
அந்தப் பேரூந்தின் ஜன்னலோர இருக்கையிலிருந்து வெளியே நாற்பது மைல்வேகத்தில் ஓடிக் கடந்து கொண்டிருக்கும் காட்சிகளை வெறித்துக்கொண்டிருக்கிறாள் சுமி. கண்ணைக் கவரும் , ரம்மியமான அந்த மலையோரக்காட்சிகளோ , வழமையாக அவள் ரசிக்கும் பச்சைப் பசேலென்ற வயல்வெளிகளோ அவள் கவனத்தில் பதிந்ததாகத் தெரியவில்லை. அவள் மனதை நிறைத்திருந்த வெறுமையும் விரக்தியும் அவள் கண்ட காட்சிகளில் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன. அந்த பேரூந்தின் இரைச்சலோ , சூழ்ந்திருந்தவர்களின் சம்பாஷனைகளோ அவள் காதில் விழவில்லை . அவளுக்குப் பக்கத்து இருக்கையில் ஒரு சஞ்சிகையைப் படித்தபடி அமர்ந்திருக்கிறான் கிரிதர். இப்படிஒரு நெருக்கமான சந்தர்ப்பத்துக்காக அவர்கள் ஏங்கிய காலம் ஒன்று இருந்தது. ஆனால் இத்தனை காலம் இனித்த அவன் அருகாமை இப்போ நெருப்பாகச் சுட்டாலும் , தலை வெடித்து சுக்கு நூறாகி விடும் போன்ற உணர்வில் துடித்தாலும் , எதையும் பொருட்படுத்தாமல் அந்த இருக்கையில் அப்படியே உறைந்து போயிருக்கிறாள் சுமி . அவர்கள் உடல்கள் மட்டுமே நெருக்கத்திலிருக்க, மனங்கள் பல காத தூரத்தில் அலைபாய, விதி மட்டும் இவர்களைப் பார்த்துக் கைதட்டி நகைத்துக் கொண்டிருந்தது.
மொத்தமாக ஆறு மணி நேரப் பயணம். பாதித் தூரம் கூட இன்னும் தாண்டவில்லை. ஏதோ ஒவ்வொரு நிமிடமும் நீண்ட கணங்களாக , நெஞ்சைக் பிழிந்தெடுக்கும் வேதனையில் துடித்தாலும் , அழுது விடக் கூடாது என்ற வைராக்கியத்துடன் சுமி தன் பார்வையை வெளியிலிருந்து திருப்பாமல் இருக்கிறாள். நல்ல வேளையாக தேனீர் அருந்துவதற்காக அந்தத் தரிப்பில் 20 நிமிடம் நிறுத்துகிறார்கள். அதற்காகவே காத்திருந்தது போல் பலரும் முண்டியடித்துக் கொண்டு இறங்குகிறார்கள். கிரிதரும் எழுந்திருக்கிறான். ''உமக்கு என்ன வேணும்?'' என்று அவளிடம் கேட்கிறான். அந்தக் குரலில் இருந்த தூரத்தை அவளால் உணரமுடிகிறது. அது உணர்ச்சிகளற்ற வெறும் இயந்திர வார்த்தை. அதே போல் இவளும் '' தேனீர் மட்டும் போதும்'' என்று அவன் முகத்தைப் பார்க்காமலே பதில் சொல்கிறாள். அவன் விரைந்து இறங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தவள் மனம் பின்னோக்கி அசுர வேகத்தில் பாய்கிறது.
********
நான்கு வருடங்களுக்கு முன்பு பல்கலைக் கழகத்தில் காலடி எடுத்து வைத்தபோது சக மாணவனாக கிரிதரைச் சந்தித்தது வேதனையுடன் நினைவில் வருகிறது. எப்போ முதலில் அவனைக் கண்டாள் என்பது நினைவில்லை. கண்டதும் திரும்பிப் பார்க்க வைக்கும் ஆணழகன் அவனல்ல. அதற்கு மாறாகஅவனது பார்வையும், சிரிப்பும், தோற்றமும் பேசிய பேச்சுக்களும் நண்பிகள்மத்தியில் எரிச்சலை மூட்டியதால் தான் அவனைத் தெரிந்து கொள்ளவேமுடிந்தது. அவனுடன் கதைக்கவேண்டிய சில தருணங்களின் போது , அவள்மனதில் '' இவன் ஏன் இப்படி எல்லோருக்கும் வெறுப்பேற்றுகிறான்?'' என்ற கேள்வி எழுந்து கொள்ள, அந்தக் கேள்விக்கு விடை காண வேண்டும் என்ற அவாவும் சேர்ந்து அவனுடன் நட்பு வளரக் காரணமாகியது. பழகிய சிலவாரங்களில் அவனைப் பற்றியும் ,அவனது குடும்பத்தைப் பற்றியும் அறிந்துகொண்டதில் , அவன் பேச்சுக்கும் ,எண்ணங்களுக்கும், பழகும் விதத்திரற்கும் உண்டான இணக்கத்தை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதுவே இரக்கமாக மாற ' இவனை எப்படியும் மாற்றி விட வேண்டும் ' என்ற ஒரு எண்ணம் மனதில் அவளையறியாமல் வித்தாகி விட்டது.
''எங்கள் பிரிவில் எத்தனை நல்ல பெடியன்கள் இருக்கிறார்கள். அவர்களை விட்டிட்டு உனக்குக் கொஞ்சமும் பொருந்தாத இந்த கிரி மேல் ஏன் உனக்கு இத்தனை கரிசனை ?'' பலமுறை அவள் ஆருயிர் நண்பி சொன்ன அறிவுரைகள் விழலுக்கு இறைத்த நீராகப் போய் விட்டன. ஆனால் ஒரு சில மாதங்களில், அவன்'' ஐ லவ் யூ '' என்று சொன்னபோதுதான் திடுக்கிட்டு விழித்தாள். அன்றுவரை அவன் மேல் அவளுக்கிருந்த அக்கறையை அவள் காதலாக நினைக்க வில்லை. கண்டதும் அவனுருவம் அவளைக் கவரவில்லை . அவனைப் பார்க்க வேண்டும்என்று அவள் துடித்ததில்லை. அவள் கனவில் அவன் வரவில்லை. சுருக்கமாகச்சொன்னால் ,அதுவரை அவள் பார்த்த சினிமாவிலோ, படித்த கதைகளிலோ கொட்டிக் கிடந்த காதலுக்கான அறிகுறிகள் எதுவுமே அவர்கள் நட்பில் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாள். தப்புப் பண்ணிவிட்டோமோ என்று நினைத்துப் பயந்து முற்றாக அவன் நட்பையே ஒதுக்கிவிடுவோம் என்று முடிவெடுத்தாள். ஆனால் விதி விடவில்லை. தேவதாஸ் கோலத்தில் திரிந்த கிரிதரும் , அவனுக்கு ஆதரவான ஒரு சில நண்பர்களும் , '' இதை முன்னரே யோசித்திருக்க வேண்டும். பழகும் போதே சொன்னேன். இப்படித்தான் போய் முடியுமென்று ..'' என்ற நண்பியின் குற்றச் சாட்டும் , அடிமேல் அடியடிக்க, இதுவும் காதல் தானோ என்று சிந்திக்க ஆரம்பித்தாள். விளைவு அவர்கள் இருவரையும் காதலர்களாக்கி விட்டது.
காலம் இயந்திர கதியில் பறந்தது. கிரி முந்தின கிரியல்ல. நடையுடையில் மட்டுமல்ல , பேச்சு , பழக்கங்களில் கூட பெரும் மாறுதல் அவனிடம். தினம் காலையில் சந்தித்தால், வகுப்புகளோ, நூலகம் செல்வதோ, சாப்பிடுவதோ, கோவிலுக்குப் போவதோ எல்லாமே ஒன்றாகவே செய்தார்கள். நண்பர்கள் இவர்களை ' குடும்பம்' என்று பட்டப் பெயர் வைத்து அழைக்கும் படியான நெருக்கம். உண்மையைச் சொல்லப் போனால் கல்யாணமானவர்களுக்குக் கூட அத்தனை நேரம் ஒன்றாகக் கழிக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. இந்த நெருக்கத்தில் நான்கு ஆண்டுகள் விரைவில் ஓடி மறைந்தது அவர்களுக்கே ஆச்சரியம் தான்.
ஆனால் கடைசி வருடத்தில், அவன் பேச்சில் தெரிந்த மாற்றங்கள் அவளைத் துணுக்குற வைத்தன. குடும்பத்தில் மூத்த பையனென்பதால் கிரிக்கு இருந்தபொறுப்புகள் அவள் அறிந்த விடயந்தான். அந்தப் பொறுப்புகள் தனதும்கூடவென்றுதான் அவள் நினைத்திருந்தாள். அவனது பொறுப்புகளை எண்ணிஅவன் கலங்கிய சமயங்களில் அவள் தனக்கென்று வரும் எதையும் அவனுக்குத்தந்து உதவுவதில் அவள் சம்மதத்தையும் தெரிவித்திருந்தாள். ஆனால் அன்றுஅவனது மாமா ஒருவர் அவனைச் சந்திக்க வந்திருந்தபோது, அவரை அழைத்துவந்து சுமிக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவரை வழியனுப்பி வந்தவன், அவரைப் பற்றிச் சுமிக்கு சொன்னான்.'' மாமா இப்போ மிகவும் வருத்தப் படுகிறார். அவர் காதலிக்காமல் இருந்தால் நல்ல சீதனத்துடன் அவர் கல்யாணம்செய்திருக்கலாம்'' அவன் வாயில் இருந்து விழுந்த வார்த்தைகளில் இருந்த சுயஇரக்கம் அவள் இதயத்தில் ஈட்டி போல் பாய்ந்தன. இவன் என்ன சொல்கிறான். சீதனம் என்னும் பெயரில் தங்களை விலைகூறி விற்கும் ஆண்களைத் துச்சமாக நினைப்பவள் அவள். இந்தக் கிரியும் அவர்களில் ஒருவன் தானா? இதற்குப்பெயர் தான் காதலா? என்று குழம்பிப் போனாள்.
இந்த நிலைமையில் இவர்கள் காதல் விபரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்துவிட்டது . சுமி வீட்டில் எவருக்கும் கிரிதரைப் பிடிக்கவில்லை. அதில் அவளுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. எவருக்குமே கிரிதரைக் கண்டதும் பிடித்ததில்லை. அப்படியான முகராசி அவனுக்கு. விடுமுறைக்கு வீடு சென்றபோது கிரிதர் அவள் தாயாரைச் சந்தித்து பேசியது தெரிந்தது. அவர்கள் காதலைப் பற்றிச் சொல்லி தனது குடும்ப பொறுப்புகளைப் பற்றியும் விளக்கியிருக்கிறான். மறைமுகமாகவோ நேராகவோ தனது பணத் தேவை பற்றிக் கதைத்திருக்கிறான் என்பது அவள் தாயாரின் கதையில் தெரிந்தது. அதைக் கேட்டு சுமி அதிர்ந்துவிட்டாள். தனக்கு ஒரு வார்த்தை தன்னும் சொல்லாமல் அவன் அவள் தாயாருடன் இதைப் பற்றிக் கதைத்தது அவளை வெகுண்டெழ வைத்தது.
இருவருமே மனம் திறந்து எதையும் பேசிக் கொள்ள வில்லை. அவனோ எதிர்காலத்தைப் பற்றியோ , கல்யாணத்தைப் பற்றியோ மூச்சு விடாமல் இருந்தான். தினமும் சந்திப்பவன் சில சமயம் வாரக் கணக்காகத் தலை காட்டாம லிருந்தான். ஏதோ வீட்டுப் பிரச்சனை என்று மனதை ஆசுவாசப் படுத்தினாலும் , அவனதுஅலட்சியம் அவளைக் கனவுலகிலிருந்து நனவுக்குக் கொண்டு வந்தது. உள்ளுக்குள்ளாகவே புழுங்கி ,வெந்து மாய்ந்து , அழுது தீர்த்து , வாழ்க்கையையே வெறுக்க வைத்த அந்த இரண்டு மாதங்களை அவளால் மறக்க முடியாது.
இன்று பட்டப் படிப்பு முடிந்து கடைசியாக எல்லோரிடமும் பிரியாவிடை பெற்று புறப்படும் போதும் கூட , வாயைத் திறக்காமல் கட்டை மாதிரி இருந்த அவனை , மெல்ல மெல்லக் கொன்ற அவனது அருகாமையை அவள் மனதார வெறுக்கத் தொடங்கி சில வாரங்கள் ஆகி விட்டன. வேண்டாம் , இந்த அவஸ்தை வேண்டவே வேண்டாம் என்று அவள் முடிவெடுத்து விட்டாள். ''அவன் என்னவன் '' என்ற இறுமாப்பில் இருந்த அவள் முகத்தில் கிரி மிக இலகுவாகக் கரியைப் பூசி விட்டான்.
அழுது குழறி அவள் வீட்டாரை அவளால் இணங்க வைக்க முடியும். ஆனால் வெறும் பணத்துக்காக , அத்தனை காலமும் அவள் கொட்டித் தந்த பாசத்தை மறந்த அவனைக் கணவன் ஸ்தானத்தில் வைத்துக் பார்க்க அவளால் முடியவில்லை. அவள் இதயம் இரத்தக் கண்ணிர் வடித்தது உண்மைதான் . ஆனால் எதுவுமே அவள் உடைந்து போன இதயத்தை ஒட்ட வைக்கப் போவதில்லை.
***********
கிரி தேனீருடன் வருகிறான். அதை வாங்கி மெல்ல அருந்துகிறாள். அவனும் அந்தச் சிற்றுண்டிக் கடையில் இரண்டு பேர் சச்சரவு பண்ணின கதையைச் சொல்கிறான். இப்படி மற்றவர்களைப் பற்றியும் அவர்களுக்கு முக்கிய மில்லாதவிடயங்கள் பற்றியும் தான் இப்போதெல்லாம் அவன் பேச்சு இருக்கிறது. வழமைபோல் அதைக் காதில் வாங்கிக் கொண்டாள். இவளருகே இருக்கும் இந்தப் புது மனிதனை அவளுக்குத் தெரியவே தெரியாது. அவன் முகத்தில் தெரிந்த ஒரு இனம் தெரியாத இறுக்கம் அவளுக்குப் புதியது. இன்றும் அவன் எதுவும் சொல்லப் போவதில்லை. அவளும் எதையும் எதிர் பார்க்கப் போவதில்லை. மீதி மூன்றுமணி நேரமும் விரைவில் ஓடி விட வேண்டும் என்று மனதுக்குள் பிராத்தித்துக் கொள்கிறாள்.
அவளின் உணர்ச்சிப் போராட்டம் எதையும் அறியாத பேரூந்து அலுங்கிக் குலுங்கி அவள் ஊரை அடைகிறது. அவளது பெட்டிகளை இறக்க கிரி உதவுகிறான். அவனை நிமிர்ந்து பார்க்காமலே நன்றி சொல்கிறாள். பேரூந்து அவனுடன் புறப்படுகிறது. அவன் கையசைக்கிறானா? என்று பார்க்க ஒரு கணம் அவள் மனது துடிக்கிறது. ஆனால் அறிவு அதை அடக்குகிறது. இந்தக் கதை இந்தப் பேரூந்து நிலையத்தோடு முடியப் போகிறது என்பது அவள் அறிவுக்குப் புரிகிறது. '
.
36 comments:
அழகான கதை, அழகான நடையில் எழுதியிருக்கறீர்கள்..
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv
நல்ல கதை...
கதை நன்றாக இருக்கிறது.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜெஸ்.
ரொம்ப பிடிச்சிருக்கு ஜெஸ்.
எப்படி இவ்வளவு காலமாக எழதாமல் இருந்தீர்கள் என ஆச்சர்யமாய் இருக்கு.அடைக்கி அடைக்கி வெடிக்கிறீர்கள் போலேயே.veri good jes.எழுதுங்கள்..
அனுபவித்து படித்தேன்.
சரளமான நடை.
உண்மை கதையா?
கடைசியில் பிரித்து விட்டீர்களே??
நினைவுகளை அழகாக பகிர்ந்து கொள்கிறது...உங்கள் வார்த்தைகள்... ஆனால் அவசரமாக காதலை முறிக்க துடிக்கிறது...இன்னும் வலியோடு சொல்லியிருக்கலாம்...
//Sangkavi said...
அழகான கதை, அழகான நடையில் எழுதியிருக்கறீர்கள்..
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....//
கருத்துக்கு நன்றி சங்கவி. பொங்கல் வாழ்த்துகளும்.
தகவலுக்கு நன்றி ராடான்.
//அண்ணாமலையான் said...
நல்ல கதை...//
வாங்க அண்ணாமலையான். கருத்துக்கு நன்றி .வேலை அதிகமோ? ஒரு வார்த்தையில் கருத்துப் போடுகிறீர்களே!
அழகான நடையில் ஒரு அழகான கதை.
:)
வாழை மரத்தில் வழியும் மழை நடை....
உள்ளங்கை ரேகையின் சமிக்ஞை அறிய இயலாததாய் இருப்பது போலவே இருக்கிறது நம் மனசின் ரகசியங்கள் .சொல்ல வரவேண்டியிருக்கிறது யாரேனும்
கதை டைரித்தாளை மின்னச்சியது போல் இருக்கிறது
நரேடிவ் ஸ்டைலில்
தமிழர் திருநாள் வாழ்த்துகள்
இப்படியா ஒரு ரயில் பயணத்தில் ...
சரி விடுங்க
------------------
நல்லாயிருக்கு புனைவு போலல்லாமல்
வெற்றி பெற வாழ்த்துகள்.
நல்லா எழுதி இருக்கீங்க .. ஆனா அடிக்கோடிட்டு இருப்பதால் படிக்க சிரமமாக இருந்ததுப்பா..
மனம் பேசிய காதல் கதை
yathaarthamaana kathai...
alagaaga solli irukireergal..
vaalthukkal..
ஜெஸி .,.... ஊவாவ் எப்படி!! இப்படியெல்லாம்
எழுத முடியும்??அவ்வளவு இருக்கா??
அதுதான்.... மூளை
சும்மா ,,,..சும்மா சொன்னேன்
பிரமாதம் நன்றி.
என்ன! ஒரு பொங்கல் வாழ்த்துகூட
எனக்கு அனுப்ப முடியாத வேலை!!??
நான் அனுப்பிவிட்டேன் கிடைத்ததா?
நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
செந்தமிழ் பைந்தமிழ் மன்ற சிறுகதை போட்டிக்காக இந்தக் கதையை எழுதினேன். பதிவிடும் போது அதனை தங்கள் வலயத்துக்கு லிங்க் பண்ணச் சொன்னார்கள். அப்படி இணைக்கும் போது பதிவு முழுவதும் அடிக்கோடு வந்து விட்டது. நான் ஏதும் தப்பாகச் செய்து விட்டேனோ தெரியவில்லை. மற்றவர்கள் வலையத்தில் இப்படி நடக்கவில்லை. பல முறை முயன்றும் அடிக்கோட்டை அகற்ற முடியவில்லை. படிப்பவர்கள் எவருக்கும் இதை அகற்றும் வழி தெரிந்தால் சொல்லுங்கள்.
//S.A. நவாஸுதீன் said...
கதை நன்றாக இருக்கிறது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜெஸ்.//
வாங்க நவாஸ். கதை பிடித்தால் மகிழ்ச்சிதான். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே.
// பா.ராஜாராம் said...
ரொம்ப பிடிச்சிருக்கு ஜெஸ்.
எப்படி இவ்வளவு காலமாக எழதாமல் இருந்தீர்கள் என ஆச்சர்யமாய் இருக்கு.அடைக்கி அடைக்கி வெடிக்கிறீர்கள் போலேயே .veri good jes.எழுதுங்கள்..//
வாங்க ராஜாராம். நல்ல கதையாய் இருக்கு.
' எழுது, எழுது ' என்று ஒரு புறம் தொட்டிலையும் ஆட்டி விட்டு இப்போ ' அடைக்கி அடைக்கி வைத்து வெடிக்கிறேன்' என்று பிள்ளையையும் கிள்ளி விடுகிறீர்கள். ஹ ஹஹா
//இராயர் அமிர்தலிங்கம் said...
அனுபவித்து படித்தேன்.
சரளமான நடை.
உண்மை கதையா?
கடைசியில் பிரித்து விட்டீர்களே??//
வாங்க இராயர். கல்யாண அலுவலில் நீங்கள் பிஸியாக இருப்பீர்கள் என்று நினைத்தேன். பரவாயில்லையே. கதை படிக்க நேரம் கிடைத்திருக்கிறதே! இது ஒரு போட்டிக்காக எழுதிய கதை. ஒரு பயணம், ஒரு ஆண் ,ஒரு பெண், காதல் கதையில் இருக்க வேண்டும். இது ஒரு வேறுபட்ட கற்பனை. அவ்வளவு தான்.
அடடே, உங்களுக்குக் காதலர்களைப் பிரித்தது பிடிக்க வில்லையோ! ஹ ஹ ஹா
//இந்திராகிசரவணன் said...
நினைவுகளை அழகாக பகிர்ந்து கொள்கிறது...உங்கள் வார்த்தைகள்... ஆனால் அவசரமாக காதலை முறிக்க துடிக்கிறது...இன்னும் வலியோடு சொல்லியிருக்கலாம்...//
வாங்க இந்திரா. உங்கள் கருத்து மிகவும் ஆக்க பூர்வமாக இருக்கிறது. எனக்கும் முடிவில் இன்னும் வலி தெரிந்திருக்கலாம் என்று தான் தோன்றுகிறது. அடுத்த கதையில் இப்படிப் பிழை இல்லாமல் பார்க்கிறேன். இது போட்டிக்கு அனுப்பிய கதை என்பதால் மாற்றம் எதுவும் செய்ய விரும்பவில்லை. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
//சே.குமார் said...
அழகான நடையில் ஒரு அழகான கதை.//
வாங்க குமார். உங்கள் ரசனைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//☀நான் ஆதவன்☀ said...
:) //
வாப்பா ஆதவா! என் வலையத்திலும் ஆதவன் உதித்ததில் மகிழ்ச்சி.
//நேசமித்ரன் said...
வாழை மரத்தில் வழியும் மழை நடை....
உள்ளங்கை ரேகையின் சமிக்ஞை அறிய இயலாததாய் இருப்பது போலவே இருக்கிறது நம் மனசின் ரகசியங்கள் .சொல்ல வரவேண்டியிருக்கிறது யாரேனும்...
கதை டைரித்தாளை மின்னச்சியது போல் இருக்கிறது
நரேடிவ் ஸ்டைலில்
தமிழர் திருநாள் வாழ்த்துகள் //
வாங்க நேசன். நடை உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்கிறீர்கள் என்று புரிந்து கொண்டேன். சரிதானா? எனது கதைகள் எல்லாவற்றிலும் நான் கதை சொல்லியாகத் தான் எழுதியிருக்கிறேன். இந்தக் கதை இந்த ஸ்டைலில் இருக்கட்டும் என்று தோன்றியது. அவ்வளவு தான்.
உங்களுக்கும் தமிழர் திரு நாள் வாழ்த்துகள் நேசன்.
//நட்புடன் ஜமால் said...
இப்படியா ஒரு ரயில் பயணத்தில் ...
சரி விடுங்க
நல்லாயிருக்கு புனைவு போலல்லாமல்
வெற்றி பெற வாழ்த்துகள்.//
வாங்க ஜமால். இது பஸ் பயணமாக்கும்.
வித்தியாசமாக இருக்கணும் என்று மண்டையை உருட்டியதன் விளைவு.
வாழ்த்துகளுக்கு நன்றி.
சரியாக ஞாபகம் உங்களுக்கு
உங்கள் இமெயில் கொடுங்க
கல்யாண பத்திரிக்கை அனுப்பி வைக்கிறேன்
இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. கோடுகளை நீக்க இயலுமா என பரிசீலனை செய்யவும்.
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.
//வெ.இராதாகிருஷ்ணன் said...
இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. கோடுகளை நீக்க இயலுமா என பரிசீலனை செய்யவும்.
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.//
அடிக் கோடுகளை அகற்ற முடியவில்லை. பதிவை போட்டிக்கு அனுப்ப லிங்க் பண்ணிய போது இப்படி வந்து விட்டது. சிரமத்துக்கு மன்னிக்கவும்.
உங்களுக்கும் பொங்கல், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே!
//முத்துலெட்சுமி/muthuletchumi said...
நல்லா எழுதி இருக்கீங்க .. ஆனா அடிக்கோடிட்டு இருப்பதால் படிக்க சிரமமாக இருந்ததுப்பா..//
கருத்துக்கு நன்றி தோழி. என்னவோ தப்பாகச் செய்து விட்டேன் என்று தெரிகிறது. அடிக்கோட்டை எடுக்க முடியவில்லை. சிரமத்துக்கு மன்னிக்கவும்.
//தமிழரசி said...
மனம் பேசிய காதல் கதை //
முத்தான கருத்துக்கு நன்றி தமிழ்.
//Rajeswari said...
yathaarthamaana kathai...
alagaaga solli irukireergal..
vaalthukkal..//
வாங்க ராஜேஸ்வரி. உங்கள் ஊக்கம் தரும் கருத்துகளுக்கு நன்றி தோழி.
//கலா said...
ஜெஸி .,.... ஊவாவ் எப்படி!! இப்படியெல்லாம்
எழுத முடியும்??அவ்வளவு இருக்கா??
அதுதான்.... மூளை
சும்மா ,,,..சும்மா சொன்னேன்
பிரமாதம் நன்றி.//
கருத்துக்கு நன்றி கலா. அது சரி கதை எழுத மூளை வேண்டும் என்று யார் சொன்னார்கள்.
//என்ன! ஒரு பொங்கல் வாழ்த்துகூட
எனக்கு அனுப்ப முடியாத வேலை!!??
நான் அனுப்பிவிட்டேன் கிடைத்ததா?//
வாழ்த்துகளுக்கு நன்றி கலா. பதில் அனுப்பி விட்டேன் இப்போ.
//இராயர் அமிர்தலிங்கம் said...
சரியாக ஞாபகம் உங்களுக்கு
உங்கள் இமெயில் கொடுங்க
கல்யாண பத்திரிகை அனுப்பி வைக்கிறேன்//
எனது profile இல் email contact உள்ளது. பத்திரிகை அனுப்புங்கள். வாழ்த்துச் சொல்லக் காத்திருக்கிறேன்.
என்னுடய மெயில் கிடைத்ததா
Post a Comment