அடுத்த நாள் இனிதே விடிந்தது. அன்று சலிமா( Sliema) என்ற நகரத்தை சுற்றிவருவதும் , அங்கே பிரசித்தமான கடைகளில் நினைவுச் சின்னங்களை வாங்குவதும் எங்கள் திட்டமாக இருந்தது. கவனித்தீர்களா ? இங்குள்ள நகரங்கள் எல்லாமே சலிமா .புஜிபா, வலேட்டா என்று இஸ்லாமிய பெயர்களைக் கொண்டிருக்கின்றன. மிக ஆரம்ப காலங்களில் இந்த நாடு முற்று முழுதாக இஸ்லாமிய நாடாக இருந்ததுதான் இதற்குக் காரணமாம். இப்போ கிட்டத்தட்ட 100 வீதமும் கத்தோலிக்க நாடாக மாறி இருந்தாலும் அதன் சரித்திரம் அங்குள்ள நகரத்தின் பெயர்களில் ஒட்டிக் கொண்டு இருப்பதைக் காணக் கூடியதாக விருந்தது. சலிமா அதிகமாக மக்கள் வாழும் ஒரு பச்சைப் பசேலென்ற ஒரு இடமென்றும் , அங்கே பிரசித்தமான கைவேலைப் பாடுள்ள கம்பளி உடுப்புகளும், lace வகைகளும் மலிவாகக் கிடைக்குமென்றும் அறிந்தோம். அதுமட்டுமல்லாமல் அந்த நகரம் பல வகையான உணவகங்களால் நிறைந்திருந்தது. அன்று டாக்ஸி ஒன்றில் கடற் கரையருகில் வந்திறங்கினோம். இது ஒரு அழகான இயற்கைக் குடாவாக இருந்தது . கடற்கரை நீண்டு கிடைந்தது. அதற்கு எதிராகவிருந்த தெரு முழுவதும் உணவகங்களும் , மேல் மாடிகளில் ஹோட்டல்களும் அமைந்திருந்தது. மேசைகள் வெட்ட வெளியில் போடப் பட்டு காற்று வாங்கிய படியே உணவுண்டார்கள். தெருக்கள் ஈச்ச மரங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. அங்கே நான் கண்ட காட்சிகள் சிலவற்றை படங்களில் பாருங்கள்.
கடற்கரையை எதிர் நோக்கியுள்ள தெரு இது.
இங்கே கடலில் நீச்சலடித்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. காரணம் இந்தப் பகுதியில் கடலின் ஆழம் அதிகமாக இருப்பதே. ஆனால் பலவிதமான நீர் விளையாடுக்களும் இங்கே பிரசித்தமானது. பாறைகளிலிருந்து குதித்து diving செய்து கொண்டிருந்தார்கள்.
இந்தக் குடாவின் மற்ற முனை தலை நகரான வலேட்டா என்பதால், இந்தத் துறையில் இருந்த கப்பல்கள் வலேட்டாவுக்குப் பயணித்தன. பல வடிவங்களில் அழகாகப் பயணித்த படகுகளைப் பார்வையிட்ட படி கடற்கரையைச் சுற்றி வந்தோம். இங்கிருந்து வலேட்டா கப்பலில் பயணித்தால் 0.5 கிலோ மீட்டர் என்றும் பஸ்சில் பயணித்தால் 5 kilometer என்றும் அறிந்தோம். அதனால் கப்பலில் ஒருமுறை வலேட்டா துறைமுகத்துக்குச் சென்று வர முடிபு செய்தோம் . நாங்கள் பயணித்த படகை கீழே படமாக்கியுள்ளேன்.
வலேட்டாவின் முழு அழகையும் கப்பலில் போனபோதுதான் அறிந்து கொள்ள முடிந்தது. அங்குள்ள கோட்டைகளின் அழகு சலிமா பக்கத்திலிருந்த போது ரசிக்கக் கூடியதாக விருந்தது.
நாங்கள் வாங்கிய கப்பல் சீட்டில் அன்று முழுவதும் நாங்கள் பல முறை வலேட்டா போய் வரலாமென்று தெரிந்தது. அதனால் இன்னொரு கப்பலில் சலிமா திரும்பி வந்ததும், வாங்க வேண்டிய பொருட்களையும், நண்பர்களும் பரிசுகளையும் தேடி வாங்கிக் கொண்டோம். அடுத்த படியாக பலரும் சிலாகித்த உணவகத்தைத் தேடித் பிடித்தோம். இது ஒரு மொல்டிஸ் உணவகம். இங்கே வரட்டிக் காச்சிய முயல் தான் தேசிய உணவென்று அறிந்தோம். முயல் என்று நினைத்த போது மனதில் ஒரு தயக்கமாக இருந்தாலும் , பார்க்க சுவையாக இருக்குமென்று தோன்றியதால் முதன் முதலாஅதனை சுவை பார்த்தோம். மிக நன்றாகவே இருந்தது. மதிய உணவின் பின் வலேட்டாவில் நாங்கள் பாக்கத் தவறிய சில இடங்களைப் பார்க்கும் எண்ணத்துடன் படகில் திரும்பவும் வலேட்டா வந்தடைந்தோம்.
எங்கள் அனைவரது பாரத்தையும் சுமந்து வலேட்டாவைச் சுற்றிய அந்த குதிரையை கீழே பாருங்கள்.
வலேட்டாவிலுள்ள கோட்டை.
மொல்டாவின் சுதந்திரத்தை நினைவு கூ ர்ந்து எலிசபெத் ராணியினால் 1992 ஆம் ஆண்டு இந்த நினைவுச் சின்னம் திறந்து வைக்கப் பட்டது. அங்குள்ள மிக வேலைப் பாடுள்ள தேவாலயத்தை தரிசிக்க முடிந்தது. ஆனால் போட்டோ எடுக்க அனுமதி கிடைக்காததால் அதன் அழகை உங்களுக்குக் காட்ட முடியவில்லை என்ற கவலை. தேவாலயத்துக்குள் போகும் போது வாசலில் அவர்கள் தரும் துணியினால் எங்களை முற்றாக மூடிய வண்ணம் உள்ளே செல்லச் சொன்னார்கள். உள்ளே நுற்றுக்கு மேலாக மக்கள் இருந்தாலும் அங்கே நிலவிய நிசப்தம் ஆச்சரியப் பட வைத்தது.
அடுத்த நாள் நாங்கள் Gozo செல்லதிட்டமிட்டிருந்ததால் அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக பிரயாண agent யை அணுகினோம். அங்கே ஒரு பிருத்தானியப் பெண்மணியைச் சந்தித்தோம். அவர் மூலம் இங்கிலாந்திலிருந்து உல்லாசப் பயணம் சம்பந்தமான படிப்புக் காக பலர் மோல்டா வருவதையும், வந்தவர்கள் பலர் திரும்பிப் போக மனமில்லாமல் இங்கேயே தங்கி விடுவதையும் அறிந்தோம். அவர்களில் அந்தப் பெண்ணும் ஒருவர்.
(தொடரும்)
7 comments:
படங்கள் அருமை.. நல்ல விவரிப்பு. மால்டாவ ??
அழகான படங்களுடன் அருமையான பகிர்வு ஜெஸ்வந்தி!
அழகான பகிர்வுங்க
இத்தகைய அனுபவங்கள் தான் வாழ்வை அர்த்தமாக்குது இல்லையா
படங்களும் தெளிவாக இருக்குது
தொடருங்க :)
முந்தைய பயணங்களை மீண்டுமொரு முறை வாசித்து விட்டு தான் தொடர்ந்தேன். நன்றாக உள்ளது.
ஹ்ம்ம்ம்ம் எப்பவும் போல பெருமூச்சு தான் ஜெஸ்...சரி படத்திலாவது பார்தோமேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்,,,,
அழகான படங்களுடன் அருமையான பகிர்வு...
தொடருங்க...
நல்லா இருக்கு ஜெஸ்வந்தி... எங்க இருக்கு இந்த இடம்?...
Post a Comment