நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Friday 8 January 2010

யார் மேல் தப்பு?


அவசரமாகத் தபாலுறையைக் கிழித்து கடிதத்தை வெளியே எடுத்தவள் , மகிழ்ச்சியில் கைகள் நடுங்க ,''அம்மா வேலை கிடைச்சாச்சு'' என்று குரல் கொடுத்தபடி சமயலறைக்கு ஓடினேன். நான் ஆசிரியை வேலைக்கு மனுப் போட்ட விடயம் அறிந்திருந்ததால் ''எங்கேயடி வேலை ?'' மகிழ்ச்சியும் கலவரமும் ஒன்றாகத் தாக்க, பதைப்புடன் கேட்டாள். வேலை கிடைக்க வேண்டும் என்று தினமும் பிராத்தித்துக் கொண்டிருக்கும் எனக்காக மகிழ்ந்தாலும், நாட்டு நிலவரத்தில் பெண்ணை வீட்டை விட்டு வேறூருக்கு அனுப்பப் பயப்பட்டவளுக்கு ,''கொழும்பில் தான்'' என்ற என் பதில் பீதியைக் கிளப்பியதில் ஆச்சரியமில்லை. '' நீ தனியே போய் அங்கே இருக்க ஏலாது .எங்கட சொந்தக் காரர் எல்லாரும் ஒருவர் ஒருவராகயாழ்ப்பாணம் வந்து சேர்ந்து விட்டார்கள். நீ போய் தெரியாதவர்கள் வீட்டில் இருப்பது சரியில்லை. பாது காப்புமில்லை.'' தீர்மானமாகச் சொல்லி விட்டாள் அம்மா. எனக்குக் கைக் கெட்டியது வாய்க் கெட்டாமல் போய் விடுமோ என்ற பயம் வந்து விட்டது.

ஒரே மணி நேரத்தில் அவளுக்குத் தெரியாமல் ,தொலைபேசியில் கொளும்பில் பல வருடங்கள் வசிக்கும் என் பால்ய தோழி சுதாவுடன் கதைத்து, அவள் வீட்டில் தற்காலிகமாகத் தங்குவதற்கு தயார் பண்ணி விட்டேன். அவள் தந்த ஊக்கத்தில் பிறந்த துணிவுடன் எப்படியும் இந்த வேலையில் சேருவது என்று தீர்மானித்தும் விட்டேன். அடுத்து அம்மாவைச் சமாளிக்கும் படலம் தானே! வழமை போல் , என்பக்கத்துக்குக் கதைக்க சின்னம்மாவை அழைத்து வந்து ,ஒருபடியாக அவளைத் தயங்கித் தயங்கிச் சரி சொல்ல வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. என் சேமிப்பில் இருந்த பணம் முதல் மாதச் சம்பளம் வரும் வரைக்காணாது என்று தோன்றியதால், அம்மாவிடம் பணம் வாங்கிக் கொண்டு என் பெட்டியைக் கட்டி விட்டேன்.
கொழும்பு வந்ததும் நேரே என் தோழி வீட்டுக்குப் போனேன். அவர்கள் வீட்டில் அவள் ஒரே பிள்ளை. மிகச் செல்லமாக வளர்ந்தவள். என்னையும் விழுந்து விழுந்து உபசரித்தார்கள்.அதுவே எனக்குப் பெரிய சங்கடமாக விருந்தது. அவர்களிடம் கடமைப் படுகிறோம் என்ற உணர்வில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அன்று வேலையில் கடமையேற்றதும் என்னைப் போலவே அன்று புதிதாகச் சேர்ந்த சக ஆசிரியை சுசீலாவோடு கதைத்த போது, என் கதைதான் அவளதும் என்று புரிந்தது. வீட்டார் மறிக்க மறிக்கத் தான் , அவர்களைச் சமாதானப் படுத்தி வந்திருந்தாள். ஆனால் அவள் மாமி வீட்டில் தங்கியிருந்தாள். தொலைவில் அவர்கள் இருந்ததால் தினமும் மூன்று மணிநேரம் பஸ் பயணம் அவளைப் பயப்படுத்தியது. அப்போதான் தலைமை யாசிரியர் அருகிலுள்ள பெண்கள் வதிவிடத்தில் தனது சிபாரிசில் இடம் எடுத்துத் தருவதாகச் சொன்னார். எங்களுக்குத் தேடித் போன தெய்வம் நேரில் வந்ததுபோல் இருந்தது.

ஒரே வாரத்தில் நானும் சுசிலாவும் ஒரே அறையில் தங்கும் வசதியுடன் அந்த பெண்கள் விடுதியில் இடம் எடுத்துக் கொண்டோம். அங்கிருந்து ஐந்து நிமிடத்தில் பாடசாலைக்கு நடந்து விடலாம். இதைவிட வேறு என்ன வேண்டும்? ஒரேயொரு பிரச்சனை. அவர்கள் பரிமாறிய சிங்கள உணவு இருவருக்குமே பிடிக்கவில்லை. அங்கே சமைத்துச் சாப்பிடவும் வசதியில்லை. வெளியில் வாங்கி வந்துசாப்பிடலாமென்றால் , வீட்டில் இருந்து கொண்டு வந்த பணம் முடியும் தருவாயில் இருந்தது. மாதம் முடியச் சம்பளம் வந்துவிடும் என்பதால் கணக்குப்போட்டு செலவு செய்து கொண்டிருந்தோம்.
ஒருபடியாக
சம்பள நாளும் வந்தது. சம்பளப் பட்டியலில் எங்கள் பெயரும் இல்லை. சம்பளமும் இல்லை. அதிர்ந்துபோனோம். தலைமையாசிரியர் கல்வி இலாகாவுக்கு எழுதுவதாகச் சொன்னார். வேறு வழியில்லாமல் உடனடியாகப் பணம் அனுப்பும் படி வீட்டுக்குத் தகவல் கொடுத்து விட்டு ,இன்றுவரும் நாளை வருமென்று சம்பளத்தை எதிர் பார்த்து இருந்தோம். ஒரு பதிலும் வரவில்லை. அடுத்த வாரம் , சம்பள நாள் என்பதால் நேரே கல்வி இலாகாவுக்குப் போய்க் கதைப்பது நல்லது என்று தலைமையாசிரியர் கருத்துத் தெரிவித்தார். அது கூட புதன், வெள்ளிக் கிழமையில் தான் நேர் விசாரணைக்கு ஒதுக்கி யுள்ளார்கள் என்றும் அறிந்து கொண்டோம். இந்த விடயத்தைத் தலைமை ஆசிரியர் எங்களுக்கு முன்னரே சொல்லியிருக்கலாம். அவருக்கு எங்கள் நிலைமை தெரிய வாய்ப்பில்லை.

புதன் கிழமை , பாடசாலை முடிந்ததும் கல்வி இலாகாவிற்கு வியர்க்க விறுவிறுக்கப் போய்ச் சேர்ந்தோம். அங்கு போனதும் ஒரு இலக்கச் சீட்டு எடுக்கவேண்டும். அந்த வரிசையில் தான் விசாரணைக்கு அழைப்பார்கள் என்பதும்தெரிந்தது. எல்லாமே முதல் அனுபவம். எங்களுக்குக் கிடைத்தது 21 ம் 22 ம் இலக்கங்கள். பொறுமையுடன் காத்திருந்தோம். மாலை ஐந்து மணிவரை 15 இலக்கம் வரை தான் போனது. மற்றவர்களை வெள்ளி வரும் படி சொன்னார்கள். அடடே! விடயம் தெரிந்திருந்தால் ஒரு அரை மணி நேரம் முன்னராகவே புறப்பட்டு இருக்கலாம்என்று தோன்றியது. வெள்ளியன்று ,முன்னரே தலைமை ஆசிரியரிடம் அனுமதிபெற்று அரை மணி முன்னதாகவே கல்வி இல்லாகாவை அடைந்து விட்டோம். அன்றும் எங்கள் இலக்கம் 16 ம் 17 ம் இலக்கங்கள் தான். பெரும் ஏமாற்றம் தான் .ஆனால் ஒரு நப்பாசையில் இரண்டு மணி நேரம் காத்திருந்தோம். அன்றும் களைத்துப் போய்த் திரும்பியது தான் மிச்சம்.

இதற்கிடையில் அடுத்த மாதச் சம்பளப் பட்டியலில் எங்கள் பெயரும் இல்லை. சம்பளமும் இல்லை. தலைமை ஆசிரியர் திரும்பவும் கடிதம் எழுதினார். அதில் நம்பிக்கை இல்லாமல் புதன் கிழமை அரை நாள் ஓய்வு எடுத்துக் கொண்டு இரண்டு மணிக்கு அலுவலகம் திறக்கும் முன்னரே போய்ச் சேர்ந்து விட்டோம். நாங்கள் மட்டும்தான் இருந்தோம். அலுவலகம் திறந்தபோது எங்களுக்குக்கிடைத்த இலக்கம் 5 ம் 6 ம் இலக்கங்கள் தான் .'' ஏன் அப்பிடி?'' என்று கேட்க நான் ஆரம்பித்தபோது சுசிலா என்னைக் கிள்ளி, வாயடைக்க வைத்து விட்டாள். '' வந்தவேலையை முடிக்கும் அலுவலைப் பார். இந்தப் பியோனுடன் கொழுவினால் ஒரு அலுவலும் நடக்காது '' என்று என் காதில் கிசு கிசுத்தாள். ஆனால் அன்றும் சோதனையாகவே முடிந்தது.எங்கள் முறை வந்தபோது, எங்கள் பைல்களைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம். அடுத்த வாரம் வரும் படி சொன்னார்கள். இடிந்து போய் வெளியே வந்த போது , என் தாயாரை நன்கு அறிந்த ஒரு வயதானஆசிரியை என்னைக் கண்டதும்,''என்ன பிரச்சனை ?''என்று விசாரித்தார். எங்கள் விடயத்தை அறிந்ததும் '' நீங்கள் புதிதென்பதால் உங்களுக்கு விடயம் விளங்கவில்லை. பியோனைப் பார்த்துக் கதையுங்கள். அவன் கையில் ஏதும் வைத்தால் தான் எதுவும் நடக்கும் '' என்ற தொழில் ரகசியத்தைச் சொன்னார்.

நசுவியபடிஅங்கு நின்றோம். அவனுக்கும் விடயம் விளங்கியதுபோல் எங்கள் பக்கமே உலாவினான். தெரிந்த சிங்களத்தில் பணம் தருவதாகவும் , பைலை எடுத்து வைக்கும் படியும் சொன்னோம். படுபாவி, ஆளுக்கு 400 ரூபாய் என்றான் .அப்போ எங்கள் சம்பளமே 2500 ரூபாய் தான். சம்மதித்துப் புறப் பட்டோம். வெள்ளி 3 மணிக்குப் போனபோது எங்களுக்கு ஐந்தாம் ,ஆறாம் இலக்கங்கள் கிடைத்தன. எங்களுக்கு முன்னர் வந்தவர்கள் ௨0 ஆம் இலக்கத்துடன் இருப்பதை அவதானித்தேன். சில நிமிடங்களில் எங்கள் இருவர் பிரச்சனையும் தீர்வாக்கப்பட்டு, இருவருக்கும் மூன்று மாதச் சம்பளத்துக்கான காசோலையும் தந்து, தாமதத்திற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் அந்த ஆபீசர். இந்த லஞ்சம் செய்த அதிசயத்தைக் கண்டு , இந்த ரகசியத்தை முன்னரே யாராவது சொல்லியிருந்தால் எங்கள் அலைச்சலையும் கவலையையும் தீர்த்திருக்குமே என்று நினைத்துக் கொண்டேன். சுசிலாவிடம் பணம் இல்லாததால், அவள்பங்கையும் சேர்த்து என்னைக் கொடுக்கச் சொன்னாள். எங்களை சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுப் பின் தொடர்ந்த பியோனிடம் பணத்தை கையில் கொடுத்தபோது, பலத்த கைதட்டல் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுப் பார்த்தேன். அங்கே மூன்று ஆபீசர்கள் நின்று கொண்டிருந்தார்கள். எங்களை உள்ளே வரும்படி அழைத்தார்கள். ஏங்கிப் போனேன்.கையும் களவுமாகப் பிடிபட்டுப் போனோம் என்று தெரிந்தது. இன்னும் பணம் என் கையில் தான் இருந்தது. பியோன் தலையில் அடித்து அழுது கொண்டிருந்தான். என் தோழி சுசிலா ,ஒரு சரியான பயந்தாங் கொள்ளி. முகத்தை மூடிக் கொண்டு விசும்பத் தொடங்கி விட்டாள். இப்படியான தருணங்களில் எனக்கு எங்கிருந்து தைரியம் வருகிறதோ தெரியவில்லை.''அழாமல் வா'' என்று அவளுக்கு நெருமிவிட்டு கிடு கிடுவென உள்ளே போனேன். சுசீலா என் பின்னால் ஒழிந்தபடி பின்தொடர்ந்தாள்.
அந்த
மூன்று ஆபீசர்களும் இருந்து எங்களை அவர்கள் முன்னால்இருந்த இருக்கையில் அமரச் சொன்னார்கள்.''அரசாங்க உத்தியோகத்தில்இருப்பவர்கள் லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் சட்டப் படி குற்றம் என்பது உங்களுக்குத் தெரியுமா ?'' என்று இருவரிடமும் கேட்டார்கள். ''ஆமாம் '' என்றுபதில் சொல்லும் வரை அதையே கேட்டார்கள். ''உங்கள் இருவரையும் வேலையிலிருந்து நீக்கப் போகிறோம். கடிதம் பாடசாலைக்கு அனுப்பப் படும் '' என்றார்கள். உலகம் ஒருமுறை தட்டாமாலை சுற்றினாலும் நான் இன்னும் தைரியமாகத் தான் இருந்தேன்.
ஒரு வெற்றுப் பத்திரத்தை இருவருக்கும் தந்து , நாங்கள் லஞ்சம் கொடுத்ததை ஒத்துக் கொள்வதாக எழுதி கையெழுத்திடச் சொன்னார்கள். அப்போதான், அந்தக் கடிதத்தை வைத்துத் தான் எங்களை அவர்கள் வேலை நீக்கம் செய்யலாம் என்றுமூளையில் பொறி தட்டியது. அந்தப்பத்திரத்தில் அவசர அவசரமாக இங்கே கொட்டித் தீர்த்த அத்தனையும் ஒன்று விடாமல் எழுதினேன். கையெழுத்திட்டேன். பாடசாலையின் பெயர், தலைமை ஆசிரியரின் பெயர் எல்லாம் எழுதினேன். கொடுத்துவிட்டு எனக்கு ஒரு காப்பி (copy )வேண்டும் என்று கேட்டேன். தந்தார்கள். அந்த அசடு சுசிலா தான் லஞ்சம் கொடுத்ததாக எழுதிகையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டு அழுது கொண்டே வந்தாள்.

அடுத்த நாள் என் கடிதத்தை தலைமையாசிரியரிடம் காட்டிய பொழுது, தன்கண்களையே நம்ப முடியாமல் ''உண்மையில் இதைத்தான் எழுதினீர்களா டீச்சர் என்று கேட்டார். ''ஆம்'' என்று சொன்னதும், சிரித்தபடி '' கவலைப் படாதீர்கள். பிரச்சனை எதுவும் வராது '' என்று சொன்னார். அதைத்தான் நானும் நினைத்தேன். கல்வி இலாகாவிலிருந்து ஒரு சில வருடங்களுக்கு எங்கள் வேலை நீக்கக்கடிதம் வரவேயில்லை.

பி.கு. பொறுமையோடு படித்த அனைவருக்கும் நன்றி.


32 comments:

பா.ராஜாராம் said...

உங்கள் பழைய எழுத்தை பார்க்க வாய்த்தது மக்கா.ஊரி தேறி என்திரிசுட்டீங்க போலேயே..verigood.எழுதுங்க மக்கா.

அரங்கப்பெருமாள் said...

//யார் மேல் தப்பு?//

அது சரி. கொடுக்க வேண்டியதை சரியான நேரத்தில் கொடுத்திருந்தால் அலச்சலாவது மிஞ்சியிருக்கும். ஆகவே........

”காலம் கருதி இடத்தாற் செயின்” அன்றே சொன்னாரே வள்ளுவர்.

நட்புடன் ஜமால் said...

சுவாரஸ்யமாய் படிக்க நேர்ந்தது தங்கள் வருத்தமான விடயத்தை.

பழைய வார்த்தைகளை பார்த்ததில் ஒரு மகிழ்வு வந்ததை தவிர்க்க இயலவில்லை - குறிப்பாக (நசுவிகொண்டு) ...

-----------------------

இலஞ்சம் கொடுத்து மாட்டிய பின் வந்த தகிரியம் முன்பே வந்து இருந்தால் ...

எனக்கு சொல்றது எளிதுதான் - அன்று அந்த பிரச்சனையில் நான் இல்லையே

தேவன் மாயம் said...

சம்பளம் வராமல் தவிப்பது என்ற கஷ்டமான விசயம் அனுபப்வித்தால்தான் தெரியும்!!! நல்ல நடை!!

S.A. நவாஸுதீன் said...

நல்ல நடையில் சிரமமான உங்களின் நிகழ்வை எங்களுக்கு சுவாரசியமாக்கிவிட்டீர்கள்.

குடந்தை அன்புமணி said...

தங்கள் அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது.

கலகலப்ரியா said...

:).. nallarukku teacherammaa..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பா.ராஜாராம் said...

உங்கள் பழைய எழுத்தை பார்க்க வாய்த்தது மக்கா. ஊரி தேறி என்திரிசுட்டீங்க போலேயே..verigood.எழுதுங்க மக்கா.//

முதலே வந்திட்டீங்க ராஜாராம். ரசிக்க நீங்க இருக்கிறீர்கள் என்ற துணிவில் எழுதிக் கொண்டி ருக்கிறேன் மக்கா.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//அரங்கப்பெருமாள் said...

//யார் மேல் தப்பு?//
அது சரி. கொடுக்க வேண்டியதை சரியான நேரத்தில் கொடுத்திருந்தால் அலச்சலாவது மிஞ்சியிருக்கும். ஆகவே........
”காலம் கருதி இடத்தாற் செயின்” அன்றே சொன்னாரே வள்ளுவர்.//

அடடே! வள்ளுவரும் நமக்கு சப்போர்ட் தந்திருக்காரா? கருத்துக்கு நன்றி நண்பரே.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நட்புடன் ஜமால் said...

சுவாரஸ்யமாய் படிக்க நேர்ந்தது தங்கள் வருத்தமான விடயத்தை.
பழைய வார்த்தைகளை பார்த்ததில் ஒரு மகிழ்வு வந்ததை தவிர்க்க இயலவில்லை - குறிப்பாக (நசுவிகொண்டு) ...
இலஞ்சம் கொடுத்து மாட்டிய பின் வந்த தகிரியம் முன்பே வந்து இருந்தால் ...
எனக்கு சொல்றது எளிதுதான் - அன்று அந்த பிரச்சனையில் நான் இல்லையே //

வாங்க ஜமால். இது காலம் செய்யும் விந்தைகளுக்கு ஒரு உதாரணம் நண்பரே. அப்போது எனக்குத் தலை போகும் விடயம் ,இப்போ நினைத்துச் சிரிக்கும் என் மறக்க முடியாத நினைவாகி விட்டது. அதில் சுவாரசியம் என்னவென்றால் நான் அந்த இலஞ்சத்தைக் கொடுக்கவே இல்லை பாருங்கோ. பணம் கை மாறும் முன்னரே அகப் பட்டுக் கொண்டோமே! எனக்கு அதில் பரம திருப்தி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//தேவன் மாயம் said...

சம்பளம் வராமல் தவிப்பது என்ற கஷ்டமான விசயம் அனுபப்வித்தால்தான் தெரியும்!!! நல்ல நடை!!//

வாங்க தேவா. நலம் தானா? என்னால் மறக்க முடியாத அனுபவம் இது. உங்களுடன் பகிர்ந்ததில் மகிழ்ச்சி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//S.A. நவாஸுதீன் said...
நல்ல நடையில் சிரமமான உங்களின் நிகழ்வை எங்களுக்கு சுவாரசியமாக்கிவிட்டீர்கள்.//

வாங்க நவாஸ். நீங்கள் தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கு நன்றி நண்பரே.

Anonymous said...

தமிழ்ப்பெண்கள்

Center for Tamil Female Bloggers பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை
http://www.tamilpenkal.co.cc/

'பரிவை' சே.குமார் said...

தங்கள் அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது

Anonymous said...

சுசிலா மாதிரி கோழைகளும் முட்டாள்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்....அத்தருணத்திலும் எல்லாம் விளக்கமாக எழுதும் பொருமையும் தைரியமும் பாராட்டத்தக்கது....

ஆமாம் இந்த மாதிரி சின்ன சின்ன பிழைகளை பெரிய சாதனை அளவில் சாதிக்கும் அதிகாரிகள் அதிகாரம் இருக்கும் இடத்தில் இப்படியே நடவடிக்கை எடுக்கத்துணிவார்களா?

ரோஸ்விக் said...

இவய்ங்க எப்போதுமே இப்படித் தான் டீச்சர். உங்ககிட்ட படிக்கிற பசங்களை நல்ல அரசு அதிகாரிகளா வரச் சொல்லுங்க. அடுத்த தலைமுறைகளாவது நல்லா இருக்கட்டும்.
நல்ல எடுத்து சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்.

ரோஸ்விக் said...

added in tamilmanam and voted. :-)

sathishsangkavi.blogspot.com said...

நல்ல நடையில் எழுதியிருக்கறீர்கள்...

உங்கள் தைரியத்தைப் பாராட்டுகின்றேன்...

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு.. வாழ்த்துக்கள்...

SUFFIX said...

அப்பாடா முழுசும் படிச்சாச்சு, தைரியத்துடன் நடந்தவகளை எழுதியது பாராட்டக்கூடியது, முடிவில் எல்லாம் நல்ல படியாக நடந்ததில் மகிழ்ச்சி ஜெஸ்!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//குடந்தை அன்புமணி said...
தங்கள் அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது.//

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி அன்புமணி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//சே.குமார் said...
தங்கள் அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது//

முதல் வரவு என்று நினைக்கிறேன்.கருத்துக்கு நன்றி குமார்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//தமிழரசி said...
சுசிலா மாதிரி கோழைகளும் முட்டாள்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்....அத்தருணத்திலும் எல்லாம் விளக்கமாக எழுதும் பொருமையும் தைரியமும் பாராட்டத்தக்கது....
ஆமாம் இந்த மாதிரி சின்ன சின்ன பிழைகளை பெரிய சாதனை அளவில் சாதிக்கும் அதிகாரிகள் அதிகாரம் இருக்கும் இடத்தில் இப்படியே நடவடிக்கை எடுக்கத்துணிவார்களா?//

பாராட்டுகளுக்கு நன்றி தமிழ். இதை விட்டால் வேறு வழியில்லை என்றபோது வரும் தைரியம் அது.
அவர்கள் மேல் தப்பில்லாமலா வேலையில் சேர்ந்து 3 மாதம் சம்பளம் இல்லாமல் போகும், பைல்கள் ஆபிசில் காணாமல் போகும். அதனால் தான் சத்தம் இல்லாமல்இருந்தார்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ரோஸ்விக் said...
இவய்ங்க எப்போதுமே இப்படித் தான் டீச்சர். உங்ககிட்ட படிக்கிற பசங்களை நல்ல அரசு அதிகாரிகளா வரச் சொல்லுங்க. அடுத்த தலைமுறைகளாவது நல்லா இருக்கட்டும்.
நல்ல எடுத்து சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்.//

வாங்க நண்பரே. உண்மைதான். அடுத்த தலை முறைகளாவது இந்த இலஞ்சப் பேய்களிடமிருந்து தப்ப வேண்டும். உங்கள் கருத்துக்கும் தமிழ் மணத்தில் இணைத்ததட்கும் நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Sangkavi said...
நல்ல நடையில் எழுதியிருக்கறீர்கள்...
உங்கள் தைரியத்தைப் பாராட்டுகின்றேன்...
இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்....//

வருகைக்கும் ,கருத்துக்கும் , வாழ்த்துகளுக்கும் நன்றி சங்கவி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//அண்ணாமலையான் said...
நல்லாருக்கு.. வாழ்த்துக்கள்...//

வாங்க அண்ணாமலை. பொறுமையுடன் படித்ததற்கு நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//கலகலப்ரியா said...
:).. nallarukku teacherammaa..//

கருத்துக்கு நன்றிம்மா. டீச்சரம்மா என்று இனிமேல் சொல்ல முடியாது.
அந்த வேலைக்கு முழுக்குப் போட்டு பல வருடங்களாகுது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//SUFFIX said...
அப்பாடா முழுசும் படிச்சாச்சு, தைரியத்துடன் நடந்தவகளை எழுதியது பாராட்டக்கூடியது, முடிவில் எல்லாம் நல்ல படியாக நடந்ததில் மகிழ்ச்சி ஜெஸ்!!//

வாங்க நண்பரே! பொறுமையுடன் படித்ததற்கு மிக்க நன்றி.

Anonymous said...

விருந்தும் சங்கடம்தான்...
கூடவே உங்கள் துனிவான செயல்களும் பிடித்திருக்கிறது...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//இந்திராகிசரவணன் said...
விருந்தும் சங்கடம்தான்...
கூடவே உங்கள் துனிவான செயல்களும் பிடித்திருக்கிறது...//

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இந்திரா.

ஹேமா said...

நல்ல அனுபவம் ஜெஸி.
உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டு.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஹேமா said...
நல்ல அனுபவம் ஜெஸி.
உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டு.//
நீங்கள் இங்கே கருத்துப் போடும்போது நான் உங்கள் கவிதை படிக்க உங்கள் வலயத்துக்கு வந்திருந்தேன் ஹேமா. உங்கள் வலயத்துக்கு வரும் பொது வார்னிங் சிக்னல் வருகிறது. malware removal செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன்.அவதானியுங்கள்.