நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Monday 24 May 2010

அபூர்வ மரங்கள் -பகுதி 3


இந்த இடுகையில் ஆயுள் கெட்டியான பெயர்பெற்ற ஓக் ( Oak) மரத்தைப் பற்றி எழுதுகிறேன். இதில் விசேடமென்னவென்றால் இந்த மரத்தில் கிட்டத்தட்ட 600 இனங்கள் காணப் படுவதால் நாட்டுக்கு நாடு இவை உருவத்தில் வேறுபட்டுக் காணப் படுகின்றன. இந்த மரம் பண்டைக் காலத்தில் ஐரோப்பியக் காடுகளை ஆக்கிரமித்து இருந்துள்ளன .ஆனால் மற்றைய கண்டங்களில் பரவலாக சிறிய எண்ணிக்கையில் காணப் பட்டுள்ளன.

இவை பல்லாயிரக் கணக்கான வருடங்கள் , இந்த உலகில் நடக்கும் மாற்றங்களுக்குச் சலிக்காமல் ஈடுகொடுத்து தலை நிமிர்ந்து தெம்புடன் நிற்கின்றன. இது அதீத வரட்சியைத் தாங்குவதாலும், பூச்சிகளால் தாக்கப் படாத தன்மையாலும் இதன் வலிமை பிரசித்த மானது . இவை வீரத்தின் அறிகுறியாக கருதப் பட்டதாம். இதனது வலிமையாலும் அழகாலும் பண்டைகாலக் கப்பல்களிலும் பிரித்தானிய அரச மாளிகைகளிலும் தளபாடமாகவும் அலங்கார வேலைப்பாடுள்ள கட்டடப் பொருளாகவும் பெருமிதத்துடன் இடம் பிடித்துக் கொண்டது. அது மாத்திர மல்லாமல் ,இது காதலர்களை சேர்த்து வைக்கும் சக்தியுள்ளதெனவும், திருமணங்களிலும் , சந்ததி வேண்டியும் ஒரு புனிதமான மரமாக அக்கால மக்களால் பூஜிக்கப் பட்டதாம்.

மேலுள்ள காரணங்களால் இது பல நாடுகளில் தேசிய மரமாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. இங்கிலாந்து, போலந்து , பிரான்ஸ் ,ஜெர்மனி , அமெரிக்கா என்பவை மேலுள்ள. இந்த நாடுகளில் இதைப் மரம் நாணயங்களில் பொறிக்கப் படும் வகையில் இருந்துள்ளன என்றால் அதன் மகிமையைப் புரிந்து கொள்ளலாம்.






மேலுள்ள நாணயங்கள் பிரித்தானியாவைச் சேர்த்த ஒன்பது பென்சும் , அமெரிக்க ஷிலிங்ஸ் என்பனவாகும்.

The King Oak – Denmark

டென்மார்க்கிலுள்ள இந்த மரத்தின் வயது சுமார் 1500-௨௦௦௦ எனக் கணக்கிடப்பட்டுள்ளது . ஐரோப்பாவிலுள்ள மிக வயதான மரமாக இது கருதப் படுகிறது. இதனைச் சுற்றி வளரும் சில உயரமான மரங்கள் இதற்கு நிழலை ஏற்படுத்துவதால் சிறுகச் சிறுக இந்த மரம் பட்டுக் கொண்டிருக்கிறது.

Angel Oak



இந்த மரம் அமெரிக்காவிலுள்ள ஜோஹ்ன்ஸ் தீவொன்றில் (Johns Island) காணப்படுகிறது. 1500 வயதுள்ள இந்த மரம் 65 அடி உயரமும் 17000 சதுர அடி நிலப் பரப்பை மூடும் வகையில் பரந்து வளர்ந்துள்ளது.

Bowthorpe Oak



இந்த பௌதொர்ப் ஓக் மரம் இங்கிலாந்தில் லின்கோன்ஸயர் என்ற இடத்தில் காணப் படுகிறது. இதன் வயது 1000 க்கு மேல் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதன் தண்டினுள் உண்டான கோறையினுள் இருக்கைகள் பொருத்தப் பட்டு சுமார் 20 பேர் அமரக் கூடிய போசன கூடமாகப் பாவனையில் இருந்துள்ளது. ஆனால் இப்போ பராமரிக்கப் படாமல் ஆடுகளுக்கும் கோழிகளுக்குள் புகலிடமாக இருக்கிறது. இந்த மரம் கிண்நேஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.







Major Oak of Sherwood Forest England, UK

இந்த பாரிய மரமும் இங்கிலாந்தில் இருக்கிறது. 52 அடி உயரமும், 32 அடி சுற்றளவும் கொண்ட இந்த மரம் 800-1000 வயதுடையது எனத் தெரிகிறது. சரித்திரத்தில் ராபின் ஹூட் (Robin Hood ) எதிரிகளிடமிருந்து தப்புவதற்காக இந்த மரத்தின் தண்டினில் காணப்படும் கோறையில் ஒழிந்திருந்ததாகத் தெரிய வந்துள்ளது.

கிரௌச் ஓக் ( Crouch Oak)

இதன் வயதும் 1000 க்கு மேல் என்று தெரிகிறது. விசேடமென்னவென்றால் இந்த மரம் என் வீட்டருகில் இருக்கிறது.தினமும் காலையும் மாலையும் இதனைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறேன். என்னையறியாமல் அதனைப் பார்த்துப் பிரமிக்கிறேன்.தினமும் அதே ஆர்வத்துடன் பார்க்கிறேன். சற்றுக் காற்றடித்தால் காணும் .அதற்கு ஊன்றுகோல் கொடுத்து சுற்றிவர ரிப்பன் கட்டி அருகில் எவரும் போக விடாமல் செய்வார்கள்.- இந்தப் பாரிய மரம் சரிந்தால் உயிரிழப்புப் பெரிதாக இருக்கும் என்பதால்தான். இதனிலும் ஒரு கோறையுண்டு.

Jurupa Oak


Oak Jurupa


ஜூருப்பா ஓக் மரம் கலிபோனியாவில் காணப் படுகிறது. இதன் வயதை அறிந்தால் பிரமித்துப் போவீர்கள். 13000 வருடங்கள் இந்த மரம் அந்த இடத்தில் இயற்கைப் பதியத்தால் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த மரம் ice age காலத்திலிருந்து இருக்கிறதாம். இதுதான் உலகத்தில் மிக வயது கூடிய மரமாகும்.





Chaple Oak tree - பிரான்ஸ்

இந்த மரம் மிகவும் பிரசித்தமானது. கதைகளில் வரும் கற்பனை போல வடிவமைப்புடன் உல்லாசப் பயணிகளை ஈர்க்கின்றது.


Image of Le Chêne  Chapelle – The Chapel Oak located in  Arrondissement de Rouen, France

இந்த மரத்தின் கோறையினுள் இரண்டு கோவில்கள் அமைக்கப் பட்டுள்ளன.மரத்தைச் சுற்றிச் செல்லும் ஏணிப் படிகள் இந்தக் கோவில்களுக்கு இட்டுச் செல்கின்றன. வியக்க வைக்கும் இந்த மரம் நெப்போலியன் காலத்திலிருந்து இருப்பதாகவும் அதைவிடப் பழமையானதுமாகும்.1600 ஆம் ஆண்டில் ஒரு மின்னல் தாக்கியதால் இந்த மரத்தினுள் கோறை உண்டானாலும் மரம் உயிர் தப்பியது. அதுவே பின்னர் கோவிலாக மாற்றப் பட்டது.இப்போ மரத்தின் ஒரு பகுதி பட்டுப் போனாலும் ,அந்தப் பகுதி மரச் சிலாகைகளால் மறைக்கப் பட்டு, வருடத்திற்கு இருமுறை இந்தக் கோவிலில் மேரி மாதாவின் திருநாள் கொண்டாடப் படுகிறது.
இன்னும் எழுதிக் கொண்டே போகத் தோன்றினாலும், பதிவு நீண்டுவிடக் கூடாது என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.
இசைப் பிரியர்களுக்காக Oak tree சம்பந்தமான ஒரு பாடலை இங்கே இணைத்துள்ளேன்.

http://www.youtube.com/watch?v=x4NQz-qxEbk&feature=ரேலடேத்.


.


Friday 7 May 2010

அபூர்வ மரங்கள் -பகுதி 2

இந்த இடுகையில் நான் Redwood எனப்படும் ஒரு மரத்தைப் பற்றிய விபரங்களைத் தொகுத்துள்ளேன். இவை உலகத்திலுள்ள மிகப் பாரிய மரங்கள் என்று பெயர் பெற்றவை. இவற்றின் தண்டு நேராக உயர்ந்து வளர்ந்து ,கீழ் நோக்கி சற்றுச் சாய்வாக கிளைகளைப் பரப்புகின்றன.

கிழுள்ள படத்தில் இதன் தோற்றத்தைப் பார்க்கலாம். கிட்டத்தட்ட 8 -12 அடி வரை விட்டமுள்ள தண்டுடன் 300 அடிக்கு மேல் உயர்ந்து வளர்கின்றன. இந்த அசாதாரண உயரத்தினால். வேர்களினால் உறுஞ்சப் படும் நீர் உச்சிவரை செலுத்தப் படுவதில்லை. இதன் உச்சியில் காணப் படும் ஊசி முனைகள் அங்கே படியும் பனியைத் தேக்கி வைத்து உறிஞ்சும் தன்மையுள்ளன. இதனால் பனி கொட்டும் பிரதேசங்களில் தான் இந்த மரங்கள் பெருகிக் காணப் படுகின்றன. 20 வீதம் விதைகளாலும், 80 வீதம் இயற்கைப் பதியத்தாலும் இவை இனத்தைப் பெருக்குகின்றன.


உலகில் மிக உயரமான மரங்கள்
Photo source

இந்த மரங்களில் சில டைனசோ இருந்த காலங்களிலிருந்து உயிர் வாழ்கின்றன. உலகில் பல இடங்களில் காணப் பட்டாலும் சில பாரிய ,பழைய மரங்கள் கலிபோனியாவிலும்,நெவேடா மலையடிகளிலும் , சீனாவிலும் காணப் படுகின்றன.
இந்த மரத்தின் பட்டை மிகத் தடிப்பானது.நெருப்பினால் அழியாதவண்ணம் ஒரு கவசம் போல் இது காக்கின்றது.தண்ணீராலும் இந்த மரங்கள் இலகுவில் உக்கிப் போவதில்லை. இந்தப் பட்டையின் சுவை பூச்சிகளினால் விரும்பப் படாததாகவும் , நச்சுத் தன்மையுள்ளதாகவும் இருப்பதால், இந்த மரம் பூச்சிகளினால் பாதிக்கப் படுவதில்லை. இதனால் தளபாடங்கள் செய்யவும், விசேடமாக கட்டட வேளைகளில் விரும்பிப் பாவிக்கப் படுகிறது. அமிலங்களைத் தாங்கக் கூடிய சக்தியுள்ளவை என்பதால், 1930-1960 கால கட்டத்தில் ஆகாய hவிமானங்களில் battery களில் இவை பாவிக்கப் பட்டனவாம்.

ஜெனரல் சேர்மன் ( General Sherman)

இந்த மரத்தின் பரிமாணங்களையறிய மேலுள்ள படத்தை அழுத்திப் பெரிதாக்கலாம்.



இந்த மரம் அமெரிக்க போர் வீரர் வில்லியம் சேர்மன் ( William Sherman) என்பவரின் நினைவாகப் பெயரிடப் பட்டதாம். உலகத்தின் மிகப் பெரிய மரமென்று ( மிக உயரமான மரமல்ல) கின்னஸ் உலகப் பதிவில் தனக்கென இடம் பிடித்துக் கொண்டது. 2006 ஆம் ஆண்டு இதன் பாரிய கிளையொன்று முறிந்து விழுந்து விட்டது. ஆனாலும் இந்த இழப்பின் பின்னரும் இது தான் உலகின் மிகப் பெரிய
மரமாகப் பெருமையுடன் நிற்கிறது.













வாவோன மரம் ( Wawona Tree)

இந்த Redwood மரம் கலிபோனியாவில் யோசெமிட் பூங்காவில் இருந்தது. இதன் தண்டு 90 அடி சுற்றளவும் 315 அடி உயரமாகவும் இருந்தது. 1881 ஆம் ஆண்டு இந்த மரத்தின் பாரிய தண்டுகளில் குகைகள் தோண்டப் பட்டு அதனூடாக வாகனங்கள் செல்லக் கூடிய பாதைகள் அமைக்கப் பட்டன. இது உல்லாசப் பயணிகளை பெருமளவில் ஈர்த்ததனால் , பல்லாயிரக் கணக்கானவர்கள் ,கால் நடையாகவும் தங்கள் வாகனங்களிலும் இந்தக் குகையைக் கடந்ததை பெருமையுடன் புகைப் படமாக்கினார்கள். குதிரை வண்டிக் காலத்திலிருந்து நவீன வாகனங்கள் வரை பல விதமான வாகனங்கள் இந்த மரத்தினுடாகப் பயணித்து விட்டன.

Wawona Tree
Source


ஆனால் 1969 ஆம் ஆண்டு கொட்டிய கடும் பனியில்
(snow) 2 தொன் பனி இதன் உச்சியில் தேங்கியதால் அதன் பாரத்தைத் தாங்க முடியாததாலோ என்னவோ இந்த மரம் சாய்ந்து விட்டது. அப்போது அதன் வயது 2300 வருடங்களாகும்.


உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில் இதைப் போன்று இயற்கை வனப் பூங்காக்களில் ,ஒரு சில Redwood பாரிய மரங்களில் குகைகள் அமைக்கப் பட்டன. அவையும் பிரசித்தமானவை. இந்தக் குகைகள் தோண்டிய பின்னரும், இந்த மரங்களின் ஆரோக்கியத்தில் எந்தக் குறைபாடும் ஏற்படாதது மிகவும் விசித்திரமானது. ஆனால் இப்போது புதிதாக இந்த மரங்களில் குகை அமைப்பது சட்டப் படி தடுக்கப் பட்டு விட்டதால் ஏற்கெனவே அமைக்கப் பட்ட குகைப் பாதைகள் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கின்றன.

Shrine Drive Thru Tree
















Shrine Drive Thru Tree
Source


Tour Thru Tree















Tour Thru Tree
Source

Chandelier Drive Thru Tree



உலகப் பிரசித்தமான மர வீடு

இது 4000 வருட வயதுள்ள redwood தண்டின் அடியில் குடையப் பட்டு அமைக்கப் பட்ட அறையாகும். இந்த மரத் தண்டு 33 அடி விட்டத்தையும் 250 அடி உயரத்தையும் கொண்டுள்ளது. இந்த அறையினுள் சென்று சரித்திரத்தில் தங்கள் பெயரையும் பதித்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோர். துரதிஷ்ட வசமாக சில வருடங்களுக்கு முன் இந்த மரம் விழுந்து விட்டது.



இறப்பில்லாத
மர வீடு ( Eternal Tree house)

கலிபோனியாவில் ரெட்கிருஸ்ட் என்னும் இடத்தில், ஒரு இறந்த ரெட்வூத்( redwood) மரத்தின் தண்டின் அடிப் பகுதியில் இந்த வீடு அமைக்கப் பட்டது. இப்போ இது அழகான ஒரு போசன சாலையாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இதன் உட்புற அழகைப் படத்தில் பாருங்கள்.
இந்த மரத்தின் வேர்களில் இருந்து உருவாகிய புதிய மரங்கள் பழைய தண்டைச் சுற்றி வளர்ந்து விட்டதால் இறப்பில்லாத மரம் எனப் பெயரிடப் பட்டது.

















Eternal tree house- Entrance



Eternal Tree House- Internal view



.

Saturday 1 May 2010

அபூர்வ மரங்கள் -பகுதி 1


இந்தத் தொடரில் நானறிந்த சில அற்புதமான மரங்களைப் பற்றி எழுத எண்ணியுள்ளேன். இந்த இடுகையில் என்னைப் பிரமிக்க வைத்த பாவ்பாப் ( Baobab) எனப்படும் ஆயுள் கெட்டியான ,ஆனால் உலகில் மிக அரிதாகிக் கொண்டிருக்கும் மரத்தைப் பற்றிச் சொல்கிறேன்.

இலங்கையில் மன்னாரிலுள்ள யானை மரம்

இது ஆபிரிக்கா, மடகஸ்கார் , ஆஸ்திரேலியா என்ற இடங்களுக்கு உரித்தான மரமானாலும், இந்தியாவிலும் . இலங்கையிலும் சிறிய எண்ணிக்கையில் காணப் படுகிறது. இப்போ 4o மரங்கள் இலங்கையில் மீதமிருப்பதாக அறிகிறேன். மேலே படத்தில் மன்னாரிலுள்ள இந்த மரத்தைக் காண்கிறீர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்த மரம் இன்னும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. இதற்கு 'யானை மரம்' என்றும் ' பேரக்கா மரம்' என்றும் பெயர் உண்டு.


இந்தியாவில் சென்னையிலுள்ள யானை மரம்

ஒரு சில பாரிய இந்த மரங்கள் கிறிஸ்துவுக்கு முன்பு பிறந்தவை என்பதும் ,ஒரு சில 4000, 5000 வருடங்களாக உயிர் வாழ்கின்றன என்பதையும் அறியும் போது ,வியக்காமலிருக்க முடியவில்லை.


இந்த மரம் கிட்டத்தட்ட 60 அடி உயரத்துக்கு வளரக்கூடியது. இதன் தண்டின் விட்டம் 50 அடி வரை பருமனாகக் கூடியது, அத்துடன் நேராக உருளை வடிவில் வளர்ந்து உச்சியில் கிளைகளைப் பரப்புகின்றது. வருடத்தில் ஆறு ஏழு மாதங்கள் கிளைகளில் இலைகள் உதிர்ந்து காணப் படுகின்றன. இந்த இயல்புகளினால் பார்வைக்கு ஒரு மரத்தைப் பிடுங்கி தலை கீழாக நாட்டினால் எப்படி இருக்குமோ அப்படி இவை தோன்றுகின்றன. மேலே படத்தில் காணப் படும் கிளைகள் பிடுங்கி எடுக்கப் பட்ட வேர்கள் போன்று தெரிவதைப் பாருங்கள். இதனால் இதற்கு( ' upside down tree') தலை கீழான மரம்' என்றும் பெயருண்டு.

பண்டைக் கால ஆபிரிக்க மக்கள் இந்த விருச்சிகத்தை ஒரு பரிசுத்தமான பொருளாகக் கருதினார்கள். அதன் கீழே இருப்பவர்கள் ஆபத்திலிருந்து காப்பாற்றப் படுவார்கள் என்றும், அதன் நிழலில் பேசி முடிவெடுக்கும் எந்தக் காரியமும் கை கூடுமென்றும் நம்பினார்கள். அதனால் பலர் இந்த மரத்தின் கீழே வாழ்ந்தார்கள். ஒரு சிலர் இந்த மரத்தினருகில் தாங்கள் வீடுகளைக் கட்டினார்கள்.

இந்த மரத்தின் எல்லாப் பகுதிகளுமே மனிதனுக்கு உபயோகமானதாக இருக்கிறது. பூக்கள் ,இலைகள் ,பழம், இளம் தண்டுகள் அனைத்துமே சத்துள்ள மரக்கறியாகின்றன.இதன் பழத்தில் விற்றமின் A உம் C உம் அதிகளவில் காணப் படுவதால், இந்தப் பழத்திலிருந்து தயாரிக்கப் படும் ஜாம் வெளி நாடுகளில் பத்து மடங்கு விலையில் விற்பனையாகிறது. இதன் விதைகள்
பொடியாக்கப் பட்டு சூப்பைத் தடிக்க வைக்கப் பாவிக்கப் படுகிறது.
இந்தப் பொடி ஆபிரிக்காவில் கோப்பிக்குப் பிரதியீடாக அருந்தப் படும் சுவையான பானமாகவும் இருக்கிறது. காய்ந்த பட்டைகள் , எரிபொருளாகவும், நாராக்கப் பட்டு கயிறு, பைகள், பாய்கள் என்று உருமாற்றப் பட்டு அன்றாட வாழ்க்கையில் ஒன்றி விடுகிறது. காய்ந்த வேர்களிலிருந்து முகப் பூச்சுகளும் , வயிற்று வலிக்கான மருந்துகளும் தயாரிக்கப் படுகின்றன. அத்துடன் இதன் எண்ணெய் சமையலுக்கு உதவுகிறது.இவையெல்லாம் போதாதென்று முதிர்ந்த தண்டுகள் நடுவில் கோறையாகி சுமார் 120 ,000 லீட்டர் வரை தண்ணீரை உறிஞ்சித் தேக்கி வைக்கும் தன்மையுள்ளது. இதனால் ஆபிரிக்காவில் சில வரண்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு குடி நீர் வழங்கும் தண்ணீர் தடாகமாகவும் இருக்கிறது. அங்கு வளரும் ஒரு வகையான புல்லினை straw போலப் பாவித்து தண்டினில் துவாரமிட்டு அதன் மூலம் நீரை அருந்துகிறார்கள். இப்படி பலவிதமாகவும் மனித வாழ்வுக்கு உதவுவதால் இந்த மரத்தினை ' Tree of life ' என்றும் அழைப்பார்கள்.




இதன் காய்கள், நீண்ட காம்பில் தொங்கும் போது அவை கிறிஸ்துமஸ் அலங்காரம் செய்தது போல் காட்சி யளிக்கிறது.

1000 ஆண்டுகளின் பின்பு இதன் தண்டுகள் அனேகமாக கோறையாகின்றன. இவை மனிதர்களுக்குப் புகலிடமாகவும் இருந்திருக்கிறது. இதை விட இந்த கோறைகள் கோவில்களாக, சிறைச் சாலைகளாக , கல்லறைகளாக, கழிவறைகளாக பாவிக்கப் பட்டெனவெனவும் , ஏன் இன்றும் கூட 60 பேர் அமரக் கூடிய குடிபானச் சாலையாக ( bar ) இயங்கிக் கொண்டிருக்கிறதென்றால் நம்புவீர்களா?

Picture of Teapot baobab tree

மடகஸ்காரிலுள்ள இந்த மரத்தின் வயது சுமார் 1000 வருடங்களாகும். இதன் தோற்றம் ஒரு tea pot வடிவில் இருப்பதால் பிரசித்தமானது.

St.Maryam Dearit's shrine in Keren, built into a huge Baobab tree.

1881 ஆம் ஆண்டு ஒரு மரத்தின் கோறை கத்தோலிக்க ஆலயமாக மாற்றப் பட்டு '' St .Maryam dearit ' எனப் பெயரிடப் பட்டு ,மேரி மாதாவின் வழிபாட்டிடமாக பேணப் பட்டது.1941 ஆம் ஆண்டு , இரண்டாவது உலக யுத்தத்தின் போது , மூன்று இத்தாலிய போர் வீரர்கள் இந்த ஆலயத்தில் தஞ்சமடைந்தார்கள். இதன் தண்டு அப்போது பலத்த சேதமடைந்தாலும், போர் வீரர்கள் உயிர் பிழைத்தார்கள்.


மேலேயுள்ள மரம் , மேற்கு அவுஸ்திரேலியாவில் காணப் படுகிறது.இந்த மரம் ,பண்டைக் காலத்தில் சிறைச் சாலையாகப் பாவிக்கப் பட்டதாம். இதனுள் 5 கைதிகள் அடைக்கக் கூடிய இடம் இருக்கிறதாம்.
பல நாடுகளில் சிறைக் கைதிகள் இதனுள் அடைக்கப் பட்டதும் இதை விடப் பெரிய சிறைச் சாலைகள் இருந்ததும் தெரிய வருகிறது.

கிழக்காபிரிக்க போர்வீரர்கள், நம்பியா என்ற நகருக்கு படையெடுத்த போது ,அங்குள்ள ஒரு பாவ்பாப் மரத்தைக் குடைந்து ஒரு கழிவறையை( flush toilet ) பொருத்தினார்கள். இதன் மூலம் அங்குள்ள மக்கள் அந்த மரத்தில் வைத்திருந்த மதிப்பையும் , பற்றையும் எள்ளி நகையாடினார்கள். ஆனால் சில மாதங்களில் அதன் தண்டு வளர்ந்து கதவை மூடியதால், அதன் கதவைத் திறக்க முடியாமல் போய் விட்டதாம்.


தென்னாபிரிக்காவிலுள்ள மிகப் பழமையான .பாரிய மரமொன்றினுள் அறுபது பேர் அமரக் கூடிய ஒரு குடிபான சாலை அமைக்கப் பட்டுள்ளது.அதனுள் தொலைபேசி உட்பட ,சாதாரண வசதிகள் அத்தனையும் காணப் படுகிறது.தென்னாபிரிக்காவில் உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் பிரசித்தமான இடமாக இது கருதப் படுகிறது.இந்த மரத்தின் வயது கிட்டத்தட்ட 6000 வருடங்கள் எனக் கணக்கிடப் பட்டுள்ளது. Wall Street Journal இல் முதல் பக்கத்தில் இடம் பெற்ற பெருமையையும் கொண்டுள்ளது. மிக ஆர்வத்துடன் இதைப் பற்றி பல தகவல்கள் படித்த போது நான் சேகரித்த படங்களை உங்கள் பார்வைக்காக இங்கே சேர்த்துள்ளேன். படங்களும் விடயமும் உங்களை ஆச்சரியப் படுத்தும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.

இன்னும் படிக்க இங்கே பாருங்கள்..


.