நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Saturday, 30 January 2010

வியக்க வைத்த மனிதர்.' Miracle Man '

அண்மையில் மெயிலில் எனக்கு வந்த இந்தக் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

1995 ஆம் ஆண்டு பெங் ஷுளின் ( Peng Shulin ) என்ற ஒரு சீனர் மேல் ஒரு லாரி மோதியதால் அவரது உடல் இரண்டாக வெட்டப் பட்டது. இப்படியான பாரிய விபத்திலிருந்து அவர் உயிர் பிழைத்தது விந்தையானது. 20 டாக்டர்கள் சேர்ந்த குழுவொன்று போராடி அவர் உயிரைக் காப்பாற்றினார்கள். அவர் தலையில் இருந்து எடுக்கப் பட்ட தோல் பரிசோதனைச் சாலையில் வளர்க்கப் பட்டு வெட்டுப்பட்ட உடல் பாகங்கள் மூடப் பட்டன. அவர் ஆபரேசன் தியேட்டருக்குப் போய் வந்த எண்ணிக்கை கணக்கிலடங்காதது.

இத்தனை முயற்சிகளால் உயிர் பிழைத்த அந்த மனிதரின் உயரம் 78 cm ( இரண்டரை அடி ) மட்டுமே. அன்றிலிருந்து படுக்கையில் வாழ்ந்த இந்த துரதிஸ்ட மனிதர் சாதாரண வாழ்க்கை வாழ முடியுமென்று எவரும் கனவு கூடக் கண்டிருக்க முடியாது. ஆனால் அவர் தன்னம்பிக்கை யிழக்கவில்லை. தனது கைகள் பலம் பெறும் வண்ணம் தேகாப்பியாசம் செய்யத் தொடங்கினார். தனது அன்றாடத் தேவைகளை முடிந்த அளவில் தானே செய்ய முனைந்தார். பல் துலக்குவது , முகங் கழுவுவது போன்றவற்றை அவரே செய்தார்.

இவரது விடா முயற்சி பற்றியறிந்த சீன புனர் வாழ்வு ஆய்வுக் கழகம் இவரை நடக்க வைக்கும் முயற்சி யிலிறங்கியது. எவருதவியுமில்லாமல் நடக்கும் வகையில் வடிவமைக்கப் பட்ட உபகரணமொன்று கண்டு பிடிக்கப் பட்டது. ஒரு முட்டை வடிவில் அமைக்கப் பட்ட ஒரு உறையினால் உடம்பின் கீழ்ப் பாகம் தாங்கப் பட்டு , அதனுடன் இரண்டு பயோனிக் கால்கள் ( bionic legs ) பொருத்தப் பட்டன. பலரையும் பிரமிக்க வைத்து இந்த மனிதர் அடியெடுத்து நடப்பதைப் படத்தில் பாருங்கள்.








பன்னிரண்டு வருடங்கள் கட்டிலில் வாழ்ந்த இந்த மனிதர் 2007 ஆம் ஆண்டு நடை பயில்வதைப் பார்த்து வியக்காமலிருக்க முடியவில்லை. இதை மருத்துவ தொழில் நுட்ப விந்தை என்று மட்டும் கருதி விட முடியாது. அந்த மனிதர் முகத்தில் தெரியும் பிரகாசமும், தன்னம்பிக்கையும், உற்சாகமும் .......அந்த மனவலிமைதான் முக்கிய காரணமென்பதை எனக்குச் சொல்லாமல் சொல்கிறது.
சின்னச் சின்னத் தோல்விகளைத் தாங்க முடியாமல் துவண்டுவிடும் போதெல்லாம் இந்தக் கதை எனக்கு நினைவில் வரவேண்டுமென்று தோன்றுகிறது. உங்களுடன் இதைப் பகிர்ந்ததில் பெரும் மகிழ்ச்சி.
ஆதாரம் : http://www.metro.co.uk/weird/56500-miracle-man-walks-again


.

Thursday, 21 January 2010

எங்கோ பார்த்த முகம்


இப்போதெல்லாம் ஏனோ கல்யாணம் , கொண்டாட்டம் என்று வெளிக்கிடவே எனக்கு மனமில்லை. என்ன காரணமென்று சரியாகச் சுட்டிக் காட்ட முடியவில்லை. ஒன்று நானும் சிங்காரித்து பிள்ளைகளையும் தயார் பண்ணுவதற்குள் போதும் போதும் என்றாகி விடுவதாலிருக்கலாம். இல்லை, அங்கே போய் மற்றவர்கள் சுய தம்பட்டங்களுக்கும் ஆவலாதிகளுக்கும் செவி கொடுக்கப் பிடிக்காததாலிருக்கலாம் . அல்லது வயது போகப் போக வந்து குடியேறி விட்ட சோம்பலாகக் கூட இருக்கலாம். இல்லை, இவை எல்லாமே தானோ தெரியவில்லை. அன்றும் அப்படித்தான். தூரத்து உறவினர் வீட்டுக் கல்யாணம். மனமில்லாமற் தான் புறப்பட்டேன்.

நல்ல வேளை என் பால்ய தோழி கலாவை அங்கே கண்டேன்.அவளருகில் போயிருந்து விட்டதால் பழைய கதைகள் கதைத்ததில் நேரம் இனிதே கழிந்தது. திடீரென வந்த ஒருவர் என் தோழியிடம் ' ஹலோ' சொல்ல , அவளும் ' ரவி ,நீங்கள் எங்கே இங்கே ?' என்று கேட்க , நானும் அவரை நிமிர்ந்து பார்த்தேன். சட்டென இவரை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று தோன்றியது. அவரும் தோழியும் சில நிமிடங்கள் கதைத்தார்கள். நானும் என் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தேன். ஊகும்... எனக்குப் பிடிபடவேயில்லை. அவருக்குத் தலை வழுக்கை விழத் தொடங்கியிருந்தது . அதை மறைக்கப் பிரயத்தனம் செய்திருந்தார். அந்தக் கண்ணும் மூக்கும் எனக்கு மிகவும் பரீட்சயமாய் இருந்ததால் நிலை கொள்ளாமலிருந்தது. எப்படி இவ்வளவு மறதி எனக்கு வந்தது என்று திட்டிக் கொண்டிருந்தேன். என் நினைவு வர , கலா என்னை ரவிக்கு அறிமுகம் செய்து வைத்தாள். '' ரவி, எனது பழைய கம்பெனியில் என்னோடு வேலை செய்தவர் '' என்று ரவியையும் எனக்கு அறிமுகம் செய்தாள். சிரித்தவண்ணம் அவரும் என்னோடு கை குலுக்கினார். அவரது முக பாவத்தில் என்னைத் தெரிந்ததற்கான எந்தச் சாடையுமில்லை. '' உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன். நினைவு வரவில்லை'' என்றேன். '' இருக்காது , நான் எவரையும் இலகுவில் மறக்க மாட்டேன். விசேடமாகப் பெண்களை '' என்றார்.

எப்போ மனிதர் விலகுவார் என்று காத்திருந்து , கலாவிடம் '' இந்த ரவியை நான் இளவயதில் பார்த்திருக்கிறேனடி . இந்தக் கண்ணை நன்றாக நினைவிருக்கிறது '' என்றேன். '' சரிதான் ,போ . நீயும் உன் நினைவும் '' என்று சொல்லிச் சிரித்தாள். ஒருமுறை இப்படித்தான் நானும் கலாவும் ஷாப்பிங் போனபோது எங்களோடு படித்த ஒருத்தி பல வருடங்களின் பின்னர் எங்களைச் சந்தித்த மகிழ்ச்சியில் கட்டித் தழுவி சுமார் ஒரு மணி நேரம் கதைத்து , தன சுய சரிதையைச் சொல்லி , என் வீட்டு விலாசம் , தொலைபேசி எண் எல்லாம் வாங்கிப் போன பின்பு , கலாவிடம் '' இவள் யாரடி? எனக்குத் தெரியவில்லை'' என்று நான் கேட்டது , இருவருக்கும் ஒரே சமயம் நினைவு வர, கொல்லென்று சிரித்தோம். அருகில் வந்த என் கணவர் '' கல்யாணத்துக்கெல்லாம் நான் வரவில்லை என்று அடம் பிடிக்க வேண்டியது. தெண்டிக் கொண்டு வந்தால் இங்கே கும்மாளமடிக்க மட்டும் தெரிகிறது '' என்று முணு முணுத்தார்.

எனக்கோ , அதன் பிறகு புலனெங்கும் போகவில்லை. '' இந்த ரவியைப் பற்றித் தெரிந்ததெல்லாம் சொல்லடி. ப்ளீஸ் '' என்றேன். '' உனக்கு இவனைத் தெரியச் சான்ஸ் இல்லையடி. இவன் இங்கிலாந்து வந்து பலவருடமாகுது. இன்ஜினியரிங் கூட இங்கேதான் படித்தான். காதல் கல்யாணம். மனைவி கூட இவனோடு படித்தவள்தான். எனக்குப் பழக்கம். ரொம்ப அழகு. பெயர் கீர்த்திகா.....'' சடாரென சுவிட்ச் தட்டி விட்ட மாதிரி எனக்குள் வெளிச்சம். இன்னும் எனக்கு அறளையாகவில்லை என்னும் ஒரு நிம்மதி வேறு.

கலா பத்தாம் வகுப்புப் பரீட்சை எழுதியதும் இங்கிலாந்து வந்து விட்டாள். நானும் வேறு பாடசாலைக்கு மாறி விட்டேன். அதனால் எனக்குத் தெரிந்த பாடசாலைத் தோழிகளைக் கலாவுக்குத் தெரியாது. அதன் பின்னர் தான் மேனகாவை நான் சந்தித்தேன். நல்ல குரல் அவளுக்கு. பாடினால் கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கும். பாடசாலைக்கு அருகில் அவள் வீடும், பல காத தூரத்தில் என் வீடும் இருந்ததால் , நான் பலமுறை அவள் வீட்டில் தங்கிய நாட்கள் கூட இருந்தன. அவள் வீட்டில் ஒரே பிள்ளை. எப்படியும் அவளை டாக்டராக்கி விடவேண்டுமென்ற எண்ணத்தில் அவள் பெற்றோர்கள் இருந்தது அவர்கள் பேச்சில் அப்பட்டமாகத் தெரிந்தது. அவளும் முழு மூச்சாய்ப் படித்த படி தான் இருந்தாள். எம்மிருவருக்கும் ஒரு நெருக்கமான நட்பு உண்டான பின்பு தான் மேனகா தன் காதல் விடயம் பற்றி என்னிடம் மூச்சு விட்டாள். அவள் சின்ன வயதிலிருந்தே அவள் மச்சானைக் காதலிப்பதாகச் சொன்ன போது இவளிடம் இத்தனை ரகசியம் இருக்கிறதாவென்று எனக்கு வியப்பாயிருந்தது . பார்வைக்கு அப்பாவி போலவும் குழந்தைத் தனத்துடன் அவள் இருந்ததுதான் காரணம். அவளது அம்மம்மா வார்த்தைக்கு வார்த்தை அவர்கள் இருவரையும் சேர்த்துக் கதைத்து சிறுவயதில் அவர்கள் மனதில் காதல் விதையை விதைத்திருக்கிறாள். மேனகா குடும்பத்தின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததும், வேறு சில குடும்பப் பிரச்சனைகளாலும் இருவர் குடும்பங்களும் பிளவு பட்டுப் போய் விட்டன. அப்போதும் அவர்கள் சந்திப்புக்கு அம்மம்மா உடந்தையாக இருந்திருக்கிறாள். அவர்கள் கல்யாணத்தில் தான் இரு குடும்பங்களும் ஒற்றுமையாகப் போகிறது என்று இருவருக்கும் நம்பிக்கை தந்திருக்கிறாள். ஆனால் அம்மம்மா அண்மையில் கண்ணை முடியதால் இருவரும் கலங்கிப் போயிருந்த நேரமது. போதாத குறைக்கு அவன் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு சீமன் வேலைக்குப் போக ஆயத்தம் செய்தபோது அவள் கதி கலங்கிப் போனாள். மேனகாவின் பெற்றோர் அவளை எப்படியும் மேற் படிப்புக்கு அனுப்பக் கங்கணம் கட்டியிருந்தது அவர்கள் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கியிருந்தது. மிகக் கவலையுடன் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தாள். அவனைச் சந்தித்த போது எப்படியும் படிப்பைத் தொடர வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டதாகவும் சொன்னாள். ஆனால் மிக விரைவில் அவன் சீமன் வேலை கிடைத்துப் புறப்பட்ட போது அலமந்து போனாள். பணம் சம்பாதித்த பின்னர் படிக்கப் போவதாக உறுதி மொழி சொல்லிப் போன அந்த ரவீந்திரன் தான் இந்த ரவி. மேனகா பென்சில் பெட்டி உள்ளே மறைத்து வைத்த அவன் படத்தை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.

அவன் புறப் பட்டதும் மேனகா வீட்டுக்குக் கடிதம் எழுத முடியாததால் அவனது கடிதங்களைப் பெற்றுத் தர நான் உதவி செய்ய முன் வந்தேன். அப்போ என் ஆங்கிலத்தை முன்னேற்ற ஒரு சில வெளிநாட்டுப் பேனா நண்பர்களைச் சேர்த்திருந்ததால் எனது பெயரில் எனது விலாசத்துக்குக் கடிதம் போடுவதாகத் திட்டம். ஆனால் கடிதப் போக்குவரத்து தொடங்கியதும் ரவியின் கடிதம் வாரமொருமுறை வரத் தொடங்க எங்கள் திட்டத்தில் ஓட்டை விழுந்தது. எங்கள் வீட்டில் கடிதம் பிடி பட்டு விட்டது. ஒருபடியாக என் அம்மாவுக்கு விடயத்தை விளக்கி , மேனகாவை அழைத்து வந்து ,கெஞ்சிக் கூத்தாடி எமது திட்டம் தொடர வழி செய்தோம். அப்போது அவன் அனுப்பிய புகைப் படங்கள் எல்லாம் நான் பார்த்திருக்கிறேன். ஒரு படியாக , மேனகாவின் வேண்டுதலுக்கு உடன்பட்டு ரவி இங்கிலாந்து வந்து சேர்ந்தான். அவன் இன்ஜினியரிங் செய்யப் போகிறான் என்று அறிந்ததும் அவள் பூரித்துப் போனதும் கூட எனக்கு நினைவிருக்கிறது. இரண்டு வருடங்கள் வாரமொரு முறை வந்து கொண்டிருந்த கடிதங்கள், தாமதமாகி மாதமொரு முறை வரத் தொடங்கிய போது அவளோடு சேர்ந்து நானும் கலங்கிப் போனேன். '' என்னடி? '' என்று கேட்ட போது விம்மியழுதாள். கீர்த்திகா என்ற ஒரு நண்பியைப் பற்றி அவன் எழுதியதாகவும் , ஒவ்வொரு கடிதத்திலும் ஒரு வரியாவது அவளைப் பற்றியெழுதுவதாகவும் சொல்லி வேதனைப் பட்டாள். '' அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது நீ மனதைப் போட்டுக் குழப்பாதே '' என்று அவளுக்கு ஆறுதல் சொன்னாலும் என் மனதிலும் பாரமாய் இருந்தது. அடுத்த கடிதத்தில் கீர்த்திகா போட்டோவும் வந்தது. சுருள் முடியுடன் மிக அழகாகச் சிரித்த வண்ணமிருந்தாள். அந்தப் படம் என் அடி மனத்தில் ஒரு கிலியைத் தந்தாலும் '' நீங்கள் கொடுத்து வைத்தவர். உங்கள் மேனகா மிக அழகாக இருக்கிறாள் '' என்று கீர்த்திகா சொன்னதாக ரவி எழுதியிருந்ததில் ஆசுவாசப் பட்டுக் கொண்டாள்.
ஆனால் ஒரு சில மாதங்களில் இடிபோல் வந்த அந்தக் கடிதம் அவளைத் துடி துடிக்க வைத்து விட்டது. பல வருடங்களாக சிறுகச் சிறுக அவள் மனதில் அழகாகக் கட்டி யெழுப்பிய அந்தக் காதல் சாம்ராஜ்யத்தை ஒரு சில வரிகளால் சின்னா பின்னமாக்கி விட்டான் ரவி. கீர்த்திகாவுடன் நட்பாகத் தான் பழகியதாகவும், ஆனால் இப்போ கழன்று கொள்ள முடியாத படி மாட்டிக் கொண்டதாகவும் , அவளைக் கல்யாணம் செய்வதை விட வேறு வழியில்லையென்றும் ஏதேதோ எழுதியிருந்தான் இந்தக் கிராதகன். அது போதாதென்று மேனகாவைத் தான் மறக்க முடியாதென்றும் , சாகும் வரை அவள் தன் நெஞ்சில் குடியிருப்பாள் என்றும் பசப்பு வார்த்தை வேறு. அந்தக் கடிதத்தை நான் பல முறை படித்திருந்தேன்.

அந்த பேரதிர்ச்சியைத் தாங்க முடியாமல் மேனகா படுத்த படுக்கையாக அவள் பெற்றோருக்கு விடயம் தெரிய வந்தது. நல்ல வேளை ,கடிதம் என் வீட்டுக்கு வந்த விடயம் வெளிப் படாததால் அப்போ நான் பிழைத்தேன். அப்போது கூட '' ரவி பாவம். அந்தக் கீர்த்திகா சனியன் மயக்கி விட்டாள்.'' என்று அவள் புலம்பியதும் நினைவில் வந்தது. அவளது காதலுக்கு இருந்த ஒரே சாட்சி நானென்பதாலோ என்னவோ என்னைக் கண்டதும் அவள் அழ ஆரம்பித்தாள். அதனால் அவளைப் போய்ப் பார்ப்பதைக் குறைத்துக் கொண்டேன். காலவோட்டத்தில் எனக்கு மேனகா தொடர்பே இல்லாமல் போய் விட்டது.

இப்போ, இத்தனை வருடங்களுக்குப் பிறகு அந்தத் துரோகியைக் கண்டதும் , மனம் பட படவென அடித்துக் கொண்டது. அவனுக்கு என் பெயரும் விலாசமும் மட்டும் தான் தெரியும். நான் எப்பிடியிருப்பேன் என்று தெரியாது. என்னால் சும்மா விட முடியவில்லை. ஏதாவது பண்ண வேண்டும் என்று சிந்தித்தபடியே இருந்தேன். தானாகவே சந்தர்ப்பம் அமைந்தது. நாங்கள் எல்லோரிடமும் விடை பெற்று வெளியே வந்த போது ரவி தம்பதிகள் வெளியே நின்று கொண்டிருந்தார்கள். வம்பை விலைக்கு வாங்கியது போல் '' இப்போ என்னை எங்கே கண்டீர்கள் ? என்று நினைவிருக்கிறதா?'' என்று வேறு என் வாயைக் கிண்டிய ரவியிடம். '' எனக்கு நல்ல நினைவிருக்கு. '' என்று சொல்லி என் பெயரையும் எனது ஊர் விலாசத்தையும் சொல்லி,'' நீங்கள் தான் எதையும் மறக்க மாட்டீர்களே '' என்றேன்.

திடுக்கிட்டு ,முகங் கறுத்து , பேயறைந்தவன் போல் நின்ற ரவியைப் பார்த்துச் சிரித்த படி நான் வந்து விட்டேன். என்னையும் ரவியையும் மாறி மாறிப் பார்த்த படி திகைத்துப் போய் நின்ற கீர்த்திகாவைப் பார்க்கவும் சுவாரசிய மாகத்தான் இருந்தது. காதலித்து ஏமாற்றிய அந்தக் கயவனுக்கும், உயிருக்குயிராய் ஒருத்தி இங்கே காத்திருக்கிறாள் என்று அறிந்த பின்னரும் அவள் கனவை அபகரித்த அந்தக் கல் நெஞ்சக் காரிக்கும் ஒரு சின்ன அதிர்ச்சி மட்டும் தான் என்னால் கொடுக்க முடிந்தது. ஆனாலும் என் அடி மனதில் சின்னதாய் ஒரு நிம்மதி.


.

Wednesday, 13 January 2010

ஒரு மைல் கல்


இப்போ புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒருபடியாக ஐம்பதாவது பதிவை எட்டிப் பிடித்து விட்டேன். நீங்கள் ' சதத்தில்' அடியுங்கள். எனக்குப் பழகிப் போன ' 'பென்ஸ் ' இல் நான் அடிக்கிறேன்.

போன வருடம் மே மாதம் இந்த வலையத்தை ஆரம்பித்தேன். சாவகாசமாக வலையுலகில் அன்ன நடை போட்டதில் ஐம்பது பதிவு போட எட்டு மாதங்கள் ஆகி விட்டன. இதே கதியில் போனால் நூறாவது பதிவை எட்டிப் பிடிக்க இன்னும் எட்டு மாதம் ஆகலாம். அதனால் இப்போதே தாண்டிய இந்த மைல் கல்லில் சற்று நின்று ,வந்த பாதையையும், சந்தித்த மனிதர்களையும், பிரமிக்க வைத்த இந்த வலை யுலகைப் பற்றியும், நாலு வார்த்தை உங்களுடன் பேசலாம் என்று தோன்றியது.

நூறு , இரு நூறு , முன்னூறு என்று எழுதிக் குவித்துவிட்ட வலையுலக மேதைகளுக்கு இந்தக் குட்டி நாயின் குலைப்பு நகைப்பைத் தரலாம் . ஆனால் சின்னச் சின்ன அனுபவங்களையும், அவை தந்த உணர்வுகளையும் , நெஞ்சத்தில் குறிப் பெடுத்து பொக்கிஷமாகப் போற்றிப் பாதுகாப்பவள் நான். இந்தப் புதுமையான வலையுலக அனுபவத்தை விட்டு விடுவேனா? என்ன?

போன வருடம் இந்நேரம் எனக்கு' ப்லொக்' பற்றியும் தெரியாது, இப்படிப் பரந்து விரிந்து கிடக்கும் ஒரு வலையுலகம் என் கணினிக்குப் பின்னால் ஒழிந்திருப்பதும் தெரியாது. என் வேலைகளுக்கும், வாரமொரு முறை மெயில்களை வாசிக்கவும் தான் கணினியை அணிகினேன். நண்பர் ஒருவர் மூலம் கணினியில் தமிழில் எழுதப் பழகிய பின்னர் தான் இந்த வலையுலகைப் பற்றி அறிந்தேன். கூடவே நானும் ஒன்றை ஆரம்பிக்கலாமே என்ற ஆசையும் எழுந்தது. இங்கிலாந்து வந்த புதிதில் என் அப்பப்பாவுக்கும் ,அப்பாச்சிக்கும் மட்டும் தான் தமிழில் கடிதம் எழுதினேன். அவர்கள் இறந்து பல வருடங்கள் ஆனதால் தமிழில் எழுதியும் பல வருடங்கள் ஆகியிருந்தன. முன்னர் எங்கும் எழுதிய அனுபவமும் கிடையாது. பாடசாலை நாட்களில் கட்டுரைப் போட்டிகளில் பெற்ற சில விருதுகளும், நண்பர்களினதும் ஆசிரியர்களின் பாராட்டுகளும் மட்டும் தான் எனது அனுபவம் . ஆனால் அப்போது கூட தன்னிலை மறந்து எழுதும் சுபாவம் எனக்கு இருந்தது. பத்தாம் வகுப்பில் படிக்கும் போது, கொழும்பு பாடசாலைகளுக்கிடையிலான ஒரு கட்டுரைப் போட்டியில் நான் எழுதிய ' பாழடைந்த வீடு சொன்ன கதை ' பரிசு பெற்றதால் அதன் பிரதி எல்லா பாடசாலைகளுக்கும் மாதிரிக் கட்டுரையாக அனுப்பப் பட்டது. அதில் நான் பாழடைந்த வீடாகவே மாறி, பக்கத்தில் இருந்த பலாமரம் என் மேல் கொண்ட அளவு கடந்த ஒருதலைக் காதலைப் பற்றியும் , வீசும் தென்றலைச் சாக்காக்கி அது என் மேல் உரசிக் கொண்டு செய்த சில்மிசங்களையும், கடைசியில் சூறாவளியைச் சாதகமாக்கி கட்டித் தழுவி நொறுக்கியதையும் விபரித்திருந்தேன். ஏதோ விதமாக என் பெயரும் வெளி வந்து, கட்டுரையும் வெளி வந்ததால் தெருவில் கூட்டம் போடும் பையன்கள் குழு என்னைப் 'பாழடைந்த வீடு' என்று பட்டப் பெயர் சூட்டி அழைத்தார்கள். அழுது கொண்டு பாடசாலை செல்ல அப்பாவைத் துணைக்கு அழைத்துப் போன நாட்கள் இப்போ பசுமையாக நினைவில்.
ஏதோ ஒரு துணிவில் இந்த ' மௌன ராகம்' இசைக்கத் தயாரானது. முதல் காதல். முதல் முத்தம் போல மறக்க முடியாமல் கிடக்கும் சில விடயங்களை இங்கே உங்களுடன் பகிர்கிறேன்.


முதன் முதலாக எழுதிய பதிவு

என்ன எழுதுவது என்று இரவு பகல் யோசித்து ஒரு கவிதையுடன் ஆரம்பித்தேன். நான் எழுதிய முதல் கவிதையும் இதுதான் .




கண்ணீர் வெள்ளம்

வண்ண வண்ணக் கண்ணழகன்-என்
எண்ணம் எல்லாம் நிறைந்திட்டான்.
கண்ணன் ராதை என்றெண்ணி -நான்
விண்ணை மண்ணில் கண்டிட்டேன்.

சுற்றிச் சுற்றி வந்து நின்றான்-என்
உற்றம் உறவும் மறக்க வைத்தான் .
கொற்றம் அவனே என்றெண்ணி- நான்
சுற்றுச் சூழல் மறந்து விட்டேன்.

கண்ணன் மனதில் கள்ளமடி- அவன்
எண்ணம் எல்லாம் குற்றமடி.
வண்ணம் எல்லாம் கலைந்ததெடி- இந்தப்
பெண்ணின் கண்ணீர் வெள்ளமடி.

முதன் முதலாக கிடைத்த கருத்து

பதிவிட்ட அன்றே எனக்குக் கிடைத்த முதல் கருத்து மிகவும் பொன்னானது.
அந்தக் கருத்திட்டவர் யார் தெரியுமா? வேறு யாருமல்ல. ' கார்க்கி' தான். அப்போது எனக்கு இவர்தான் வலையுலக மன்னர் என்றோ, அவர் போட்ட குட்டு மோதிரக் குட்டு என்றோ தெரியவில்லை.
அன்று
வந்த கார்க்கி அதன் பின்னர் என்றுமே என் வலயத்தை எட்டிப் பார்க்காவிட்டாலும், அந்த முதல் கருத்து மனதை விட்டு அகலாது. க்ளிக் பண்ணி கார்க்கி வலையத்துக்குப் போனேன்.அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும், பதிவுகளும், அதில் கண்ட கும்மிகளும் ஓரளவு என்னைப் பயப் படுத்தி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

முதன் முதலாக தொடர்ந்த நண்பர்

என் முதல் பதிவுக்குக் கருத்திட்டு விட்டு என் வலையத்தை முதன் முதலாகப் பின் தொடர்ந்தவர் , அனைவருக்கும் பூங்கொத்து வழங்கும் அன்புடன் அருணா.

முதன் முதலாக ஊக்கிய விருது

வலையம் ஆரம்பித்து இரண்டே வாரங்களில் கவிநயா என்னிடம் பறக்க விட்ட பட்டாம் பூச்சி விருது தந்த பரவசம் அபாரம்.
அதைத் தொடர்ந்து நண்பர்கள் அனுப்பிய அத்தனை விருதுகளும் என் மனதையும் வலையத்தையும் அலங்கரித்து நிற்கின்றன.

முதன் முதலாக சஞ்சிகை அறிமுகம்

புத்தாண்டில் தேவதை பொங்கல் சிறப்பிதழில் என் வலயத்தின் அறிமுகம் , ஒரு புத்துணர்ச்சி தருகிறது.

வலைச்சரத்தில் நண்பர்கள் தந்த முத்தான அறிமுகங்கள்
தமிழரசி
.-------------- ஜூலை 2009

ஜீவன்-- -------------- அக்டோபர் 2009

பிரியமுடன் வசந்த்---டிசம்பர் 2009




தமிழரசி தந்த அறிமுகம்

//வலைப்பூவின் புதுப்பூ அல்ல ஏற்கனவே வாசம் வீசிக் கொண்டு இருக்கும் மலர் இவர் எனக்கு இங்கு மேலும் ஒரு சிறந்த தோழி கிடைத்திருக்கிறார் என்ற பெருமிதம்

இவர் கதைகளில் பெண்மை பேசும் விந்தை ஆம் அத்தனை அழகாக பெண்களின் நிலையை தன் கதையில் சொல்லியிருக்கிறார் நான் இங்கு தரும் இவருடைய அந்த பதிவைப் பார்த்தால் நீங்களும் இதைத் தான் நினைப்பீர்கள் இவரும் எனக்கு புதுமுகம் என்பதால் இன்னும் அதிகம் சொல்ல முடியவில்லை அதனால் என்ன ?
இனி மேல் நாங்கள் தான் நெருங்கிய தோழிகளாயிற்றே அறிந்துக் கொள்(ல்)வோம் ஹிஹி ஹி கவிதை சொல்லி உங்களை....

இவர் தான் ஜெஸ்வந்தி மெளனராகங்கள்
இவருடைய பதிவுகளில் சில இங்கு அறிமுகப்படுத்துகிறேன்...

நான் அழுது கொண்டே சிரிக்கிறேன்..
நான் இப்ப ஏன் கண் கலங்குகிறேன் //


ஜீவன் தந்த அறிமுகம்

//ஜெஸ்வந்தி
ஒரு புதிய எழுத்து நடை..! ஒவ்வொரு வார்த்தையிலும் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் எழுதுகிறார் . இவரின் இந்த பதிவுகளை பொறுமையாக படியுங்கள்.

யார் குடியைக் கெடுத்தேன்- பகுதி 1
யார் குடியைக் கெடுத்தேன்- பகுதி 2
யார்
குடியைக் கெடுத்தேன்- பகுதி 3 //


பிரியமுடன் வசந்த் தந்த அறிமுகம்
// ஜெஸ்வந்தி

இவங்க மெளனராகங்கள் எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க
நான் இவங்களை ஜெஸ்ஸம்மான்னுதான் கூப்டுவேன்.

இவங்க ஒரு கவிஞர் நிறைய கவிதைகள் எழுதியிருக்காங்க வாழ்வியல் கவிதைகள் அத்தனையும்..அனுபவ பகிர்வுகளும் எழுதியிருக்காங்க இல்லையா ஜெஸ்ஸம்மா?

இவங்களோட இடுகைகள்





ஐந்து வாரங்கள் எந்தத் திரட்டியிலும் இணையாவிட்டாலும் எனது பதிவுகளுக்குக் கிடைத்த கருத்துக்கள் என்னைத் தொடர்ந்து எழுத வைத்தன.
தமிலிஷ் இல் முதலில் இணைந்தபோது கிடு கிடுவென நீண்டு சென்ற பின் தொடரும் நண்பர்களின் பட்டியலும், பதிவிட்ட சில மணி நேரத்தில் குவிந்து விட்ட கருத்துக்களும் என்னை வானத்தில் பறக்க வைத்தன என்று சொன்னால் மிகையாகாது. எட்டு மாதமும் ,ஐம்பது பதிவுகளும் ,108 தொடரும் நண்பர்களும் நான் எதிர் பார்க்காத வரப்பிரசாதங்கள்.
உங்கள் கருத்துகளும் , திரட்டிகளில் அளித்த வாக்குகளும் என்னைப் பல பதிவர்கள் அறிந்து கொள்ள வைத்தன. அதனால் பெற்ற ஊக்கம்தான் என்னை ஐம்பதாவது ப்திவு வரை கொண்டு வந்துள்ளது. இங்கே' நன்றி ' என்ற ஒரு வார்த்தை போதாது என்று எனக்குத் தோன்றுகிறது.



ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக , நான் யார் என்பதறியாமல், முகம் தெரியாமல் வெறும் எழுத்துக்களால் மட்டும் ஈர்க்கப் பட்டு , உலகின் வெவ்வேறு மூலைகளிலிருந்து வந்து சேர்ந்த அன்பு உள்ளங்கள் விலை மதிப்பற்றவை. மேடம் என்றும், தோழி என்றும், அக்கா என்றும் , அம்மா என்றும் வளர்ந்து விட்ட உறவுகள் பொன்னானவை. இரண்டு வாரம் பதிவிட வில்லையென்றால் '' என்னாச்சு ஜெஸ் '' என்று மெயிலனுப்பும் வலையுலக நண்பர்கள் தான் எனக்குக் கிடைத்த பெரும் விருது. நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பும் ஆசியும் மக்கா.


.

Sunday, 10 January 2010

பாதை மாறிய பயணம்



அந்தப்
பேரூந்தின் ஜன்னலோர இருக்கையிலிருந்து வெளியே நாற்பது மைல்வேகத்தில் ஓடிக் கடந்து கொண்டிருக்கும் காட்சிகளை வெறித்துக்கொண்டிருக்கிறாள் சுமி. கண்ணைக் கவரும் , ரம்மியமான அந்த மலையோரக்காட்சிகளோ , வழமையாக அவள் ரசிக்கும் பச்சைப் பசேலென்ற வயல்வெளிகளோ அவள் கவனத்தில் பதிந்ததாகத் தெரியவில்லை. அவள் மனதை நிறைத்திருந்த வெறுமையும் விரக்தியும் அவள் கண்ட காட்சிகளில் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன. அந்த பேரூந்தின் இரைச்சலோ , சூழ்ந்திருந்தவர்களின் சம்பாஷனைகளோ அவள் காதில் விழவில்லை . அவளுக்குப் பக்கத்து இருக்கையில் ஒரு சஞ்சிகையைப் படித்தபடி அமர்ந்திருக்கிறான் கிரிதர். இப்படிஒரு நெருக்கமான சந்தர்ப்பத்துக்காக அவர்கள் ஏங்கிய காலம் ஒன்று இருந்தது. ஆனால் இத்தனை காலம் இனித்த அவன் அருகாமை இப்போ நெருப்பாகச் சுட்டாலும் , தலை வெடித்து சுக்கு நூறாகி விடும் போன்ற உணர்வில் துடித்தாலும் , எதையும் பொருட்படுத்தாமல் அந்த இருக்கையில் அப்படியே உறைந்து போயிருக்கிறாள் சுமி . அவர்கள் உடல்கள் மட்டுமே நெருக்கத்திலிருக்க, மனங்கள் பல காத தூரத்தில் அலைபாய, விதி மட்டும் இவர்களைப் பார்த்துக் கைதட்டி நகைத்துக் கொண்டிருந்தது.

மொத்தமாக ஆறு மணி நேரப் பயணம். பாதித் தூரம் கூட இன்னும் தாண்டவில்லை. ஏதோ ஒவ்வொரு நிமிடமும் நீண்ட கணங்களாக , நெஞ்சைக் பிழிந்தெடுக்கும் வேதனையில் துடித்தாலும் , அழுது விடக் கூடாது என்ற வைராக்கியத்துடன் சுமி தன் பார்வையை வெளியிலிருந்து திருப்பாமல் இருக்கிறாள். நல்ல வேளையாக தேனீர் அருந்துவதற்காக அந்தத் தரிப்பில் 20 நிமிடம் நிறுத்துகிறார்கள். அதற்காகவே காத்திருந்தது போல் பலரும் முண்டியடித்துக் கொண்டு இறங்குகிறார்கள். கிரிதரும் எழுந்திருக்கிறான். ''உமக்கு என்ன வேணும்?'' என்று அவளிடம் கேட்கிறான். அந்தக் குரலில் இருந்த தூரத்தை அவளால் உணரமுடிகிறது. அது உணர்ச்சிகளற்ற வெறும் இயந்திர வார்த்தை. அதே போல் இவளும் '' தேனீர் மட்டும் போதும்'' என்று அவன் முகத்தைப் பார்க்காமலே பதில் சொல்கிறாள். அவன் விரைந்து இறங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தவள் மனம் பின்னோக்கி அசுர வேகத்தில் பாய்கிறது.

********
நான்கு வருடங்களுக்கு முன்பு பல்கலைக் கழகத்தில் காலடி எடுத்து வைத்தபோது சக மாணவனாக கிரிதரைச் சந்தித்தது வேதனையுடன் நினைவில் வருகிறது. எப்போ முதலில் அவனைக் கண்டாள் என்பது நினைவில்லை. கண்டதும் திரும்பிப் பார்க்க வைக்கும் ஆணழகன் அவனல்ல. அதற்கு மாறாகஅவனது பார்வையும், சிரிப்பும், தோற்றமும் பேசிய பேச்சுக்களும் நண்பிகள்மத்தியில் எரிச்சலை மூட்டியதால் தான் அவனைத் தெரிந்து கொள்ளவேமுடிந்தது. அவனுடன் கதைக்கவேண்டிய சில தருணங்களின் போது , அவள்மனதில் '' இவன் ஏன் இப்படி எல்லோருக்கும் வெறுப்பேற்றுகிறான்?'' என்ற கேள்வி எழுந்து கொள்ள, அந்தக் கேள்விக்கு விடை காண வேண்டும் என்ற அவாவும் சேர்ந்து அவனுடன் நட்பு வளரக் காரணமாகியது. பழகிய சிலவாரங்களில் அவனைப் பற்றியும் ,அவனது குடும்பத்தைப் பற்றியும் அறிந்துகொண்டதில் , அவன் பேச்சுக்கும் ,எண்ணங்களுக்கும், பழகும் விதத்திரற்கும் உண்டான இணக்கத்தை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதுவே இரக்கமாக மாற ' இவனை எப்படியும் மாற்றி விட வேண்டும் ' என்ற ஒரு எண்ணம் மனதில் அவளையறியாமல் வித்தாகி விட்டது.

''எங்கள் பிரிவில் எத்தனை நல்ல பெடியன்கள் இருக்கிறார்கள். அவர்களை விட்டிட்டு உனக்குக் கொஞ்சமும் பொருந்தாத இந்த கிரி மேல் ஏன் உனக்கு இத்தனை கரிசனை ?'' பலமுறை அவள் ஆருயிர் நண்பி சொன்ன அறிவுரைகள் விழலுக்கு இறைத்த நீராகப் போய் விட்டன. ஆனால் ஒரு சில மாதங்களில், அவன்'' ஐ லவ் யூ '' என்று சொன்னபோதுதான் திடுக்கிட்டு விழித்தாள். அன்றுவரை அவன் மேல் அவளுக்கிருந்த அக்கறையை அவள் காதலாக நினைக்க வில்லை. கண்டதும் அவனுருவம் அவளைக் கவரவில்லை . அவனைப் பார்க்க வேண்டும்என்று அவள் துடித்ததில்லை. அவள் கனவில் அவன் வரவில்லை. சுருக்கமாகச்சொன்னால் ,அதுவரை அவள் பார்த்த சினிமாவிலோ, படித்த கதைகளிலோ கொட்டிக் கிடந்த காதலுக்கான அறிகுறிகள் எதுவுமே அவர்கள் நட்பில் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாள். தப்புப் பண்ணிவிட்டோமோ என்று நினைத்துப் பயந்து முற்றாக அவன் நட்பையே ஒதுக்கிவிடுவோம் என்று முடிவெடுத்தாள். ஆனால் விதி விடவில்லை. தேவதாஸ் கோலத்தில் திரிந்த கிரிதரும் , அவனுக்கு ஆதரவான ஒரு சில நண்பர்களும் , '' இதை முன்னரே யோசித்திருக்க வேண்டும். பழகும் போதே சொன்னேன். இப்படித்தான் போய் முடியுமென்று ..'' என்ற நண்பியின் குற்றச் சாட்டும் , அடிமேல் அடியடிக்க, இதுவும் காதல் தானோ என்று சிந்திக்க ஆரம்பித்தாள். விளைவு அவர்கள் இருவரையும் காதலர்களாக்கி விட்டது.

காலம் இயந்திர கதியில் பறந்தது. கிரி முந்தின கிரியல்ல. நடையுடையில் மட்டுமல்ல , பேச்சு , பழக்கங்களில் கூட பெரும் மாறுதல் அவனிடம். தினம் காலையில் சந்தித்தால், வகுப்புகளோ, நூலகம் செல்வதோ, சாப்பிடுவதோ, கோவிலுக்குப் போவதோ எல்லாமே ஒன்றாகவே செய்தார்கள். நண்பர்கள் இவர்களை ' குடும்பம்' என்று பட்டப் பெயர் வைத்து அழைக்கும் படியான நெருக்கம். உண்மையைச் சொல்லப் போனால் கல்யாணமானவர்களுக்குக் கூட அத்தனை நேரம் ஒன்றாகக் கழிக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. இந்த நெருக்கத்தில் நான்கு ஆண்டுகள் விரைவில் ஓடி மறைந்தது அவர்களுக்கே ஆச்சரியம் தான்.

ஆனால்
கடைசி வருடத்தில், அவன் பேச்சில் தெரிந்த மாற்றங்கள் அவளைத் துணுக்குற வைத்தன. குடும்பத்தில் மூத்த பையனென்பதால் கிரிக்கு இருந்தபொறுப்புகள் அவள் அறிந்த விடயந்தான். அந்தப் பொறுப்புகள் தனதும்கூடவென்றுதான் அவள் நினைத்திருந்தாள். அவனது பொறுப்புகளை எண்ணிஅவன் கலங்கிய சமயங்களில் அவள் தனக்கென்று வரும் எதையும் அவனுக்குத்தந்து உதவுவதில் அவள் சம்மதத்தையும் தெரிவித்திருந்தாள். ஆனால் அன்றுஅவனது மாமா ஒருவர் அவனைச் சந்திக்க வந்திருந்தபோது, அவரை அழைத்துவந்து சுமிக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவரை வழியனுப்பி வந்தவன், அவரைப் பற்றிச் சுமிக்கு சொன்னான்.'' மாமா இப்போ மிகவும் வருத்தப் படுகிறார். அவர் காதலிக்காமல் இருந்தால் நல்ல சீதனத்துடன் அவர் கல்யாணம்செய்திருக்கலாம்'' அவன் வாயில் இருந்து விழுந்த வார்த்தைகளில் இருந்த சுயஇரக்கம் அவள் இதயத்தில் ஈட்டி போல் பாய்ந்தன. இவன் என்ன சொல்கிறான். சீதனம் என்னும் பெயரில் தங்களை விலைகூறி விற்கும் ஆண்களைத் துச்சமாக நினைப்பவள் அவள். இந்தக் கிரியும் அவர்களில் ஒருவன் தானா? இதற்குப்பெயர் தான் காதலா? என்று குழம்பிப் போனாள்.

இந்த நிலைமையில் இவர்கள் காதல் விபரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்துவிட்டது . சுமி வீட்டில் எவருக்கும் கிரிதரைப் பிடிக்கவில்லை. அதில் அவளுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. எவருக்குமே கிரிதரைக் கண்டதும் பிடித்ததில்லை. அப்படியான முகராசி அவனுக்கு. விடுமுறைக்கு வீடு சென்றபோது கிரிதர் அவள் தாயாரைச் சந்தித்து பேசியது தெரிந்தது. அவர்கள் காதலைப் பற்றிச் சொல்லி தனது குடும்ப பொறுப்புகளைப் பற்றியும் விளக்கியிருக்கிறான். மறைமுகமாகவோ நேராகவோ தனது பணத் தேவை பற்றிக் கதைத்திருக்கிறான் என்பது அவள் தாயாரின் கதையில் தெரிந்தது. அதைக் கேட்டு சுமி அதிர்ந்துவிட்டாள். தனக்கு ஒரு வார்த்தை தன்னும் சொல்லாமல் அவன் அவள் தாயாருடன் இதைப் பற்றிக் கதைத்தது அவளை வெகுண்டெழ வைத்தது.
இருவருமே மனம் திறந்து எதையும் பேசிக் கொள்ள வில்லை. அவனோ எதிர்காலத்தைப் பற்றியோ , கல்யாணத்தைப் பற்றியோ மூச்சு விடாமல் இருந்தான். தினமும் சந்திப்பவன் சில சமயம் வாரக் கணக்காகத் தலை காட்டாம லிருந்தான். ஏதோ வீட்டுப் பிரச்சனை என்று மனதை ஆசுவாசப் படுத்தினாலும் , அவனதுஅலட்சியம் அவளைக் கனவுலகிலிருந்து நனவுக்குக் கொண்டு வந்தது. உள்ளுக்குள்ளாகவே புழுங்கி ,வெந்து மாய்ந்து , அழுது தீர்த்து , வாழ்க்கையையே வெறுக்க வைத்த அந்த இரண்டு மாதங்களை அவளால் மறக்க முடியாது.



இன்று பட்டப் படிப்பு முடிந்து கடைசியாக எல்லோரிடமும் பிரியாவிடை பெற்று புறப்படும் போதும் கூட , வாயைத் திறக்காமல் கட்டை மாதிரி இருந்த அவனை , மெல்ல மெல்லக் கொன்ற அவனது அருகாமையை அவள் மனதார வெறுக்கத் தொடங்கி சில வாரங்கள் ஆகி விட்டன. வேண்டாம் , இந்த அவஸ்தை வேண்டவே வேண்டாம் என்று அவள் முடிவெடுத்து விட்டாள்.
''அவன் என்னவன் '' என்ற இறுமாப்பில் இருந்த அவள் முகத்தில் கிரி மிக இலகுவாகக் கரியைப் பூசி விட்டான்.

அழுது குழறி அவள் வீட்டாரை அவளால் இணங்க வைக்க முடியும். ஆனால் வெறும் பணத்துக்காக , அத்தனை காலமும் அவள் கொட்டித் தந்த பாசத்தை மறந்த அவனைக் கணவன் ஸ்தானத்தில் வைத்துக் பார்க்க அவளால் முடியவில்லை. அவள் இதயம் இரத்தக் கண்ணிர் வடித்தது உண்மைதான் . ஆனால் எதுவுமே அவள் உடைந்து போன இதயத்தை ஒட்ட வைக்கப் போவதில்லை.

***********

கிரி தேனீருடன் வருகிறான். அதை வாங்கி மெல்ல அருந்துகிறாள். அவனும் அந்தச் சிற்றுண்டிக் கடையில் இரண்டு பேர் சச்சரவு பண்ணின கதையைச் சொல்கிறான். இப்படி மற்றவர்களைப் பற்றியும் அவர்களுக்கு முக்கிய மில்லாதவிடயங்கள் பற்றியும் தான் இப்போதெல்லாம் அவன் பேச்சு இருக்கிறது. வழமைபோல் அதைக் காதில் வாங்கிக் கொண்டாள். இவளருகே இருக்கும் இந்தப் புது மனிதனை அவளுக்குத் தெரியவே தெரியாது. அவன் முகத்தில் தெரிந்த ஒரு இனம் தெரியாத இறுக்கம் அவளுக்குப் புதியது. இன்றும் அவன் எதுவும் சொல்லப் போவதில்லை. அவளும் எதையும் எதிர் பார்க்கப் போவதில்லை. மீதி மூன்றுமணி நேரமும் விரைவில் ஓடி விட வேண்டும் என்று மனதுக்குள் பிராத்தித்துக் கொள்கிறாள்.

அவளின் உணர்ச்சிப் போராட்டம் எதையும் அறியாத பேரூந்து அலுங்கிக் குலுங்கி அவள் ஊரை அடைகிறது. அவளது பெட்டிகளை இறக்க கிரி உதவுகிறான். அவனை நிமிர்ந்து பார்க்காமலே நன்றி சொல்கிறாள். பேரூந்து அவனுடன் புறப்படுகிறது. அவன் கையசைக்கிறானா? என்று பார்க்க ஒரு கணம் அவள் மனது துடிக்கிறது. ஆனால் அறிவு அதை அடக்குகிறது. இந்தக் கதை இந்தப் பேரூந்து நிலையத்தோடு முடியப் போகிறது என்பது அவள் அறிவுக்குப் புரிகிறது.
'


.

Friday, 8 January 2010

யார் மேல் தப்பு?


அவசரமாகத் தபாலுறையைக் கிழித்து கடிதத்தை வெளியே எடுத்தவள் , மகிழ்ச்சியில் கைகள் நடுங்க ,''அம்மா வேலை கிடைச்சாச்சு'' என்று குரல் கொடுத்தபடி சமயலறைக்கு ஓடினேன். நான் ஆசிரியை வேலைக்கு மனுப் போட்ட விடயம் அறிந்திருந்ததால் ''எங்கேயடி வேலை ?'' மகிழ்ச்சியும் கலவரமும் ஒன்றாகத் தாக்க, பதைப்புடன் கேட்டாள். வேலை கிடைக்க வேண்டும் என்று தினமும் பிராத்தித்துக் கொண்டிருக்கும் எனக்காக மகிழ்ந்தாலும், நாட்டு நிலவரத்தில் பெண்ணை வீட்டை விட்டு வேறூருக்கு அனுப்பப் பயப்பட்டவளுக்கு ,''கொழும்பில் தான்'' என்ற என் பதில் பீதியைக் கிளப்பியதில் ஆச்சரியமில்லை. '' நீ தனியே போய் அங்கே இருக்க ஏலாது .எங்கட சொந்தக் காரர் எல்லாரும் ஒருவர் ஒருவராகயாழ்ப்பாணம் வந்து சேர்ந்து விட்டார்கள். நீ போய் தெரியாதவர்கள் வீட்டில் இருப்பது சரியில்லை. பாது காப்புமில்லை.'' தீர்மானமாகச் சொல்லி விட்டாள் அம்மா. எனக்குக் கைக் கெட்டியது வாய்க் கெட்டாமல் போய் விடுமோ என்ற பயம் வந்து விட்டது.

ஒரே மணி நேரத்தில் அவளுக்குத் தெரியாமல் ,தொலைபேசியில் கொளும்பில் பல வருடங்கள் வசிக்கும் என் பால்ய தோழி சுதாவுடன் கதைத்து, அவள் வீட்டில் தற்காலிகமாகத் தங்குவதற்கு தயார் பண்ணி விட்டேன். அவள் தந்த ஊக்கத்தில் பிறந்த துணிவுடன் எப்படியும் இந்த வேலையில் சேருவது என்று தீர்மானித்தும் விட்டேன். அடுத்து அம்மாவைச் சமாளிக்கும் படலம் தானே! வழமை போல் , என்பக்கத்துக்குக் கதைக்க சின்னம்மாவை அழைத்து வந்து ,ஒருபடியாக அவளைத் தயங்கித் தயங்கிச் சரி சொல்ல வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. என் சேமிப்பில் இருந்த பணம் முதல் மாதச் சம்பளம் வரும் வரைக்காணாது என்று தோன்றியதால், அம்மாவிடம் பணம் வாங்கிக் கொண்டு என் பெட்டியைக் கட்டி விட்டேன்.
கொழும்பு வந்ததும் நேரே என் தோழி வீட்டுக்குப் போனேன். அவர்கள் வீட்டில் அவள் ஒரே பிள்ளை. மிகச் செல்லமாக வளர்ந்தவள். என்னையும் விழுந்து விழுந்து உபசரித்தார்கள்.அதுவே எனக்குப் பெரிய சங்கடமாக விருந்தது. அவர்களிடம் கடமைப் படுகிறோம் என்ற உணர்வில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அன்று வேலையில் கடமையேற்றதும் என்னைப் போலவே அன்று புதிதாகச் சேர்ந்த சக ஆசிரியை சுசீலாவோடு கதைத்த போது, என் கதைதான் அவளதும் என்று புரிந்தது. வீட்டார் மறிக்க மறிக்கத் தான் , அவர்களைச் சமாதானப் படுத்தி வந்திருந்தாள். ஆனால் அவள் மாமி வீட்டில் தங்கியிருந்தாள். தொலைவில் அவர்கள் இருந்ததால் தினமும் மூன்று மணிநேரம் பஸ் பயணம் அவளைப் பயப்படுத்தியது. அப்போதான் தலைமை யாசிரியர் அருகிலுள்ள பெண்கள் வதிவிடத்தில் தனது சிபாரிசில் இடம் எடுத்துத் தருவதாகச் சொன்னார். எங்களுக்குத் தேடித் போன தெய்வம் நேரில் வந்ததுபோல் இருந்தது.

ஒரே வாரத்தில் நானும் சுசிலாவும் ஒரே அறையில் தங்கும் வசதியுடன் அந்த பெண்கள் விடுதியில் இடம் எடுத்துக் கொண்டோம். அங்கிருந்து ஐந்து நிமிடத்தில் பாடசாலைக்கு நடந்து விடலாம். இதைவிட வேறு என்ன வேண்டும்? ஒரேயொரு பிரச்சனை. அவர்கள் பரிமாறிய சிங்கள உணவு இருவருக்குமே பிடிக்கவில்லை. அங்கே சமைத்துச் சாப்பிடவும் வசதியில்லை. வெளியில் வாங்கி வந்துசாப்பிடலாமென்றால் , வீட்டில் இருந்து கொண்டு வந்த பணம் முடியும் தருவாயில் இருந்தது. மாதம் முடியச் சம்பளம் வந்துவிடும் என்பதால் கணக்குப்போட்டு செலவு செய்து கொண்டிருந்தோம்.
ஒருபடியாக
சம்பள நாளும் வந்தது. சம்பளப் பட்டியலில் எங்கள் பெயரும் இல்லை. சம்பளமும் இல்லை. அதிர்ந்துபோனோம். தலைமையாசிரியர் கல்வி இலாகாவுக்கு எழுதுவதாகச் சொன்னார். வேறு வழியில்லாமல் உடனடியாகப் பணம் அனுப்பும் படி வீட்டுக்குத் தகவல் கொடுத்து விட்டு ,இன்றுவரும் நாளை வருமென்று சம்பளத்தை எதிர் பார்த்து இருந்தோம். ஒரு பதிலும் வரவில்லை. அடுத்த வாரம் , சம்பள நாள் என்பதால் நேரே கல்வி இலாகாவுக்குப் போய்க் கதைப்பது நல்லது என்று தலைமையாசிரியர் கருத்துத் தெரிவித்தார். அது கூட புதன், வெள்ளிக் கிழமையில் தான் நேர் விசாரணைக்கு ஒதுக்கி யுள்ளார்கள் என்றும் அறிந்து கொண்டோம். இந்த விடயத்தைத் தலைமை ஆசிரியர் எங்களுக்கு முன்னரே சொல்லியிருக்கலாம். அவருக்கு எங்கள் நிலைமை தெரிய வாய்ப்பில்லை.

புதன் கிழமை , பாடசாலை முடிந்ததும் கல்வி இலாகாவிற்கு வியர்க்க விறுவிறுக்கப் போய்ச் சேர்ந்தோம். அங்கு போனதும் ஒரு இலக்கச் சீட்டு எடுக்கவேண்டும். அந்த வரிசையில் தான் விசாரணைக்கு அழைப்பார்கள் என்பதும்தெரிந்தது. எல்லாமே முதல் அனுபவம். எங்களுக்குக் கிடைத்தது 21 ம் 22 ம் இலக்கங்கள். பொறுமையுடன் காத்திருந்தோம். மாலை ஐந்து மணிவரை 15 இலக்கம் வரை தான் போனது. மற்றவர்களை வெள்ளி வரும் படி சொன்னார்கள். அடடே! விடயம் தெரிந்திருந்தால் ஒரு அரை மணி நேரம் முன்னராகவே புறப்பட்டு இருக்கலாம்என்று தோன்றியது. வெள்ளியன்று ,முன்னரே தலைமை ஆசிரியரிடம் அனுமதிபெற்று அரை மணி முன்னதாகவே கல்வி இல்லாகாவை அடைந்து விட்டோம். அன்றும் எங்கள் இலக்கம் 16 ம் 17 ம் இலக்கங்கள் தான். பெரும் ஏமாற்றம் தான் .ஆனால் ஒரு நப்பாசையில் இரண்டு மணி நேரம் காத்திருந்தோம். அன்றும் களைத்துப் போய்த் திரும்பியது தான் மிச்சம்.

இதற்கிடையில் அடுத்த மாதச் சம்பளப் பட்டியலில் எங்கள் பெயரும் இல்லை. சம்பளமும் இல்லை. தலைமை ஆசிரியர் திரும்பவும் கடிதம் எழுதினார். அதில் நம்பிக்கை இல்லாமல் புதன் கிழமை அரை நாள் ஓய்வு எடுத்துக் கொண்டு இரண்டு மணிக்கு அலுவலகம் திறக்கும் முன்னரே போய்ச் சேர்ந்து விட்டோம். நாங்கள் மட்டும்தான் இருந்தோம். அலுவலகம் திறந்தபோது எங்களுக்குக்கிடைத்த இலக்கம் 5 ம் 6 ம் இலக்கங்கள் தான் .'' ஏன் அப்பிடி?'' என்று கேட்க நான் ஆரம்பித்தபோது சுசிலா என்னைக் கிள்ளி, வாயடைக்க வைத்து விட்டாள். '' வந்தவேலையை முடிக்கும் அலுவலைப் பார். இந்தப் பியோனுடன் கொழுவினால் ஒரு அலுவலும் நடக்காது '' என்று என் காதில் கிசு கிசுத்தாள். ஆனால் அன்றும் சோதனையாகவே முடிந்தது.எங்கள் முறை வந்தபோது, எங்கள் பைல்களைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம். அடுத்த வாரம் வரும் படி சொன்னார்கள். இடிந்து போய் வெளியே வந்த போது , என் தாயாரை நன்கு அறிந்த ஒரு வயதானஆசிரியை என்னைக் கண்டதும்,''என்ன பிரச்சனை ?''என்று விசாரித்தார். எங்கள் விடயத்தை அறிந்ததும் '' நீங்கள் புதிதென்பதால் உங்களுக்கு விடயம் விளங்கவில்லை. பியோனைப் பார்த்துக் கதையுங்கள். அவன் கையில் ஏதும் வைத்தால் தான் எதுவும் நடக்கும் '' என்ற தொழில் ரகசியத்தைச் சொன்னார்.

நசுவியபடிஅங்கு நின்றோம். அவனுக்கும் விடயம் விளங்கியதுபோல் எங்கள் பக்கமே உலாவினான். தெரிந்த சிங்களத்தில் பணம் தருவதாகவும் , பைலை எடுத்து வைக்கும் படியும் சொன்னோம். படுபாவி, ஆளுக்கு 400 ரூபாய் என்றான் .அப்போ எங்கள் சம்பளமே 2500 ரூபாய் தான். சம்மதித்துப் புறப் பட்டோம். வெள்ளி 3 மணிக்குப் போனபோது எங்களுக்கு ஐந்தாம் ,ஆறாம் இலக்கங்கள் கிடைத்தன. எங்களுக்கு முன்னர் வந்தவர்கள் ௨0 ஆம் இலக்கத்துடன் இருப்பதை அவதானித்தேன். சில நிமிடங்களில் எங்கள் இருவர் பிரச்சனையும் தீர்வாக்கப்பட்டு, இருவருக்கும் மூன்று மாதச் சம்பளத்துக்கான காசோலையும் தந்து, தாமதத்திற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் அந்த ஆபீசர். இந்த லஞ்சம் செய்த அதிசயத்தைக் கண்டு , இந்த ரகசியத்தை முன்னரே யாராவது சொல்லியிருந்தால் எங்கள் அலைச்சலையும் கவலையையும் தீர்த்திருக்குமே என்று நினைத்துக் கொண்டேன். சுசிலாவிடம் பணம் இல்லாததால், அவள்பங்கையும் சேர்த்து என்னைக் கொடுக்கச் சொன்னாள். எங்களை சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுப் பின் தொடர்ந்த பியோனிடம் பணத்தை கையில் கொடுத்தபோது, பலத்த கைதட்டல் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுப் பார்த்தேன். அங்கே மூன்று ஆபீசர்கள் நின்று கொண்டிருந்தார்கள். எங்களை உள்ளே வரும்படி அழைத்தார்கள். ஏங்கிப் போனேன்.கையும் களவுமாகப் பிடிபட்டுப் போனோம் என்று தெரிந்தது. இன்னும் பணம் என் கையில் தான் இருந்தது. பியோன் தலையில் அடித்து அழுது கொண்டிருந்தான். என் தோழி சுசிலா ,ஒரு சரியான பயந்தாங் கொள்ளி. முகத்தை மூடிக் கொண்டு விசும்பத் தொடங்கி விட்டாள். இப்படியான தருணங்களில் எனக்கு எங்கிருந்து தைரியம் வருகிறதோ தெரியவில்லை.''அழாமல் வா'' என்று அவளுக்கு நெருமிவிட்டு கிடு கிடுவென உள்ளே போனேன். சுசீலா என் பின்னால் ஒழிந்தபடி பின்தொடர்ந்தாள்.
அந்த
மூன்று ஆபீசர்களும் இருந்து எங்களை அவர்கள் முன்னால்இருந்த இருக்கையில் அமரச் சொன்னார்கள்.''அரசாங்க உத்தியோகத்தில்இருப்பவர்கள் லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் சட்டப் படி குற்றம் என்பது உங்களுக்குத் தெரியுமா ?'' என்று இருவரிடமும் கேட்டார்கள். ''ஆமாம் '' என்றுபதில் சொல்லும் வரை அதையே கேட்டார்கள். ''உங்கள் இருவரையும் வேலையிலிருந்து நீக்கப் போகிறோம். கடிதம் பாடசாலைக்கு அனுப்பப் படும் '' என்றார்கள். உலகம் ஒருமுறை தட்டாமாலை சுற்றினாலும் நான் இன்னும் தைரியமாகத் தான் இருந்தேன்.
ஒரு வெற்றுப் பத்திரத்தை இருவருக்கும் தந்து , நாங்கள் லஞ்சம் கொடுத்ததை ஒத்துக் கொள்வதாக எழுதி கையெழுத்திடச் சொன்னார்கள். அப்போதான், அந்தக் கடிதத்தை வைத்துத் தான் எங்களை அவர்கள் வேலை நீக்கம் செய்யலாம் என்றுமூளையில் பொறி தட்டியது. அந்தப்பத்திரத்தில் அவசர அவசரமாக இங்கே கொட்டித் தீர்த்த அத்தனையும் ஒன்று விடாமல் எழுதினேன். கையெழுத்திட்டேன். பாடசாலையின் பெயர், தலைமை ஆசிரியரின் பெயர் எல்லாம் எழுதினேன். கொடுத்துவிட்டு எனக்கு ஒரு காப்பி (copy )வேண்டும் என்று கேட்டேன். தந்தார்கள். அந்த அசடு சுசிலா தான் லஞ்சம் கொடுத்ததாக எழுதிகையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டு அழுது கொண்டே வந்தாள்.

அடுத்த நாள் என் கடிதத்தை தலைமையாசிரியரிடம் காட்டிய பொழுது, தன்கண்களையே நம்ப முடியாமல் ''உண்மையில் இதைத்தான் எழுதினீர்களா டீச்சர் என்று கேட்டார். ''ஆம்'' என்று சொன்னதும், சிரித்தபடி '' கவலைப் படாதீர்கள். பிரச்சனை எதுவும் வராது '' என்று சொன்னார். அதைத்தான் நானும் நினைத்தேன். கல்வி இலாகாவிலிருந்து ஒரு சில வருடங்களுக்கு எங்கள் வேலை நீக்கக்கடிதம் வரவேயில்லை.

பி.கு. பொறுமையோடு படித்த அனைவருக்கும் நன்றி.


Tuesday, 5 January 2010

ஜெய்பூர் முழங்கால் மூட்டு

ஆக்ராவைச் சேர்ந்த கமலின் கதை உங்களுக்குத் தெரியுமா? ஒரு விபத்தில் காலை இழந்த இந்தப் பையன் உலகப் பிரசித்தம் அடைந்து விட்டான். அவன் கதை அறிய ஆவலிருந்தால் தொடர்ந்து படியுங்கள்.

முன்னேறிவரும் நாடுகளில், காலை இழக்கும் துரதிஸ்டசாலிகள் பல்லாண்டுகளாக ' ஜெய்பூர் கால்' ( Jaipur Foot) என அழைக்கப் படும் பொய்க்கால் பொருத்தப் பட்டு நடக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இந்த செயற்கைக் கால் ஜெய்ப்பூரில் செய்யப் பட்டதால் இந்தப் பெயரைப் பெற்றது. அத்துடன் மிக மலிவானதால் பலராலும் பயன்பெறவும் முடிகிறது. ஆனால் முழங்கால் மூட்டுக்கு மேலாகக் காலை இழந்தவர்கள் இந்தக் காலை உபயோகிக்க முடியாது. அப்படியானவர்கள் விலை அதிகமான டைட்டானியம் ( titanium replacement) மூட்டு ஒன்றைப் பாவித்தே ஜெய்பூர் காலை இணைக்க முடியும். இந்த விசேட மூட்டின் விலை கிட்டத்தட்ட பத்தாயிரம் அமெரிக்க டாலர்களாகும். அதை விட விலை குறைவான மூட்டுகள் சில இருந்தாலும், அவை சரிவர இயங்குவதில்லை. அதனால் இத்தகைய துரதிஸ்ட சாலிகள் அனேகமாக வாழ் நாள் முழுவதும் நடக்க முடியாமல் அவதிப் படுகிறார்கள்.





இந்த
விதத்தில் ,ஒரு வாகன விபத்தில் இடது காலை இழந்த 15 வயதுப் பையன் தான் இநதக் கமல். அன்றிலிருந்து ஒரு மூங்கில் கோலை இரு கைகளாலும் ஊன்றி நடக்கக் கற்றுக் கொண்டான். ஆனாலும் அவனால் மற்றவர் உதவியில்லாமல் தன்னைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை. இரண்டு வருடங்கள் இப்படி நடந்ததில் அவனது முதுகெலும்பு வளையத் தொடங்கிவிட்டது. இந்த நிலைமையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு மருத்துவ தொழில் நுட்ப பல்கலைக் கழக மாணவர்கள் ,ஜெய்பூர் கால் நிலையத்துடன் சேர்ந்து ஒரு புதிய முழங்கால் மூட்டை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.




அவர்கள்
வடிவமைத்த மூட்டினை பரிசோதிக்க 2008 ம் ஆண்டில் ,ஜெய்ப்பூரில் கமல் இவர்களுக்கு அறிமுகப் படுத்தப் பட்டான். அப்போது அவனுக்கு வயது 17. ஜெய்பூர் காலுடன் சேர்த்துப் பொருத்தப் பட்ட இந்த மூட்டு கமலுக்குப் பொருத்தப் பட்டது. இவர்கள் இந்த மூட்டுக்கு 'ஜெய்பூர் முழங்கால் ' என்று பெயரிட்டார்கள். சில மணி நேரத்திலேயே கமல் எவர் உதவியும் இல்லாமல் நடக்கத் தொடங்கி விட்டான்.



சட்லர் என்பவரும் அவரது குழுவினரும் ஜெய்பூர் பொய்க்கால் நிலையத்தின் ஒத்துழைப்புடன் உருவாகிய அற்புதத்தைப் படத்தில் பார்க்கலாம்

இந்த 'ஜெய்பூர் முழந்தாளின்' மகிமை என்னவென்றால் , அதன் விலை இருபது அமெரிக்க டாலர்கள் தான். அதுமட்டுமல்லாமல் இதனைப் பொருத்தும் போது இயற்கையாக நடக்க முடிகிறது, மேடு பள்ளங்களில் கூட சிரமமின்றி ஏற முடிகிறது. 5 பிளாஸ்டிக் துண்டுகளாலும் ,நடுவில் எண்ணெய் நிறைந்த நய்லோன் துணியாலும் சில நட்டுகளாலும் மிக எளிய முறையில் வடிவமைக்கப் பட்ட இந்த செயற்கை அவையம் , ஒரு பிரமிக்கும் கண்டு பிடிப்பு.




5 மாதத்தின் பின்னர் இநதக் குழு கமலைச் சந்தித்த போது, அவன் இயற்கையாக நடந்து, உடைக்குள் அவன் செயற்கைக் கால் மறைய , ஜெய்பூர் ஆஸ்பத்திரியில்
நோயாளிகளுக்கு சேவை செய்யும் ஒரு பணியில் இருப்பதையும் கண்டார்கள்.
இற்றைவரை சுமார் 400 க்கும் மேற்பட்டவர்கள் ஜெய்ப்பூரில் இந்த செயற்கை முழங்காலைப் பெற்று விட்டார்கள்.

டைம்ஸ் சஞ்சிகை 2009 இல் கண்டுபிடிக்கபட்ட 50 உன்னத படைப்புகளில் இதனையும் சேர்த்து பிரசித்தமாக்கி யுள்ளது.


.

Monday, 4 January 2010

தேவதை தந்த புத்தாண்டுப் பரிசு !

மாதமிருமுறை மலரும் 'தேவதை' சஞ்சிகை , 'வலையோடு விளையாடு ' என்ற பிரிவில் தரும் பெண் வலைப் பதிவர்களின் அறிமுகங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த வரிசையில் அவர்கள் பொங்கல் சிறப்பிதழில் என்னை அறிமுகம் செய்திருக்கிறார்கள். (ஜனவரி 1-14 ) இதழ் வருடம் பிறந்ததும் வெளியாகிவிட்டதால் இதனை அவர்கள் எனக்குத் தந்த புத்தாண்டுப் பரிசாகக் கருதுகிறேன். சிறப்பாக அறிமுகம் செய்து, பெண்களைத் தட்டிக் கொடுத்து ஊக்கம் தரும் தேவதைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

திரு . நவநீதம் அவர்கள் என்னை அக்டோபர் மாதம் மெயிலில் தொடர்பு கொண்டு தங்கள் சஞ்சிகையில் அறிமுகம் செய்ய எனது புகைப் படமும் , என்னைப் பற்றிய விபரங்களும் கேட்ட போது நான் இந்த 'தேவதை ' என்ற சஞ்சிகையை அறிந்திராததால் அவற்றை அனுப்ப மிகவும் தயங்கினேன். பின்னர் அவர் தந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள நினைத்த போது , தற்செயலாக அவர் ஒரு எண்ணை அதில் தவற விட்டதால் எனக்கு இணைப்புக் கிடைக்க வில்லை. அதனால் தான் இப்போ புத்தாண்டில் முதல் அறிமுகம் கிடைக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டேன். எனது வலையத்தைச் சல்லடை போட்டு, அவர் தந்த இந்த அழகான அறிமுகத்துக்கும் தொகுப்புக்கும் முதலில் நன்றி சொல்கிறேன்.
சஞ்சிகையில் வெளிவந்த பக்கங்களை இங்கே இணைத்துள்ளேன். முடிந்தால் சஞ்சிகையை வாங்கிப் படியுங்களேன்.








.

Saturday, 2 January 2010

கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்!





சமீபத்தில் வெளியான மருத்துவ தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு.

அவுஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர்.

இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது.

சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( digital video camera) கறுப்புக் கண்ணாடியின் மத்தியில் பதிக்கப் பட்டுள்ளது. ஒருவர் இதனை அணியும் போது காட்சிகள் காமெராவினால் பதிவெடுக்கப் பட்டு கையினால் இயக்கப் படும் control கோலுக்கு அனுப்பப் படுகிறது. இது கிட்டத் தட்ட ஒரு கைத் தொலைபேசி யளவில் இருக்கிறது. இங்கே பதிவான காட்சிகள் மின்னதிர்வுகளாக மாற்றப் பட்டு, பிளாஸ்டிக் இணைப்பின் மூலமாகவும், இறுதியில் நாவின் மேல் வைக்கப் படும் லொலிப் பொப் உபகரணம் மூலமாக உணரப் படுகின்றன. இந்த மெல்லிய உணர்வுகள் நரம்பின் மூலம் மூளையைச் சென்றடையும் போது அவர்கள் காட்சிகளைக் காண முடிகிறது.

கிட்டத்தட்ட 20 மணி நேரப் பயிற்சியில் இந்தக் கருவியை ஒருவர் பாவிக்கும் முறையை முற்றாக அறிந்து கொள்ள முடியுமென்று அறிந்துள்ளனர். ஒரு பார்வை அற்றவர் மூலம் இந்தக் கருவியை முதலில் சோதனை செய்தபோது முதல் முதலாக எழுத்துக்களைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அத்தோடு இந்த கொன்றோல் கோல் காட்சிகளை பெரிதாக்கவும் (zoom) வெளிச்சத்தைக் குறைக்கவும் அதிகரிக்கவும் வசதியளிக்கிறது.

இந்த மகத்தான கண்டு பிடிப்புக்குப் பொறுப்பான ஆய்வினர் , பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறிவதற்கும், மற்றவர் உதவியில்லாமல் நடமாடவும், போகும் திசைகளையும் ஊர்களின் பெயர்களையும் படிப்பதற்கும் உதவியாகயிருக்கும் என்றும் , இந்தக் கருவியை உபயோகித்து புத்தகம் படிப்பது அவசியமில்லை என்று சொல்கிறார்கள்.

அவர்கள் அறிக்கையின் படி இக்கருவி மிக விரைவில் விற்பனைக்கு வருமென்று தெரிகிறது. இக் கருவி கண் பார்வையற்றவர்களின் தன்னம்பிக்கையையும் , தற்பாதுகாப்பையும் அதிகரிக்கும் ஒரு மிகப் பெரிய வரப் பிரசாதம் என்று நான் கருதுகிறேன்.


.