நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Thursday, 8 April 2010

இது தான் முதலைக் கண்ணீரா?

''முதலைக் கண்ணீர் வடிப்பது '' என்பது இப்போ சர்வ சாதாரணமாக வழக்கத்திலுள்ள ஒரு பதமாக விட்டது. பொய்யாக ஒருவர்மேல் அனுதாபம் காட்டும் போதோ, இரங்கும் போதோ, நீலிக் கண்ணீர் வடிக்கும் போதோ ,அதனை 'முதலைக் கண்ணீர்' என்கிறோம். ஏன் அதனை முதலைக் கண்ணீர் என்று சொல்கிறோம் என்று நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா? அல்லது உண்மையாகவே முதலை கண்ணீர் வடிக்குமா? அப்படி வடித்தாலும் நீரினுள் அது வடிக்கும் கண்ணீர் யார் கண்ணில் படும்? என்று சிறு வயதில் நீங்கள் யாரையாவது கேள்வி கேட்டதுண்டா? அல்லது நீங்கள் யாருக்கும் முதலைக் கண்ணீர் என்று சொல்லப் போக '' அது ஏன் முதலைக் கண்ணீர்'' என்று யாராவது உங்களை மடக்கியதுண்டா? இல்லையா? அப்போ நீங்கள் தப்பி விட்டீர்கள் என்று சொல்லுங்கள். ஆனால் நான் என் பெண்களிடம் நன்றாக மாட்டிக் கொண்டேன். ஆனாலும் ''இப்போ நேரமில்லை. நாளைக்குச் சொல்கிறேன் ''என்று ஒருபடியாகச் சமாளித்து விட்டேன். எப்படியும் பதில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நெருக்கடியான நிலைமையில் '' Can crocodiles cry?'' என்று 'Google' இல் தட்டச்சிட்டு பல சுவாரசியமான விடயங்களை அறிந்து கொண்டேன். அடுத்த நாள் அவர்கள் மறந்தே போய் விட்ட அந்தக் கேள்வியை திரும்ப நினைவு படுத்தி பெரிய மேதாவி போல விளக்கமும் தந்து விட்டேன். நான் சேகரித்த அந்த சுவாரசியமான விடயங்களை இப்போ உங்களுக்குச் சொல்ல வந்திருக்கிறேன்.பக்கத்திலிருக்கும் படத்தில் ஒரு அலிகெடோர் முதலையைக் காண்கிறீர்கள். அதன் கண்ணில் இருந்து வரும் கண்ணீர் தெரிகிறதா? இந்தக் கண்ணீர் மனிதரைப் போலவே கண்ணீர் சுரப்பியினால் சுரக்கப் படுகின்றன. இந்த உப்புக் கரிக்கும் திரவம் அதன் கண்களைத் துப்பரவு செய்யவும், முதலை நீரை விட்டு வெளியே இருக்கும் போது வரண்டு போகும் கண்களை ஈரமாக வைத்திருக்கவும் உதவுகின்றது. அதனால் முதலை நீரை விட்டு வெளியில் இருக்கும் போது இதன் கண்களில் நீர் வடிவதை ஆராய்ச்சியாளர்கள் அவதானித்துள்ளார்கள்.

முதலையின் கண்களில் இருந்து நீர் வடிந்தாலும் அவை உணர்ச்சி வசப் பட்டு அழுவதில்லை. ''முதலைக் கண்ணீர்'' என்ற பதம் பேச்சு வழக்கில் எப்போ சேர்ந்தது என்பது எவருக்கும் சரியாகத் தெரியவில்லை. 13 ஆம் நுற்றாண்டில் ' முதலைக் கண்ணீர்' என்ற பதம் பாவனையில் இருந்ததற்கு ஒரு புத்தகத்தில் ஆதாரம் இருக்கிறது. பின்னர் 14 ஆம் நுற்றாண்டில் ' Mandeville's Travels' என்ற புத்தகத்தில் முதன் முதலாக தற்போதைய கருத்தை வலியுறுத்தும் வகையில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.அதற்குப் பின்னர் வந்த ஷேக்ஸ்பியர் தனது படைப்புகளில் நீலித்தனமான அழுகைக்கு ' முதலைக் கண்ணீர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கலிபோனியாவில் செய்த ஒரு ஆய்வின்படி முதலைகள் இரையைக் கவ்வ வாயைத் திறக்கும் போது இதன் கண்ணீர் வெளிவருவதை அவதானித்துள்ளார்கள். கிழேயுள்ள படம் அதனைத் தெட்டத் தெளிவாகக் காட்டுகிறது. இதற்கான காரணம் இன்னும் சரியாக விளக்கப் படவில்லை.'' முதலைக் கண்ணீர் '' என்ற பதம் எப்போ எவரால் வழக்கத்துக்கு வந்தது என்று சரியாகத் தெரியாவிட்டாலும், '' மிகவும் கொடூரமாக உங்களைக் கொல்லக் கூடிய ஜந்துவான முதலை ,உங்களை இரையாக்கும் போது கூட கண்ணீர் வடிக்கக் கூடியது'' என்பதை இந்தப் பதம் வலியுறுத்துவதால் தான் இது காலால காலமும் நிலைத்து இன்னும் வழக்கத்தில் இருக்கிறது.

ஆதாரம்
http://www.flmnh.ufl.edu/cnhc/cbd-faq-q6.htm


.

24 comments:

நேசமித்ரன் said...

தகவலுக்கு நன்றி ஜெஸ்

குழந்தைகள் நம்மை ஆசானாக்குகிறவர்கள்...

பகிர்தலுக்கு மீண்டும் நன்றிகள்

Chitra said...

முதலை கண்ணீருக்கு இத்தனை காரணங்களா? பகிர்வுக்கு நன்றி. :-)

கலா said...

இந்த உவமை கேட்டிருக்கிறேனே,தவிர..
விளக்கம் நன்றாகத் தெரியவில்லை
உங்கள் விளக்கத்தால் புரிந்தது
நன்றி ஜெஸி.

மங்குனி அமைச்சர் said...

ஏம்பா முதலை நீயே வந்து காரனத்த கரக்ட்டா சொல்லிடு

ராமலக்ஷ்மி said...

தெரியாத தகவல்கள் ஜெஸ்வந்தி.

Anonymous said...

என்னம்மா யோசிக்கிறாங்கய்யா? எப்படியோ ஒரு விஷயம் தெரிஞ்சிக்கிட்டாச்சி....

சத்ரியன் said...

ஜெஸ்ஸி,

ஒவ்வொரு விசயத்தின் மீதும் தனி அக்கறைக் கொண்டு தகவல் சேகரித்து பதிவிடுகின்றீர்கள். அதுக்கு ஒரு பாராட்டு.

’முதலைக்கண்ணீரை’ தெளிவு படுத்தியதற்கு நிறைய நன்றி.

ஜெய்லானி said...

//நேசமித்ரன் said...

குழந்தைகள் நம்மை ஆசானாக்குகிறவர்கள்.//

ரிப்பபீட்ட்ட்ட்ட்ட்ட்ட்

தேவன் மாயம் said...

முதலைக்கண்ணீர் நல்ல பதிவு!

கலகலப்ரியா said...

நல்ல பகிர்வு ஜெஸ்வந்தி..

கவிதன் said...

நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம்.... அதை புகைப்படத்துடன் அருமையாக விளக்கி பகிர்ந்தமைக்கு நன்றிகள் நன்றிகள் தோழி!!!

"உழவன்" "Uzhavan" said...

நல்லாத்தான் தேடிக் கண்டுபிடிச்சிருக்கீங்க மேடம்.. அருமையான விளக்கம்.

ஜெஸ்வந்தி said...

//நேசமித்ரன் said...

தகவலுக்கு நன்றி ஜெஸ்
குழந்தைகள் நம்மை ஆசானாக்குகிறவர்கள்...
பகிர்தலுக்கு மீண்டும் நன்றிகள்//

நன்றி நேசமித்திரன். சரியாகச் சொன்னீர்கள். நாங்கள் படித்தபோது கூட இத்தனை அக்கறையாக எதையும் தேடித் படித்தது கிடையாது. இப்போ பிள்ளைகளுக்கு முன்னால் சோடை போகாமல் இருக்க எத்தனை செய்ய வேண்டியிருக்கிறது.

ஜெஸ்வந்தி said...

/Chitra said...
முதலை கண்ணீருக்கு இத்தனை காரணங்களா? பகிர்வுக்கு நன்றி. :-)/

வந்து படித்ததற்கு நன்றி சித்ரா. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விட்டேன். பிள்ளைகளுக்கு விளக்கமும் சொல்லியாச்சு. பதிவும் போட்டாச்சு.

ஜெஸ்வந்தி said...

//கலா said...
இந்த உவமை கேட்டிருக்கிறேனே,தவிர..
விளக்கம் நன்றாகத் தெரியவில்லை

உங்கள் விளக்கத்தால் புரிந்தது
நன்றி ஜெஸி.//

வாங்க கலா. ஓடி வந்து படிப்பதற்கு மிக்க நன்றி.
இனிமேல் இதை மறக்க மாட்டீர்கள். என்னையும் தான்.

ஜெஸ்வந்தி said...

// மங்குனி அமைச்சர் said...
ஏம்பா முதலை நீயே வந்து காரனத்த கரக்ட்டா சொல்லிடு //

இப்படி முதலையை அழைத்து பயமுறுத்தி நான் பதிவிடுவதை நிறுத்தலாம் என்று எண்ணமா உங்களுக்கு ? ஊஹும் நடக்காது.

ஜெஸ்வந்தி said...

நன்றி ராமலக்ஷ்மி .
நன்றி தமிழரசி .
நன்றி சத்ரியன் .

SUFFIX said...

தகவலுக்கு நன்றி ஜெஸ்!!

ஹுஸைனம்மா said...

ம்ம்.. ஏமாற்றாமல் அறிந்து பதில் சொன்னீங்க பாருங்க.. குட் மம்மி!!

பிள்ளைங்க கேட்கும்போதுதான் ஏன் அப்படின்னு நாமளும் யோசிப்போம்!!

அம்பிகா said...

முதலை கண்ணீருக்கு பின்னால் இத்தனை விஷயமிருக்கிறதா?
பகிர்வுக்கு நன்றி ஜெஸ்வந்தி

ஹேமா said...

ஜெஸி...விடுபட்ட பதிவுகள் வாசித்தேன்.பிரயோசனமான அதிசயமான பதிவுகளே அத்தனையும்.ரசித்தேன் தோழி.

நிறைவான இனிய
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

ஜெஸ்வந்தி said...

நன்றி SUFFIX.
நன்றி ஹுஸைனம்மா .
நன்றி அம்பிகா .

ஜெஸ்வந்தி said...

//ஹேமா said...

ஜெஸி...விடுபட்ட பதிவுகள் வாசித்தேன்.பிரயோசனமான அதிசயமான பதிவுகளே அத்தனையும்.ரசித்தேன் தோழி.
நிறைவான இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.//

விடுபட்ட பதிவுகளைத் தேடித் படித்ததற்கு மிக்க நன்றி தோழி.உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.