நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Friday, 13 May 2011

அப்பாவைப் பார்த்தேன்


இரவு முழுதும் என்னால் கண்ணயர முடியவில்லை.புரண்டு புரண்டு படுப்பதும் எழுந்து தண்ணீர் குடிப்பதுமாயிருந்தேன். அம்மா இரவு வெகு நேரம் ஜெபித்த படியிருந்தாள். எப்போ வந்து படுத்தாள் என்று தெரியவில்லை. அவளும் புரண்டு கொண்டு தான் இருக்கிறாள் என்று தெரிந்தது. விடிந்தால் அப்பா எங்களையும் இந்த உலகையும் விட்டுப் போய் சரியாக ஒரு வருஷம்.

மனம் பின்னோக்கித் தாவியோடி அன்று நடந்த விடயங்களை அசை போடுகிறது.அன்று வழமைபோல் குளித்து விட்டு பள்ளிக்கூடம் போக ஆயத்தப் படுத்துகிறேன். அதற்கு முந்தின இரவு அப்பாவின் நண்பர் வீட்டில் ஒரு கொண்டாட்டம். அம்மாவுக்கு இடைக்கிடை வந்து சேரும் பயங்கரத் தலை வலியினால் அவள் போக முடியவில்லை. அப்பா குணம் தெரிந்ததால் அவள் போகாத இடங்களுக்கு நான் எப்பவுமே அப்பாவுடன் போவதில்லை. அங்கே அளவுக் கதிகமாகக் குடித்து விட்டு நள்ளிரவில் தான் வீடு திரும்பினார்.

விடிய ,அம்மா வேலைக்குப் போகத் தயாரான பின்பும் அப்பா எழுந்திருக்காததால் அவரை எழுப்பினாள். அதற்கு சத்தம் போட்டார். '' நான் இண்டைக்கு வேலைக்கு லீவு .நீங்க வீட்டைப் பூட்டிக் கொண்டு போங்கோ '' என்று அவர் குளறிய படி சொன்னது கேட்டதும், ''சரிதான் , இந்த நிலைமையில் இவர் வேலைக்கு எங்கே போவது?'' என்று நினைத்துக் கொண்டேன்.இந்த விஷயம் எங்களுக்குப் புதிசில்லை. அடிக்கடி அப்பா பண்ணும் கூத்திது. சில சமயம் இவர் அடுத்த நாள் போய் எப்படித் தான் வேலை செய்வாரோ ? என்று நினைத்துக் கொள்வேன்.

அப்பா ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்தார். அதனால் பலரையும் பின்னேரங்களில் சந்திக்க வேண்டியிருப்பதால் இரவில் பிந்தித் தான் வீடு வருவார்.அனேகமாய் அப்போ நான் படுக்கப் போகும் நேரமாயிருக்கும். சனி .ஞாயிறு கூட அவருக்கு வேலை என்று சொல்லிக் கொண்டு வெளிக்கிடுவார் . வீட்டில் நிற்க மாட்டார். ஆனால் வரும் போது அளவுக் கதிகமாகக் குடித்து விட்டு தள்ளாடிய படியே வந்து சேருவார். அம்மா '' சாப்பிட்டிங்களா?'' என்று கேட்டாலே அது சண்டை யாகிவிடும். அம்மாவுக்கு இவரைத் திருத்த ஏலாது என்று தெரிந்ததோ ! அல்லது இவர் கூத்துப் பழகிப் போனதோ ! என்னவோ தெரியவில்லை.சாப்பாட்டை மேசையில் மூடி வைத்து விட்டு என் கட்டிலுக்கருகில் பாயைப் போட்டுப் படுத்திடுவாள்.ஆனால் அப்பா வீடு வந்து சேர்ந்து கதவு திறக்கும் சத்தம் கேட்ட பின்னர் தான் நான் நித்திரை கொள்ளுவேன்.அதுவரை அம்மாவைப் போலவே நானும் கண்ணை மூடிக் கொண்டு நித்திரை போல பாவனை செய்து கொண்டு இருப்பேன்.

நானும் அம்மாவும் காலமையில் ஒன்றாகத்தான் நடந்து போவோம். அவளது அலுவலகம் எங்கள் பள்ளிக் கூடத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் தான் இருந்தது .அன்று எங்கள் விளையாட்டுப் போட்டியிருந்ததால் .அரை நாள் லீவு எடுத்துக் கொண்டு அம்மா பள்ளிக் கூட மைதானத்துக்கு கட்டாயம் வருவதாகச் சொல்லுறாள் . நான் அப்பாவிடம் '' நீங்களும் இந்த முறை விளையாட்டுப் போட்டிக்கு வாங்கப்பா'' என்று வெள்ளிக் கிழமை சொன்ன போது '' இந்த முறை கட்டாயம் வாறன் ராசா.'' என்று தான் சொன்னார். ஆனால் காலமை அவர் அம்மாவிடம் போட்ட சத்தத்தில் இதைப் பற்றி நினைப்பூட்ட எண்ணிய ஆசை இடந் தெரியாமல் பறந்து போய் விட்டது.

பக்கத்து வீட்டு சிவாவின் அம்மாவும் அப்பாவும் எந்த விளையாடுப் போட்டியையும் தவற விட மாட்டார்கள். அவன் ஓட்டப் பந்தயத்தில் மூன்றாவது இடத்தில் வந்ததுக்கு, அவர்களின் கை தட்டலையும் பூரிப்பையும் பார்க்க எனக்குக் கொஞ்சம் பொறாமையாய் இருந்தது. அதைக் கண்டு கொண்டதுபோல, எனது முதல் பரிசுக் கோப்பையை நான் கொண்டு வந்தபோது அம்மா என்னைக் கட்டி அணைத்து ''அடுத்த வருஷம் அப்பா கட்டாயம் வருவாரடா '' என்கிறாள். என் மனதை அம்மா அறிந்ததை எண்ணி நானும் சிரிக்கிறேன்.இதை அவள் ஒவ்வொரு வருசமும் தான் சொல்லுறாள்.

எல்லாம் முடிந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருக்கிறோம் .ஜோன்சன் மாமா சைக்கிளில் பறக்க விறைக்க ஓடி வாரார். ''என்னண்ணா?'' என்று அம்மா பதற '' அந்தப் படு பாவி இண்டைக்கு வேலைக்குப் போகாமல் கசிப்பைக் குடித்துப் போட்டு, ரோட்டில் ரத்தம் ரத்தமாய் சத்தி எடுத்திருக்கிறான்..இப்ப தான் கேள்விப் பட்டுக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்திட்டு ஓடி வாறன் '' என்று மூச்சு விடாமல் பொரிந்து தள்ளுகிறார்.எனக்கு சுரீரென்று நெஞ்சை வலிக்கிறது.'' நீ வீட்ட போய் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வாடா .நான் அம்மாவைக் கொண்டு போறேன் '' என்று என்னை விரட்டுகிறார். தலை தெறிக்க வீட்டுக்கு ஓடுகிறேன்.நான் அங்கு போனபோது அவர் அம்மாவுக்கோ எனக்கோ காத்திராமல் போய் விட்டார் என்றார்கள். எல்லாமே ஒரு கனவு போல , கிரகிக்க முன்னமே கன விசயங்கள் கிடு கிடுவென நடந்து போனது போல இருக்கிறது. அழக் கூடத் தெரியாமல் சிலையாகிப் போகிறேன்.

பிறகுதான் தெரிந்தது .அப்பா மட்டுமில்ல, அன்று அவருடன் சேர்ந்து குடித்த பல நண்பர்களும் இதைப் போல சத்தியெடுத்து அபாய நிலையில் ஆஸ்பத்திரியில் இருக்கிறார்களென்று. இது தான் செத்த வீட்டில் பெரிய விடயமாயிருந்தது. '' ராசாத்தி புருஷன் இண்டைக்கு காலையில் போயிற்றானாம் '' ,'' சிவாவுக்கு இன்னும் அறிவு வரவில்லையாம் '' இப்படி ஒரு பக்கம் புதினம் கதைத்தார்கள்.'' கசிப்புக் காச்சிறவன்களை எல்லாம் கூட்டில போடவேணும் '' என்று ஒரு பக்கம் சட்டம் கதைத்தார்கள். ''எல்லாரும் வெளியில போங்கடா '' என்று கத்த வேண்டும் என்ற மாதிரி எனக்குக் ஆவேசம் .கஷ்டப் பட்டு என்னை அடக்கிக் கொள்ளுறேன்.கூட்டத்திலிருந்தவர்கள் ஏதோ விதத்தில் எனக்குச் சொந்தக் காரர்கள்.என்னை விட பல வயது மூத்தவர்கள் .திடீரென அம்மா நினைவு வர அவளைப் பார்க்கிறன். கலைந்த தலையும் ,சிவந்த கண்ணுமாய் சுவரில் சாய்ந்த படி துவண்டு போய்க் கிடக்கிறாள். ஓடிப் போய் தேத்தண்ணி போட்டுக் கொண்டு வந்து ''அம்மா குடிம்மா '' என்கிறேன்.''எண்ட ராசா '' என்று என்னைக் கட்டிக் கதறி என்னை வெடித்து அழ வைக்கிறாள். இனி அவள் தான் எனக்குத் துணை. நான் தான் அவளுக்குத் துணை என்பதை உணர்கிறேன்.

அம்மா இயல்பில் சத்தம் போட்டுக் கதைக்க மாட்டாள்.அப்பா இல்லாத எங்கள் வீட்டில் இந்த வருடம் முழுவதும் மயான அமைதி. ஒரு வருடம் ஒரு யுகமாகப் போய் விட்டது. நாளைக்கு அப்பாவுக்காக செபிக்க கோயிலில் அம்மா பூசைக்கு ஆயத்தம் செய்திருந்தாள். எங்கள் ஊரில் இறந்த ஒரு வருட நினைவு நாளுக்கு வழமையாக உறவுக் காரர்களை அழைத்து ஒரு விருந்து குடுப்பார்கள். அம்மா எந்த ஏற்பாடும் செய்யவில்லை. நான் கேட்டதுக்கு ''ஒன்றும் வேண்டாண்டா. வாற சனம் அவரைப் பற்றி புரணி சொல்லிப் போட்டுத் தான் போகும்.'' என்று சொல்லி பெரு மூச்சு விடுறாள். விடியக் காலமை ஒழும்பி ''ராசா, கெதியா இவ்வளவு சாமானையும் வாங்கிட்டு வாடா '' என்று ஒரு பட்டியலுடன் என்னைச் சந்தைக்கு அனுப்பிறாள்.எதற்கு இத்தனை சமையல் சாமான்கள் இவளுக்கு ? ஒருவரையும் சாப்பாட்டிற்குக் கூப்பிடவில்லையே ? என்று குழம்பிய படியே சொன்னதைச் செய்யிறேன். இரண்டு மணி நேரத்தில் மத்தியானச் சாப்பாடு மணக்க மணக்க சமைத்து விட்டாள். ஆவலை அடக்க முடியாமல் ''என்னம்மா ? என்ன நடக்குது ?எனக்குச் சொல்லன் ?'' என்று கேட்கிறன்.''உனக்குச் சொல்லாமலா ராசா, ஓடிப் போய் கொஞ்சம் வாழையிலை வெட்டிக் கொண்டு வாடா. பாசல் கட்ட வேணும் '' என்கிறாள்.

அவள் சமைத்தது அறுபது பாசலுக்குச் சரியாக இருக்கிறது. ஏற்கனவே அம்மா வரவழைத்த காரில் அந்தோனியார் கோவிலடியில் வந்திறங்கினோம் . அப்போ அம்மாவின் நோக்கம் எனக்குப் புரிந்தது. சாப்பாட்டுக் கூடையைக் கண்டதும் அங்கே பிச்சை எடுக்கும் ஒரு கூட்டம் எங்களை மொய்த்துக் கொள்கிறது. என் கையால் அவர்களுக்குப் பார்சல்களைக் குடுக்கச் சொல்கிறாள். அந்தப் பட்டினியுடன் இருந்த பலருக்கு சாப்பாடு குடுத்த போது இருந்த சந்தோசம் எனக்கு வாழ்க்கையில் அதுவரை எப்போதுமே இருக்கவில்லை.
எல்லோருக்கும் குடுத்த பின்னர் என் கையில் ஒரு பார்சல் மட்டும் மிஞ்சியது.
''அம்மா, நீ இங்கேயே இரு. இதை யாருக்கும் குடுத்திட்டு வாறன் '' என்றவன் கோயிலின் மற்றப் பக்கம் போறன். அப்போ தள்ளாடியபடி வந்த அந்த மனிதரைக் கண்டு அதிர்ந்து போனேன். தூரத்தில் அவர் அப்படியே என் அப்பா போலவே இருந்தார்.ஏதோ ஒரு ஈர்ப்பில் அவரை நோக்கியோடினேன்.என்னைப் பார்த்த அவர் '' சரியான பசி ராசா, அதை எனக்கா கொண்டு வந்தாய் ?'' என்று கையை நீட்டுறார். குரல் கூட அவரது அதே கரகரத்த குரல் . எதுவும் சொல்ல முடியாமல் அதிர்ந்து போய் சாப்பாட்டை அவர் கையில் குடுத்திட்டு அம்மாவைக் கூட்டி வந்து அவரைக் காட்ட நினைத்து திரும்பித் திரும்பி அவரைப் பார்த்த படி ஓடுறேன். '' அம்மா ,அப்பாம்மா ....'' என்றவன் திக்கித் திணற ,அம்மா பயந்தே போனாள். '' என்னடா ஆச்சு ?'' அவள் கேள்வி கேட்க, பதில் சொல்லாமல் அவளை இழுத்துக் கொண்டு அங்கே போகிறேன். அந்தப் பக்கம் யாருமில்லை. பல முறை அந்தக் கோயிலைச் சுற்றிச் சுற்றி ஓடிப் பார்த்தேன். ஊஹும் ..அவர் என் கண்ணில் படவேயில்லை.
என் கண்ணில் கண்ணீர் மட்டும் தான் தேங்கி நிற்கிறது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பின் நண்பர்களுக்கு!
நீண்ட கால இடை வேளையின் பின்பு இப்போ தான் வலையத்தில் எழுத சந்தர்ப்பமும் கிடைத்தது.
எழுதாவிட்டாலும் உங்கள் எழுத்துகளைப் படிக்க நான் தவறவில்லை. என்னை வலிந்து எழுத அழைத்த அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
ஜெஸ்வந்தி


49 comments:

Chitra said...

emotional ...... ரொம்ப அருமையாக எழுதி இருக்கீங்க.... அடிக்கடி எழுதுங்க.

...welcome back!

ஹேமா said...

ஜெஸி...மனதை நிறைவாக்குகிறது கதை.நினைவு நாளை எப்படி நினைக்கவேண்டும் என்று நாசூக்காகச் சொன்ன விதமும் மகிழ்ச்சி !

நிரூபன் said...

அப்பாவைப் பார்த்தேன் அருமையான ஒரு சிறுகதையாகவும், அதிகமாக குடிப்பதால் ஏற்படும் விளைவுகளைச் சொல்லும் விழிப்புணர்வு பதிவாகவும் இங்கே வந்திருக்கிறது.

யாதவன் said...

பட்டினியுடன் இருந்த பலருக்கு சாப்பாடு குடுத்த போது இருந்த சந்தோசம் எனக்கு வாழ்க்கையில் அதுவரை எப்போதுமே இருக்கவில்லை.

நெஞ்சை தொடுகிறது கதை

யாதவன் said...

நீண்ட நாள் காணவே இல்லை
தொடர்ந்து எழுதுங்கள்

யாதவன் said...

கடைசியில் அப்பமாதிரியே இருக்கு என்று வியந்தது
அவர் கடைசியில் காணமல் போனது
இவாறு பல பேருக்கு நடப்பது உண்டு

குடந்தை அன்புமணி said...

மனதை என்னவோ செய்கிறது தோழி...

ஜிஜி said...

Very touching...

Shan Nalliah / GANDHIYIST said...

GREAT STORY..UNFORGETTABLE EXPERIENCE..!!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Somehow my story was deleted and I re entered it.

நட்புடன் ஜமால் said...

If this is just a story

then

a nice narration ...

கலா said...

ஜெஸி,நலமா?
சோகமான சுமை மனதை பிசைகிறது
ஜெஸி.
பலர் வாழ்கையில் இந்தப் பாழப்போன
குடிப்பழக்கத்தினால்...அனைத்துமே குலைந்துவிடுகிறது
சொல்லியும் கேட்கவா ! போகிறார்கள்?

ராமலக்ஷ்மி said...

அருமையான நடையில் மிக நெகிழ்வான கதை ஜெஸ்வந்தி.

அன்புடன் அருணா said...

அருமையாச் சொல்லிருக்கீங்க ஜெஸ்வந்தி!

ஹுஸைனம்மா said...

நிஜம் போலவே சொல்லப்பட்டிருக்கிறது. அம்மா, வருஷ நினைவு நாளில், தைரியமாக வழக்கத்தை மாற்றிச் செய்தது நல்ல செயல்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

எனது கதை காணாமல் போனதைவிட உங்கள் பலரது கருத்துகள் காணாமல் போனது தான் எனது பெரும் கவலை.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

@நட்புடன் ஜமால்
---------------
கருத்துக்கும் செய்யும் உதவிகளுக்கும் மிக்க நன்றி ஜமால்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

@கலா
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி கலா.சுகமாய் இருக்கிறேன்.
எழுத முன் போல் நேரம் கிடைப்பது தான் குறைவு.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

@ ராமலக்ஷ்மி
தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கு நன்றி தோழி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

@அன்புடன் அருணா
கதை படித்ததுக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி அருணா.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

@ ஹுஸைனம்மா
வாங்க ஹுஸைனம்மா .எனது கருத்தை வரவேற்றதற்கு மிக்க நன்றி தோழி.

பா.ராஜாராம் said...

அபாரம் ஜெஸ்!!!

கலக்கியிருக்கீங்க.

ரொம்ப நாளுக்கு அப்புறம் கண்கள் கலங்கி வாசித்த ஒரு எழுத்து. ஜெஸ், இதை சின்னச் சின்ன பாராவா பிரிச்சுப் பதிக்கணும். அப்போ வாசிப்பவர்களை சீக்கிரம் ரீச் ஆகும்.

தொடர்ந்து எழுதுங்க மக்கா. :-)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Chitra said...emotional ...... ரொம்ப அருமையாக எழுதி இருக்கீங்க.... அடிக்கடி எழுதுங்க //

நன்றி சித்ரா.நீங்கள் போட்ட கருத்து காணாமல் போய் இப்போ திரும்பக் கிடைத்திருக்கிறது. முதல் வரவுக்கும் அன்புக்கும் நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஹேமா said...

ஜெஸி...மனதை நிறைவாக்குகிறது கதை.நினைவு நாளை எப்படி நினைக்கவேண்டும் என்று நாசூக்காகச் சொன்ன விதமும் மகிழ்ச்சி ! //

வாங்க ஹேமா. உங்கள் கருத்தும் என் மனதை நிறைத்து விட்டது. நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நிரூபன் said...
அப்பாவைப் பார்த்தேன் அருமையான ஒரு சிறுகதையாகவும், அதிகமாக குடிப்பதால் ஏற்படும் விளைவுகளைச் சொல்லும் விழிப்புணர்வு பதிவாகவும் இங்கே வந்திருக்கிறது.//

உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் என் நன்றியும் அன்பும் நிரூபன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

// யாதவன் said...

/நெஞ்சை தொடுகிறது கதை/

/நீண்ட நாள் காணவே இல்லை
தொடர்ந்து எழுதுங்கள்//
வரவுக்கும் உங்கள் கருத்துக்கும் தொடர்ந்து எழுத அழைத்ததுக்கும் நன்றி யாதவன்.உங்கள் கருத்தும் மனதைத் தொடுகிறது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

// குடந்தை அன்புமணி said...
மனதை என்னவோ செய்கிறது தோழி...//
கருத்துக்கு நன்றி அன்பு மணி .

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஜிஜி said...

Very touching...//

Thanks ஜிஜி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Shan Nalliah / GANDHIYIST said

GREAT STORY..UNFORGETTABLE EXPERIENCE..!!!//
Thanks for your comment Shan.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

// .பா.ராஜாராம் said...

அபாரம் ஜெஸ்!!! கலக்கியிருக்கீங்க. ரொம்ப நாளுக்கு அப்புறம் கண்கள் கலங்கி வாசித்த ஒரு எழுத்து. ஜெஸ், இதை சின்னச் சின்ன பாராவா பிரிச்சுப் பதிக்கணும். அப்போ வாசிப்பவர்களை சீக்கிரம் ரீச் ஆகும்.
தொடர்ந்து எழுதுங்க மக்கா. :-)//

வாங்க ராஜாராம் . உங்கள் பாராட்டுகள் தரும் ஊக்கம் தான் எழுதத் தூண்டுகிறது. சொன்னது போல் பாரா சின்னதாகப் பிரித்துப் போட்டிருக்கிறேன். மிக்க நன்றி.

வலிபோக்கன் said...

கதையில் அப்பாவை பார்த்தீர்கள்.நிஜத்தில் நினைவு தெரிந்த காலத்திலிருந்து அப்பாவை பார்ரததில்லை.போட்டோவும்இலலை்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//வலிபோக்கன் said...
கதையில் அப்பாவை பார்த்தீர்கள்.நிஜத்தில் நினைவு தெரிந்த காலத்திலிருந்து அப்பாவை பார்ரததில்லை.போட்டோவும்இலலை்//
உங்கள் வார்த்தைகளில் தெறிக்கும் விரக்தியும் சோகமும் மனதை என்னவோ செய்கிறது வலிப்போக்கன்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

மிக அருமையாக மனதைத் தொடும்படி எழுதியிருக்கிறீர்கள்.
படிப்பினை ஊட்டும் நல்ல பதிவு.

குணசேகரன்... said...

இத்தனை நாளா உங்க பதிவு அறிமுகம் ஆகல. இன்றுதான் பார்த்தேன்.படித்தேன்.உணர்வுகளை ஏற்றுக் கொண்டேன்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Dr.எம்.கே.முருகானந்தன் said...
மிக அருமையாக மனதைத் தொடும்படி எழுதியிருக்கிறீர்கள்.
படிப்பினை ஊட்டும் நல்ல பதிவு.//

வாங்க டாக்டர் . உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//குணசேகரன்... said...
இத்தனை நாளா உங்க பதிவு அறிமுகம் ஆகல. இன்றுதான் பார்த்தேன்.படித்தேன்.உணர்வுகளை ஏற்றுக் கொண்டேன்//

உங்கள் முதல் வரவுக்கும், அறிமுகத்துக்கும் கருத்துக்கும் நன்றி குணசேகரன். தொடர்ந்து வருகை தருவீர்கள் என்று நம்புகிறேன்.

மாய உலகம் said...

படித்தேன் ரசித்தேன்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மனதை தொட்ட கதை.. அருமை ஜெசி

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றி மாய உலகம்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கருத்துக்கு நன்றி தேனம்மை.

Subi said...

அருமையான பகிர்வு. எங்கள் தமிழில் வாசிக்க நன்றாகக இருக்கிறது. இல்லாதவனுக்கு கொடுப்பதே சிறந்த நினைவு தினம்.Keep up the good work. I like this.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கருத்துக்கும் தரும் ஊக்கத்துக்கும் நன்றி சுபி.

விமலன் said...

கதையை படித்த சில நிமிடங்கள் மனம் உறைந்து போனது.

கவிப்ரியன் said...

Intresting Bolg!

krishy said...

அருமையான பதிவு

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ் போஸ்ட்

To get vote button


தமிழ் போஸ்ட் Vote Button

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

நன்றி
தமிழ் போஸ்ட்

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நெகிழ வைக்கிறது.
நன்றி.

Anonymous said...

Very gоod post! We are lіnκing to
thіs great content on our ѕitе.
Keep up thе good writing.

Feel free to suгf to my homeρagе ..
. http://www.hcg-injections.com

Anonymous said...

Aw, thiѕ was an іnсredibly nіce post.
Taking thе time and aсtual effort tо produce
a reаlly goоd aгticle… but what cаn
I sаy… I put things off a lоt and ԁon't seem to get anything done.

Visit my site - weight loss meal plan

Rayar said...

amma avargalukku
anbudan Rayar

we are waiting since 2 years
please update about yourself