
நானுதித்த நாள் முதலாய்
வானிடிந்து போனதுபோல்
உன்னுயிர் துடிப்பது -என்
மனதுக்குக் கேட்கிறது.
கண் விழிக்க முடியாமல்
உன் தரிசனம் கிடையாமல்
கறுப்பறை ஒன்றில் நான்
சிறைப்பட்டுக் கிடக்கிறேன்.
அள்ளி அணைக்க மாட்டாயா?
பிள்ளை நான் ஏங்குகையில் - உன்
விம்மி அழும் சத்தம்- என்னை
எம்பி எழ வைக்கிறது.
நான் ஓடி வரவேண்டும்.
உன் கண்ணைத் துடைக்க வேண்டும்.
என் அம்மா முகம் பார்த்து
நான் என்னை மறக்க வேண்டும்.
அன்று நீ டாக்டரிடம்
சென்றபோது நானறிந்தேன்
என் உயிரைப் பறிப்பதுதான்
உன் உயிர்காக்க வழியென்று.
பிள்ளை என்று நீயுருக
நாளை எண்ணி நானிருக்க
விதி செய்த சதியென்ன ?
மதி கலங்கி மாய்கின்றேன்.
வாய் விட்டுச் சொல்லாமல்
சேய் நான் இணங்குகிறேன்.
அம்மா நீ கலங்காதே!
சும்மா எனைக் கலைத்துவிடு.
இன்னொரு பிறப்பெடுத்து
உன்வயிற்றில் உருவெடுப்பேன்.
இக்கணத்தில் இழந்ததையும்
அப்போ நான் அனுபவிப்பேன்.
.