நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Tuesday 31 August 2010

இனியதொரு பயணம்-- 4

அன்று முழுவதும் தலை நகரின் பல வீதிகளைக் கால் நடையில் சுற்றிப் பார்த்ததில் எல்லோரும் நன்றாகக் களைத்து விட்டோம். அதனால் இத்துடன் போதும் என்று பல இடங்களைப் பார்க்காமலே திரும்பியதில் மிகவும் கவலை.
அடுத்த நாள் காலை நாங்கள் மோல்டாவுக்கும் கோசொவிர்க்கும் இடையில் இருக்கும் சிறிய கொமினோ தீவுக்குப் படகில் பயணம் செய்யத் தீர்மானித்திருந்தோம். அந்தத் தீவின் மொத்தப் பரப்பு 1. 35 சதுர மைல்கல் தான். அங்குள்ள நிரந்தர வாசிகள் நான்கு பேர் தானாம் . ஒரு போலிஸ் காரரும் , ஒரு பாதிரியாரும் தங்கள் சேவையை வழங்குவதற்காக உல்லாசப் பயணிகள் வரும் அந்த ஆறு மாதங்களில் மட்டும், கோசோ தீவிலிருந்து தினம் பயணிக்கிறார்களாம். அங்குள்ள ப்ளு லகுன் (Blue Lagoon) என்னும் கடற்கரை மிகவும் பிரசித்தமானது. பல குடாக்களிளிருந்து கொமிநோவிற்கு படகுகள் செல்கின்றன. எங்கள் ஹோட்டல் மேனேஜர் , அங்கே கூட்டம் சேர்வதற்கு முன்னர் போய் சேர்வதற்கு ஒரு டிப்ஸ் தந்தார். உல்லாசப்


பயணிகள் சுமார் 100 பேரை ஏற்றக் கூடிய பெரிய கப்பல்களில் பயணிப்பதாகவும்,அவை குறித்த நேரத்தில் மட்டும் புறப்படும் என்றும் ,அதனால் அதற்கு முன்பாக சிறிய நீர் படகுகளில் ( வாட்டர் டாக்ஸி ) சென்றால் வசதியாக இடம் பிடிக்கலாம் என்றும் சொன்னார். அதிலிருந்து அங்கே உல்லாசப் பயணிகள் குவியப் போகிறார்கள் என்பதை ஊகித்துக் கொண்டோம்.


அவரது அறிவுரை வீண் போகவில்லை. நாங்கள் அங்கே சேர்ந்தபோது ஒரு சிலரே அங்கிருந்தார்கள். சுமார் இருபது நிமிடப் பயணம் தான். அங்கிருந்து கோசோ கரையையும் பார்க்க முடிந்தது. கடற்கரை தெரியாத படி சாய்வு நாற்காலியைப் பரப்பி விட்டிருந்தார்கள். ஒரு ஆசனத்துக்கு பத்து ஈரோ என்றபடி அறவிட்டுக் கொண்டிருந்தார்கள். அருகிலிருந்த ஒரு மலை உச்சியில் ஒருவர் கடை போட்டிருந்தார். சுடச் சுட உணவு தயாரித்துக் கொண்டிருந்தார். இந்தப் பணத்தில் தான் அவர்கள் அந்தத் தீவில் வருடம் முழுக்க இருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டோம். கீழே வரும் படங்கள் உங்களை அங்கே நேரை அழைத்துச் செல்லும் என்று நினைக்கிறேன்.






காலை பத்து மணியளவில் ,கடற்கரை நிறைந்து விட்டது என்று சொல்லலாம்.எல்லா ஆசனங்களும் போய் பலர் கொதிக்கும் பாறைகளில் தங்கள் உடையைப் போட்டு அதன் மேல் படுத்திருந்தார்கள். கடலை ஒட்டி இருந்த பாறைத் தொடர்களும் அவை இயற்கையாகவே அமைத்துத் தந்த குடாக்களும்,நீல நிற நீரும், பொன்னிற நுண்ணிய மணலும் தாங்கள் தான் இந்தப் பிரதேசத்தின் பிரசித்தத்துக்குக் காரணம் என்று ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருந்தன.


நேரம் போனது தெரியாமல் போனது. அவர்கள் தாயரித்த உணவும் அற்புதம். நான்கு மணிபோல் தீவைச் சுற்றிக் காண்பித்து பின்னர் எங்களை மொல்டாவுக்குக் கொண்டு செல்லும் ஒரு வாட்டர் டாக்சியில் ஏறினோம். அது விரைந்து போனபோது தெளித்த நீர் எங்களை நனைத்தது. கடலின் நடுவில் ஆங்காங்கே தெரியும் பாறைகளும், அவற்றில் காணப் படும் குகைகளும் ஏராளம். ஒவ்வொரு குகை முன்னும் படகுகளை சில நிமிடம் நிறுத்தி படமெடுக்க உதவினார்கள்.






மேலுள்ள குகை வழியாக படகைச் செலுத்தி மெய் சிலிர்க்க வைத்தார்கள்.




நான் எழுதியதை விட படங்கள் உங்களுக்கு கதை சொல்லியிருக்கும் என்று நம்புகிறேன். உண்மையைச் சொன்னால் என் வாழ்வில் இந்த அனுபவத்தை மறக்க முடியாது.
(தொடரும் )

.

Wednesday 25 August 2010

இனியதொரு பயணம் 3

அந்த உணவகத்தில் வேலை செய்தவர்கள் சரளமாக ஆங்கிலம் கதைத்தார்கள்.அவர்கள் மட்டுமல்ல , எங்களை எதிர் கொண்ட அனைவருமே ஆங்கிலத்தில் உரையாடியதைக் காண வியப்பாகவே இருந்தது. மொல்தீஸ் பாசை கேட்பதற்கு எப்படியிருக்கும் என அறியும் ஆவல் எங்களிடம் மேலோங்கியிருந்தது. அவர்கள் உணவில் மீனும் ,அதற்கு சுவை சேர்க்கும் விதம் விதமான கூட்டுக்களும் பிரசித்தமானவை. அது தவிர ,அவர்கள் மெனுவில் பல இத்தாலிய, ஆங்கில உணவுகளின் கலவை இருந்தது. பரிமாறியவர்கள் ,நட்புடன் நாங்கள் எந்த நாட்டிலிருந்து வந்தோம் என்று விசாரித்தார்கள். அவர்கள் நாட்டுக்கு எந்த உணவு வகைகளும் இறக்குமதி செய்யப் படுவதில்லை யென்றும் , தங்கள் நாட்டில் பெரும் பகுதி வரண்ட பூமி யென்றாலும் உணவுற்பத்தியில் தாங்கள் தன்னிறைவு கொண்டிருப்பதாகப் பெருமையுடன் சொன்னார்கள். அங்கே இயற்கை உரம் மட்டும் தான் விவசாயத்தில் பாவிக்கப் படுவதாகவும் , கிருமி நாசினிகள் மிக அருமையாகத் தான் பாவிக்கப் படுவதாகவும் , பெரும் பாலான உல்லாசப் பயணிகள் இந்த ஒர்கனிக் (organic)
உணவுகளை உண்பதற்காகவே அடிக்கடி வருவதாகவும் சொன்னார்கள்.இந்த விடயம் எங்களுக்குப் புதிய தகவலாக இருந்தது. அவர்கள் உணவும் , உபசரிப்பும் மனத்தைக் கவர்ந்தது.
சாவகாசமாக வெளியே வந்து வாடகை வண்டியொன்றை அழைக்கலாமென்று பார்த்தபோது , நாங்கள் வந்த பாதைகள் எல்லாம் அடைக்கப் பட்டு வாகனங்கள் தடைப் படுத்தப் பட்டது தெரிந்தது. விசாரித்த போது , அருகேயுள்ள தேவாலயப் பெருநாள் என்றும் , அதற்காக இரவு பத்து மணிக்கு வான வேடிக்கை நடக்கப் போவதாகவும் , அதைப் பார்க்க மக்கள் திரண்டு வருவதால் , பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை என்றும் அறிந்தோம். சரியான தருணத்தில் , சரியான இடத்தில் வந்திருக்கிறோம் என்று மகிழ்ந்தோம். திரள் திரளாக நடந்து கொண்டிருந்த கூட்டத்தை நாங்களும் தொடர்ந்தோம். சுமார் 40 நிமிடங்கள் நடந்து விட்டோம் என்பதை கடிகாரத்தைப் பார்த்துத் தான் தெரிந்து கொண்டோம். அந்த இரவில் வீசிய இதமான கடற்காற்று ,நேரத்தை மறக்க வைத்து களைப்பை விரட்டியடித்தது. சற்றுத் தொலைவில் கடற்கரை யோரமாய் இருந்த ஆசனத்தில் எல்லோரும் இடம் பிடித்து வாண வேடிக்கையை இரசித்தோம். அப்போது எமக்கருகில் இருந்த ஒரு வயதான தம்பதிகள் , இங்கே ஒவ்வொரு வாரமும் தேவாலயப் பெருநாள் என்றும் ஒவ்வொரு சனிக் கிழமையும் வாண வேடிக்கை நடக்குமென்றும் விளக்கம் தந்தார்கள். மோல்டாவில் 95 வீதமானவர்கள் கத்தோலிக்கர் என்பதையும் அது ஒரு பரிசுத்த நாடென்றும் கூகிளில் படித்திருந்ததால் ,இந்தத் தகவல் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை .அதிகாலை ஒரு மணிக்குத் தான் எங்கள் இடத்துக்குத் திரும்பினோம். அப்படியிருந்தும் காலை எட்டு மணிக்கே அனைவரும் தயாராகி விட்டோம்.
மொல்டாவின் தலை நகரான வலேட்டா வைச் சுற்றிப் பார்ப்பது தான் அன்றைய எங்கள் திட்டமாகவிருந்தது. தலை நகரில் பல வீதிகள் படிகளாக அமைக்கப் பட்டு கால் நடையாக மட்டும் செல்லக் கூடிய வகையில் அமைக்கப் பட்டிருந்ததாலும், ஒரு முறை மோல்டா பஸ்ஸில் பயணிக்கும் ஆவலுடனும் பஸ் தரிப்பை அடைந்தோம். அங்கே தனியார் பஸ் வண்டிகள் தான். அவர்கள் நினைத்த நேரத்துக்கு பஸ் ஓட்டினார்கள் .அவர்கள் குடும்பமே பஸ்ஸில் இருந்தது.மலைகளைச் சுற்றிச் சுற்றி பயங்கர வேகத்தில் பஸ் ஒட்டிக் கொண்டு ,அதே சமயம் பின்னால் இருக்கும் பிள்ளைகளுடன் கதைத்துக் கொண்டிருந்தார் அந்த ஓட்டுனர். கிட்டத் தட்ட ரோலர் கோஸ்டரில் ஏறியது போல் ஒரு பிரமை எனக்கு. மோல்டா வந்தது தப்பா அல்லது இந்த பஸ்ஸில் ஏறியது தப்பா என்று தெரியாமல் மனதுக்குள் 'கடவுளே காப்பாத்து' என்று மன்றாடிக் கொண்டோம்.
வலேட்டா பஸ் தரிப்பில் வந்து இறங்கிய போது அதன் முன்னே இருந்த ஒரு பாரிய வாட்டர் பௌண்டன் எங்களை கவர்ந்திழுத்தது.அதை இங்கே பாருங்கள் .




அந்த நாட்டின் சரித்திரத்தை அங்கே காணக் கூடியதாகவிருந்தது. மத்திய தரக் கடலில் அதன் இருப்பிடத்தின் காரணத்தால் பல் வேறு நாடுகளால் மாறி மாறிக் கைப் பற்றப் பட்டதன் காரணத்தால் ஒவ்வொரு ஆட்சியிலும் கட்டப் பட்ட கோட்டைகளும், அரச மாழிகைகளும் , கல் வெட்டுக்களும், அரண்களும் ,நீண்ட வியக்க வைக்கும் கைவண்ணத்தால் கட்டப் பட்ட கட்டிடங்களை கொண்ட வீதிகளும், அதன் அழகை விபரிக்க முடியாத வகையில் அமைந்திருந்தன.
அங்கே பிரசித்தமான குதிரை வண்டிகள் கோட்டைகளைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தன. அவற்றில் ஒன்றில் நாங்கள் பயணித்த போது எடுத்த சில படங்களை இங்கே சேர்த்திருக்கிறேன்.











கடைசியாக ஆங்கிலேயர் அந்த நாட்டை ஆண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து 1964 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றுள்ளார்கள்.அதன் நினைவாக கட்டப் பட்ட நினைவுச் சின்னத்தை உங்களுக்காகக் கையில் தூக்கி வந்திருக்கிறேன் பாருங்கள்..



தொடரும் )

.

Tuesday 17 August 2010

இனியதொரு பயணம்- 2

எங்களை அந்த ஹோட்டலில் இறக்கி உள்ளே அழைத்துச் சென்று அறிமுகம் செய்து விட்டு டேவிட் எங்களிடமிருந்து விடை பெற்றார். அந்த 40 நிமிட நேரத்தில் மனிதர் பல வருடங்கள் பழகியவர் போல் மனதில் ஒட்டிக் கொண்டார். எங்களை அழைத்துச் செல்ல ஒருவர் வருவாரென்றும் , அதுவரை சில நிமிடங்கள் வரவேற்பறையில் இருக்கும் படியும் கேட்டுக் கொண்டார்கள். இரண்டே நிமிடங்களில் குளிர் பானம் பரிமாறினார்கள். அந்த ஒரு சில நிமிடங்களும் கூடப் பொறுக்க முடியாமல் பல்கணி வழியாகத் தெரிந்த கண் கொள்ளாக் கடற் கரைக் காட்சியைக் கண்டு களித்தோம் .



பொன்னிற மணலும், ஆழமற்ற தெளிந்த நீரும் அங்கே பலரை பல விதத்தில் ஆனந்தப் படுத்திக் கொண்டிருந்தது. Golden Bay ( கோல்டன் பே ) என்று சரியாகத்தான் பெயர் வைத்துள்ளார்கள் என்று நினைத்துக் கொண்டேன். எங்கள் குடும்பத்துக்காக இரண்டு அறைகள் அருகருகே ஒதுக்கப் பட்டிருந்தன. விசாலமான , நவீன அலங்காரத்துடன் இருந்த அந்த அறைகளும், விசேடமாக , மெய் மறக்க வைத்த வெளிப் புறக் காட்சிகளும், நாங்கள் அங்கே வரத் தீர்மானித்தது எங்கள் அதிஸ்டம் எனச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன. நான் பொய் சொல்லவில்லை என்பதை ஊர்ஜிதம் பண்ண அந்தக் காட்சிகளை உங்கள் பார்வைக்கு விருந்தாக்கி யிருக்கிறேன்
.

.
கடற் கரைக்கு சுமார் 20 அடி உயரத்தில் அமைக்கப் பட்டிருந்த பல செயற்கை நீச்சல் குளங்கள் ( swimming pools ) அதைச்சுற்றி அந்த அழகை ரசிக்கும் மனிதர் கூட்டமும் ஈ மொய்த் ததுபோல் காட்சி தந்தன.

அன்று முழுவதும் எங்கள் பொழுதும் அங்கே இனிதாகக் கரைந்தது. கடலில் விழுவதும் , பின்னர் நீச்சல் குளத்தில் விழுவதுமாக மாறி மாறி தண்ணீரில் விழுந்து கொண்டிருந்தோம். அலுக்கவே இல்லை.
.

இரவுணவுக்காக டேவிட் விமர்சித்த புஜ்ஜிபாவில் உள்ள உணவகத்துக்கு சென்றோம். அப்போது சுமார் இரவு 7 மணி இருக்கும். அப்போதும் கடற் கரையில் கும்பலாக மனிதர் கூட்டம் . அங்கே சில நிமிடங்கள் இளைப்பாறி அந்த சூரிய அஸ்தமனத்தை ரசித்த பின்னர் உணவருந்தினோம்
(தொடரும் )

.

Tuesday 10 August 2010

இனியதொரு பயணம் - 1

இந்த வருட நீண்டகோடை விடுமுறைக்கு எங்கு போகலாம என்றுசிந்தித்துக் கொண்டுஇருந்தபோது என் தங்கைஅனுப்பிய ,'' maltese Islands '' தீவுக்கூட்டமொன்றைப் பற்றியஉல்லாசப் பயணவிபரங்கள அடங்கிய ஒருலிங்க் கவனத்தை ஈர்த்தது.ஆர்வத்துடன் அந்த நாட்டின்விபரங்களைஇணையத்தில் படித்ததும்நிச்சயம் அங்கேபோவதென ஏகமனதாக முடிவெடுத்தும் விட்டோம்.இலங்கை என்னும் தீவில் பிறந்ததாலோ என்னவோ தீவுகளுக்குப் பயணிப்பதில்எனக்கு ஆர்வம் அதிகம்..


சுமார் மூன்றுமாதங்களின் முன்பாகவே எங்கள் பயணச் சீட்டும் , தங்குவதற்கான
ஹோட்டல் வசதிகளும் உறுதி செய்யப் பட்டு விட்டதனால் அந்த தீவுக் கூட்டம்
பற்றி கூகுளில் ஆர்வத்துடன் பலவிடயங்கள்சேகரித்தோம்.நாங்கள் சேகரித்த
சுவாரசியமான விடயங்கள் இவைதான். இந்தத் தீவுக்கூட்டங்கள் மோல்டா ,
கோசோ, கொமினோ என்ற மூன்று தீவுகளைக்கொண்டுள்ளது. இவற்றுள் மோல்டா சற்றுப் பெரியது. ஐரோப்பாவில்இத்தாலியின் கீளேயுள்ள சிசிலி தீவுக்கு 90 கிலோ மீட்டர் கிழக்காக மோல்டாஅமைந்துள்ளது. இந்த மூன்று தீவுகளின் மொத்த சனத் தொகை 500 ,000 க்கும்குறைவாகும். ஒரு தீவிலிருந்து மற்றைய தீவுகளுக்கு 20 நிமிடத்தில் படகுகளில்(ferry ) செல்லலாம். இந்தத் தீவுகள் சுற்றிவர அழகான மணல் கடற் கரைகளால்அலங்கரிக்கப் பட்டுள்ளன. இத்தனை தகவல்களுமே எனக்குப் போதுமானதாகவிருந்தது. ஆனாலும் என் பெண்கள் அங்கே பார்க்க வேண்டிய பிரசித்த மானஇடங்களைப் பட்டியல் போட்டு, எதையும் தவற விடுவதில்லை என்று நேரஅட்டவணை போட்டுவிட்டார்கள்.
திட்டமிட்ட படி இந்த வருடம் ஜூலை மாதம் .எங்கள் பயணம் தொடங்கியது.அதிகாலை ஆறு மணிக்கு லண்டனிலிருந்து எங்கள் விமானம் பறந்தது. மூன்று மணி நேரப் பயணம். காலை நேரத்தில் அந்தத் தீவுகளை விமானத்திலிருந்து பார்த்த பொழுதே அதன் அழகு மெய் மறக்க வைத்தது. நாங்கள் மோல்டா விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த போது ஹோட்டல் மூலம் ஒழுங்கு செய்யப் பட்ட வாகனம்
எங்களுக்காகக் காத்திருந்தது. ண்டன் கால நிலைக்கு நாங்கள் பழகி விட்டிருந்ததால் அன்றைய 30 டிகிரி வெப்பநிலை சற்றுப் பய முறுத்தியது. ஆனாலும் எங்களை எதிர் கொண்ட வாகன ஓட்டுனரின் நகைச் சுவையும், லண்டனிலிருந்துவிடுமுறைக்குச் சென்று அந்த நாட்டை விட்டு நீங்க மனமில்லாமல் அங்கேயேதங்கி விட்ட அவரது கதையும், அந்த வெட்கையை மறக்க வைத்து விட்டது.நாங்கள் தங்க வேண்டிய ஹோட்டல் கோல்டன்
பே ( Golden Bay) என்ற வடக்கேயுள்ள ஒருகடற் கரையோரத்தில் அமைந்திருந்தது. விமான நிலையத்திலிருந்து எங்கள்பயணம் சுமார் 40 நிமிடங்கள். பரந்து, விரிந்து கிடந்த வரண்ட கல்லுப் பூமியும் , மிக அரிதாக தெட்டுத் தெட்டாகக் கிடந்த கள்ளிச் செடிகளும் ,நாங்கள் இணையத்தில் கண்ட அழகான மோல்டா இதுதானா ?என்று எங்களைத் திகைக்க வைத்தது

மோல்டா 300 சதுர கிலோ மீட்ர் பரப்பளவைக் கொண்டிருந்து ஐரோப்பாவின் மிகச் சிறிய தீவென பெயரெடுத்தாலும் ,அதன் மலைகளும், பள்ளத் தாக்குகளும் பக்கத்து நகரைஅடைவதற்கு ஒரு மலையிலிருந்து சுற்றிச் சுற்றி இறங்கி மற்ற மலையை சுற்றிச் சுற்றி ஏற வேண்டியிருந்தது. வாகன ஓட்டுனர் ஓயாமல் எங்களுக்கு கண்ட காட்சிகளுக்கு விளக்கம் தந்த படியே வந்தார். இங்கே சுற்றி வரக் கடல் இருந்தாலும் பத்து மாத கோடை காலமும், அரிதாகப் பெய்யும் மழையும் இங்கே தண்ணீர் தட்டுப் பாட்டை உண்டாக்கியிருப்பதாகவும் சொன்னார். நாங்கள் இப்படியான வரண்ட பூமியை எதிர் பார்க்கவில்லை என்று சொன்ன போது, இது கல்லுப் பிரதேச மென்றும் சில இடங்களில் மரங்கள் செழித்து கண்ணுக்குக் குளிர்ச்சியாக விருக்கின்றன வென்றும் அவற்றின் விபரங்களையும் தந்தார்.முதல் முதலாக என் கவனத்தை ஈர்த்தது .அங்கே காணப் பட்ட சுவர்களும் கட்டிடங்களும் தான். அவை அந்தப் பிரதேசத்திலுள்ள மலையையுடைத்து, அந்தக் கற்களின் மூலம் கட்டப் பட்டிருந்தன. வெளிர் மஞ்சள் நிறக் கற்கள் வெவ்வேறு வடிவத்தில் ,அளவில், இறுக்கமாக அடுக்கப் பட்டு சீமெந்து இல்லாமல் கட்டிடங்கள் கட்டி எழுப்பப் பட்டிருந்தன. இவை மிக வலுவானவை என்றும் பல்லாயிரக் கணக்கான வருடங்கள் அசையாமல் நிற்கின்றன என்றும் டேவிட் (ஓட்டுனர்) எங்களுக்குச் சொன்னார். அவர்களின் அந்தத் துல்லியமான கட்டிடக் கலையை வியப்புடன் பார்த்தோம்.


ஒரு சில வீடுகள் கூட அந்த வகையில் கைவண்ணத்துடன் கட்டப் பட்டிருந்தன.
ஒரு படியாக கடற்கரையோரம் வந்து சேர்ந்தோம். அந்தக் காட்சிகள் மனதுக்கு இதமாகவும், கடற் காற்று உடம்புக்கு இதமாகவும் இருந்தது
.

புஜிபா பே ( Bugibba Bay) .என்ற இடத்தை நாங்கள் தாண்டிய போது எடுத்த படத்தை இங்கே பார்க்கலாம். காலை பத்து மணிக்கு எங்கள் ஹோட்டல் போய்ச் சேர்ந்தோம். வழியில் கண்ட பல் வேறு நிறமான போகன்விலா செடிகளும்


செவ்வரத்தை மரங்களும் ஒரு விதமான பற்றை மனதில் உண்டாக்கி விட்டன

.(தொடரும்) .