நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Saturday, 31 July 2010

வலையுலகில் நான் !!

பலர் வலையத்தில் இந்தத் தொடர் பதிவைப் படித்தேன்.அப்பாடா! இது ஆண்களுக்கான தொடர் என்று நினைத்திருந்தேன். அப்படியில்லை, பெண்களுக்கும் சமயுரிமையுண்டு என்று, என்னோடு சேர்ந்து சிலரை V ராதாகிருஷ்ணன் இத்தொடருக்கு அழைத்திருக்கிறார்..

அவரது .அழைப்பையேற்று என்னால் முடிந்தவரை உண்மையான பதில்களை இங்கே சொல்கிறேன்.



1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

இது என்ன கேள்வி? என் பெயர் தெரியாமலா இந்தப் பதிவைப் படிக்க வந்திருப்பீர்கள்? என்றாலும் சொல்கிறேன்.என் பெயர் ''ஜெஸ்வந்தி ''


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

அது என் பெயரில்லை. எனக்குப் பிடித்த பெயர். பலர் மனங்களை நோகடிக்காமல், நான் நினைத்ததை எழுத எனக்கு ஒரு பெயர் தேவைப்பட்டது.அதனால் எனக்குப் பிடித்த பெயரில் ஒளிந்து கொண்டேன்.கவனிக்கவும்! உண்மைப் பெயர் என்னவென்று கேள்வியில் கேட்கவில்லை. பலர் தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்



3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்ததைப் பற்றி.

கூகுளில் தமிழில் எழுதப் பழகிக் கொண்டிருந்தேன்.தமிழ்மணத்தில் ஒரு சில வலையங்களைப் படித்தேன். அடடே ! இதை விட நன்றாக நான் எழுதுவேனே! ஏன் நான் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கக் கூடாது ? என்று தோன்றியது.
(பி. கு. : தமிழ் மணத்தில் நான் யார் வலையத்தைப் படித்தேன் என்று சத்தியமாக நினைவில்லை)

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

என் வலைப் பதிவா ?பிரபலமா? பெரிதா ஒரு முயற்சியும் செய்ய வில்லை.தமிழ் மணத்தில் படித்து ஒரு சிலருக்குக் கருத்துப் போட்டதன் வழியாகக் கண்டு பிடித்தவர்கள் வந்து படித்தார்கள். ஒரு சிலர் தமிழிசில் ,தமிழ்மணத்தில் இணையும்படி அறிவுரை சொன்னார்கள்.அதைச் செய்யவே நேரம் கிடைக்காமல் மூன்று மாதம் போய் விட்டது.

பின்னர் தமிழிஸ்ல சேர்த்தேன்.தமிழ் மணத்தில் சேர்க்க முயன்றேன்.சரிவரவில்லை.பின்னர் ஒரு வழியாக நான்கு மாதங்களின் பின்பு தான் தமிழ்மணத்தில் இணைந்தேன்.சுருக்கமாகச் சொன்னால் ஒரு சோம்பேறி..
பதிவு சுவாரசியமாக இருக்க வேண்டு மென்ற எண்ணத்தினால் பல விடயங்களை என் வலையத்தில் எழுதினேன்.




5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ஆமாம். நான் சொந்த அனுபவங்களையும், என்னைச் சுற்றியுள்ளோர் அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். அதனால் எனக்கு எந்தப் பாதகமும் இல்லை.எனக்கு இப்படியொரு வலயம் இருப்பது பல நண்பர்களுக்குத் தெரியாததால் இதுவரை எந்தப் பிரச்சனையும் இல்லை.
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா?அல்லது அதன் மூலம் பணம் சம்பாதிப்பதர்க்காகவா?


என்னங்க ? இப்படிக் கேட்டு மாட்டி விடப் பார்க்கிறீர்கள்.? நான் இங்கே சேர்த்த பணத்தை வைக்க இடமில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன்.


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப் பதிவுகளுக்குச் சொந்தக் காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
நான் உண்மையைச் சொல்கிறேன். எனக்கு இரண்டு
வலையங்கள் தமிழில் உண்டு. மேலதிக விபரங்கள்
கேள்வியில் கேட்கப் படவில்லை. தப்பித்தேன்..

8 ) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்குக் கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டதுண்டா? ஆம் என்றால் யார் அந்தப் பதிவர்.? ஏன் ?
ஒருவர் மேலும் பொறாமை வரவில்லை. என்னைக்கவர்ந்த பதிவர்களுடன் நட்பை உண்டாக்கிக் கொண்டேன்.
ஆனால் வலையுலகையே வெறுக்க வைக்கும்படி மோதிக் கொண்ட ஒரு சிலர் மேல் கோபம் வந்தது என்னமோ உண்மை.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்பு கொண்டு
பாராட்டிய மனிதர் யார்? அவரைப பற்றி, பாராட்டைப் பற்றி..


பல பிரபல பதிவர்கள் என் சிறுகதைகளின் விசிறிகள்.
அவர்கள் பெயர்களை நான் சொல்ல மாட்டேன்.

10) கடைசியாக-- விருப்பமிருந்தால் பதிவுலகத்துக்கு உங்களைப்பற்றிய அனைத்தையும் சொல்லுங்கள்
என்னைப் பற்றிச் சொல்ல நான் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை.
எனக்கு இந்த வலையுலகை மிகவும் பிடித்திருக்கிறது.
அது தேடித் தந்த நட்புகள் விலை மதிக்க முடியாதவை..