ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.
Wednesday, 30 December 2009
ஒரு பேட்டி- மூடு திரை
Thursday, 24 December 2009
நத்தார் வாழ்த்துகள்

இன்று பாரம்பரியமாக கொண்டாடும் நத்தார் பெருநாளைக் கொண்டாட ஆயத்தமாகும் அனைவருக்கும் எனதினிய வாழ்த்துகள்.
மனித குலத்தை மீட்பதற்காக மாட்டுத் தொழுவத்தில் வந்துதித்த குழந்தை இயேசு அனைவருக்கும் அன்பையும், அமைதியையும் ஆனந்தத்தையும் தருவாராக. இல்லாதவர்களுடனும், ஒதுக்கப் பட்டவர்களுடனும் உறவாடிய இயேசு இந்த நேரத்தில் பலதையும் இழந்து கொட்டகைகளிலும் கொட்டும் மழையிலும் அல்லலுறும் எம் உடன் பிறவாத சகோதரர்களுக்கு ஒரு புது வாழ்வும் நம்பிக்கையும் தர வேண்டுமென்று பிராத்திப்போமாக.
.
Wednesday, 16 December 2009
ஏன் இந்த பாரபட்சம்?
என் பிரிய மகள் பிரியங்காவை -நான்
பிரசவித்த நாள் தொடங்கி- அவள்
செய்து விட்ட சில்மிசங்கள்
மெய்யாகவே நினைவிருக்கு.
முத்துப்போல் ஒரு பல் வந்ததும்
முதற்சொல் 'மூவா' என்பதும்-அவள்
முதலடி யெடுத்து வைத்ததும்
குறிப்பெடுத்து வைத்திட்டேன்.
காலம் பறந்து விட்டது
குடும்பம் பெருகி விட்டது
சேர்ந்து வந்த சுமைகள் எல்லாம்-என்
சிந்தை நிறைந்து நின்றது.
கிடு கிடுவென படியிறங்கும்
சுட்டி மகள் அனிதாவை
திடுக்கிட்டுப் பார்க்கிறேன்-இவள்
நடக்கத் தொடங்கியதறியாமல்.
.
Monday, 7 December 2009
புரிதல்

நீண்ட நேரம் தொலைபேசியில்
நீயிருந்த போதினிலே
மெய்மறந்து கிறுக்கிவிட்ட
காகிதத்தில் உன் பெயர்தான்.
எப்போதும் அவசரம்
ஏதோ ஒரு பிரச்சனை
நேரம் பஞ்சமாகவில்லை
மற்றவர்கள் வரும்போது.
குடும்பம் என்றால் என்னவென்றும்
மனைவியைப் புரிவது
எப்படியென்றும்
அறிவுரை சொல்கிறாய் நண்பனுக்கு.
மனம் நிறையப் பாரத்துடன்
மௌனமாய் நிற்கிறேன்
'அடியே சொல்' என்றால்
அப்படியே கொட்டிவிட.
காலம் உனக்காகக்
காத்திருக்காது
கரைந்து கொண்டிருப்பது
நம் வாழ்க்கை.
( இது உரையாடல் சமூகக் கலை இலக்கிய அமைப்பு நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது )
.
Friday, 27 November 2009
கரு சொன்ன கதை இது......

நானுதித்த நாள் முதலாய்
வானிடிந்து போனதுபோல்
உன்னுயிர் துடிப்பது -என்
மனதுக்குக் கேட்கிறது.
கண் விழிக்க முடியாமல்
உன் தரிசனம் கிடையாமல்
கறுப்பறை ஒன்றில் நான்
சிறைப்பட்டுக் கிடக்கிறேன்.
அள்ளி அணைக்க மாட்டாயா?
பிள்ளை நான் ஏங்குகையில் - உன்
விம்மி அழும் சத்தம்- என்னை
எம்பி எழ வைக்கிறது.
நான் ஓடி வரவேண்டும்.
உன் கண்ணைத் துடைக்க வேண்டும்.
என் அம்மா முகம் பார்த்து
நான் என்னை மறக்க வேண்டும்.
அன்று நீ டாக்டரிடம்
சென்றபோது நானறிந்தேன்
என் உயிரைப் பறிப்பதுதான்
உன் உயிர்காக்க வழியென்று.
பிள்ளை என்று நீயுருக
நாளை எண்ணி நானிருக்க
விதி செய்த சதியென்ன ?
மதி கலங்கி மாய்கின்றேன்.
வாய் விட்டுச் சொல்லாமல்
சேய் நான் இணங்குகிறேன்.
அம்மா நீ கலங்காதே!
சும்மா எனைக் கலைத்துவிடு.
இன்னொரு பிறப்பெடுத்து
உன்வயிற்றில் உருவெடுப்பேன்.
இக்கணத்தில் இழந்ததையும்
அப்போ நான் அனுபவிப்பேன்.
.
Monday, 23 November 2009
வாழ்த்துச் சொல்ல வாருங்கள் நண்பர்களே!

கார்த்திகை மாதம் 24 ந் திகதி
-----------------------------------
இந்த வலையுலகம் எனக்குத் தந்த நல்ல நண்பர் ஜீவனுக்கு ( வலையம் - கண்ணாடி) இன்று பிறந்த நாள். அவரது பிறந்த நாள் இனிதே நகரவும் அந்த இன்பம் வருடம் முழுவதும் நிலைக்கவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நீங்களும் வாழ்த்துச் சொல்லுங்கள் நண்பர்களே!
.
Sunday, 8 November 2009
நண்பிக்கு ஒரு கடிதம்

சின்ன மகள் அருகில் வந்து
சொன்னதையே சொல்கிறாள்.
என்ன சொல்லி என்ன பயன்
எனக்கு எங்கே நினைவிருக்கு?
பேரப் பிள்ளை கதை கேட்க
பேந்தப் பேந்த முழிக்கிறேன்.
பாதிக் கதை சொல்லி விட்டேன்
மீதிக் கதை நினைவில் இல்லை .
குளிர் பானப் பெட்டியருகில்
குனிந்தபடி நிற்கிறேன்.
பாலை எடுக்க வந்தேனா?
இல்லை வைக்க வந்தேனா?
மெல்ல மெல்ல நடந்து சென்று
கதவருகில் வருகிறேன்.
காற்று வாங்க வந்தேனா?
கதவைச் சாத்த வந்தேனா?
உனக்கு கடிதம் எழுதவென்று
உற்சாகமாய் வருகிறேன்
முன்னர் இதை எழுதினேனா?
முற்றாகவே மறந்து போச்சு.
வயசு போனால் போகட்டும்-இந்த
வருத்தம் தான் ஏன் எனக்கு?
கடிதம் எழுதி முடித்து விட்டேன்- ஐயோ
உன் முகவரியை எங்கே வைத்தேன்?
.
Friday, 6 November 2009
ஒரு பிறப்பு

Monday, 19 October 2009
சாக்கடை

அன்பினால் அரவணைத்து
உன்னைக் கண்போல் காத்திருந்தேன்
என்னவன் நீயென்று
உன் உயிருடன் கலந்திருந்தேன்
ஆசையால் வசப்பட்டு
அந்நியனாய்ப் போய்விட்டாய்
பித்துப் பிடித்துப் போய்
பின் முதுகில் குத்தி விட்டாய்.
கண்களுக்குள் கைவிட்டு
கரு விழியைக் கொய்து விட்டாய்
நெஞ்சுக்குள் வெடி வைத்து
வஞ்சகம் செய்து விட்டாய்.
சமுத்திரமாய் நானிருக்க
சாக்கடைக்குள் ஏன் விழுந்தாய்?
சதியென்று நீ அறிந்தும்
மதி கெட்டு ஏன் போனாய்.?
.
Friday, 16 October 2009
தீபாவளி சிறப்புப் பதிவு 2009 !
தோழி கவிநயா என்னை இந்தத் தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறார். தீபாவளி திருநாளை யொட்டி , அது சம்பந்தமாக ஒரு சில கேள்விகள் இங்கே.
இந்தத் தொடரை சதங்கா ஆரம்பித்திருக்கிறார்.
1. உங்களைப் பற்றி சிறு குறிப்பு ?
என்னைப் பற்றி 32 கேள்வி பதில்களில் நிறையவே சொல்லி விட்டேன். நான் பிறப்பினால் கத்தோலிக்க சமயத்தில் பிறந்தாலும், சமயத்தால் மனிதர்களையும் திருநாள்களையும் பிரிப்பது கிடையாது. என் கணவர் இந்து என்பதால் எங்கள் வீட்டில் பல திருநாட்கள் கொண்டாடுவது வழக்கம். ஆனால் என் கணவரின் சகோதரர் பல வருடங்களுக்கு முன்னால் இந்தத் திருநாள் அன்று அகால மரணம் அடைந்த காரணத்தால் இந்தத் திரு நாள் மட்டும் நாங்கள் வீட்டில் கொண்டாடுவது கிடையாது.
2. தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் (மறக்க முடியாத) ஒரு சம்பவம் ?
தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது தீபங்களும் பலகாரங்களும் தான்.
சின்ன வயதில் எங்கள் வீட்டில் கொண்டாட்டம் எதுவும் கிடையாவிட்டாலும் , நண்பர்கள் வீட்டில் வாழைக் குத்திகளைத் தோண்டி விளக்கு வைத்ததும், அவர்களைப் பார்த்து எங்கள் வீட்டிலும் அகல் விளக்குகள் வாங்கி அலங்கரித்ததும் .....பல வருடங்களின் பின்பும் இனிமையாக மனதை நிறைத்து நிற்கிறது.
3. 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?
இங்கிலாந்த்தில் தான் இருக்கிறேன். வேறு எங்கு போவது?
4. தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி பற்றி ஒருசில வரிகள் ?
இங்கு எல்லோரும் அடக்கமாகத்தான் கொண்டாடுகிறார்கள். பலகாரம் மட்டும் தான். வாழ்த்துக் கூடத் தொலை பேசியிலும், மெயிலிலும், text இலும் தான் தெரிவித்துக் கொள்கிறார்கள். வாழ்க்கை இயந்திர மயமாகி விட்டதற்கு இதெல்லாம் அறிகுறிகள். எனக்குத் தெரிய புத்தாடை எடுப்பது எல்லாம் கிடையாது.
5. புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்களா ?
திருநாள் கொண்டாடுபவர்களே புத்தாடை எடுப்பது கிடையாது. நான் புத்தாடை வாங்கவும் இல்லை. தைக்கவும் இல்லை.
6. உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள் ? அல்லது வாங்கினீர்களா ?
நான் செய்யவும் இல்லை. வாங்கவும் இல்லை. நண்பர் வீட்டில் இருந்து வந்த பலகாரங்களை ருசி பார்த்தோம்.
7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
இங்குள்ளவர்களுக்கும், நெருங்கிய சொந்தக்களுக்கும் தொலைபேசி வாழ்த்துக்கள். மற்ற நண்பர்களுக்கு மின்னஞ்சல்.
8. தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா ? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்து விடுவீர்களா ?
உண்மையைச் சொன்னால் எல்லோரும் வழமை போல் தொலைக் காட்சி , ப்ளோக், face book என்று இருக்கிறார்கள். பலகாரம் கொறிப்பது மட்டும் எக்ஸ்ட்ரா.
9. இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒருசில வரிகள் ? தொண்டு நிறுவனங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வலைத்தளம் ?
அப்படி எல்லாம் செய்வது கிடையாது.
10. நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் ப்ளோக் விபரம் என்ன?
யாரை அழைப்பது என்று தெரியவில்லை. இந்தப் பதிவைப் படிக்கும் எவரும் இதைத் தொடர விரும்பினால் தொடருங்கள்.
இப்போ இந்த தொடருக்கான விதிமுறைகள்:
1. கேள்விகளுக்கு உங்கள் வலைத்தளத்தில் புதிய பதிவில் பதிலளியுங்கள்.
2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.
3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.
4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.
5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.
.
Sunday, 11 October 2009
தேடுகிறேன்!

வெகுநாள் ஆசை
ஆனாலும் என்மனதில்- அவர்
முழு உருவும் கிடைக்கவில்லை.
அன்றொரு நாள் சந்தையில்
அவர் பின்புறம் கண்டேன்
இன்னொரு நாள் பேரூந்தில் - அவர்
விரைவதைக் கண்டேன்.
ஒரு நாள் ரயில்வே தரிப்பில்
மங்கலாய்த் தெரிந்தார்
ஓடிப் போய்ப் பார்த்த போது - அவர்
உருவின்றிப் போனார்.
அன்று நான் வானொலியில்
அவர் குரலைக் கேட்டேன்
மும்முரமாய்த் தேடியதில்-அவர்
முடிச் சுருளைப் பார்த்தேன்.
கண்ணா மூச்சி விளையாட்டில்
கதி கலங்கிப் போனேன்
இன்னும் நான் தேடுகிறேன்- அவர்
சிரிக்கும் கண்களதை.
.
Sunday, 4 October 2009
பெண்ணின் பெருமையும் அதன் இன்றைய சீர்கேடும்
*************************************
இரண்டு பாலிய தோழிகள் சுமார் பத்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் சந்திக்கிறார்கள் . அவர்கள் நட்பு விட்ட இடத்திலிருந்து தொடர்கிறது. இருவரும் திருமணமானவர்கள். ரதி, வெளிநாட்டில் கடந்த பத்து வருடங்களாக வாழ்கிறாள் . உயர் கல்வி கற்று, வேலை பார்த்து , வெளிநாட்டு நாகரிக வாழ்க்கைக்குப் பழக்கப் பட்டாலும் கணவனை தன் நண்பனாகக் கருதுகிறாள். இவள் பெண்களின் இன்றைய சீர்கேட்டுக்கு ஆண்கள் மட்டுமல்ல முழுச் சமுதாயமே காரணம் என் கருத்தைக் கொண்டிருக்கிறாள். வாணி படிப்பைப் பாதியில் நிறுத்தி, அவர்கள் பரம்பரை வழக்கப் படி இளம் வயதில் திருமணமாகி , ஊரிலேயே கணவருக்கும் அவர் பெற்றவர்களுக்கும் சேவை செய்து , வாழ்க்கையில் வெறுப்பேறி ,இந்த ஆண் வர்க்கத்தையே உள்ளார வெறுக்கின்றாள். அவள் கனவுகள் எதுவும் நிஜமாகாததால் , வாயிருந்தும் ஊமையாக ,உள்ளக் குமுறல்களுடனும் , போலிச் சிரிப்புடனும் வெறுமையான வாழ்க்கை வாழ்கின்றாள். அவர்கள் எண்ணப் பரிமாறல்கள் தணிக்கை செய்யப் பட்டு , இதோ உங்கள் ரசனைக்கு..............
(பி.கு. இங்கே நீங்கள் படிப்பது வெவ்வேறு சூழலில் வாழும் இரு பெண்களின் அபிப்பிராயம் மட்டும் தான். இதற்கும் ஜெஸ்வந்திக்கும் எந்தத் தொடர்பபும் கிடையாது என்பதை நண்பர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்)

வாணி said..
அன்பின் ரதி!
உன்னைத் திரும்பவும் சந்தித்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி.
ஏதோ சொல்ல நினைக்கிறேன். என்னவென்று சொல்லத் தெரியவில்லை. பெற்றவர்கள் பேச்சை மீற முடியாமல் அவர்கள் காட்டியவருக்கு பதினாறு வயதில் கழுத்தை நீட்டிய நாளிலிருந்து, நான் அவருக்காகவும் அவர் குடும்பத்துக்காகவும் மாடாய் உழைத்துக் கொண்டிருக்கிறேன். நிறையப் படிக்க வேண்டும் என்று நான் கண்ட கனவுகளும், நானும் காதலிக்க வேண்டும் என்று அடிமனத்தில் இருந்த ஆவலும் கருகிப் போன வேதனையில் இந்தத் திருமண வாழ்க்கையே இயந்திர மயமாகிப் போய் , உள்ளார என் கணவர் மேல் ஒரு வெறுப்பே உருவாகி விட்டது. சந்ததியைப் பெருக்கவும் அவர் பெற்றவர்களைப் பார்க்கவும் 'ஒருத்தி' வேண்டும் என்பதற்காக நடந்த இந்தத் திருமணம் எனக்கு எந்த இன்பத்தைத் தந்து விட முடியும்.
'பெண்ணாய்ப் பிறந்து விட்டேன். அது என் விதி' என்று ஆணாதிக்கத்தை எதிர்க்காமல் அடங்கிப் போய் விட்ட எத்தனையோ பெண்களில் நானும் ஒருத்தியாகி விட்டேன். நான் மட்டுமல்ல. என்னைப் போல் பலர் இப்படித் தான்உள்ளக் குமுறல்கலோடு ஏதோ வாழ்கிறோம் என்று வாழ்கிறார்கள். இன்றைய நவீன காலத்தில் கூட பெண்ணுக்கு ஏன் இந்த அடிமை வாழ்க்கை?
தாய் வழிச் சமுகமாக ,பெண்ணைத் தெய்வமாக , தலைவியாகக் கொண்டு வளர்ந்த நம் சமுதாயத்தில் தாசியாக, அடிமையாக, பிறரைச் சார்ந்து வாழும் ஒட்டுண்ணி ஜந்துவாக , இரண்டாந் தரக் குலமாக......ஒரு கேடு கெட்ட நிலைமைக்குத் தள்ளப் பட்டு விட்டது பெண்ணினம். ' பெண்கள் தெய்வத்துக்குச் சமமானவர்கள் ', ' கற்புக் கரசிகள்' என்று எம் முன்னோர் பெண்களை ஆராதித்த காலத்தில் கூட இந்தப் போலிப் புகழ்ச்சியில் பெண்ணின் உள்ளார்ந்த வலிகளும் ,வேதனைகளும் அடிபட்டுப் போய் மறைக்கப் பட்டிருந்தன என்பது இப்போ புரிகிறது.
சீதை, கண்ணகி, நளாயினி......என்று பெண்களைக் கொண்டாடிய எமது சமுகம் ,எப்போதாவது அவர்களை உணர்வுள்ள ,ஒரு மென்மையான பெண்ணாக நினைத்துப் பார்த்ததா? சீதை தீககுளித்து தன் கற்பை நிரூபித்தாள் என்று போற்றிய சமுகம் , அவள் தீக்குளித்த போது அவள் மனம் எப்படித் தீயில் வேகி யிருக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்குமா? ..............எனக்குத் தெரியவில்லை.என்னைப் பொறுத்த வரை கணவனின் சந்தேகத்தினால் மனமுடைந்து தீக்குளிக்கும் எந்தப் பெண்ணும் சீதை தான். அவள் இறந்தாளா?பிழைத்தாளா? என்பது முக்கியமல்ல. அந்த நாள் தொடங்கி இன்று வரை பெண்ணினத்தை ஒடுக்கி ' கற்பு' பெண்ணுக்கு மட்டும் தான் என்று வகுத்ததும் இந்த ஆணினம் தான். ''ஆவதும் பெண்ணாலே , அழிவதும் பெண்ணாலே '' என்று நடக்கும் அத்தனைக்கும் பெண் தான் காரணம் என்று தப்பியோடும் இந்தக் கோழைச் சமுதாயத்தைப் பற்றி நான் இன்னும் என்ன சொல்வது?
வெளி நாட்டில் இருப்பதால் உனக்கு என்போல் அடிமை வாழ்க்கை இருக்காது என்று நம்புகிறேன். நீ கற்ற கல்வி உன்னை உன் காலில் நிற்க வைத்திருக்கிறது.
நீ எப்படி இருக்கிறாய்? உன் வாழ்க்கையைப் பற்றி அறிய மிகவும் ஆவலாக இருக்கிறேன்.
ரதி said.......
அன்பின் வாணி!
நீண்ட காலத்தின் பின்னர் உன்னைக் கண்டடைந்ததில் எனக்கு மகிழ்ச்சி என்றாலும், உனது நிலைமை அறிந்து மிக மனக் கவலையாக இருக்கிறது. நீ உன் மேல் கொள்ளும் தன்னிரக்கமும் , கணவர் மேலும் ஆண் வர்க்கத்தின் மேலும் காட்டும் இந்த அதீத வெறுப்பும் உன் உள ஆரோக்கியத்துக்கும் உன் குடும்ப வாழ்க்கைக்கும் கொள்ளியாக மாறி விடுமோ என்று எனக்குப் பய மாகக் கூட இருக்கிறதடி. நடந்து முடிந்தவைகளை யாரும் மாற்ற முடியாது. எனவே இனிமேல் உன் வாழ்க்கையை இனிதாக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்துப் பார். உன் உணர்ச்சிகளை முற்றாக மறைக்காமல் உன் கணவருடன் பகிர்ந்து கொள்ளப் பழகிக் கொள். உன் பிள்ளைகளுக்கு இள வயதில் திருமணம் செய்து கொடுக்காமல் அவர்களுக்கு கற்கும் வசதிகளை உண்டு படுத்தி அவர்களுக்காகப் போராடு.
நான் உயர் கல்வி கற்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தது உனக்குத் தெரியும் தானே? என் பெற்றவர்களுடன் வாதாடி நான் நினைத்ததைச் சாதித்தேன். என் பிடிவாதத்தைக் கண்டு அவர்கள் பின்வாங்கி விட்டார்கள். காதலித்துக் கல்யாணம் செய்த போதும் எங்கள் வீட்டில் ஒரு பிரளயம் நடந்தது என்னவோ உண்மை தான். ஆனால் இப்போ அவை இனிய நினைவுகளாகத் தான் இருக்கின்றன. நான் வேலைக்குப் போகப் போகிறேன் என்று சொன்னபோது என் கணவர் தடுக்க வில்லை. மாறாக அதனை ஆதரித்தார். இருவர் வேலை செய்தால் குடும்பப் பொருளாதார நிலைமையை உயர்த்த முடியும் என்பது உண்மை தானே!
வீட்டு வேலைகளையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். நான் வேலை செய்கிறேன் என்ற தலைக் கனம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. அதே போல் அவருக்கு நான் ஆலோசனை சொல்லும் போது என் கணவர் அதைத் தப்பாக எடுத்துக் கொள்வதும் இல்லை. என்னைக் கலந்தாலோசிக்காமல் அவர் எந்த முடிவும் எடுத்ததும் இல்லை.
நான் கற்ற கல்வியும், எனது பல்வேறு அனுபவங்களும் என் எண்ணங்களையும் அபிப் பிராயங்களையும் இப்போ முற்றாக மாற்றி விட்டது. உனக்கு நான் எழுதுபவை ஆச்சரியத்தைத் தரலாம். பாடசாலை நாட்களில் நான் ' பெண்ணின் பெருமை' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியில் முதற் பரிசு பெற்றது உனக்கு நினைவிருக்கா? அதை நினைத்து நான் சிரித்த நாட்கள் இப்போ பல. அப்பொதெல்லாம் கண் மூடித் தனமாக வரிந்து கட்டிக் கொண்டு பெண்ணினத்துக்கு வக்காலத்து வாங்கியதும் , மொத்த ஆண் வர்க்கமும் திட்ட மிட்டுப் பெண்களை அடிமையாகி விட்டது என்று ''மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்'' என்றும் விவாத மேடைகளில் முழங்கியதும் தப்போ என்று இப்போ தோன்றுகிறதடி.
உண்மையைச் சொல்லப் போனால் , இங்கே கல்வி கற்றும் சீர் கெட்டுப் போகும் பெண்களைப் பார்க்கும் போது , இவர்கள் நிலைமைக்கு நாங்கள் ஆண்களை மட்டும் எப்படிக் குற்றம் சாட்ட முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது. இங்கே என்னைச் சுற்றிச் சீரழிந்து போன பல குடும்பங்களுக்கு காரணம் சில பெண்கள் தான் என்பதைக் கண்ணால் கண்ட பின்பு , அனுபவமின்றி வெறும் உணர்ச்சி வேகத்தில் நான் அப்போ பிதற்றி இருக்கிறேன் என்று தெரிகிறதடி. என்னடா இவள் ஆண்களுக்கு வக்காலத்து வாங்குகிறாள் என்று உன் புருவத்தை உயர்த்துவது தெரிகிறது. ஆனாலும் மனந் திறந்து பல விடயங்களை உனக்கு விளக்க வேண்டுமென்ற ஆவல் தான் என்னிடம் மேலோங்கி நிற்கிறது.
''பெண்ணுரிமை'' என்றால் என்னவென்று நாம் முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அரை குறையாக ஆடை அணிவதும் , ஆண் களுக்குப் போட்டியாக மது அருந்துவதும், நைற் கிளப்பில் போய் நடன மாடுவதும் தான் என்று இந்தத் தலைக் முறையில் பலர் நினைக்கிறார்கள். அது வல்ல பெண்ணுரிமை. பெண் தன் அறிவை உயர்த்தி , தன் காலில் நிற்கக் கூடிய தகுதியைப் பெறுவதும் , அந்தக் கல்வியினால் பிள்ளைகளைக் கட்டுக் கோப்பாக வளர்ப்பதும், தன் குடும்பப் பொறுப்பைப் பங்கிட்டுக் கொள்வதும் தான் பெண்ணுரிமை. அவள் யாருக்கும் எஜமானியுமல்ல. அடிமையுமல்ல. இதுதான் ''சம உரிமை''. இதைச் சில பெண்கள் உணராததுதான் பெருங் கவலை.
தங்கள் உயர் கல்வியினாலும், மனத் திடத்தினாலும் , புத்திக் கூர்மையினாலும் வீராங்கனைகளாக , சமூக சேவகிகளாக ,பேராசிரியர்களாக பேர் பெற்றுப் பெண்ணுக்குப் பெருமை தேடித் தந்த எத்தனையோ பெண்மணிகள் இருக்கிறார்கள். ஆனாலும் கற்றும் பாமரராய் , நாகரிகம் என்ற அரக்கனிடம் அடிமையாகி ,பெண்மையின் அரிய குணங்களை அடகு வைத்து ,பெண்ணின் பெருமையைக் குழி தோண்டிப் புதைக்கும் பலரும் இங்கு இருக்கிறார்கள். சம்பாதிக்கிறோம் என்ற திமிர் பேயாகப் பிடிக்கக் கணவனை மதியாமல், பெரியவர்களை உதாசீனப் படுத்தியும், நவீன மோகத்தில் ஆடை குறைத்தும் , எடுத்துக் காட்டாக இருக்க வேண்டியவர்கள் பலரும் எள்ளி நகையாடும் வகையில் குடும்பங்களைக் கோட்டில் கொண்டுபோய் நிறுத்தி விடுகிறார்கள்.
அதனால் பெண்ணின் இன்றைய சீர்கேட்டுக்கு ஆண்களை மட்டும் நான் குறை சொல்ல மாட்டேன். எமது முன்னோர் பெண் ஆண் என்று பார பட்சம் காட்டியது தப்புத் தான். ஆண் இனம் தங்களை மேலினமாக ஒரு காலத்தில் மமதையுடன் நினைத்திருந்ததும் உண்மைதான். ஆனால் தறி கெட்டுப் போகும் பெண்களும் இதற்குக் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. நிறைய எழுதி விட்டேன்.
உன் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.
( அவர்கள் எண்ணப் பரிமாறல் தொடரும்.......)
.
Monday, 28 September 2009
உங்களுக்குத் தெரியுமா?
மிகப் பெரிய வைரம்
=================
இதுவரை காலத்தில் கண்டெடுக்கப் பட்ட வைரங்களில் மிகப் பெரியது 3106 காரட் அளவானது. இது தென்னாபிரிக்காவிலுள்ள பிரிமியர் வைரச் சுரங்கத்தில் 1905 ஆம் ஆண்டில் கண்டெடுக்கப் பட்டது.
மிக இளமையில் 'டாக்டர்' பட்டம் பெற்றவர்
==================================== ==
ஆஸ்திரியா வைச் (Austria) சேர்ந்த கார்ல் விட்டே (Carl Witte) என்ற 12 வயதே ஆன பையன் philosophy இல் டாக்டர் பட்டம் பெற்று உலக சாதனை செய்திருக்கிறார். இவர் 1814 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 13 ந் திகதி ஜெர்மனியிலுள்ள Glessen என்ற பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.
மிக மோசமான நடன மேனியா
==========================
1374 ஆம் ஆண்டு ஆனிமாதம் 24 ந் திகதி , ஒரு வித நரம்புப் பாதிப்பினால் (tarantism) பாதிக்கப் பட்டு ஆயிரக் கணக்கான மக்கள் தங்களை அடக்க முடியாத நிலைமையில் , ஜெர்மனியில் ஆடிய ஆட்டம் , உலக வரலாற்றில் சாதனை ஆகிவிட்டது.
மிக உரத்த சத்தம்
===============
இந்தோனேசியாவில் , 1883 ஆம் ஆண்டு ஆவணி மாதம் வெடித்த எரிமலையின்
சத்தம் 3, 100 மைல்களுக்கு அப்பால்அவுஸ்திரேலியாவில் உள்ள பேர்த் ( Perth) நகரத்தில் கேட்கப் பட்டதாம்.
மிகப் பெரிய பறவை
=================
உலகில் வாழ்ந்த பறவைகளில் பெரியது ' யானைப் பறவை' என அழைக்கப் பட்ட ஏப்யோர்னிஸ் மக்ஸ்ய்முஸ் ( Aepyornis Maximus ) என்ற இனமாகும். கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு முன்னர் இந்த இனம் முற்றாக அழிக்கப் பட்டு விட்டது. இந்தப் பறக்க முடியாத பறவை மடகஸ்காரில் வாழ்ந்த அறிகுறிகள் இருக்கிறது.
கிட்டத்தட்ட 500 கிலோ கிராம் நிறையுள்ள இந்தப் பறவை 10-11 அடி நீளமானது.
பி.கு : இந்த வருடம் சித்திரை மாதம் இந்தப் பறவையின் முட்டை இங்கிலாந்தில் 500 பௌண்ட்ஸ் க்கு ஏலத்தில் விற்பனையானது.
.
Sunday, 20 September 2009
தமிழுக்கு இன்று பிறந்த நாள்

எழுத்தோசை தமிழரசிக்கு இன்று பிறந்த நாள். வாழ்த்துச் சொல்லுங்கள் நண்பர்களே!
'' உனது வயதை வருடங்களால் கணக்கிடாதே. உன் நண்பர்களின் எண்ணிக்கையினால் கணக்கிடு''
எங்கோ படித்தேன். இது உண்மையானால் தமிழரசி இன்று குடு குடு கிழவிதான் போங்கோ.
நண்பர்கள் அனைவரது பிறந்த நாளுக்கும் கேக் அனுப்பும் தமிழுக்கு நான் கேக் அனுப்பாமல் விடுவேனா.? இதோ ,தயாராக இருக்கிறது. என் பங்கை மட்டும் அனுப்பினால் போதும் தமிழ்.

.
Thursday, 17 September 2009
யார் குடியைக் கெடுத்தேன்?- பகுதி 3
அவருடன் கதைத்ததில் பல விடயங்கள் அறிந்திருந்தார். நாம் தனியே இருக்கிறோம் என்று அதிர்ந்தார். அவர் பெற்றோடுக்கு மதியெங்கே போய்விட்டது என்று கோபித்துக் கொண்டார். இதனால் அவருக்கும், என் உயிருக்கும் ஆபத்து நேரிடலாம் என்று சொன்னார். '' இவன் மூளையில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஏதோ வித்தியாசமாக நடக்கிறது என்பது மட்டும் தான் தெரியும். இந்த நரம்பியல் மிகச் சிக்கலானது. ஒவ்வொருவரை ஒவ்வொரு விதமாகப் பாதிக்கும். அரவிந்துக்கு இரண்டு முறை மோசமாகி மின்னதிர்ச்சி வைத்தியம் செய்தோம். இதற்கு முற்றான சிகிச்சை கிடையாது. சோர்ந்து போகும்போது நரம்புகளை உசுப்பி விட்டும், வீறிப் பாயும் நரம்புகளை அடக்கித் தூங்க வைத்தும் விளையாடிக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான்''. என்று சொல்லி நிறுத்தினார். மௌனம் என்ற அரக்கனிடம் பலியாகி , கல்லாய் உறைந்திருந்தேன்.
கூர்ந்த பார்வையுடன் ''உங்கள் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கிறது?'' அவர் திடீரெனக் கேட்ட போது, மெய் சிலிர்த்து, முகம் சிவந்து போனேன். வயதானவர் ஆனாலும், இத்தனை நாள் எவருக்குமே சொல்லாமல் கட்டிக் காத்த ரகசியத்தை , முன்பின் தெரியாதவரிடம் எப்படிச் சொல்வது என்று கலங்கினேன். '' இதோ பார் , நான் அரவிந்தோடு கதைத்து விட்டுத்தான் வருகிறேன். அவன் சொன்னவற்றை ஊர்ஜிதம் செய்யத்தான் உன்னிடம் இந்தக் கேள்வி கேட்கிறேன்'' என்றார். பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில், திக்குத் திணறி '' அப்படி எதுவும் .....நம்மிடையே கிடையாது. அவர் எனக்கு ஒரு குழந்தை போல '' சொல்லி முடித்த போது ,தான் எதிர் பார்த்த பதில் என்பது போல தலையை அசைத்த படி, '' முற்பது வயது மகனைத் தத்தெடுத்து இருக்கிறாய் என்று சொல்லு '' என்றார். ஒவ்வொரு வார்த்தையும் நெருப்புத் துண்டாய் நெஞ்சில் விழ , இனிமேல் தாங்காதென்று கண்கள் பெருக்கெடுக்கத் தொடங்கின. இதயமே இல்லாத மனிதர் முன்னால் இருப்பதை உணர்ந்தேன். இதில் என் தப்பு என்னவென்று எனக்குப் புரியவில்லை.
அவர் முடிக்கவில்லை. '' உனக்கு இதை எப்படிப் புரிய வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. அரவிந்துக்கு நான் கொடுக்கும் மாத்திரைகள் அவனது வீறு கொண்ட நரம்புகளை அடக்குவதுக்குத் தான் . பாலின உணர்ச்சிகளும் நரம்பு சம்பத்தப் பட்டதால் அந்த உணர்வுகளும் அடக்கப் பட்டு விடும். மருந்துகளை நிறுத்தவும் முடியாது. இந்தப் பிரச்சனைக்கு முடிவும் கிடையாது'' ஒரே முஉச்சில் சொல்லி முடித்தார் . என் உடம்பில் அப்போதும் மூச்சிருந்தது ஆச்சரியம் தான் .இனிமேல் எதையும் தாங்கும் சக்தி எனக்கு இல்லாததால் அழுது கொண்டே ஓடி வந்து விட்டேன். அன்று இருவருமே எதுவும் கதைக்க வில்லை. அவர் நிறையச் சிந்திக்கிறார் என்பது மட்டும் தெரிந்தது. மெல்ல அவரிடம் நாங்கள் அவர்கள் வீட்டில் போய் ஒரு மாதம் இருப்போம் என்று சொன்னேன். ஒத்துக் கொண்டார். வார இறுதியில் போகலாமென்றும் தேவையானவற்றை பெட்டிகளில் அடுக்கச் சொன்னார். டாக்டர் என்ன சொன்னார் என்று கூடக் கேட்கவில்லை. அவர் என்ன சொல்லியிருப்பார் என்று ஊகித்தவர் போல நடந்து கொண்டார். ஒரு புது மனிதன் போல் மாறி விட்டார். எதையும் இயந்திரம் போல் செய்தார்.
தூக்கமில்லாமல் தவித்து என் மூளை சிந்திக்கும் திறனை இழந்து விட்டிருந்தது. அன்று பாடசாலை ஓய்வறையில் நான் மயங்கி விழுந்து விட்டேன். கண் விழித்த போது கூர்ந்து பார்த்தபடி என் அப்பா என் முன்னே இருந்தார். எதேச்சையாக என்னைச் சந்திக்க வந்திருக்கிறார்.'' நானும் உன்னை இத்தனை நாள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். புதிதாய் திருமணம் செய்த பெண்ணின் பூரிப்பை உன்னிடம் நான் காணவில்லை. என்ன பிரச்சனை உனக்கு? அரவிந்த் உன்னிடம் அன்பாக இல்லையா?'' அவர் பரிவாகக் கேட்ட போது நான் உடைந்து போனேன். தன்னிரக்கம் பொங்கிப் பிரவாகமாகி நான் அன்றுவரை கட்டிக் காத்த என் கவலைகள், ரகசியங்கள் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு ஓட, ''ஓவென்று'' வாய்விட்டு அழுதபடி அவர் தோளில் சாய்ந்து விட்டேன். நான் சொல்லி முடித்த போது அவர் சிலையாகி விட்டிருந்தார். ' நான் யார் குடியைக் கெடுத்தேன்? ஏன் இந்தச் சோதனை ''என்று அலட்டினார். அந்த அதிர்ச்சியில் அவர் கைகள் நடுங்கியதைக் கண்டேன். என்னைச் சுதாகரித்துக் கொண்டு அவர்கள் வீட்டில் வந்து சத்தம் போடக் கூடாதென்று அவரிடம் சத்தியம் வாங்கினேன். உடனே அம்மாவை வரவழைக்கப் போவதாகவும் அதுவரை கவனமாக இருக்கும் படியும் சொன்னார். விட்டுப் பிரிய மனமில்லாமல் விடை பெற்றார். அம்மா இந்த அதிர்ச்சியை எப்படித் தாங்கப் போகிறாள் என்று பயந்தேன்.
தேவையான உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டு புகுந்த வீடு போனோம். அதன் பின்னர் படிப் படியாக பல மாறுதல்கள் தெரிந்தன. மாத்திரை கொடுப்பது பெரும் பாடானது. அவர் தாயார் உணவினுள் மாத்திரையை கரைத்துக் கொடுக்க அவருக்கு எவர் மேலும் நம்பிக்கை இல்லாமல் போனது. தன் முன்னால் சமைக்கச் சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ணினார். நான் அவர் அருகில் போகப் பயப் படுவதைப் பார்த்து மாமி மனங் கலங்கினாள். அப்போது அவளிடம் என் அம்மா விரைவில் வர இருப்பதைச் சொன்னேன். ' எல்லாம் இறைவன் விட்ட வழி' என்று சொல்லிப் பெருமூச்சு விட்டாள்.
அம்மாவை நான் முதலில் ஹோட்டேலில் போய்ச் சந்தித்தேன். எனக்கு வேலை வைக்காமல் அப்பா அவளிடம் எல்லா விபரமும் சொல்லியிருந்தார். அவளைக் கண்டதும் ஓடிப் போய் அவள் மார்பில் விழுந்தேன். தொண்டைவரை வந்த வார்த்தைகள் அங்கேயே சிக்கித் தவித்தன. அவளுக்கும் என்ன சொல்லி என்னைத் தேற்றுவது என்று தெரியவில்லை. அமைதியாக அவள் கொட்டிய கண்ணீர் என் கன்னத்தைச் சூடாக்கியது. அவர்கள் இருவரும் அந்த டாக்டருடன் கதைக்க விரும்பினார்கள். அவரை வெளிநாடு கொண்டுபோய் சிகிச்சை செய்ய முடியுமா என்று கேட்கவும் நினைத்தார்கள். எனக்கோ அந்த டாக்டரின் பெயரைச் சொல்லவே நடுங்கியது. அவர்கள் வற்புறுத்தலுக்கு இணங்கி அங்கே போனேன். என் பெற்றோரை டாக்டருக்கு அறிமுகம் செய்து விட்டு அவர்கள் என் கணவரைப் பற்றி முழு விபரமும் அறிய விரும்புகிறார்கள் என்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியே வந்து விட்டேன். அதற்குள் என் நெஞ்சு பட பட என அடிக்கத் தொடங்கி விட்டது. நீண்ட நேரம் அவர்கள் கதைத்தார்கள். வெளியே இருந்தபோது டாக்டரைப் பார்க்க வந்திருந்த பலரையும் பார்த்துக் கலங்கி விட்டேன். இவர்களுக்கு வாழ்க்கையில் என்ன சோதனை வந்ததோ என்று எண்ணி மனம் மிகப் பாரமாகிப் போனது. வெளியே வந்த அவர்கள் முகத்தில் இருந்த குழப்பம் அங்கே என்ன நடந்ததென்பதை ஓரளவு சொல்லின. அமைதியாக ஹோட்டல் அறைக்குத் திரும்பினோம். அம்மா '' உன்னால் அவனுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. ஏனென்றால் நீதான் இப்போ அவன் பிரச்சனைக்குக் காரணம். இதுவரை ஒழுங்காக மாத்திரை சாப்பிட்டு வேலைக்குப் போய் வந்த அரவிந்த் இந்தக் கல்யாணத்தின் பின் தான் இப்பிடி ஆகிப் போனான் என்று டாக்டர் சொல்கிறார்.'' அம்மா கண்ணீருடன் சொல்லி முடித்தாள். அவர்கள் எல்லாம் சொன்ன போது தான் அந்த டாக்டருக்கு என் மேல் ஏன் கோபம் என்று தெரிந்தது. அவர் நான் இவரைக் காதலித்துக் கல்யாணம் செய்திருக்கிறேன் என்று நினைத்திருக்கிறார். தன்னிடம் கலந்துரையாடாமல் கல்யாணம் என்ற பேரில் என் வாழ்வையும் அவர் வாழ்வையும் கெடுத்து விட்டேன் என்று அவர் கோபப் பட்டிருக்கிறார். என் பெற்றவர்கள் சொன்னபோதுதான் எதுவுமே தெரியாமல் நடந்த விடயம் என்று தெரிந்து மிகக் கவலைப் பட்டிருக்கிறார். அவர் அபிப் பிராயப் படி எவ்வளவு விரைவில் நான் அவரை விட்டு விலகுகிறேனோ அவ்வளவு அவருக்கு நன்மை. அரவிந் டாக்டரிடம் இந்த மாத்திரைகள் தான் தன்னை ஆணாக இல்லாமல் பண்ணி விட்டது என்றும் இனி மாத்திரை சாப்பிட மாட்டேன் என்றும் சொல்லியிருக்கிறார். அன்றிலிருந்து தான் அவர் நிலைமை மோசமாகியது. நான் அம்மாவுடன் இந்தியா போவதைவிட வேறு வழியில்லை என்று அவர்கள் சொன்னபோது இந்த உலகமே தட்டாமாலை சுற்றியது. அந்த மூன்று மாதத்தில் நான் அவருடன் மனத்தளவில் மிகவும் நெருங்கி விட்டேன். என் பிரிவை அவர் உணராதபடி அவரை உறக்கத்தில் வைத்திருக்க அவருக்கு டாக்டர் இருக்கிறார். அவரைப் பிரிந்து இதயம் நொறுங்கிப் போகப் போகும் எனக்கு என்ன ஆகப் போகிறது. அதைப் பற்றி என் பெற்றோர் கூட உணர்ந்ததாகத் தெரியவில்லை.
ஏதோ நடப்பது நடக்கட்டும் என்று மனது வெறுத்த நிலையில் பெற்றவர்களுடன் அவர் வீட்டுக்குப் போனேன். அப்பா கொஞ்சம் குரலை உயர்த்தித் தான் பேசினார். ஆனால் அவர்கள் குரல் மிக அடங்கிப் போனதால், சண்டையாக மாறவில்லை. மாமி கூட என்னை பெட்டியை அடுக்கிக் கொண்டு அவர்களுடன் புறப் படச் சொன்னாள். அவர் வெளியே போயிருந்தார். மாமி என்னை அரவிந் வரமுன்பு போகச் சொல்லி மன்றாடினாள்..என்னால் முடியவில்லை. அழுத கண்ணும் ,வெந்த நெஞ்சுடனும் பெட்டியுடன் புறப் படத் தயாரான போது, எதிர் பாராமல் அரவிந் வந்து விட்டார். எவரும் எதுவும் சொல்லாமலே நடப்பது என்னவென்று அவருக்குப் புரிந்து விட்டது. என்னிடம் நேரே வந்தார். '' என் உயிர் உன்னிடம் இருக்கிறது. அதையும் கொண்டுதான் போகிறாய்'' என்று சொன்னார். ஓடிப் போய் அறைக் கதவைச் சாத்திக் கொண்டார். நான் உடைந்து போனேன். அவ்வளவு தான் , என்ன நடந்தாலும் நான் அங்கிருந்து காலெடுத்து வைக்க மாட்டேன் என்று விட்டேன். அம்மா அழுது புரண்டாள். நான் சம்மதிக்க வில்லை. அவளைச் சமாதானப் படுத்தி அப்பா அழைத்துச் சென்றார். தலையில் அடித்தபடி அவள் போன காட்சி மனதினில் என்றும் காயமாய் நிற்கிறது.
அன்று அவர்கள் போனதும் இவர் என்னிடம் வந்து '' நீ இன்று எடுத்த முடிவுக்காக எப்பவுமே கவலைப் படும் படி நான் விட மாட்டேன்'' என்று சொன்னார். தன் கண்கள் பெருக்கெடுக்க என் கண்ணீரைத் துடைத்தார். அந்த நிமிடம் நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே பாராட்டிக் கொண்டேன். ஆனால் படிப் படியாக இவர் நிலைமை மோசமாகி மாத்திரை போட்டும் தூங்க முடியாமல் , எவராலும் இவருடன் கதைக்கவோ ,மாத்திரை கொடுக்கவோ முடியாத நிலை வந்தபோது நான் செய்த தப்புப் புரிந்தது. அவருக்கு நன்மை செய்வதாக நினைத்து நான் அவரைப் பைத்தியமாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பது தெரிந்தது. அவரிடம் சொல்லிக் கொண்டு புறப்படும் மன வலிமை இல்லாததால் இப்போ கோழை மாதிரி ஓடிக் கொண்டிருக்கிறேன்.
விமானம் சென்னையில் இறங்குகிறது. முன்பு ஒரு தடவை அம்மாவைப் பார்க்க வந்ததால் அவள் வீட்டுக்குச் செல்லும் வழி எனக்குத் தெரியும். என்னை வலிந்து அழைத்த வாடகை வண்டியில் ஏறி அமர்கிறேன். நான் வருவது அம்மாவுக்குத் தெரியாது. என்னைக் கண்டு மலைக்கப் போகிறாள். கதவைத் திறந்தவள் கதறியபடி கட்டி அணைக்கிறாள். அம்மா மடியில் வந்து விழுந்து விட்டேன் என்று மகிழ முடியாத நிலையில் நான். பிரமை பிடித்தவள் போல் முகட்டைப் பார்த்தபடி பல நாட்கள் இருக்கிறேன். அப்போ தான் என் தம்பிமார் என்னை இங்கிலாந்து அனுப்ப முயல்கிறார்கள் என்று தெரிகிறது. மற்றவர்கள் உணர்வுகளைப் புரியாமல் தங்கள் எலும்பில்லா நாவால் இதயங்களைப் பிசைந்து எடுக்கும் இந்தக் கேடுகெட்ட உலகத்துக்கு நான் பயப் படவில்லை. எந்த உணர்ச்சிகளும் இல்லாமல் விதி போகும் பாதையில் நான் போக என்னைத் தயாரித்துக் கொள்கிறேன். காலம் மருந்தாகும் என்று சொல்கிறார்கள். அந்தக் காலம் என் சுக்கு நூறான என் இதயத்தை ஒட்ட வைத்து விடுமா?பல காத தூரத்தில் நான் விட்டு வந்த என் உயிரைத் திரும்ப என்னிடம் கொண்டு வந்து விடுமா? எனக்குத் தெரியவில்லை.
(முற்றும்)
அறிந்ததும் அறியாததும்!
1. A – Available/Single? Not Available & Not Single :
முதல் கேள்வியைத் தப்புத் தப்பாகக் கேட்கிறார்கள்.
2. B – Best friend? :
அவசரப் பட்டு இறந்திட்டாள். அந்த இடம் இன்னும் வெறுமை தான்.
3. C – Cake or Pie?:
கேக் தான்.
4. D – Drink of choice? :
தண்ணீர் மாதிரி எதுவும் தாகம் தணிக்காதே!
5. E – Essential item you use every day? :
உடை தான்
6. F – Favorite color? :
ஊதா நிறம்
7. G – Gummy Bears Or Worms?:
யக்!என்ன கேள்வி இது?
8. H – Hometown? -
யாழ்ப்பாணம் இப்போ சேர்ட்சி
9. I – Indulgence? -
கனவுகளின் சொந்தக்காரி.
10. J – January or February?
ஜனவரி, வருடம் பிறக்குமல்லவா?
11. K – Kids & their names?
அஞ்சலி, அஸ்வினி, ஆர்த்தி - மூன்று பெண்கள்
12. L – Life is incomplete without? -
பிள்ளைகள்
13. M – Marriage date?
ஆவணி 21
14. N – Number of siblings?
ஐந்து, நான்கு தம்பிமார் , ஒரு தங்கை
15. O – Oranges or Apples?
ஆப்பிள் தான், மரத்தை வளர்த்து பழம் சாப்பிடுகிறேன். இப்போ சீசன் தான் அனுப்பி வைக்கட்டுமா?
16. P – Phobias/Fears?
மனித உருவில் இருக்கும் மிருகங்களிடம்.
17. Q – Quote for today? :
மனித வாழ்க்கை நிரந்தர மில்லாதது. ஒவ்வொரு நிமிடமும் பொன்னானது.
18. R – Reason to smile? :
இலவசமாகக் கொடுப்பதற்கு கஞ்சத்தனம் காட்டுவதில்லை.
19. S – Season?
இயற்கையை ரசிப்பவள்.
20. T – Tag 4 People?
திட்டு வாங்கப் போறேன் என்று சொல்லுங்கோ.
நேசமித்ரன், ராமலஷ்மி, சந்ரு, ஜமால்
21. U – Unknown fact about me?
எனக்குத் தெரியாததை உங்களுக்கு எப்படிச் சொல்வது?
22. V – Vegetable you don't like?
புடலங்காய்
23. W – Worst habit?
ஒரு சின்னச் ' சொல்லில்'' அடிபட்டுப் போவது.
24. X – X-rays you've had?
போன வருடம் விழுந்து தொலைத்து உடம்பு முழுவதும் கதிர் படம் எடுத்தார்கள்.
ஒன்றும் பெரிதாக முறியவில்லை.
25. Y – Your favorite food? :
எதுவும் ருசியாய் இருந்தால் சரிதான். முடிந்தால் முருங்கை இல்லைப் புட்டும் கருவாட்டுப்
பொரியலும் பார்சலில் அனுப்புங்கோ மக்கா.
26. Z – Zodiac sign?
Libra
அகரம் தொடர்கிறது......
அன்புக்குரியவர்கள்: நிறையப் பேர். இங்கே எழுத இடம் காணாது.
ஆசைக்குரியவர்: சொல்ல மாட்டேன் போங்கோ
இலவசமாய் கிடைப்பது: சுவாசிக்கும் காற்று, நண்பர்களின் பின்னூட்டம்.
ஈதலில் சிறந்தது: பசித்தவனுக்கு உணவு
உலகத்தில் பயப்படுவது: கனவிலும் நிஜத்திலும் பாம்புக்கு.
ஊமை கண்ட கனவு: நான் ஊமை இல்லைங்க.நம்புங்க.
எப்போதும் உடனிருப்பது: கடவுளின் கருணை.
ஏன் இந்த பதிவு: நண்பர் வெ.இராதாகிருஷ்ணன் தொடர் விளையாட்டுக்கு அழைத்து விட்டதால்
ஐஸ்வர்யத்தில் சிறந்தது: நோயற்ற வாழ்வு
ஒரு ரகசியம்: ( ரகசியமாக வைத்திருங்க. நான் இறந்து ரொம்ப நாள் ஆகுதுங்க.
ஓசையில் பிடித்தது: நீரோடும் ' சல சல ' சத்தம்.
ஔவை மொழி ஒன்று: ''துட்டனைக் கண்டால் தூர விலகு''
(அ)ஃறிணையில் பிடித்தது: அன்பு.
Monday, 14 September 2009
காதல், கடவுள், அழகு, பணம்
காதல்

காதலில் வெற்றி பெறுவது என்பது எவெரெஸ்ற் மலை உச்சியை அடைவதைப் போலத்தான். ஒரு சிலர் தான் ஏறி முடிக்கிறார்கள். பலர் பாதியிலேயே களைத்து விடுகிறார்கள். உச்சிக்கு ஏறியவர்களுக்குத் தான் அங்கிருந்து பார்க்கும் அற்புதக் காட்சி தெரிகிறது. காதல் என்றால் என்னவென்று தெரியாத ஒரு சிலர் அதைக் கொச்சைப் படுத்தி விடுகிறார்கள்.
பணம்
''Money money money
It's always sunny
In rich mans world''

காதல் இல்லாமல் வாழ்ந்து விடலாம். இந்தப் பணம் இல்லாமல் வாழவே முடியாது.அதுதானே ' பணம் இல்லாதவன் பிணம் ' என்றும் ' திரை கடலோடியும் திரவியம் தேடு 'என்றும் நம் முன்னோர்கள் சொன்னார்கள்.
பணம் மிக அவசியம். ஆனால் அதுதான் வாழ்க்கையல்ல . பணத்தால் வாங்க முடியாத பல சுகங்கள் இருக்கின்றன.
பணம் ஒரு நல்லவனிடமிருந்தால் அதனால் பல நன்மைகள் செய்ய முடியும். அதே பணம் ஒரு கெட்டவனைப் பல பாதகம் செய்ய வைக்கும். சுருக்கமாகச் சொன்னால் அதற்கு சக்தி உண்டு.
கடவுள்

கடவுள் தான் அன்பு. அன்புதான் கடவுள். பெற்றவர் கூட எங்கள் அன்பை எதி பார்த்துத் தான் எங்களை அன்பு செய்கிறார்கள். நீங்கள் ' நாசமாப் போன கடவுள்' என்று அவரை நிந்தித்த போதும் அவர் உங்களை அன்பு செய்கிறார். நீங்கள் பிறரை அன்பு செய்யும் போது அங்கே கடவுள் இருக்கிறார்.
ஏனோ சிலர் சோதனைகள் தாக்கும் போது கடவுளை நம்பாமல் அவரைத் தூற்றத் தொடங்குகிறார்கள். கடவுளால் ஆகாது மனிதனால் எப்படி ஆகும்? சிந்திக்க மறுக்கிறார்கள். கவலைக்குரிய விடயம் இது.

அழகு.
அழகு முகத்திலல்ல. இதயத்தில் இருக்கிறது. அதற்கு இலக்கணம் கிடையாது.
என்னைப் பொறுத்தவரை எவரும் அழகுடன் பிறப்பதில்லை. அதை இவ்வுலகில் சேகரித்துக் கொள்கிறார்கள். நான் அழகென நினைப்பது வாழ்க்கையில் அடிபட்டு, பலதையும் இழந்து , வரும் தடைகளை வென்று முன்னேறுபவர்கள் தான். அவர்களுக்குத் தான் உணர்வுகளை மதிக்கத் தெரியும். வாழ்க்கையின் அர்த்தம் புரியும். மற்றவர்களை அன்பு செய்யத் தெரியும். அவர்கள் மிக அழகானவர்கள்.

என் வேலை முடிந்து விட்டது இந்த வலையில் மாட்டியவர்கள்
1. பா. ராஜாராம்
2. ரங்கன்
3. கவிநயா
4. சிநேகிதி
.
Saturday, 12 September 2009
தேவதை வந்தாள்

வரங்கள் ஆயிரம் கேட்க மனமிருந்தாலும், பத்தே வரங்கள் கேட்கிறேன்.
1. தமிழன் கனவு நனவாக வேண்டும் -அவன்
தலை நிமிர்ந்து வாழ்ந்த காலம் திரும்ப வேண்டும்.
2. தீயவர் வஞ்சனை வெளிப்பட வேண்டும்-அவர்கள்
தீட்டிய திட்டங்கள் உடைய வேண்டும்.
3. கடவுள் கருணை காட்ட வேண்டும்-எம் அன்பே
கடவுளாய் மாற வேண்டும்.
4. பணத்தை மனிதர் தேட வேண்டும் - அதனைப்
பகுத்தறிவுடன் பகிர வேண்டும்.
5. சாதி சமயம் ஒழிய வேண்டும்- எம்மவர்
சத்தியமாக மாற வேண்டும்.
6. பள்ளிப் பருவம் திரும்ப வேண்டும்- அன்றுபோல்
பட்டாம் பூச்சியாய்ப் பறக்க வேண்டும்.
7. பெற்றவள் மனம் மகிழ வேண்டும்- அவளிடம்
பிள்ளையாய் பிறகும் பிறக்க வேண்டும்.
8. என் பிள்ளைகள் என்றும் சிரிக்க வேண்டும்- அவர்கள்
என்னருகில் இருக்க வேண்டும்.
9. சுயநலப் பேய்கள் ஒழிய வேண்டும்- என்றும்
சுற்றுச் சூழல் காக்க வேண்டும்.
10. நண்பர்கள் என்றும் நிலைக்க வேண்டும்- அவர்கள்
நல்லதை மட்டும் நினைக்க வேண்டும்.
நான் தேவதையை பவித்திரமாய் அனுப்புகிறேன் என் நண்பர்களிடம் இதோ.
1. ஜீவன்
2. கவிக்கிழவன்
3. யாழினி
4. வெ.இராதாகிருஷ்ணன்
.
Monday, 7 September 2009
யார் குடியைக் கெடுத்தேன்?-பகுதி 2
பெடியங்களை ஊரில் வைத்திருக்கப் பயந்து , மூன்று சகோதரர்களை ஒன்றன் பின் ஒன்றாக பாரிஸ் அனுப்பிவிட்டு , கடைசித் தம்பியுடன் சென்னையில் என் அம்மா இருந்தாள் . என் அப்பா கொழும்பில் ஒரு நண்பர் வீட்டில் , ஒரு அறையில் தங்கியிருந்து வங்கியில் வேலை செய்து கொண்டிருந்தார். கல்யாணம் முடிந்து ஒரு வாரத்தில் என் அம்மாவும் தம்பியும் சென்னை போய் விட்டார்கள் . அவர்கள் புறப்பட்டு சில நாட்களில் நாங்களும் எங்களுக்கென வாடகைக்கு எடுத்திருந்த பிளாட்டுக்கு குடி புக இருந்தோம் . எனது பாடசாலையிலிருந்து எனது மாமனார் வீடு தொலைவில் இருந்ததால் , என் அப்பாதான் வலிந்து இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார். என் கணவருக்கோ, அவர் பெற்றவர்களுக்கோ இந்த ஏற்பாட்டில் முதலில் சம்மதமிருக்கவில்லை.'' ஏழு மணிக்கு வேலைக்குப் போவதானால் என் பிள்ளை நாலு மணிக்கு எழுந்து சமைத்து ஐந்தரை மணிக்கு விட்டை விட்டுப் புறப் பட வேண்டும். ஒன்று பிளாட் எடுத்து பாடசாலைக்கருகில் இருக்க வேண்டும். அல்லது என் மகள் வேலையை விடவேண்டும்'' என்று அப்பா தீர்க்கமாகச் சொன்ன பின்னர் எல்லோரும் உடன் பட்டார்கள். அப்போ நான் ஒரு பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தேன். இந்த அலைச்சல் என் படிப்பைக் குழப்பி விடும் என்ற ஆதங்கம் என் அப்பாவுக்கு.
ஒரு நல்ல நாள் பார்த்துக் குடி புகுந்தோம். அன்றே அவர் தன்னுடன் ஒருமுறை டாக்டரைப் பார்க்க வரும்படி சொன்னார். என்ன ஏது என்று கேட்க விரும்பாமல் அவருடன் கிளம்பினேன். போகும் வழியில் ஒவ்வொரு மாதமும் இவர் இந்த மனோதத்துவ டாக்டரைப் பார்ப்பதாகவும், கல்யாண வேலைகளினால் இம்முறை தள்ளிப் போய் விட்டதாகவும் சொன்னார். டாக்டரிடம் இவர் என்னை அறிமுகம் செய்து கொண்டார். எனக்கு என்னமோ அந்த டாக்டர் அதிர்ந்து போனது போல ஒரு உணர்ச்சி. எப்போ கல்யாணம் ஆனது என்று கேட்டார். முறைக்குக் கூட வாழ்த்துக்கள் சொல்ல வில்லை. மனதுக்குள் மனநோயாளிகளுடன் பழகி இந்த மனிதருக்கு மனம் மரித்துப் போச்சு என்று திட்டிக் கொண்டேன். அப்போதான் இவர் தொடர்ந்து மருந்து சாப்பிடுவது எனக்குத் தெரிய வந்தது. டாக்டரிடம் இவர் நித்திரைக்காகக் கொடுத்த மருந்தை இரண்டு வாரமாகத் தான் பாவிக்கவில்லையென்றும் ஆனால் நன்கு தூங்கியதாகவும் சொன்னார். அவர் மிகவும் கடிந்து கொண்டார்.'' நீ டாக்டரா அல்லது நான் டாக்டரா?'' என்று கூடக் கேட்டார். என்னை முதல் தடவையாக ஒரு பயம் கவ்விக் கொண்டது. அதைப் புரிந்து கொண்டவர் போல என்னைப் பார்த்து அமைதியாக விளக்கம் தந்தார். தான் தரும் மருந்துகளைத் தவறாமல் இவர் சரியான முறையில் எடுக்கிறாரா என்று கண் காணிப்பது இப்போ என் பொறுப்பு என்று சொன்னார். இந்த மருந்துகளை எந்த நிலைமையிலும் தனது அனுமதியின்றி நிறுத்தக் கூடாதென்றும், தவறினால் பழையபடி இவர் மனநோயாளியாக நேரிடும் என்றும் சொன்னார். இவர் நடத்தையில் சிறிய வேறுபாடு தென்பட்டாலும் உடனே தன்னிடம் வரும்படியும் சொன்னார். என் தலை எப்போதோ சுற்றத் தொடங்கியிருந்தது. அவர் சொன்னதில் பாதிதான் என் முளைக்குப் போய்ச் சேர்ந்தது. ஏதோ ஒரு உலகத்தில் ,முகம் தெரியாத மனிதர்கள் நடுவில் அகப்பட்டுப் போனதுபோல அதிர்ந்து கண்கலங்க டாக்டர் தந்த மாத்திரைத் துண்டை பெற்றுக் கொண்டேன். வீடு திரும்பியபோது இவர் என்னுடன் எதுவும் கதைக்கவில்லை. ஆழ்ந்த யோசனையில் இருந்தார். அந்த டாக்டர் தந்த அதிர்ச்சியில் நான் கதி கலங்கிப் போயிருந்தேன்.
மஞ்சள் , நீலம், கருப்பு, வெள்ளையென்று பல வண்ணத்தில் வாங்கிய மாத்திரைகள் என்னைப் பயமுறுத்தின. தலையிடி வந்தால் கூட மாத்திரை சாப்பிட்டால் உடம்பு கெட்டிடுமென்று தவிர்ப்பவள் நான். இத்தனை மாத்திரைகளை இவர் முழுங்குகிறாரா? என்று நினைத்துப் பதைத்துப் போனேன். அது மட்டுமல்லாமல் அத்தனை மருந்துகளும் இவர் இன்னும் சகல நிலைமைக்கு வரவில்லையென்பதை எனக்குச் சொல்லாமல் சொல்லின. வீடு வந்ததும் '' நீர் சரியாகப் பயந்து போனீரா?'' என்று கேட்டார். என் பதிலை எதிபார்க்காமலே அந்த டாக்டர்தான் தேவையில்லாமல் தன்னையும் பயப்படுத்தி தன் தாயாரையும் பயமுறுத்துவதாகவும் சொன்னார். இந்த மாத்திரை எல்லாவற்றையும் தூக்கி எறிந்தால்தான் தனக்கு நிம்மதியென்று இவர் சொன்னபோது , நான் விக்கித்துப் போனேன். எத்தனை பெரிய பொறுப்பு என் தலை மேல் இறங்கியிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். கடவுள் என்னைத் தேடியெடுத்து இவர் வாழ்க்கையை என் கையில் ஒப்படைத்திருக்கிறார் என்று நம்பினேன். என் அன்பினால் இந்த மாத்திரைகள் செய்ய முடியாத வித்தைகளைச் செய்து காட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டேன்.
காலையிலும், மாலையிலும் நானே வற்புறுத்தி மாத்திரை கொடுத்தேன். எனது மனக் கிலேசத்தை இவருக்குக் காட்டாமல் மறைப்பது பெரிய எத்தனமாக இருந்தது. சில சமயங்களில், என்னை முற்றாகப் புரிந்தது கொண்டவர் போல, நான் பேசத் தயங்கிய விடயங்களைப் பேசிக் கொண்டு, ''உமது படிப்பு என்னாச்சு? இன்று எவ்வளவு படித்தீர்?'' என்று என்னை மேற்பார்வை பண்ணிக் கொண்டு , சில சமயம் பெரிய மேதாவி போல பல விடயங்களை அலசிக் கொண்டு, மறு நிமிடம் ஒரு குழந்தை போல ' பிகு' பண்ணிக் கொண்டு, குலுங்கிக் குலுங்கி உரத்துச் சிரித்துக் கொண்டு ....இவை ஒன்றிலுமே முழுதாக ஈடுபட முடியாமல் , இவர் செய்வது அத்தனையும் இவரது இயல்பான செயல்கள் தானா? என்று தெரியாமல் நான் அல்லாடிப் போனேன். தனிக் குடித்தனம் வந்தது பெரிய தப்பு என்று தோன்றியது. இவர் எந்தக் கவலையும் இல்லாமல் மாத்திரையும் தூக்கமுமாக இருந்தபோது, என் எண்ணங்கள் யாவும் அவரையே சுற்றிவர , தூக்கம் கெட்டு ஒரு கனவுலகில் வாழ்வதுபோல் என் அன்றாட வேலைகளை ஓட்டிக் கொண்டிருந்தேன்.
எனக்கு என் மனப் பாரத்தை எங்கே இறக்குவது என்று தெரிவில்லை. அவர் அம்மா மட்டும் அடிக்கடி வந்து போனாள். அவளும் இரவில் வந்ததால் இவர் முன்பு எதுவும் கதைக்க முடியவில்லை. என் அப்பா அதிகமாக என்னைப் பாடசாலையில் சந்தித்தார். அவருக்குக் குடிப் பழக்கம் இருந்ததால் இதைப் பற்றி கதைக்கப் பயப் பட்டேன். இரண்டு வாரங்கள் இரண்டு வருடங்கள் போல் போய் முடிந்தது. அன்று எதேச்சையாக இவர் தாயார் வந்த போது இவர் வெளியே போயிருந்தார். இந்த சந்தர்ப்பத்தைத் தவற விடக் கூடாதென்று நினைத்து நான் அவர்கள் வீட்டுக்குக் குடி வரப் போகிறேன் என்று சொன்னேன். திடுக்கிட்டு அவள் என்னைப் பார்த்த போது, நடந்த விடயங்களைக் கட கடவெனச் சொல்லி முடித்தேன். இவர் இப்போ சாதாரணமாய் இல்லை என்று என் அடிமனம் சொல்வதையும் சொன்னேன். அவள் '' தப்பு செய்திட்டேன். என் பிள்ளைக்கு ஒரு நல்ல துணை கிடைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்துத் தான் இந்தத் திருமணத்தைச் செய்தேன்'' என்று சொன்னாள். ஆனாலும் நாங்கள் அங்கே குடிபோனால் என் அப்பாவுக்குக் காரணம் சொல்ல வேண்டியிருக்கும் என்று அவள் மிகப் பயப் பட்டாள். எதற்கும் பயப் பிடவேண்டாம் என்றும் தான் தினமும் வந்து பார்ப்பதாக உறுதி சொன்னாள். எனக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது போல் இருந்தது. சொன்னதுபோல் தினமும் வந்து போனாள், அவளும் ''உரத்துச் சிரிப்பது இவன் சுபாவமில்லை. இப்போதெல்லாம் நெடுகச் சிரிக்கிறான். அடுத்த முறை டாக்டரிடம் சொல்லிவிடு '' என்றாள். இவருக்கு தாயார் தினமும் வருவது பிடிக்கவில்லை. ''மாது என்னை நன்றாகவே கவனிக்கிறாள். நீங்கள் ஒன்றும் அவளை மேற்பார்வை செய்யத் தேவையில்லை'' என்று அவளோடு கோபித்துக் கொண்டார். சிரமப்பட்டு பயணம் செய்து , பார்க்க வரும் அவளிடம் இவர் சினந்து விழுவதைப் பார்த்து, அவளுக்கு வீண் சிரமம் கொடுக்கிறேனோ என்ற மனக் கவலை எனக்கு. '' தேவை என்றால் கூப்பிடுகிறேன். அப்போ வாருங்கள்'' என்று சொல்லி விட்டேன்.
ஒரு தடவை மாத்திரையைக் கொடுத்துவிட்டு கையலுவலாக சமையலறைக்குப் போனவள் ,இவர் விழுந்த சத்தம் கேட்டு ஓடி வந்தேன். உடம்பு கல்லுப்போல் விறைத்திருந்தது. பதறியபடியே முகத்தில் தண்ணீர் தெளித்தேன். மூச்சு இருந்தது. கலக்கத்துடன் இவர் தாயாரை தொலைபேசியில் அழைத்தேன். '' பயப்பிடாதே! இது சகஜம். தானாக எழுந்திருப்பான்'' என்று சொன்னார். அன்றிரவு முழுவதும் அவர் பக்கத்திலிருந்து அழுது கொண்டேயிருந்தேன். காலையில் தான் கண் விழித்தார். ''நீர் தூங்கவே இல்லையா?'' என்று இவர் பரிவுடன் கேட்டபோது எனக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை. சின்ன விடயங்களுக்கெல்லாம் பயந்து நடுங்கும் நான் இந்த ஒரு மாதத்தில் மிகத் தைரியசாலியாக மாறிவிட்ட உணர்வு.
(தொடரும்)