நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Wednesday 20 May 2009

என்ன தவம் செய்தேன்? பகுதி 2

என் நெஞ்சு பட படவென அடித்துக் கொள்ள, கால்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொள்ள ஒருபடியாக அவர் சொன்ன இடத்தை வந்தடைகிறேன். அதே சிரிப்புடன் வரவேற்கிறார். மெதுவாக 'உமக்கு இவ்வளவு அவசர மென்றால் கல்யாணத்தை இந்த மாசமே வைத்து விடுவோமா? ' என்று கேட்டு நையாண்டி பண்ணுகிறார். தடுமாறி ''அப்படி இல்லை'' என்று அவசரமாகச் சொல்லுகிறேன். அவர் நகைச் சுவையை ரசிக்கும் நிலையில் நான் இல்லை. என் உடம்பில் ஓடும் இரத்த மெல்லாம் வேகத்தோடு என் தலைக்குள் பாய்ந்துவிட்ட உணர்வில் முகம் சிவந்து போனேன்.

நான் சில  வருடங்கள் முன்பாக வசந்தனை பல்கலைக் கழகத்தில் காதலித்ததையும் , அவனுடன் பழகிய பின்னர்  மனதளவில்  எம்மிருவருக்கும் எந்தப் பொருத்தமும் கிடையாது என்பதை அறிந்து , அந்த உறவை முறித்து ,அவனது  நினைவை அப்படியே ஒரு கெட்ட கனவென நான் மறக்க முயற்சிப்பதையும் , எப்படி இவரிடம் சொல்வது? எப்படி ஆரம்பிப்பது? ஆனால்  எப்படியும் சொல்லித்தானே ஆக வேண்டும்! மனப் போராட்டத்துடன் , தட்டுத் தடுமாறி ' என் இறந்த காலம் உங்களுக்குத் தெரிய வேண்டும் ' என்கிறேன். என்னை உற்றுப் பார்த்தவர்  ' உம்மை இப்படிக் கவலையாய்ப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை' என்கிறார். சிறிது இடை வெளிக்குப் பிறகு ' உமது இறந்த காலம் உமக்கு மட்டும் தான் சொந்தம். அதில் நான் பங்கு கேட்கவும் முடியாது. எனக்குப் பிடிக்கவில்லை என்று மாற்றியமைக்கவும் முடியாது. ஆனால் உமது வருங்காலம் உமக்கும் எனக்கும் மட்டும் சொந்தமாக இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன்'. என்கிறார். எத்தனை பெரிய உண்மையை, சுருக்கமாக அவரின் இயல்பான புன்னகையுடன் சொல்கிறார். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? என்னால் நடப்பவை கனவா நனவா என்று ஜீரணிக்க முடியவில்லை. கண்கள் கலங்க அவரைப் பார்க்கிறேன். 'எனக்கு எல்லாம் தெரியும். நீர் எதையும் எப்பவும் எனக்குச் சொல்ல வேண்டாம். உம்மைப் பார்த்ததும், நீர் தான் என் மனைவி என்று நான் முடிவு செய்து விட்டேன்' என்கிறார். நொடிப் பொழுதில் என் கனத்த மனம் பஞ்சாய்ப் போனதுபோல உணர்ந்தேன். கண்களைத் துடைத்த வண்ணம் அவரை நேருக்கு நேர் பார்க்கிறேன். என் கண்களில் தெரிந்த மலர்ச்சியைக் கண்டு அவரும் புன்னகைக்கிறார். 'நல்ல செய்தியை அம்மாவிடம் சொல்லி விடவா' என்று கேட்கிறார். 'இல்லை, நாங்கள் சந்தித்தது ஒருவருக்கும் தெரிய வேண்டாம். அப்பா செய்தி சொல்லுவார்' என்று உரிமையுடன் சொல்கிறேன். நாங்கள் பேசியது சில நிமிடங்கள் என்றாலும் அவை என் மனதில் பதிந்து விட்ட பொன்னான நிமிடங்கள் .

மூன்றாம் முறை, என் பிறந்த நாளன்று ஒரு பரிசோடு எங்கள் வீட்டுக்கு வருகிறார்.அழகான ஒரு புடவையைத் தந்து விட்டு ' தங்கை தான் தேர்ந்தெடுத்தாள். உமக்குப் பிடிக்காவிட்டால் அவள் தொலைந்தாள்'  என்று சொல்லிச் சிரிக்கிறார். அப்போது எங்கள் திருமண நாள் நிச்சயமாகியிருந்தது. அன்று என்னைக் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அவ்வளவுதான். பிறகு வருவார் என்று எதிர் பார்த்தேன். வரவேயில்லை , திருமண நாள்வரை தினமும் தொலை பேசியில் ' காலை வணக்கம்' சொன்னார். மொத்தமா இவருடன் எனக்கு மூன்று மணி நேரப் பழக்கம் மட்டும் தான். என்னால் நம்ப முடியவில்லை. இந்தத் தாலியின் வித்தையிது என்று சொல்லி விடவும் முடியவில்லை. ஏதோ ஒரு …….....எனக்கு என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

இப்படியே நடந்தவைகளை என் மனம் அசைபோட அவர் மார்பில் சாய்ந்திருந்தது மட்டும் நினைவிருக்கிறது. அப்படியே அயர்ந்து தூங்கி விட்டேன் என்று நினைக்கிறேன். இவர் நன்றாகத் தூங்கவில்லையோ? அல்லது அதிகாலையில் விழித்து விட்டாரோ? என்னவோ. என் கன்னத்தில் விழுந்திருந்த தலை முடியை விரல்களினால் சுருட்டிக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வு . எனக்குத் தூக்கம் கலையவில்லை. என்னை அறியாமலேயே 'சும்மா இரும் வசந்த்....' என்றவள் , என் குரலே என் காதில் நாராசமாக ஒலிக்கத் திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன். உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல் விறைத்து,  நான் கண்டது கனவா நினைவா என்று தெரியாமல் அலமந்து போனேன். ஏன் அந்தப்  பாவியின் பெயர் ஏன் நாவில்? அதுவும் திருமணமாகி முதல் நாளில்........கண்களைத் திறக்கவே எனக்குப் பயமாகி விட்டது.
'ராஜி' என்று இவர் கூப்பிட வேறு வழியில்லாமல் கண்களை மெதுவாகத் திறக்கிறேன். என் முகத்திற்கு அருகில் குனிந்த அவர் முகத்தில் அதே புன்னகை. எனக்கு ' அப்பாடா' என்று இருந்தது. பாழாப் போன கனவு என்னை இப்படிப் படுத்தி விட்டது என்று ஆசுவாசப்பட்டேன். போன உயிர் திரும்பி வந்த மகிழ்ச்சி எனக்கு .'' ராஜி, எனக்கு அருண் என்ற பெயர் நல்லாப் பிடித்திருக்கிறது. அம்மா ஆசையாய் வைத்தது '' என்று இவர் என் காதில் கிசு கிசுக்கிறார். . அப்படியே தூக்கி வாரிப் போட்டது.. அவர் முகத்தைப் பார்க்கும் சக்தியில்லாமல் கைகளால் என் முகத்தை மூடி விம்மத் தொடங்கி விட்டேன். ' அசடு , அசடு ,அழாதே. இங்கே என்னைப் பார்' என்று என்னை ஆசுவாசப் படுத்துகிறார். 'நீயென்ன வேண்டுமென்றா செய்தாய்? உன் வாய் தவறி அவன் பெயர்  வந்ததிற்கு நீ என்ன செய்ய முடியும்.? எல்லாம் என் தப்பு . எனக்குக் கேட்டதாகவே காட்டியிருக்கக் கூடாது' என்று என்னென்னமோ சொல்கிறார். என்னைத் தேற்றி சகல நிலைமைக்கு நான் திரும்ப சில மணி நேரம் எடுத்தது.
ஒன்று மட்டும் எனக்கு நன்றாகப் புரிந்தது. இப்படி மனிதர்கள் உலகில்  மிக அருமையாகத்தான் இருப்பார்கள். அந்த அருமையான பிறவியை , என்  கணவனாக அடைய, நான் முற்பிறப்பில் ஏதோ ஒரு பெரிய தவம் செய்திருக்கிறேன்.




.

21 comments:

புதியவன் said...

பெண்ணின் சின்னச் சின்ன உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்...

கதையின் முடிவும் மிகவும் நெகிழ்வாக இருந்தது
வாழ்த்துக்கள் ஜெஸ்வந்தி...

நட்புடன் ஜமால் said...

நல்ல படம்

நல்ல எழுத்து

அதுக்குள்ளே முடிஞ்சிருச்சி ...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வாழ்த்துக்களுக்கு நன்றி புதியவன். பெண்ணின் உணர்வுகளை ஒரு பெண்ணால் தானே விபரிக்க முடியும்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றி ஜமால் . படம் ரவிவர்மா ஓவியம். அழகாகத்தானே இருக்கும்.
கதை இன்னும் போனால் சுவாரசியம் இல்லாமல் போய் விடும் என்று தோன்றியது

இராயர் said...

நன்றாக உள்ளது !!! ஆனால் சில கேள்வி மட்டும் உங்களிடம்
இது கதைகளில் மட்டும் சாத்தியமா இல்லை நிஜத்தில் சாத்தியமா? இல்லை
இப்போ ஆண்களின் மனோபாவம் மாறிவிட்டதா ,இல்லை இது போன்ற நிலைமையில் பெண்களின் நிலை என்ன ?
ஆண்களுக்கு உங்களிடம் மன்னிப்பு உண்டா?

அன்புடன்
இராயர்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வணக்கம் இராயர்! உங்கள் கருத்திற்கு நன்றி. என் கதை உங்களை மிகத் தீவிரமாக சிந்திக்க வைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் கேள்விகளுக்கு என் பதில்கள் இதோ.....

* // இது கதைகளில் மட்டும் சாத்தியமா..? அல்லது நிஜத்தில் சாத்தியமா..? //

இது சாத்தியம் என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும். ஏனென்றால் இந்தக் கதையில் வரும் பெயர்களைத் தவிர அத்தனை நிகழ்ச்சிகளும்.உணர்ச்சிகளும் உண்மையானவை. எனக்கு இத்தனை கற்பனை வளம் கிடையாது சார்.

* // இப்போ ஆண்களின் மனோபாவம் மாறிவிட்டதா ? //

அருமையான கேள்வி. உங்களால் இதனை நம்ப முடியவில்லை என்பதை இந்தக் கேள்வி சொல்கிறது. இங்கே ஆண்கள் என்று பொதுவாக நாங்கள் கதைக்க முடியாது. அருணும் ஆண்தான் , வசந்தனும் ஆண்தான். அருண் போல் சிலபேர் இருப்பதால்தான் இந்தப் பூமி இன்னும் அழியாமல் இருக்கிறது.

* // இதுபோல நிலைமையில் பெண்களின் நிலை என்ன ?

என் கருத்துக்கள் தனியொரு பெண்ணின் கருத்து. எல்லாருக்கும் பொருந்தாது. காதல் என்பது ஒரு புனிதமான உணர்வு. அதை சிலபேர் கொச்சைப் படுத்தி விடுகிறார்கள். அதனால் காதலிக்க வேண்டாம் என்று சொல்லி விடலாமா ? காதல் எப்போ வரும் எவரிடத்தில் வரும் என்று எவருக்கும் சொல்ல முடியாது. ஒரு நல்லவனைத் தேடிக் காதலிக்க நினைத்தால் அதன் பெயர் ' காதல்' இல்லை.
காதலித்தவன் கைவிட்டு விட்டால் அவன் நினைவில் தன் வாழ்வை அழித்துக் கொள்வது அசட்டுத்தனம். அவன் கொடுத்து வைக்கவில்லை என்று அவன் நினைப்பை துடைத்தெறியப் பழகிக் கொள்ள வேண்டும்.

* ஆண்களுக்கு உங்களிடம் மன்னிப்பு உண்டா ?

இந்தக் கேள்வி எனக்கு உண்மையில் புரியவில்லை. ஆண்கள் என்று நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள். யாரிடம் மன்னிப்பு உண்டா? என்று கேட்கிறீர்கள் ?
வசந்த் போன்றவர்களுக்கு ராஜி போன்றவர்களிடம் மன்னிப்புக் கிடைக்குமா ?என்று கேட்க நினைத்தீர்கள் என்று புரிந்து கொள்கிறேன்.
அவள் அவனைக் காதலித்தது உண்மையானால் நிச்சயம் மன்னிப்புக் கிடைக்கும். என்னைப் பொறுத்தவரை கடவுள் அவனை மன்னிக்க வேண்டும். மனிதரல்ல.

இராயர் said...

மிக்க நன்றிகள். எனக்கு எப்போதும் பெண்கள் மீது ஒரு மதிப்பு உண்டு.
மேலும் இது போன்ற பல உண்மையான / யதார்த்தமான கதைகளை மன்னிக்கவும் நிகழ்கலை பதிவு செய்ய வேண்டுகிறோம்

அன்புடன்
இராயர்

குடந்தை அன்புமணி said...

கதையில் வரும் பெயர்களைத்தவிர அனைத்தும் நிஜமென்று நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் கருத்திற்கு நன்றி அன்புமணி. இதை எழுதியதால் நான் பெற்ற மனச் சாந்தி சொல்லில் வடிக்க முடியாதது.

தேவன் மாயம் said...

' அசடு , அசடு ,அழாதே. இங்கே என்னைப் பார்' என்று என்னை ஆசுவாசப் படுத்துகிறார். 'நீயென்ன வேண்டுமென்றா செய்தாய்? உன் வாய் தவறி அவன் பெயர் வந்ததிற்கு நீ என்ன செய்ய முடியும்.? எல்லாம் என் தப்பு . எனக்குக் கேட்டதாகவே காட்டியிருக்கக் கூடாது' என்று என்னென்னமோ சொல்கிறார்.///

உணர்வுகளைக் கட்டி ஒரு மாலை தொடுத்துள்ளீர்!! இதுக்கு மேல என்ன சொல்ல............

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நண்பர் தேவன்மயம் , உங்கள் முதல் வரவுக்கும் கருத்திற்கும் என் வலையத்தைத் தொடர்வதற்கும் நன்றிகள். நான் இத்தனை பாராட்டுகளை உண்மையில் எதிர்பார்க்கவில்லை.

Kavinaya said...

//' உமது இறந்த காலம் உமக்கு மட்டும் தான் சொந்தம். அதில் நான் பங்கு கேட்கவும் முடியாது. எனக்குப் பிடிக்கவில்லை என்று மாற்றியமைக்கவும் முடியாது. ஆனால் உமது வருங்காலம் உமக்கும் எனக்கும் மட்டும் சொந்தமாக இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன்'.//

இத்தனை தெளிவான சிந்தனையுள்ளவரை அடைந்தது நாயகியின் தவப் பலன் தான். கதை கவிதை போல் இருக்கு. வாழ்த்துகள் ஜெஸ்வந்தி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிநயா

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் வருகைக்கும் செய்திக்கும் நன்றி thamilers.

சுப்புராசு said...
This comment has been removed by a blog administrator.
சுப்புராசு said...

நல்ல பதிவு தோழி

ஆதவா said...

என் தளத்தின் வழியே உங்களை வந்தடைந்தேன்... கதையைப் படித்ததும் அதுவும் நிகழ்கால நடையில் செல்லுவதால் அதனோடே பயணிப்பதாக இருந்தது.. முடிவு அவ்வளவு சிறப்பில்லை என்றாலும், கடந்த காலம் குறித்து கணவன் சொல்லுவது ரொம்ப பிடித்திருந்தது. இனி வரும் காலம் அவர்களிருவரும் முடிவெடுத்ததாக இருக்கவேண்டும்...

நீங்கள் இப்பொழுதுதான் வலைப்பக்கம் வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது.

tamilmanam.net மற்றும் tamilish.com ஓட்டு பெட்டிகளை வாங்கி உங்கள் தளத்தில் சேர்த்துவிடுங்கள். நிறைய வாசகர்களை உங்கள் தளத்தில் படிக்க வைக்கலாம்!!!!

ஆதவா said...

ரவிவர்மாவின் அந்த ஓவியம் இக்கதைக்குப் பொருத்தமானதாக இல்லை!!!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ஆதவா , என் வலையத்தைத் தொடர்வதற்கும் உங்கள் உண்மையான கருத்துகளுக்கும் அறிவுரைகளுக்கும் என் நன்றிகள்.
நான் இந்த வலயத்திற்கு புதிது. இப்படியான கருத்துக்கள் என் எழுத்தை முன்னேற்ற உதவி செய்யும்.
என் கதையின் முடிவு உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பது தெரிகிறது. அவர்கள் தங்கள் வருங்காலத்தை எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்பதை நான் சொல்லவில்லை என்று நினைக்கிறீர்கள். ஆனால் இப்படி முற்போக்குள்ள ஒரு கணவனை அடைந்தது தன் பூர்வ ஜென்மப் பலன் என்று அவள் நினைக்கும் போது
அவள் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும் என்பது கதையின் முடிவில் தொக்கி நிற்பதாக நினைத்தேன்.
ரவி வர்மா படத்தில் தாஜ் மஹால் இருப்பது கதைக்குப் பொருந்தவில்லை என்று சொல்கிறீர்களா? ஒரு ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் ஒரு பெண்ணின் ஓவியமும் அவள் மறக்கத் துடிக்கும் காதல் நினைவுகளும் இந்தப் படத்தில் தெரிகிறது என்று நினைத்தேன். நீங்கள் பிறிதொரு கோணத்தில் பார்த்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. இப்படிக் கருத்துகள் விலை மதிப்பற்றவை. நன்றி ஆதவா.

Unknown said...

என்ன இந்த அருண், அநியாயத்துக்கு நல்லவனா இருக்கிறான். ம்ஹ்ம் நான் நம்ப மாட்டன், எந்த ஒரு யாழ்ப்பாண ஆம்பிளைக்கு இவ்வளளவு பெருந் தன்மை இருக்கும். வழிகாட்டி, போற்றப்படவேண்டியவர்.

என்னதான் செய்தாலும் உங்களுக்கு அசாத்திய துணிச்சல், எனக்கெல்லாம் இவ்வளவு துணிச்சல் இல்லை தாயே. இது கற்பனை அல்ல உங்கள் அனுபவம் எண்டு குண்டையே தூக்கி போட்டுவிடட்டீர்கள், அடேங்கப்பா !!!!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் கருத்துக்கு நன்றி இரத்தினத்தார். பலருக்கும் இந்தக் கதையை நம்ப முடியாமல் இருக்கும். அதனால் தான் இது உண்மைக்கு கதை என்பதை வலியுறுத்த வேண்டியிருந்தது. அது போக உண்மையைச் சொல்ல பயம் எதற்கு ?