அண்மையில் என் குடும்பத்துடன் ஜேர்மனி போயிருந்தேன்.
தற்போது என் தாயார் அங்கு இருப்பதால் அடிக்கடி போய் வந்து கொண்டிருக்கிறேன்.
இம்முறை ஒல்லாந்து போய் அங்கு என் சித்தியுடன் சில மணி தங்கி பயணத்தைத் தொடர எண்ணினோம்.
எப்போதும் காரில் தான் பயணம் செய்கிறோம்.
லண்டனிலிருந்து கிட்டத்தட்ட பதின் மூன்று மணித்தியால ஓட்டம்.
எங்களைப் பொறுத்தவரை விமானப் பயணத்தை விட கார்ப் பயணம் மிகவும் சுவாரசியமானது.
பல வித சிற்றுண்டிகளும் ,
கோப்பி, தேனீர் எல்லாம் தயாரித்துக் கொண்டு பயணத்தைத் தொடங்கினோம்.
அதிகாலை மூன்று மணிக்கு எங்கள் பயணம் தொடங்கியது.
மாலையில் சிறிது நேரம் கண்ணயர்ந்து ஓய்வெடுத்திருந்ததால் எல்லோரும் உற்சாகமாகத்தான் இருந்தோம்.
எங்கள் வீட்டிலிருந்து டோவெர் (
Dover)
துறைமுகம் சுமார் மூன்று மணி ஓட்டம்.
நான் தான் காரோட்டினேன்.
இங்கிலாந்தில் மட்டும் தான் என்னால் ஓட்ட முடியும் .
ஐரோப்பிய விதிமுறைகள் வேறுபட்டவை என்பதால்,
அங்கு காரோட்ட எப்பவுமே நான் முயலவில்லை .
எமக்குப் பிடித்த பாடல்களுள்ள ஒலித்தட்டுக்கள் எங்கள் பயணத்தை ரம்மியமாக்கின.
எப்போதும் பாடல்களுடன் சேர்ந்து நாங்களும் பாடுவோம்.
காரோட்டுபவர் நித்திரை கொள்ளாமல் இருக்க நாங்கள் கையாளும் முறையிது.
பொதுவாக டூயட் பாட்டுக்களைத் தெரிவதால் ஒருவர் முறைக்கு அவர் பாடாவிட்டால் நித்திரையாகி விட்டார் என்று அறிந்து காரை நிறுத்தி ஓய்வெடுப்பொம்.
டோவெரிலிருந்து கப்பல் (
ferry) மூலம் கலை (
Calais )
துறைமுகத்தை வந்தடைந்தோம்.
அப்போ நன்கு விடியத் தொடங்கியிருந்தது.
கப்பலில் ஒன்றரை மணிநேரம் சிறிது கண்ணயர்ந்ததால் எல்லோரும் விழிப்பாக இருந்தோம்.
நாம் கடந்து சென்ற அழகான இயற்கைக் காட்சிகளையும் ரசிகக்u நிலையில் இருந்தோம்.
பலமுறை நிறுத்தி இளைப்பாறியதால் மதிய நேரம்தான் என் சித்தி வீட்டையடைந்தோம்.
என் சித்தியை என் கணவரும் ,
பிள்ளைகளும் முதல் முறை நேரில் காண்கிறார்கள்.
அந்தச் சந்திப்பு மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது.
அங்கு மதிய உணவின் பின்னர் சற்று தூங்கி எழுந்தபின்னர் பிற்பகல் ஜேர்மனியை நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது.
நள்ளிரவு அங்கு போய்ச் சேர்ந்தோம்.
பலமுறை நாங்கள் அங்கு சென்றதாலும்,
ஏற்கெனவே பிரபல உல்லாசத் தலங்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டதாலும்,
இம்முறை எங்கும் போவதில்லை என்று நினைத்திருந்தோம்.
ஆனாலும் என் தம்பியின் உந்துதலால்நாம் ஏற்கனெவே பார்வையிடாத சில உள்ளூர் தலங்களைப் பார்வையிடலாமெனப் புறப்பட்டோம்.
முதல் நாள் ஹடாமர் என்ற இடத்தில் உள்ள ரோஸ் தோட்டத்தைப் பார்வையிட்டோம்.
இது ஒரு மலை உச்சியில் ஒரு சிறிய தேவாலயததுக் கருகிலிருக்கிறது.
இதன் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
மிகச் சிரமப் பட்டு அந்தத் தோட்டத்தைப் பராமரிக்கிறார்கள் என்று தோன்றியது. நான் கண்ட அந்த அழகு வனத்தின் காட்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்துடன் புகைப் படமாக்கினேன்.

அடுத்தநாள் சிலமைல் தூரத்தில் இருந்த லிம்பேர்க் என்ற நரத்திலுள்ள பதின் மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ,ஒரு மலை உச்சியில் அமைந்த தேவாலயத்தைத் தரிசித்தோம். இது பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதுப்பிக்கப் பட்டாலும் உள்ளே காணும் கலை நுட்ப வேலைப் பாடுகள் மிகவும் ஆச்சரியப் படுத்தும் வகையில் இருக்கின்றன. அங்கிருந்து புறப்பட்டு மலையடிவாரத்திலுள்ள நதிக்கரையை வந்து சேர்ந்தோம். கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்து கிடந்த அருவி, பச்சைப் பசேலென இருந்த வெளி, அத்தனையும் இணைந்து தந்த ரம்மியமான சூழல் ,
மெய் மறக்க வைக்கும் இயற்கைக் காட்சி, என் மனதை இலேசாக்கி இயற்கையின் விந்தையை மெச்சிக் கொள்ள வைத்தன.


முன்பு நாங்கள் ஜேர்மனி வந்திருந்த தருணங்களில், எதையோ தொலைத்துவிட்டுத் தேடும் அவசரத்துடன், பல இடங்களை குறிப்பிட்ட நாட்களில் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கியிருந்தது. இப்படி சாவகாசமாக நடந்து திரிந்து இயற்கையை ரசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 'இத்தனை தூரம் வந்து விட்டோம், அருவியில் வலித்துச் செல்லும் படகில் ஒரு மணி நேரம் போகலாம் ' என்று என் தம்பி சொல்ல, எல்லோரும் அதற்கு இணங்கினோம். சிறிது தொலைவிலுள்ள படகுத் தரிப்பை நாங்கள் அடைந்தபோது நான் கண்ட காட்சியை கிழே புகைப் படத்தில் பாருங்கள்.

இந்தக் காட்சி என்னைச் சிந்திக்க வைத்து கண்கலங்க வைத்து விட்டது. அருவிக்கு மறுபுறத்தில் உல்லாசப் பயணிகள் தங்கியிருந்த காம்பிங் சைட் ( camping site) தான் அதற்குக் காரணம். மாளிகை மாதிரி வீடுகளில் , பல பல உல்லாச வசதிகளுடன் வாழும் மக்கள் , அந்த வாழ்க்கையில் சலிப்படைந்து , விரக்தியினால் , ஒரு மாறுதலுக்காக இங்கே வருகிறார்கள். இங்கே கூடாரங்களில் சில வாரங்கள் இருந்து, பக்கத்திலிருந்த அருவியில் மீன் பிடித்து, ஆதி கால மனிதர்கள் போல் தணலில் உணவைச் சுட்டுத் தின்று கொண்டு இளைப்பாறுகிறார்கள். இது இங்கு சகஜமானாலும் அந்தக் காட்சி , என் தாய் நாட்டில் கல்முனைக் கடற்கரையோரத்தில் நான் கண்ட காட்சியை எனக்கு நினைவு படுத்தி விட்டது. சுனாமி அழிவுக்குப் பின்னால் ஒரு வருடம் கழித்து நான் ஊர் போயிருந்த போது , ஒரு தகரக் கூடாரமே அவர்கள் வீடாக அந்த வருடம் முழுவதும் , நெருப்பு வெயிலில் அவிந்து கொண்டிருந்த பல குடும்பங்களை நான் அங்கு கண்டேன்.அந்தக் காட்சி இன்னும் என் கண் முன் நிற்கிறது. எத்தனை பேர் பணத்தை அள்ளி இறைத்தும் பாதிக்கப் பட்ட அந்த துரதிஸ்ட சாலிகள் வாழ்க்கை மாறவேயில்லை. இற்றைவரை அந்த இயற்கைக் காட்சியை ரசித்த என்னால் அதற்கு மேலும் எதனையும் ரசிக்க முடியவில்லை.
எந்தக் காட்சியும், பார்ப்பவர் கண்ணையும், அவர்கள் நெஞ்சையும் பொறுத்துத் தானே ரம்மியமாகிறது. என்னிடம் தெரிந்த இந்தத் திடீர் மாற்றத்துக்கு என்னைச் சுற்றி இருந்தவர்களுக்குக் காரணம் தெரியவில்லை. அதைச் சொல்லி அவர்கள் மனதை நோகடிக்கவும் நான் விரும்பவில்லை. விந்தையான உலகம் தான். அவர்கள் அங்கே அப்படி! இவர்கள் இங்கே இப்படி!
.