நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Wednesday, 25 August 2010

இனியதொரு பயணம் 3

அந்த உணவகத்தில் வேலை செய்தவர்கள் சரளமாக ஆங்கிலம் கதைத்தார்கள்.அவர்கள் மட்டுமல்ல , எங்களை எதிர் கொண்ட அனைவருமே ஆங்கிலத்தில் உரையாடியதைக் காண வியப்பாகவே இருந்தது. மொல்தீஸ் பாசை கேட்பதற்கு எப்படியிருக்கும் என அறியும் ஆவல் எங்களிடம் மேலோங்கியிருந்தது. அவர்கள் உணவில் மீனும் ,அதற்கு சுவை சேர்க்கும் விதம் விதமான கூட்டுக்களும் பிரசித்தமானவை. அது தவிர ,அவர்கள் மெனுவில் பல இத்தாலிய, ஆங்கில உணவுகளின் கலவை இருந்தது. பரிமாறியவர்கள் ,நட்புடன் நாங்கள் எந்த நாட்டிலிருந்து வந்தோம் என்று விசாரித்தார்கள். அவர்கள் நாட்டுக்கு எந்த உணவு வகைகளும் இறக்குமதி செய்யப் படுவதில்லை யென்றும் , தங்கள் நாட்டில் பெரும் பகுதி வரண்ட பூமி யென்றாலும் உணவுற்பத்தியில் தாங்கள் தன்னிறைவு கொண்டிருப்பதாகப் பெருமையுடன் சொன்னார்கள். அங்கே இயற்கை உரம் மட்டும் தான் விவசாயத்தில் பாவிக்கப் படுவதாகவும் , கிருமி நாசினிகள் மிக அருமையாகத் தான் பாவிக்கப் படுவதாகவும் , பெரும் பாலான உல்லாசப் பயணிகள் இந்த ஒர்கனிக் (organic)
உணவுகளை உண்பதற்காகவே அடிக்கடி வருவதாகவும் சொன்னார்கள்.இந்த விடயம் எங்களுக்குப் புதிய தகவலாக இருந்தது. அவர்கள் உணவும் , உபசரிப்பும் மனத்தைக் கவர்ந்தது.
சாவகாசமாக வெளியே வந்து வாடகை வண்டியொன்றை அழைக்கலாமென்று பார்த்தபோது , நாங்கள் வந்த பாதைகள் எல்லாம் அடைக்கப் பட்டு வாகனங்கள் தடைப் படுத்தப் பட்டது தெரிந்தது. விசாரித்த போது , அருகேயுள்ள தேவாலயப் பெருநாள் என்றும் , அதற்காக இரவு பத்து மணிக்கு வான வேடிக்கை நடக்கப் போவதாகவும் , அதைப் பார்க்க மக்கள் திரண்டு வருவதால் , பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை என்றும் அறிந்தோம். சரியான தருணத்தில் , சரியான இடத்தில் வந்திருக்கிறோம் என்று மகிழ்ந்தோம். திரள் திரளாக நடந்து கொண்டிருந்த கூட்டத்தை நாங்களும் தொடர்ந்தோம். சுமார் 40 நிமிடங்கள் நடந்து விட்டோம் என்பதை கடிகாரத்தைப் பார்த்துத் தான் தெரிந்து கொண்டோம். அந்த இரவில் வீசிய இதமான கடற்காற்று ,நேரத்தை மறக்க வைத்து களைப்பை விரட்டியடித்தது. சற்றுத் தொலைவில் கடற்கரை யோரமாய் இருந்த ஆசனத்தில் எல்லோரும் இடம் பிடித்து வாண வேடிக்கையை இரசித்தோம். அப்போது எமக்கருகில் இருந்த ஒரு வயதான தம்பதிகள் , இங்கே ஒவ்வொரு வாரமும் தேவாலயப் பெருநாள் என்றும் ஒவ்வொரு சனிக் கிழமையும் வாண வேடிக்கை நடக்குமென்றும் விளக்கம் தந்தார்கள். மோல்டாவில் 95 வீதமானவர்கள் கத்தோலிக்கர் என்பதையும் அது ஒரு பரிசுத்த நாடென்றும் கூகிளில் படித்திருந்ததால் ,இந்தத் தகவல் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை .அதிகாலை ஒரு மணிக்குத் தான் எங்கள் இடத்துக்குத் திரும்பினோம். அப்படியிருந்தும் காலை எட்டு மணிக்கே அனைவரும் தயாராகி விட்டோம்.
மொல்டாவின் தலை நகரான வலேட்டா வைச் சுற்றிப் பார்ப்பது தான் அன்றைய எங்கள் திட்டமாகவிருந்தது. தலை நகரில் பல வீதிகள் படிகளாக அமைக்கப் பட்டு கால் நடையாக மட்டும் செல்லக் கூடிய வகையில் அமைக்கப் பட்டிருந்ததாலும், ஒரு முறை மோல்டா பஸ்ஸில் பயணிக்கும் ஆவலுடனும் பஸ் தரிப்பை அடைந்தோம். அங்கே தனியார் பஸ் வண்டிகள் தான். அவர்கள் நினைத்த நேரத்துக்கு பஸ் ஓட்டினார்கள் .அவர்கள் குடும்பமே பஸ்ஸில் இருந்தது.மலைகளைச் சுற்றிச் சுற்றி பயங்கர வேகத்தில் பஸ் ஒட்டிக் கொண்டு ,அதே சமயம் பின்னால் இருக்கும் பிள்ளைகளுடன் கதைத்துக் கொண்டிருந்தார் அந்த ஓட்டுனர். கிட்டத் தட்ட ரோலர் கோஸ்டரில் ஏறியது போல் ஒரு பிரமை எனக்கு. மோல்டா வந்தது தப்பா அல்லது இந்த பஸ்ஸில் ஏறியது தப்பா என்று தெரியாமல் மனதுக்குள் 'கடவுளே காப்பாத்து' என்று மன்றாடிக் கொண்டோம்.
வலேட்டா பஸ் தரிப்பில் வந்து இறங்கிய போது அதன் முன்னே இருந்த ஒரு பாரிய வாட்டர் பௌண்டன் எங்களை கவர்ந்திழுத்தது.அதை இங்கே பாருங்கள் .




அந்த நாட்டின் சரித்திரத்தை அங்கே காணக் கூடியதாகவிருந்தது. மத்திய தரக் கடலில் அதன் இருப்பிடத்தின் காரணத்தால் பல் வேறு நாடுகளால் மாறி மாறிக் கைப் பற்றப் பட்டதன் காரணத்தால் ஒவ்வொரு ஆட்சியிலும் கட்டப் பட்ட கோட்டைகளும், அரச மாழிகைகளும் , கல் வெட்டுக்களும், அரண்களும் ,நீண்ட வியக்க வைக்கும் கைவண்ணத்தால் கட்டப் பட்ட கட்டிடங்களை கொண்ட வீதிகளும், அதன் அழகை விபரிக்க முடியாத வகையில் அமைந்திருந்தன.
அங்கே பிரசித்தமான குதிரை வண்டிகள் கோட்டைகளைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தன. அவற்றில் ஒன்றில் நாங்கள் பயணித்த போது எடுத்த சில படங்களை இங்கே சேர்த்திருக்கிறேன்.











கடைசியாக ஆங்கிலேயர் அந்த நாட்டை ஆண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து 1964 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றுள்ளார்கள்.அதன் நினைவாக கட்டப் பட்ட நினைவுச் சின்னத்தை உங்களுக்காகக் கையில் தூக்கி வந்திருக்கிறேன் பாருங்கள்..



தொடரும் )

.

12 comments:

ஹேமா said...

ஜெஸி...உங்களோடு பயணிக்கிறோம்.தொடருங்கள்.அருமையாகக் கோர்த்து எழுதுகிறீர்கள்.

கலா said...

ஜெஸி,
நல்ல விளக்கங்களுடனும்,படங்களுடனும்...
அறியத் தருகிறீர்கள் நன்றி
பார்க்க வேண்டும் போல் உள்ளது
ஆசை நிறைவேறினால்.....

உங்கள் விடுமுறைப் பயணம் நன்றாக
அமைந்திருக்குமென நினைக்கின்றைன்
மிக்க நன்றி உதவிக்கும், மின்னஞ்சலுக்கும்
நான் மின்னஞ்சலில் தொடர்கிறேன் ஜெஸி....

Chitra said...

wow! awesome photos!
அருமையாக தொகுத்து தந்து இருக்கீங்க.... தொடர்ந்து எழுதுங்கள்..... அடிக்கடியும் எழுதுங்கள்!

நட்புடன் ஜமால் said...

நல்ல சிரத்தை தெரிகிறது நிழல் படங்களில்

தொகுப்பும் நலம் தொடருங்கள்

Anonymous said...

jes padikum pothey kooda varuvathu pola irukku.....payana anupavathai nangal unara ugantha padamgal azhagu.....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தொகுப்பு அருமை..!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஹேமா said...
ஜெஸி...உங்களோடு பயணிக்கிறோம்.தொடருங்கள்.அருமையாகக் கோர்த்து எழுதுகிறீர்கள்.//

நீங்கள் கூடவே பயணிப்பது எனக்கு ஆர்வத்தைத் தருகிறது. நன்றி ஹேமா

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

// Chitra said...
wow! awesome photos!
அருமையாக தொகுத்து தந்து இருக்கீங்க.... தொடர்ந்து எழுதுங்கள்..... அடிக்கடியும் எழுதுங்கள்! //

வாங்க சித்ரா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி எழுத நேரம் கிடைக்க வில்லை சித்ரா. செப்டம்பர் மாதம் பாடசாலை தொடங்கின பின்னர் தான் கணினி முன் இருக்க முடியும்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

// கலா said...
ஜெஸி,
நல்ல விளக்கங்களுடனும்,படங்களுடனும்...
அறியத் தருகிறீர்கள் நன்றி
பார்க்க வேண்டும் போல் உள்ளது

ஆசை நிறைவேறினால்......//

வருகைக்கு நன்றி கலா. என்றாவது ஒருநாள் பார்த்து விடலாம் என்று நம்புங்கள்.
உங்களுக்கு பார்க்கத் தருவதற்காக தான் இந்தப் படங்களை எடுத்தேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

// நட்புடன் ஜமால் said...
நல்ல சிரத்தை தெரிகிறது நிழல் படங்களில்

தொகுப்பும் நலம் தொடருங்கள்//

தொடர்ந்து வருவதற்கு நன்றி ஜமால்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
தொகுப்பு அருமை..!! //

இந்தத் தொடரைத் தொடர்ந்து படிப்பதற்கு நன்றி நண்பரே.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

. தமிழரசி said...
ஜெஸ் படிக்கும் போதே கூட வருவது போல இருக்கு .....பயண அனுபவத்தை நாங்கள் உணர உகந்த படம்கள் அழகு //

கூட வருவதற்கு நன்றி தமிழ். எழுதுவதற்கு உற்சாகம் தருகிறது.