நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Saturday 16 May 2009

என்ன தவம் செய்தேன்? பகுதி 1

அன்று எனது திருமணம். நள்ளிரவு வரை கொண்டாட்டம் முடியவில்லை .
நண்பர்கள் உறவினர் சேர்ந்து அரட்டை அடித்ததில், நேரம் போனதே தெரியவில்லை. நான் எப்போதும் இப்படி களைத்துப் போனது கிடையாது. யாரோ அடித்துப் போட்டதுபோல் உணர்வு . இன்னும் கொஞ்சம் நேரம் போனால் மயங்கி விடுவேனோ என்ற பயம் எனக்கு .போதாக் குறைக்கு என் புதுச் செருப்பு என் காலைப் பதம் பார்த்து  புண்ணாகி விட்டிருந்தது. என் கணவரைப் பார்க்கிறேன். நான் ஒரு வார்த்தை தன்னும் சொல்லாமல் இருந்த போதும், அப்பிடியே என் மனதைப் படம் பிடித்தவர் போல் ‘நன்றாகக் களைத்துப் போனீர் ‘என்கிறார்.ஒருபடியாக எல்லாம் ஓய்ந்து போய் எங்களுக்கு ஒதுக்கப்பட அறைக்குள் வந்தபோது எனக்கு போதும் போதும் என்றாகி விட்டது..

என் கணவர் ‘முழு நாளையும் வேஸ்ட் ஆக்கிவிட்டார்கள் ‘என்று சொல்லிச் சிரிக்கிறார்.அந்தக் கள்ளம் கபடமில்லாத சிரிப்பு என் களைப்பை விரட்டியடித்தது. அப்படியே அவர் மார்பில் சாய்கிறேன், இறுகக் கட்டி அணைக்கிறார். ‘ பூர்வ ஜென்ம சொந்தம்’ என்று சொல்வார்களே! அதை அப்போ நான் உணர்ந்தேன் .அந்த அணைப்பில் காமம் இல்லை. ஒரு அமைதி, சாந்தம் இருந்தது. அவரது முதல் அணைப்பை, அந்தக் கணத்தை.....அப்படியே அடி மனதில் தங்க வைத்துக் காலால காலமும் காக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவர் ஏதோ சொல்ல முயன்றபோது வேண்டாம் என்பதுபோல் அவர் வாயை என் விரல்களால் மூடுகிறேன். இது மனங்கள் சங்கமிக்கும் நேரம். வார்த்தைகள் இங்கு தேவையில்லை என்று தோன்றுகிறது.
இத்தனைக்கும் இவரை நான் கல்யாணத்திற்கு முன்பு மூன்று தடவை தான் சந்தித்திருக்கிறேன். முதல்முறை அவர் குடும்பத்தோடு என்னை முறைப்படி பெண் பார்க்க வந்தபோது …... அவரது ஆழமான கண்கள் அப்படியே என் கண்களுக்குள் புகுந்து மனதைத் தொட்ட உணர்வு. அவருக்கு என்னை பல  வருடங்களுக்கு முன்னரே  தெரியுமாம் .அவர் தங்கை படித்த அதே ஸ்கூலில் என்னை அவர் பலமுறை பார்த்தாராம் .எனக்கு இவரைக் கண்ட நினைவில்லை . ஒரு வேளை இந்த இடைக்காலத்தில் இவர் முகம் நன்றாக மாறிப் போய் இருக்கின்றதோ ? முறைக்காக எல்லார் முன்னாலும் என்னிடம் ஏதோ கேட்டார் .நானும் பதில் சொன்னேன். என்ன கேட்டார் என்றே எனக்கு நினைவில்லை . அவரது ஊடுருவும் கண்கள் தான் நினைவில் நின்றது. மிக நெருங்கி வந்த ஒரு உணர்வு  எனக்கு. இப்படி முதல் பார்வையிலேயே யாரையும் எனக்குப் பிடித்தது கிடையாது .எனக்கே என் உணர்ச்சிகளை நம்ப முடியாதது போல் இருந்தது.

தனியக் கதைக்க வேண்டுமென்றால் அவர் என்னுடன் கதைக்கலாம் என என் அப்பா சொல்கிறார். இவர் அவசரப்பட்டு ' தேவையில்லை,எனக்கு அவவைப் பிடித்திருக்கிறது .உங்கள் முடிவைச் சொல்லி அனுப்புங்கள் ' என்கிறார். இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதரா? என வியந்து ஆச்சரியத்தோடு இவரைப் பார்க்கிறேன். இவரது தாயார் அதனைக் கவனித்துவிட்டு 'ராஜி ஏதோ கதைக்க விரும்புகிறா போல ' என்று சொல்கிறா .'நோ,நோ 'என்று நான் என்னைச் சுதாகரித்துக் கொள்கிறேன்.  உண்மையில் அவருடன் கதைக்கும் வாய்ப்புக்காக நான் எதிர்பார்த்திருந்தேன். அவர் தலையில் என் இறந்த காலச் சுமையை இறக்கி வைத்து அதன் பின்னரும் என்னைக் கட்டிக்கொள்ள சம்மதமா எனக் கேட்க நான் தவித்துக் கொண்டிருந்தேன். அதற்கு சந்தர்ப்பமே கிடயாததால் குழம்பிப்போய் ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் நிலத்தைப் பார்த்த வண்ணம் இருந்தேன்.

அவர்கள் விடைபெற்றுப் போனபோது ஓடிப்போய் என் அறைக்குள் புகுந்து கதவை இறுகச் சாத்திக் கொள்கிறேன். அம்மாவின் ஆதங்கம் அவள் என்னை அழைத்த விதத்தில் தெரிந்தது. அப்பா சைகையால் ஏதோ சொல்லி இருப்பார் என நினைக்கிறேன். யாரும் அதன்பின் என்னை தொந்தரவு செய்யவில்லை. இரண்டு நாள் இரவும் பகலும் யோசனை செய்து, என் நெருங்கிய நண்பியுடன் கலந்தாலோசித்து , அவரைத் தொலைபேசியில் அழைக்க முடிவு செய்தேன். என் குரலிலைக் கேட்டு அப்படியே அதிர்ந்து விட்டார் என்று நினைக்கிறேன். பதில் வர சில வினாடிகள் எடுத்தது. 'உங்களை நான் சந்திக்க வேண்டும்’ என்று சுருக்கமாகச் சொன்னேன். ‘இப்பவே ரெடி’ என்கிறார். வேலை முடிய அருகிலுள்ள ஐஸ் கிரீம் பார்லர் ஒன்றில் சந்திக்க முடிவு செய்கிறோம். என் நெஞ்சு பட படவென அடிக்க ஆரம்பித்து விட்டது. மிகத் துணிவாக அவரைக் கூப்பிட்டு விட்டேன். என்ன சொல்லப் போகிறேன்? எப்படிச் சொல்லப் போகிறேன்? இவர் அதனை எப்படி எடுக்கப் போகிறார்?  எனக்கு அன்று முழுவதும் வேலையில் கவனம் செல்லவில்லை. தலையில் ஒரு பாராங்கல்லைச் சுமந்து கொண்டு திரிந்ததைப்போல் ஒரே தலை வலி.

விரைவில் தொடரும் ...............

16 comments:

இராயர் said...

நடை நன்றாக இருக்கிறது .வாழ்த்துக்கள். உங்கள் அடுத்த தொடருக்கு காத்திருக்கும்

அன்புடன்

இராயர்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் முதல் வருகைக்கு நன்றி. மிகுதி விரைவில் தொடரும்...

குடந்தை அன்புமணி said...

சரளமான நடையில் படிக்கத்தூண்டும் வகையில் அற்புதமாக இருக்கிறது. அடுத்து என்ன நடந்தது... பதிவிற்காக காத்திருக்கிறேன். வலையுலகிற்கு தங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நன்றி அன்புமணி. தொடர்ந்தது உங்கள் கருத்தைத் தாருங்கள்.

நட்புடன் ஜமால் said...

நன்றாக எழுதியுள்ளீர்கள்.

சரியானவிடத்தில் ‘தொடரும்’

அடுத்த பகுதிக்காக காத்திருக்கின்றோம் ...

सुREஷ் कुMAர் said...

//
அவர் தலையில் என் இறந்த காலச் சுமையை இறக்கி வைத்து அதன் பின்னரும் என்னைக் கட்டிக்கொள்ள சம்மதமா எனக் கேட்க நான் தவித்துக் கொண்டிருந்தேன்.
//
அப்படி என்னப்பா சுமை அது..?
சீக்கிரம் சொல்லுங்கோ..

सुREஷ் कुMAர் said...

//
விரைவில் தொடரும் ...............
//

நாங்க இங்க வேய்ட்டிங் பார் யூவர் அடுத்த பதிவு..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றி ஜமால் . சரியான இடத்தில் தான் தொடரும் போட்டிருக்கிறேன் என்று தெரிகிறது. என் வலையத்தைத் தொடர்வதற்கு நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

பொறுமை வேண்டும் சுரேஷ் குமார். நான் எழுதி முடிக்க சில நாள் ரைம் கொடுங்க சார்.

புதியவன் said...

அழகிய நடையில் கதை செல்கிறது தொடருங்கள் ஜெஸ்வந்தி கதையின் அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம்...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் கருத்திற்கு நன்றி புதியவன். அவை நிறைய எழுத வேண்டும் என்ற ஊக்கத்தைத் தருகிறது.

Kavinaya said...

உங்க நடை அழகாய் இருக்கு. உங்க பெயரும் :)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றி கவிநயா, எனக்குப் பிடித்தவை எல்லாம் உங்களுக்கும் பிடித்திருக்கிறது.
மகிழ்ச்சி.

Kavinaya said...

ஜெஸ்வந்தி, இங்கே உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கு! :)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

என்னை அதிர்ச்சி அடைய வைத்து விட்டீர்கள் கவிநயா. என் மனமார்ந்த நன்றிகள்

Unknown said...

என் எழுத்துலகத்து வழிகாட்டியே!!! என்ன ஒரு எழுத்து நடை, சிலவார்த்தைகளில் பல உணர்த்தும் சொற்கள், யாழ்பாணத்து பனங்காய் பணியாரத்தை சாப்பிட தொடங்க இனிப்பும், கடைசியில் சிறிது கயர்ப்பாக இருக்குமே ,(கசப்பாக இல்லை ) இவ்வளவும் இனித்தது, நீங்கள் விட்ட இடத்தை பார்க்கும் போது கயர்ப்பாக இருக்குமோ என்று எண்ண தோன்றுகின்றது, மற்றவர்களுடன் நானும் காத்திருப்பேன்