நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Sunday 4 October 2009

பெண்ணின் பெருமையும் அதன் இன்றைய சீர்கேடும்

எழுத்தோசை தமிழரசி என்னை இந்தத் தலைப்பில் எழுத அழைத்து பல வாரங்கள் ஆகின்றன. இதற்கு மேலும் தாமதித்தல் அழகல்ல என்று தோன்றியதால் இன்று எழுத ஆரம்பிக்கிறேன். எப்படி எழுதலாம் என்று யோசித்ததில் காலம் போனது தெரியவில்லை. தாமதத்திற்கு முதலில் தமிழரசியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
*************************************

இரண்டு பாலிய தோழிகள் சுமார் பத்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் சந்திக்கிறார்கள் . அவர்கள் நட்பு விட்ட இடத்திலிருந்து தொடர்கிறது. இருவரும் திருமணமானவர்கள். ரதி, வெளிநாட்டில் கடந்த பத்து வருடங்களாக வாழ்கிறாள் . உயர் கல்வி கற்று, வேலை பார்த்து , வெளிநாட்டு நாகரிக வாழ்க்கைக்குப் பழக்கப் பட்டாலும் கணவனை தன் நண்பனாகக் கருதுகிறாள். இவள் பெண்களின் இன்றைய சீர்கேட்டுக்கு ஆண்கள் மட்டுமல்ல முழுச் சமுதாயமே காரணம் என் கருத்தைக் கொண்டிருக்கிறாள். வாணி படிப்பைப் பாதியில் நிறுத்தி, அவர்கள் பரம்பரை வழக்கப் படி இளம் வயதில் திருமணமாகி , ஊரிலேயே கணவருக்கும் அவர் பெற்றவர்களுக்கும் சேவை செய்து , வாழ்க்கையில் வெறுப்பேறி ,இந்த ஆண் வர்க்கத்தையே உள்ளார வெறுக்கின்றாள். அவள் கனவுகள் எதுவும் நிஜமாகாததால் , வாயிருந்தும் ஊமையாக ,உள்ளக் குமுறல்களுடனும் , போலிச் சிரிப்புடனும் வெறுமையான வாழ்க்கை வாழ்கின்றாள். அவர்கள் எண்ணப் பரிமாறல்கள் தணிக்கை செய்யப் பட்டு , இதோ உங்கள் ரசனைக்கு..............

(பி.கு. இங்கே நீங்கள் படிப்பது வெவ்வேறு சூழலில் வாழும் இரு பெண்களின் அபிப்பிராயம் மட்டும் தான். இதற்கும் ஜெஸ்வந்திக்கும் எந்தத் தொடர்பபும் கிடையாது என்பதை நண்பர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்)


வாணி said..

அன்பின் ரதி!
உன்னைத் திரும்பவும் சந்தித்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி.
ஏதோ சொல்ல நினைக்கிறேன். என்னவென்று சொல்லத் தெரியவில்லை. பெற்றவர்கள் பேச்சை மீற முடியாமல் அவர்கள் காட்டியவருக்கு பதினாறு வயதில் கழுத்தை நீட்டிய நாளிலிருந்து, நான் அவருக்காகவும் அவர் குடும்பத்துக்காகவும் மாடாய் உழைத்துக் கொண்டிருக்கிறேன். நிறையப் படிக்க வேண்டும் என்று நான் கண்ட கனவுகளும், நானும் காதலிக்க வேண்டும் என்று அடிமனத்தில் இருந்த ஆவலும் கருகிப் போன வேதனையில் இந்தத் திருமண வாழ்க்கையே இயந்திர மயமாகிப் போய் , உள்ளார என் கணவர் மேல் ஒரு வெறுப்பே உருவாகி விட்டது. சந்ததியைப் பெருக்கவும் அவர் பெற்றவர்களைப் பார்க்கவும் 'ஒருத்தி' வேண்டும் என்பதற்காக நடந்த இந்தத் திருமணம் எனக்கு எந்த இன்பத்தைத் தந்து விட முடியும்.
'பெண்ணாய்ப் பிறந்து விட்டேன். அது என் விதி' என்று ஆணாதிக்கத்தை எதிர்க்காமல் அடங்கிப் போய் விட்ட எத்தனையோ பெண்களில் நானும் ஒருத்தியாகி விட்டேன். நான் மட்டுமல்ல. என்னைப் போல் பலர் இப்படித் தான்உள்ளக் குமுறல்கலோடு ஏதோ வாழ்கிறோம் என்று வாழ்கிறார்கள். இன்றைய நவீன காலத்தில் கூட பெண்ணுக்கு ஏன் இந்த அடிமை வாழ்க்கை?

தாய் வழிச் சமுகமாக ,பெண்ணைத் தெய்வமாக , தலைவியாகக் கொண்டு வளர்ந்த நம் சமுதாயத்தில் தாசியாக, அடிமையாக, பிறரைச் சார்ந்து வாழும் ஒட்டுண்ணி ஜந்துவாக , இரண்டாந் தரக் குலமாக......ஒரு கேடு கெட்ட நிலைமைக்குத் தள்ளப் பட்டு விட்டது பெண்ணினம். ' பெண்கள் தெய்வத்துக்குச் சமமானவர்கள் ', ' கற்புக் கரசிகள்' என்று எம் முன்னோர் பெண்களை ஆராதித்த காலத்தில் கூட இந்தப் போலிப் புகழ்ச்சியில் பெண்ணின் உள்ளார்ந்த வலிகளும் ,வேதனைகளும் அடிபட்டுப் போய் மறைக்கப் பட்டிருந்தன என்பது இப்போ புரிகிறது.

சீதை, கண்ணகி, நளாயினி......என்று பெண்களைக் கொண்டாடிய எமது சமுகம் ,எப்போதாவது அவர்களை உணர்வுள்ள ,ஒரு மென்மையான பெண்ணாக நினைத்துப் பார்த்ததா? சீதை தீககுளித்து தன் கற்பை நிரூபித்தாள் என்று போற்றிய சமுகம் , அவள் தீக்குளித்த போது அவள் மனம் எப்படித் தீயில் வேகி யிருக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்குமா? ..............எனக்குத் தெரியவில்லை.என்னைப் பொறுத்த வரை கணவனின் சந்தேகத்தினால் மனமுடைந்து தீக்குளிக்கும் எந்தப் பெண்ணும் சீதை தான். அவள் இறந்தாளா?பிழைத்தாளா? என்பது முக்கியமல்ல. அந்த நாள் தொடங்கி இன்று வரை பெண்ணினத்தை ஒடுக்கி ' கற்பு' பெண்ணுக்கு மட்டும் தான் என்று வகுத்ததும் இந்த ஆணினம் தான். ''ஆவதும் பெண்ணாலே , அழிவதும் பெண்ணாலே '' என்று நடக்கும் அத்தனைக்கும் பெண் தான் காரணம் என்று தப்பியோடும் இந்தக் கோழைச் சமுதாயத்தைப் பற்றி நான் இன்னும் என்ன சொல்வது?

வெளி நாட்டில் இருப்பதால் உனக்கு என்போல் அடிமை வாழ்க்கை இருக்காது என்று நம்புகிறேன். நீ கற்ற கல்வி உன்னை உன் காலில் நிற்க வைத்திருக்கிறது.
நீ எப்படி இருக்கிறாய்? உன் வாழ்க்கையைப் பற்றி அறிய மிகவும் ஆவலாக இருக்கிறேன்.


ரதி said.......

அன்பின் வாணி!
நீண்ட காலத்தின் பின்னர் உன்னைக் கண்டடைந்ததில் எனக்கு மகிழ்ச்சி என்றாலும், உனது நிலைமை அறிந்து மிக மனக் கவலையாக இருக்கிறது. நீ உன் மேல் கொள்ளும் தன்னிரக்கமும் , கணவர் மேலும் ஆண் வர்க்கத்தின் மேலும் காட்டும் இந்த அதீத வெறுப்பும் உன் உள ஆரோக்கியத்துக்கும் உன் குடும்ப வாழ்க்கைக்கும் கொள்ளியாக மாறி விடுமோ என்று எனக்குப் பய மாகக் கூட இருக்கிறதடி. நடந்து முடிந்தவைகளை யாரும் மாற்ற முடியாது. எனவே இனிமேல் உன் வாழ்க்கையை இனிதாக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்துப் பார். உன் உணர்ச்சிகளை முற்றாக மறைக்காமல் உன் கணவருடன் பகிர்ந்து கொள்ளப் பழகிக் கொள். உன் பிள்ளைகளுக்கு இள வயதில் திருமணம் செய்து கொடுக்காமல் அவர்களுக்கு கற்கும் வசதிகளை உண்டு படுத்தி அவர்களுக்காகப் போராடு.
நான் உயர் கல்வி கற்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தது உனக்குத் தெரியும் தானே? என் பெற்றவர்களுடன் வாதாடி நான் நினைத்ததைச் சாதித்தேன். என் பிடிவாதத்தைக் கண்டு அவர்கள் பின்வாங்கி விட்டார்கள். காதலித்துக் கல்யாணம் செய்த போதும் எங்கள் வீட்டில் ஒரு பிரளயம் நடந்தது என்னவோ உண்மை தான். ஆனால் இப்போ அவை இனிய நினைவுகளாகத் தான் இருக்கின்றன. நான் வேலைக்குப் போகப் போகிறேன் என்று சொன்னபோது என் கணவர் தடுக்க வில்லை. மாறாக அதனை ஆதரித்தார். இருவர் வேலை செய்தால் குடும்பப் பொருளாதார நிலைமையை உயர்த்த முடியும் என்பது உண்மை தானே!
வீட்டு வேலைகளையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். நான் வேலை செய்கிறேன் என்ற தலைக் கனம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. அதே போல் அவருக்கு நான் ஆலோசனை சொல்லும் போது என் கணவர் அதைத் தப்பாக எடுத்துக் கொள்வதும் இல்லை. என்னைக் கலந்தாலோசிக்காமல் அவர் எந்த முடிவும் எடுத்ததும் இல்லை.

நான் கற்ற கல்வியும், எனது பல்வேறு அனுபவங்களும் என் எண்ணங்களையும் அபிப் பிராயங்களையும் இப்போ முற்றாக மாற்றி விட்டது. உனக்கு நான் எழுதுபவை ஆச்சரியத்தைத் தரலாம். பாடசாலை நாட்களில் நான் ' பெண்ணின் பெருமை' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியில் முதற் பரிசு பெற்றது உனக்கு நினைவிருக்கா? அதை நினைத்து நான் சிரித்த நாட்கள் இப்போ பல. அப்பொதெல்லாம் கண் மூடித் தனமாக வரிந்து கட்டிக் கொண்டு பெண்ணினத்துக்கு வக்காலத்து வாங்கியதும் , மொத்த ஆண் வர்க்கமும் திட்ட மிட்டுப் பெண்களை அடிமையாகி விட்டது என்று ''மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்'' என்றும் விவாத மேடைகளில் முழங்கியதும் தப்போ என்று இப்போ தோன்றுகிறதடி.

உண்மையைச் சொல்லப் போனால் , இங்கே கல்வி கற்றும் சீர் கெட்டுப் போகும் பெண்களைப் பார்க்கும் போது , இவர்கள் நிலைமைக்கு நாங்கள் ஆண்களை மட்டும் எப்படிக் குற்றம் சாட்ட முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது. இங்கே என்னைச் சுற்றிச் சீரழிந்து போன பல குடும்பங்களுக்கு காரணம் சில பெண்கள் தான் என்பதைக் கண்ணால் கண்ட பின்பு , அனுபவமின்றி வெறும் உணர்ச்சி வேகத்தில் நான் அப்போ பிதற்றி இருக்கிறேன் என்று தெரிகிறதடி. என்னடா இவள் ஆண்களுக்கு வக்காலத்து வாங்குகிறாள் என்று உன் புருவத்தை உயர்த்துவது தெரிகிறது. ஆனாலும் மனந் திறந்து பல விடயங்களை உனக்கு விளக்க வேண்டுமென்ற ஆவல் தான் என்னிடம் மேலோங்கி நிற்கிறது.

''பெண்ணுரிமை'' என்றால் என்னவென்று நாம் முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அரை குறையாக ஆடை அணிவதும் , ஆண் களுக்குப் போட்டியாக மது அருந்துவதும், நைற் கிளப்பில் போய் நடன மாடுவதும் தான் என்று இந்தத் தலைக் முறையில் பலர் நினைக்கிறார்கள். அது வல்ல பெண்ணுரிமை. பெண் தன் அறிவை உயர்த்தி , தன் காலில் நிற்கக் கூடிய தகுதியைப் பெறுவதும் , அந்தக் கல்வியினால் பிள்ளைகளைக் கட்டுக் கோப்பாக வளர்ப்பதும், தன் குடும்பப் பொறுப்பைப் பங்கிட்டுக் கொள்வதும் தான் பெண்ணுரிமை. அவள் யாருக்கும் எஜமானியுமல்ல. அடிமையுமல்ல. இதுதான் ''சம உரிமை''. இதைச் சில பெண்கள் உணராததுதான் பெருங் கவலை.

தங்கள் உயர் கல்வியினாலும், மனத் திடத்தினாலும் , புத்திக் கூர்மையினாலும் வீராங்கனைகளாக , சமூக சேவகிகளாக ,பேராசிரியர்களாக பேர் பெற்றுப் பெண்ணுக்குப் பெருமை தேடித் தந்த எத்தனையோ பெண்மணிகள் இருக்கிறார்கள். ஆனாலும் கற்றும் பாமரராய் , நாகரிகம் என்ற அரக்கனிடம் அடிமையாகி ,பெண்மையின் அரிய குணங்களை அடகு வைத்து ,பெண்ணின் பெருமையைக் குழி தோண்டிப் புதைக்கும் பலரும் இங்கு இருக்கிறார்கள். சம்பாதிக்கிறோம் என்ற திமிர் பேயாகப் பிடிக்கக் கணவனை மதியாமல், பெரியவர்களை உதாசீனப் படுத்தியும், நவீன மோகத்தில் ஆடை குறைத்தும் , எடுத்துக் காட்டாக இருக்க வேண்டியவர்கள் பலரும் எள்ளி நகையாடும் வகையில் குடும்பங்களைக் கோட்டில் கொண்டுபோய் நிறுத்தி விடுகிறார்கள்.

அதனால் பெண்ணின் இன்றைய சீர்கேட்டுக்கு ஆண்களை மட்டும் நான் குறை சொல்ல மாட்டேன். எமது முன்னோர் பெண் ஆண் என்று பார பட்சம் காட்டியது தப்புத் தான். ஆண் இனம் தங்களை மேலினமாக ஒரு காலத்தில் மமதையுடன் நினைத்திருந்ததும் உண்மைதான். ஆனால் தறி கெட்டுப் போகும் பெண்களும் இதற்குக் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. நிறைய எழுதி விட்டேன்.
உன் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.
( அவர்கள் எண்ணப் பரிமாறல் தொடரும்.......)



.


45 comments:

S.A. நவாஸுதீன் said...

சீர்கேடு தலைப்பில் இருந்தும் முழுமையாக சாடாமல் நன்மை, தீமை என்று இருவேறு கோணத்தில் சொல்லி இருப்பது சூப்பர்.

SUFFIX said...

கடித வடிவில் கருத்துக்களை பரிமாறிய விதம் அழகு!!

ஆ.ஞானசேகரன் said...

சூப்பர்...

ஆ.ஞானசேகரன் said...

உண்மைகளை அழகாக சொல்லிய விதம் அழகு

Shan Nalliah / GANDHIYIST said...

All coins have two sides..! Life is like that..!
All humans have +,- sides they have to follow their conscience and decide for the benefit of Tamils in specific & Human community in general!

நேசமித்ரன் said...

இந்த கருத்தை இந்த வடிவத்தில் சொன்னால் எளிதாக ஆழாமாக சென்று சேரும் என்று எப்படித்தான் தீர்மானிக்கிறீர்களோ ஜெஸ் ..!

மிக நன்றாக வந்திருக்கிறது .... வெகு நேரம் சிந்தனைக்குள் சுழன்ற படி உங்கள் சொற்கள்
:)

நட்புடன் ஜமால் said...

இங்குட்டும்

அங்குட்டும்

நின்று பேசியது போல் சொல்லியவிதம் அருமை.

கவிக்கிழவன் said...

இரு பெண்களின் குணங்களை அனுபவங்களை உணர்ச்சியாக எழுதியிருக்கிறீர்கள்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//S.A. நவாஸுதீன் said...
சீர்கேடு தலைப்பில் இருந்தும் முழுமையாக சாடாமல் நன்மை, தீமை என்று இருவேறு கோணத்தில் சொல்லி இருப்பது சூப்பர்.//

கருத்துக்கு நன்றி நண்பரே. இதன் மூலம் என் கருத்தைச் சொல்லாமல் தப்பிக்கப் பார்க்கிறேன். ஹா ஹா

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...
கடித வடிவில் கருத்துக்களை பரிமாறிய விதம் அழகு!! //

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஷ‌ஃபிக்ஸ்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஆ.ஞானசேகரன் said...
சூப்பர்... உண்மைகளை அழகாக சொல்லிய விதம் அழகு//

உங்கள் கருத்துக்கு நன்றி ஞானசேகரன்.

கபிலன் said...

அப்பாடி...நான் வலையுலகத்துல பெண்ணுரிமை சம்மந்தமா படித்த பதிவுகளிலேயே...நடுநிலைமையோடு சொல்லி இருக்குற பதிவு இது தாங்க ! மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு...!
அருமை!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Shan Nalliah / GANDHIYIST said...
All coins have two sides..! Life is like that..!
All humans have +,- sides they have to follow their conscence and decide for the benefit of Tamils in specific & Human community in general!//

Thanks for your comment Shan.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நேசமித்ரன் said...
இந்த கருத்தை இந்த வடிவத்தில் சொன்னால் எளிதாக ஆழமாக சென்று சேரும் என்று எப்படித்தான் தீர்மானிக்கிறீர்களோ ஜெஸ் ..! மிக நன்றாக வந்திருக்கிறது .... வெகு நேரம் சிந்தனைக்குள் சுழன்ற படி உங்கள் சொற்கள் :) //

வாங்க நேசன். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி . தொடர்ந்து தரும் ஊக்கத்தை மறக்க மாட்டேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நட்புடன் ஜமால் said...
இங்குட்டும்
அங்குட்டும்
நின்று பேசியது போல் சொல்லியவிதம் அருமை.//

வாங்க ஜமால். இங்கிட்டும் அங்கிட்டும் நின்று நானே பேசினேன் என்று முடிவே பண்ணி விட்டீர்களா? நான் பிற்குறிப்பு வேறே போட்டேனே!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//கவிக்கிழவன் said...
இரு பெண்களின் குணங்களை அனுபவங்களை உணர்ச்சியாக எழுதியிருக்கிறீர்கள்//

வாங்க யாதவன். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

சந்தான சங்கர் said...

உணர்வுகளை புரிந்துகொள்ளாத
வயதிலும்,
உலகினை புரிந்துகொள்ளாத
வயதிலும்,
குடும்ப சுமைகளை இளம் வயதில்
சுமக்கும் வாணி..

உலகம் புரியப்பட்டு
உள்ளம் அறியப்பட்டு
கலகத்தையும்
கவலையையும்
களைந்து
பகிரப்பட்ட அன்பாய் வாழும் ரதி..

ரதியின் கூற்று உண்மை,
விதியின் கைகளில் இல்லை வாணி..
சுமைகளையும் மறந்து
சுற்றம் புரிந்து
கசியும் சிறு புன்னகையிலும்
அன்பிலும் மலரும் வாணியின் வாழ்வும்..



துலாபாரத்துடன்
எழுதியிருக்கின்றீர்கள்
வாழ்த்துக்கள்.

ரோஸ்விக் said...

ரதியின் கடிதத்தில் வரும் 5 மற்றும் 6-ம் பதிகள் வாழ்வின் நிதர்சனம். ஒரு பெண்ணே இந்த கருத்துக்களை ஆழமாக எழுதியதில் மகிழ்ச்சி. இதை இந்நேரம் ஒரு ஆண் எழுதியிருந்தால், அதை எதிர்த்து ஒரு கூட்டம் கிளம்பியிருக்கலாம்(அதுவும் ஒரு ஆண் இவ்வாறு எழுதிவிட்டானே என்று).

இச்சமுதாயத்தில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை. ஆணும் பெண்ணும் சேர்ந்து இந்த வாழ்வின் இன்பங்களைப் பெருக்குவதும், துன்பங்களைக் கலைவதும் தான் வாழ்வின் வெற்றியாகும்.

வாழ்த்துக்கள் தோழி!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//கபிலன் said...
அப்பாடி...நான் வலையுலகத்துல பெண்ணுரிமை சம்மந்தமா படித்த பதிவுகளிலேயே...நடுநிலைமையோடு சொல்லி இருக்குற பதிவு இது தாங்க ! மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு...! அருமை! //

உங்கள் முதல் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி கபிலன்.

Anonymous said...

அருமை.

சூர்யா

Unknown said...

நல்ல விஷயத்தை பகிர்ந்து இருக்கீங்க... மகிழ்ச்சியா இருக்கு...

கலா said...

பெண்ணில்லாமல் ஆண்இல்லை,
ஆண்ணில்லாமல் பெண்ணில்லை
இருபாலாரிடமும் நல்லவர்களும்,கெட்டவர்களும்...
புரிந்துகொள்பவரும்,புரியாமலிருப்பவர்களும்,...ஊக்கம்
கொடுப்பவர்களும்,முடக்குபவர்களும்..ஆதரிப்பவர்களும்,
வெறுப்பவர்களும்...துணை நிற்பவர்களும்,நிற்காதவர்களும்..
இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகலாம்.
இருக்கின்றார்கள்
இருவருக்கும் ஒற்றுமையாய் அமைந்துவிட்டால்...
அவர்கள் செய்த பயன்.
புரிந்து எழுதிருக்கின்றீர்கள்{அனுபவமோ}
நன்றாக இருக்கின்றது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//சந்தான சங்கர் said...
உணர்வுகளை புரிந்துகொள்ளாத
வயதிலும்,
உலகினை புரிந்துகொள்ளாத
வயதிலும்,
குடும்ப சுமைகளை இளம் வயதில்
சுமக்கும் வாணி..

உலகம் புரியப்பட்டு
உள்ளம் அறியப்பட்டு
கலகத்தையும்
கவலையையும்
களைந்து
பகிரப்பட்ட அன்பாய் வாழும் ரதி..

ரதியின் கூற்று உண்மை,
விதியின் கைகளில் இல்லை வாணி..
சுமைகளையும் மறந்து
சுற்றம் புரிந்து
கசியும் சிறு புன்னகையிலும்
அன்பிலும் மலரும் வாணியின் வாழ்வும்..

துலாபாரத்துடன் எழுதியிருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்.//

உங்கள் முதல் வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றி சங்கர். கருத்தைக் கவிதை போல் சொல்லி இருக்கிறீர்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ரோஸ்விக் said...
ரதியின் கடிதத்தில் வரும் 5 மற்றும் 6-ம் பதிகள் வாழ்வின் நிதர்சனம். ஒரு பெண்ணே இந்த கருத்துக்களை ஆழமாக எழுதியதில் மகிழ்ச்சி. இதை இந்நேரம் ஒரு ஆண் எழுதியிருந்தால், அதை எதிர்த்து ஒரு கூட்டம் கிளம்பியிருக்கலாம்(அதுவும் ஒரு ஆண் இவ்வாறு எழுதிவிட்டானே என்று).
இச்சமுதாயத்தில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை. ஆணும் பெண்ணும் சேர்ந்து இந்த வாழ்வின் இன்பங்களைப் பெருக்குவதும், துன்பங்களைக் கலைவதும் தான் வாழ்வின் வெற்றியாகும்.
வாழ்த்துக்கள் தோழி!//

உங்கள் முதல் வரவுக்கும் அழகான கருத்துக்கும் நன்றி நண்பரே. உங்கள் வரவு மூலம்தான் இன்று உங்கள் தளத்தை வந்தடைந்தேன். உங்கள் எழுத்து நன்றாக இருக்கிறது. உங்கள் வலயத்தையும் தொடருகிறேன். தொடர்ந்து வருகை தாருங்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Anonymous said...
அருமை. ---- சூர்யா //

உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சூர்யா.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Krishna Prabhu said...
நல்ல விஷயத்தை பகிர்ந்து இருக்கீங்க... மகிழ்ச்சியா இருக்கு...//

முதல் வரவுக்கு நன்றி கிருஷ்ணா பிரபு. இந்தப் பதிவு தொடருகிறது. திரும்பவும் வாருங்கள்.

Anonymous said...

பெண்மையின் பரிமானத்தை பெண்மைக்கே உரிய பாணியில் மிகச் சிறப்பாக பரிமாறியிருக்கிறாய் ஜெஸ்...இதனா பெண்ணோட மனசு பெண்ணுக்குத் தான் தெரியும் என்பது...

ஹேமா said...

ஜெஸி மிக மிக அழகாக பெண்ணில் உணர்வுகளைச் சொல்லியிருக்கிருக்கிறீர்கள்.வாழ்வின் நிதர்சனம்.தேர்ந்தெடுத்த ஊடகம் அதைவிட அசத்தல்.நல்ல சிந்தனை.எனக்குள் இதுபற்றிய வலி நிறையவே தோழி.

மு. மயூரன் said...

"சீர்கெட்டுப்போகும்" பெண்களை மட்டுமே எப்போதும் பிரச்சினையாக பார்த்துக்கொண்டிருக்கிறார்களே, சீர்கெட்டுப்போகும் ஆண்கள் ஏன் அவ்வளவு பிரசிச்னையாவதில்லை?

சீர்கெட்டுப்போகும் பெண்கள் பெண்ணடிமைத்தனத்துக்கு ஒரு வகையில் காரணம் என்றால் முக்கால்வாசி ஆண்கள் சீர்கெட்டுத்தானே போயிருக்கிறார்கள்.. ஏன் அவர்கள் அடிமையாயில்லை?

தமிழ் அமுதன் said...

சொல்லப்பட்ட விதம் மிக நன்று .......!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//கலா said...
பெண்ணில்லாமல் ஆண் இல்லை,ஆண்ணில்லாமல் பெண்ணில்லை
இருபாலாரிடமும் நல்லவர்களும்,கெட்டவர்களும்...
புரிந்துகொள்பவரும்,புரியாமலிருப்பவர்களும்,..
.ஊக்கம் கொடுப்பவர்களும்,முடக்குபவர்களும்..ஆதரிப்பவர்களும்,
வெறுப்பவர்களும்...துணை நிற்பவர்களும்,நிற்காதவர்களும்..
இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகலாம்.
இருவருக்கும் ஒற்றுமையாய் அமைந்துவிட்டால்...அவர்கள் செய்த பயன். புரிந்து எழுதிருக்கின்றீர்கள்{அனுபவமோ} நன்றாக இருக்கின்றது.//

வரவுக்கு நன்றி கலா. நீங்களும் புரிந்து தான் கருத்துப் போட்டிருக்கிறீர்கள். இப்படியான விஷயங்களில் அனுபவத்துக்கு நிகர் அனுபவமே!
ஒரு சிலருக்குத் தான் வாழ்க்கை தங்கள் விருப்பப் படி அமைகிறது. ஆனால் வந்த வாழ்க்கையை பெண் சாமர்த்தியத்தால் வெல்ல முயல வேண்டும் என்பது என் கருத்து.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//தமிழரசி said...
பெண்மையின் பரிமானத்தை பெண்மைக்கே உரிய பாணியில் மிகச் சிறப்பாக பரிமாறியிருக்கிறாய் ஜெஸ்...இதுதானா , பெண்ணோட மனசு பெண்ணுக்குத் தான் தெரியும் என்பது...//

நன்றி தமிழ். எழுத தலைப்புக் கொடுத்ததே நீதானே! பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டி விட்டுப் பார்த்தேன். ஹா ஹா ஹா

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஹேமா said...
ஜெஸி மிக மிக அழகாக பெண்ணில் உணர்வுகளைச் சொல்லியிருக்கிருக்கிறீர்கள்.வாழ்வின் நிதர்சனம்.தேர்ந்தெடுத்த ஊடகம் அதைவிட அசத்தல். நல்ல சிந்தனை. எனக்குள் இதுபற்றிய வலி நிறையவே தோழி.//

வாங்க ஹேமா. தினம் நம்மைச் சுற்றி நடக்கும் விடயங்கள் இவை. பெண்கள் விழிப் புணர்ச்சி தான் பெண்களைக் காக்க முடியும். சட்டங்கள் அல்ல .
முடிந்தால் எனக்கு மெயில் பண்ணுங்க ஹேமா.

நர்சிம் said...

சொன்ன/பகிர்ந்த விதம் நன்றாக இருந்தது.கருத்துகளோடு முரண்கள் இருந்தாலும்.

நல்ல பகிர்விற்கு நன்றி.

Anonymous said...

சூப்பர்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//மு.மயூரன் said...
"சீர்கெட்டுப்போகும்" பெண்களை மட்டுமே எப்போதும் பிரச்சினையாக பார்த்துக்கொண்டிருக்கிறார்களே, சீர்கெட்டுப்போகும் ஆண்கள் ஏன் அவ்வளவு பிரசிச்னையாவதில்லை?
சீர்கெட்டுப்போகும் பெண்கள் பெண்ணடிமைத்தனத்துக்கு ஒரு வகையில் காரணம் என்றால் முக்கால்வாசி ஆண்கள் சீர்கெட்டுத்தானே போயிருக்கிறார்கள்.. ஏன் அவர்கள் அடிமையாயில்லை?//

வாங்க மயூரன். உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. பெண் அடிமைத்தனம் வேறு. பெண்கள் சீர்கேடு வேறு. இரண்டுமே இன்றைய கால பெண்ணின் பிரச்சனைகள்.
ஒரு ஆணாக இருந்து பெண்களுக்காக நீங்கள் வாதாடுவது மகிழ்ச்சி தருகிறது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஜீவன் said...
சொல்லப்பட்ட விதம் மிக நன்று .......!//

கருத்துக்கு நன்றி ஜீவன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நர்சிம் said...
சொன்ன/பகிர்ந்த விதம் நன்றாக இருந்தது.கருத்துகளோடு முரண்கள் இருந்தாலும்.
நல்ல பகிர்விற்கு நன்றி.//

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நர்சிம். உங்கள் முரண்பாடான கருத்தையும் தெரிவித்திருக்கலாம் தானே! இரண்டு பெண்களுக்கிடையில் இப்படி அபிப் பிராய பேதம் இருக்கும் போது நிச்சயம் உங்களுக்கு வேறு பட்ட அபிப்பிராயம் இருக்கும் என்பதை நான் நம்புகிறேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Ammu Madhu said...
சூப்பர்//

வரணும் அம்மு, உங்கள் முதல் வரவுக்கு நன்றி.

யாழினி said...

ம்... நன்றாக இருக்கிறது ஜெஸ்வந்தி! வெவ்வேறுபட்ட பெண்களின் உணர்வுகளை நன்றாக பதிவிட்டுள்ளீர்கள்!

தமிழ் அஞ்சல் said...

கண்ணியமான பெண்ணியம்! வாழ்த்துக்கள் !

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//யாழினி said...
ம்... நன்றாக இருக்கிறது ஜெஸ்வந்தி! வெவ்வேறுபட்ட பெண்களின் உணர்வுகளை நன்றாக பதிவிட்டுள்ளீர்கள்!//

வாங்க தோழி! நலமா? உங்கள் கருத்துக்கு நன்றி. தொடர்ந்து வருகை தருவதற்கும் நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//திருப்பூர் மணி Tirupur mani said...

கண்ணியமான பெண்ணியம்! வாழ்த்துக்கள் !//

வாங்க திருப்பூர் மணி. உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

நிலாரசிகன் said...

//பாலிய தோழிகள் /

பால்ய தோழிகள் என்பதுதானே சரி? நல்லதொரு கடித பகிர்வு.வாழ்த்துகள்.

எதிர்கட்சி..! said...

இதுவும் நியாயமே!