

ஜமால்,, வாங்க வாங்க ..உங்கள் கருத்துக் கூட டச்சிங் ஆகத் தான் இருக்கிறது

NESAMITHRAN said...

வாழ்த்துக்கள்
அருமை ....!
தொடர்ந்து எழுதுங்கள்

கவிநயா said...

ச்வீட்! துல்லியமான உணர்வுகளை எழுத்தில் கொண்டு வர தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உங்கள் படைப்புகள் மென்மேலும் மெருகேற வாழ்த்துகள் ஜெஸ்வந்தி.

ராமலக்ஷ்மி said...

மிக மிக அருமையான வெளிப்பாடு. வாழ்த்துக்கள் ஜெஸ்வந்தி. தங்கள் வலைப்பூவுக்கு கவிநயா தந்த பட்டாம்பூச்சிதான் என் தோள் மேல் அமர்ந்து இங்கே என்னை அழைத்து வந்தது:)!

சில நேரங்களில் இப்படி ஆகி விடுவதுண்டு. இன்னும் வலையேற்றாத என் கவிதை ஒன்றின் சில வரிகள்:
"வாழ்க்கையின்
வசந்த காலத்தில்
வாசலில் விரிந்து
மலர்ந்து சிரிக்கின்ற
வண்ணக் கோலங்கள்
எண்ணத்தை நிறைப்பதில்லை
கண்ணுக்கும் விருந்தாவதில்லை."

ஜெஸ்வந்தி said...

Nesamithran , உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் என் நன்றி

ஜெஸ்வந்தி said...

வாங்க , வாங்க...கவிநயா ...உங்கள் ரசனையும் , நீங்கள் தரும் ஊக்கமும் என்னைப் பெரிமிதப் பட வைக்கின்றன. நீங்கள் என்னிடம் பறக்க விட்ட பட்டாம் பூச்சி என் மனதில் சிறகடித்துப் பறந்து கொண்டு ரொம்ப அட்டகாசம் பண்ணுகிறது.
நன்றிகள் பல.

ஜெஸ்வந்தி said...

வாங்க ராமலட்சுமி, உங்கள் முதல் வருகைக்கு என் நன்றி. நீங்கள் கவினயாவுக்கு பறக்க விட்ட பட்டாம் பூச்சி கடல் கடந்து இப்போ என்னிடம் இங்கிலாந்துக்கு வந்திருக்கிறது. அதுமட்டுமா ! அப்படியே உங்களையும் என்னிடம் அழைத்து வந்திருக்கிறது. என்னையும் உங்கள் வலையத்தை ஒருமுறை வலம் வர வைத்தது.
உங்களுக்கும் நீங்கள் பறக்க விட்ட அந்த அழகான பட்டாம் பூசிக்கும் என் நன்றிகள்.

rayar said...

நீங்கள் ஏன் நட்பை பற்றி எழுத கூடாது ??

ஜெஸ்வந்தி said...

வாங்க இராயர், வரவுக்கு நன்றி. இப்போ நான் இரண்டு கதைகள் தான் எழுதி இருக்கிறேன். என் அடுத்த கதைக்கு கருவைத் தேடிக் கொண்டிருக்கிறேன். நட்பைப் பற்றியும் எழுதிவிட்டால் போச்சு .ஏன் நீங்கள் எதாவது கரு வைத்திருக்கிறீர்களா?

rayar said...

நட்பு என்றவுடன் நமது அனைவருக்கும் கல்லூரி நட்பை பற்றிதான் ஞாபகம் வரும்.ஏன் என்றால் அங்கே தான் கண்ணீர் ,காதல்!!!!!!!!!!

கல்லூரி நட்பை பற்றி எழுதுங்கள்

வழக்கமான உங்கள் நடையுடன்

வாழ்த்துக்கள்

அன்புடன்
இராயர்

ஜெஸ்வந்தி said...

நன்றி இராயர், என் எழுத்து நடை உங்களைக் கவர்ந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி.

இராயர் அமிர்தலிங்கம் said...

உங்களின் எளிமையான நடை பிடித்தது இருக்கட்டும் ,உங்களை பார்த்து நானும் ஒரு பிளாக்கர் ஆகிவிட்டேன் ,நேரம் இருந்தால் பாருங்கள் ,,உங்களை போல எல்லாம் வராது.ஆகையால் படித்ததில் பிடித்ததை பதிவு செய்கிறேன்

மிக்க நன்றி

அன்புடன்
இராயர்
http://hellorayar.blogspot.com/

சினேகிதி said...

எப்பவுமே எங்கட கணிப்பு சரியா இருக்குமெண்டில்லை என்றதுக்கு நல்ல உதாரணம். நல்லா எழுதியிருக்கிறீர்கள்.