நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Wednesday 31 March 2010

நம்புங்கள் -இது உண்மை

இந்தியாவைச் சேர்ந்த சஞ்சு என்ற மனிதர் பிறந்ததிலிருந்து ஒரு பெரிய வயிற்றுடன் தான் இருந்தார். ஆனால் காலம் செல்லச் செல்ல அதன் அளவு பெரிதாகிக் கொண்டே போனது. 1999 ஆம் ஆண்டு அவரது 36 ஆவது வயதில், மூச்சு எடுக்க முடியாத நிலைமையில் இவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். இவரைப் பரிசோதித்த டாக்டர்கள் இது அவர் வயிற்றில் வளரும் ஒரு பெரிய கட்டியினால் என்று அனுமானித்தார்கள். அந்தக் கட்டி வளர்ந்து பிரிமென் தகட்டை அமுக்குவதால் அவரால் மூச்செடுக்க முடியவில்லை என்றும் தீர்மானித்தார்கள். இதனால் அக்கட்டியை அகற்ற அவசரச் சத்திர சிகிச்சை ஏற்பாடானது.


இந்த
சத்திர சிகிச்சையைச் செய்த டாக்டர் Mehta ஒரு மருத்துவ விந்தையைக் கண்டார். அவரது வயிற்றிலிருந்து இரண்டு கால்கள், பல எலும்புகள், கைகள் ,நீண்ட நகங்களுடன் விரல்கள் , என பல உடல் பாகங்களை அகற்றினார்கள்.
அவரது இரட்டைப் பிறவி ( twin brother) பிறப்பிலிருந்தே அவர் வயிற்றில் ஒரு ஒட்டுண்ணியாக வளர்ந்த விந்தை அதன் பின்னர் தெரிய வந்தது. உலகத்தில் இப்படியான சம்பவங்கள் பல இடங்களில் இதற்கு முன்னரே நடந்திருந்தாலும் இத்தனை வருடங்களுக்குப் பின்னர் அறிய வந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இப்படியான கற்பங்கள் 500,000 க்கு ஒன்றுதான் நடக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளனவாம்.

இவ்வாறாக ஒரு கருவைச் சுற்றி மற்றைய கரு வளரும் நிலையை '' Fetus in fetu'' என்று அழைக்கிறார்கள்.


.

Tuesday 30 March 2010

எனக்குப் பிடித்த பெண்கள்

பெண்கள் தினத்தை யொட்டி ஆரம்பிக்கப் பட்ட ஒரு சங்கிலித் தொடர் பதிவிது. இன்னும் வலையுலகில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இங்கு உங்களுக்குப் பிடித்த பத்துப் பெண்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். நான் இம்முறை தப்பி விட்டேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அன்புடன் பா.ரா. மாட்டி விட்டு விட்டார்.


பிடித்த பெண்கள் என்றதும் மனதில் அம்மம்மா, அம்மா, என் பெண்கள் தான் வருகிறார்கள். ஆனால் இந்தத் தொடருக்கு சில விதி முறைகள் இருப்பதால் அவர்களைப் பற்றிச் சொல்ல முடியாதாம்.

அதனால் முதலில் விதி முறைகளைப் பார்ப்போம்.

1.. உறவினர்களுக்கு இங்கு இடமில்லையாம்.

2.. வரிசை முக்கியமில்லையாம் ( நல்லதாய்ப் போய் விட்டது. இல்லாவிட்டால் அதற்கு வேறு திண்டாட வேண்டும்.)

3.. வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்களாய் இருந்தால் நல்லமாம். ( முயற்சிக்கிறேன்.


ரோசா பார்க்ஸ் -----மனித உரிமைப் போராளி
(Civil Right activist )

பஸ் வண்டியில் பயணித்தபோது தனது இருக்கையை ஒரு வெள்ளை அமெரிக்கனுக்குத் துணிவுடன் தர மறுத்ததினால் பெரும் புரட்சி செய்தவர்.அதன் காரணத்தினால் கைது செய்யப் பட்டு , தண்டம் கட்டச் சொல்லப் பட்ட போது மனித உரிமைக்காக ஒரு அமைப்பை உருவாக்கிப் போராடியவர். சுதந்திரத்திற்காக போராடும் எவருக்கும் இவர் ஒரு எடுத்துக் காட்டு. 2005 ஆம் ஆண்டு தனது 92 ஆவது வயதில் இவர் இறந்து போனாலும் இவர் பெயர் இன்னும் நிலைத்து நிற்கிறது.

கல்பனா
சாவ்லா

Kalpana Chawla -Aero Space Engineer)

விண்வெளியில் பறந்த முதல் இந்தியப் பெண்மணி. தனது இருபதாவது வயதில் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்று அங்கே விண்வெளிப் பொறியியலாளராகக் கற்றுத் தேர்ந்தவர். இரண்டாவது தடவை இவர் பயணித்த விண்கலம் வெடித்துச் சிதறியதால் உலகை உலுக்கி வெற்றி மரணம் அடைந்தவர்.


தாயார் தெரேசா - சமூக சேவகி
(Mother Teresa )

இவரைப் பற்றி அறியாதவரில்லை. சுருக்கமாகச் சொன்னால் பெண்மைக்கே பெருமை தேடித் தந்த தன்னலமற்ற சேவகி. தனது எண்பத்தி ஏழாவது வயதில் இறக்கும் வரை மனித குலத்துக்கு தொண்டாற்றுவதையே வாழ்க்கையாக்கிக் கொண்டவர்.






சுதா சந்திரன்
- நாட்டிய தாரகை. நடிகை
(Sutha Chandran )



இவர் ஒரு காலை விபத்தில் இழந்த பின்னரும் தளராமல், பொய்க் கால் பூட்டி தனது நடனக் கலையைத் தொடர்ந்தவர். இவர் கதை படமாக்கப் பட்ட ' மயூரி '' படத்தில் அந்தப் பாத்திரத்தில் அவராக நடித்து நடிகை யானவர். அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.




மனோரமா - நகைச்சுவை நடிகை

(Manorama)

தனது தனித்துவமான நடிப்பினால் பல சந்ததிகளை மகிழ்வித்தவர்.
சிரிக்க வைக்க மட்டுமல்ல, கலங்க வைக்கவும் என்னால் முடியும் என பல முறை நிரூபித்தவர்









ரீனா ரேர்நெர்
(Tina Turner)- --- பாடகி, நடன மாது, நடிகை )


''Queen of the rock 'n' roll''

தற்போது இவரின் வயது 70 . சுமார் 50 வருடங்களாக கலையுலகில் தனக்கென ஒரு பெயர் பதித்தவர். இவரது 200 மேற்பட்ட இவரது இசைத் தட்டுக்கள் இன்றுவரை விற்பனை யாகியுள்ளன. எட்டு முறை கிராமி விருது பெற்றவர்.




ஒப்ராஹ்
வின்பிரே

Oprah Winfrey '' Successful and beautiful African American Icon''

'' Respected and admired public figure today ''

இவரை எந்தத் துறையில் சேர்ப்பது என்று திண்டாட்டமாக விருக்கிறது. நடிகை, வானொலி அறிவிப்பாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் ,பெயர் பெற்ற தொலைக் காட்சி அமைப்பாளர். இவரது ' ஒப்ராஹ் வின்பிரே ஷோ' (Oprah Winfrey TV Show) மிகப் பிரசத்தமானது. மிசிசிப்பியில் மிக ஏழைக் குடும்பத்தில் பிறந்து தனது ஒன்பதாவது வயதில் ஒரு உறவினரால் கற்பழிக்கப் ,பட்டு பல விதமாக இன்னல் பட்ட இந்தப் பெண் தனது பிபிலிய நம்பிக்கையினாலும், ஆழ்ந்து கற்ற அறிவினாலும் , வாழ்க்கை தந்த ஒப்பற்ற அனுபவத்தினாலும், ஒப்பிட முடியாத விவாதத் திறமையினாலும் உலகப் புகழ் பெற்றுச் சிகரத்தை அடைந்தவர். இவரைப் பற்றிச் சொல்லப் போனால் ஒரு கட்டுரையே எழுத வேண்டியிருக்கும்.



தாயார் மற்றில்டா --கன்னியாஸ்திரி

Mother matilda

சின்ன வயதில் எனக்குக் கல்வி கற்றுத் தந்த என் அபிமான ஆசிரியை. அன்பையும் கண்டிப்பையும் ஒரே நேரத்தில் காட்ட முடியும் என்பதை இவரிடம் கற்றுக் கொண்டேன். என் மனதில் படிந்திருக்கும் இவர் முகத்தை உங்களுக்குக் காட்ட ,என்னிடம் அவர் படம் எதுவும் இல்லை என்பது பெரும் கவலை.



பி. சுசீலா-------- எனது அபிமானப் பாடகி




தனது தெய்வீகக் குரலால் பல மனங்களை ஈர்த்தவர். நான் மட்டும் விதி விலக்கா? என்ன ?
குளியலறையில் மட்டும் நானும் அவராக மாறப் பிரயத்தனம் பண்ணுவேன். கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி ..........






நி. ரவீந்திரன் --என் ஆருயிர் தோழி



முற்பிறப்பில் நான் செய்த பலனால் எனக்கு இப்பிறப்பில் அறிமுக மான என் தோழி. அன்பினால் என்னைக் கட்டிப் போட்டவள். நான் துவண்ட போதெல்லாம் தோள் தந்தவள்.
இந்தப் பொல்லாத உலகில் இருக்கப் பிடிக்காமலோ என்னவோ இந்த உலகை விட்டு அவசரமாகப் புறப்பட்டவள்.




பத்துப் பெண்களைப் பற்றிச் சொல்லியாச்சு. இனி இந்தத் தொடரை எழுத அன்புடன் அருணாவையும், அண்ணாமலையானையும் அன்புடன் அழைக்கிறேன்.









Saturday 20 March 2010

தண்ணீர் தினத்துக்காக.....ஒரு துளி



இந்த மாதம் 22 ந் திகதி உலகத் தண்ணீர் தினமாகப் பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது. இந்த வருடம் மக்களிடையே சுத்தமான நீரின் அவசியத்தை உணர்த்தும் முகமாக பல நாடுகளில் பல இயக்கங்கள் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. பதிவுலகில் எனக்கு முன்னரே பலர் இந்தத் தலைப்பில் எழுதி விட்டாலும் இன்னும் எழுத பல விடயங்கள் இருக்கின்றன என்பது தெரிகிறது.

இன்றைய மனித குலத்தை எதிர் நோக்கும் பிரச்சனையில் நீர்த் தட்டுப் பாடு பாரிய பிரச்சனையாகக் கருதப் படுகிறது. நீரில்லையெனில் உயிரில்லை. அதனால் இதனால் விளையக் கூடிய அபாயங்களை பலரும் அறிந்து ,மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சி உண்டாகி, எமது வாழ்க்கை முறைகளை எமது வருங்காலச் சந்ததிகளின் நலன் கருதி நாம் மாற்றியமைக்கா விட்டால், இன்னும் ஒரு சில வருடங்களில் உலகச் சனத் தொகையில் பாதி, நீருக்குத் திண்டாடும் நிலைமை வரலாமெனக் கணக்கிடுகிறார்கள்.

இதில் சுவாரசிய விடயமென்னவென்றால் ,எமது இயற்கை வளமான நீர் ,மனிதர் அறிந்த காலத்திலிருந்து ஒரே அளவில்தான் இருக்கிறது. ஆனால் பல்வேறு வடிவங்களில், நீராகவோ,பனிக் கட்டியாகவோ , நீராவியாகவோ மாறிக் கொண்டு இருக்கிறது. வளர்ந்து வரும் சனத் தொகையும் , அதன் விளைவால் அதிகரித்த விவசாய நிலங்களும், விஞ்ஞான வளர்ச்சியும், அது விளைவித்த இரசாயனக் கழிவுகளும் எனப் பல காரணிகளினால் குடிப்பதற்கு ஒரு துளி நீர் இல்லாமல் இறக்கும் நிலைமைக்கு பல கோடி மக்கள் தள்ளப் பட்டுள்ளார்கள். இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு குவளை நீரில்லாமல் ஒரு வருடத்தில் சுமார் இரண்டு மில்லியன் குழந்தைகள் இறக்கிறார்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய உண்மையாகும்.




வளர்ந்து வரும் நாடுகளில் குழாய்கள் பழுதடைவதாலும், சட்ட ரீதியில்லாத நீர் விநியோகங்களாலும், வேணுமென்றே செயற்படும் நாட்டுப் பற்றல்லாத மக்களின் செயல்களாலும், ஊழல்களாலும் ,காலநிலை மாற்றத்தால் விளைந்த வரட்சியினாலும் விலை மதிப்பில்லா எமது இயற்கை வளமான நீர் போதுமான அளவில் சாதாரண மக்களுக்குக் கிடைக்காமல் அவதிப் படுகின்றனர். கிட்டத்தட்ட மில்லியன் பெண்களும் குழந்தைகளும் பல மணி நேரம்
பல
மைல்கள் நடந்து குடி நீர் சுமக்கிறார்கள். சுத்தமான நீர் கிடையாத காரணத்தால் பல நோய்களால் பாதிக்கப் பட்டு பணபலம் குறைந்த நாடுகள் பொருளாதார உயர்வு காண முடியாமல் அல்லல் படுகின்றன.




குடி நீர் வளமும் , முறையான கழிவகற்றும் முறைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதாகக் காணப் படுகிறது. மேலேயுள்ள வரைபு உலக சராசரி நீர் வசதிக்கும் , வளர்ந்து வரும் நாடுகளின் வசதிக்குமான ஒரு ஒப்பீடாகும்.

நீர் மாசடைவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ,அவற்றை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1 . point source -மாசுகள் நேரடியாக நீர் வட்டத்தை அடைவது
2. non -point source -மறை முகமாக நீர் மாசடைவது.
அனேகமாக பல நாடுகளில் அரசாங்கங்களினாலும், வெவ்வேறு அமைப்புகளினாலும், மாசுக்கள் தொழிற்சாலைகளால் கடல் நீரில் நேரடியாகக் கலக்கப் படுவது இப்போது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.



மறை முகமாக மாசுகள் நீரை வந்தடைவதைத் தடுப்பது மிகக் கடினமான விடயம். எனவே சாதாரண மக்களுக்கு இந்த வகையான மாசடைதல் பற்றிய அறிவை ஊட்டுதல் மிகவும் முக்கியமாகும்.
1. கிருமி நாசினிகள்
இவை மண்ணின் மேலாக மழை நீரினால் அடித்துச் செல்லப் பட்டு குளங்களிலும், கடலிலும் கலக்கின்றன.இதனால் நீரை மாசாக்குவதுடன், நீர் வாழ் உயிரினங்களின் அழிவுக்கும், இரசாயனப் பொருட்கள் உணவுச் சங்கிலியில் சேர்வதற்கும் வழி வகுக்கின்றன.
2 இயற்கை/ செயற்கை உரம்
இவை நீர் வாழ் அல்காக்களையும், நீர்த் தாவரங்களையும் துருதமாக வளரப் பண்ணி, நீர் ஓடும் பாதைகளை அடைக்கின்றன. இதனால் சூரிய ஒளி நீரின்ஆழத்தைச் சென்றடையாமல் தடுக்கப் படுகின்றது.இதனால் உயிரினங்கள் இறந்து, அவை அழுகும்போது நீரிலுள்ள பிராண வாயுவை உபயோகிப்பதால்,சில பகுதிகளில் நீரில் எந்த உயிரினங்களும் வாழ முடியாத பிரதேசங்களை ( Dead Zone )உருவாக்குகின்றன.
3. எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்கள்
எண்ணெய்க் கப்பல்கள் கடலில் தாழும் போதெல்லாம் அந்தச் செய்தி பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகி ,அதன் விளைவால் கடல் நீர் மாசுபட்டு விட்டதென்பதை பலரும் அறிந்து கொண்டோம். ஆனால் நாளாந்தம் எங்கள் காரிலிருந்தும், பெற்றோல் பங்கர்களிலிருந்தும் ,தொழிற்சாலைகளிலிருந்தும் ,கப்பல்களிலிருந்தும் வழிந்தோடும் பெற்றோலியப் பொருட்கள் கடலை யடைந்து உண்டாக்கும் அபாயம் அதைவிட பன்மடங்கானது என்பதை பலரும் அறிய மாட்டோம்.
4. தொழிற்சாலைகளினால் வெளிவரும் இரசாயனக் கழிவுகள்.
கதிர் வீச்சுள்ள (radio active substance)அபாயகரமான பக்க விளைவுப் பொருட்கள் ஆழ் நிலத்தில் சுரங்கங்களில் ( underground injection wells) தாக்கப் படுகின்றன. இவை நில நீரைச் சென்றடையும் அபாயமும் எம்மை எதிர் நோக்கியுள்ளது.
5. உலோகச் சுரங்கங்கள்.
நிலத்தின் அடியில் பாதுகாப்பாக அடைக்கப் பட்டிருக்கும் பலவகை உலோகங்கள், சுரங்கங்கள் அமைக்கும் போது வெளிப் படுத்தப் பட்டு, மழை நீரினால் அடித்துச் செல்லப் பட்டு நீர்ச் சக்கரத்தை அடைகிறது. தங்கச் சுரங்கங்களில் இருந்து சயனைற் கழுவிக் செல்லப் படுவதால் இது ஒரு பாரிய பிரச்சனையாகும்.
6. பிளாஸ்டிக்
சுத்தமாகிய நீரை குறைந்த விலையில் விநியோகிக்க மனிதன் பிளாஸ்டிக் போத்தல்களில் அதை அடைத்து தண்ணீர் பஞ்சத்தைக் குறைத்தான். அந்தப் பிளாஸ்டிக் இப்போ அவனைக் 'குண்டு வெடி' போல் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.



குடித்து விட்டு மனிதர் வீசியெறிந்த போத்தல்களும் , மற்றும் மீன் வலை போன்ற பல பிளாஸ்டிக் பொருட்களும் சமுத்திரங்களின் அடியில் பல மைல்களுக்கு ஒரு குப்பைப் பிரதேசங்களை ( gabbage patch) உருவாக்கியுள்ளன. இந்த பிளாஸ்டிக் நாளடைவில் நுண்ணிய துகள்களாகி நீர்வாழ் உயிரினங்களால் உண்ணப் பட்டு அவற்றின் எமன்களாகின்றன. இறக்க முன் வலையில் பிடிபடும் மீன்கள் மிக இலகுவாக எங்கள் உணவுச் சக்கரத்தில் பிளாஸ்டிக்கை சேர்க்கின்றன. இவை புற்று நோயை உண்டாக்குமென மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


Sea creatures that are killed by plastic readily decompose but the plastic does not. It remains in the eco- system to kill again and again .
உலக அளவில் பெரிதாக எதுவும் எம்மால் செய்ய முடியாவிட்டாலும் நம்மால் செய்யக்கூடிய சில முயற்சிகள்

1 தண்ணீரை அளவோடு பாவியுங்கள்.
எங்கள்
மேலதிக பாவனை .பிறருக்கு தண்ணீர் தட்டுப் பாட்டை உண்டாக்கி விடும்.
2 உங்கள் வீட்டில் பின் முற்றத்திலோ , வாய்க்காலிலோ அல்லது கழிவறையிலோ .என்ன எறிகிறீர்கள் என்று அவதானியுங்கள்.எண்ணெய் ,பெயிண்ட் போன்றவற்றை நீர்ச் சக்கரத்தில் சேர வழி வைக்காதீர்கள்.
3 விவசாயம் செய்பவர்கள் சரியான அளவில் இரசாயனக் கலவைகளை உபயோகியுங்கள்.
4 .. வீட்டுத் தோட்டங்களில் மரங்களை நாட்டுங்கள். அவை இரசாயனப் பொருட்களை வடித்தெடுக்கும் வடியைப் போன்றவை.
5. குளங்கள், நதிகள், கடல்களில் குப்பையைக் கொட்டாதீர்கள். கடற்கரையில் நீங்கள் எறியும் குப்பைகள் ஒரு நாள் நீங்கள் குடிக்கும் நீரிலோ அல்லது உங்கள் சந்ததி குடிக்கும் நீரிலோ வந்து சேரப்போகிறது.



இன்று சுத்தமான நீரென நீங்கள் கடையில் வாங்கிக் குடிக்கும் போத்தல் நீர், இந்த உலகில் மில்லியன் வருடங்களுக்கு முன்னரே இருந்திருக்கிறது. அது பல தாவரங்களின் தண்டு வழியாக ஓடியிருக்கிறது. பல வாகனங்களைக் கழுவியிருக்கிறது. நீங்கள் நனைந்து மகிழ்ந்த மழையாக இருந்திருக்கிறது. மாட்டுக்குக் குடிக்க வைத்த நீராக இருந்திருக்கிறது. ஒருவேளை கோவிலில் சாமியைக் குளிப்பாட்டிய நீராகவும் இருந்திருக்கும். மில்லியன் வருடங்களுக்கு முன்னால் ட்ய்னசோ அருந்திய நீராகக் கூட இருக்கலாம் . யாருக்குத் தெரியும்?
இந்த உண்மையை எல்லோரும் உணர்ந்தோமானால் எம்மைச் சுற்றயுள்ள காற்றையோ, மண்ணையோ, நீரையோ மாசடைய விட மாட்டோம்.

'' வினை விதைத்தால் வினை அறுப்போம்
தினை விதைத்தால் தினை அறுப்போம்''


ஒரு நாள் உங்கள் பிள்ளைகளோ , பேரப் பிள்ளைகளோ உங்களிடம் வந்து ''அப்பு/ஆச்சி , இன்னும் சில வருடங்களில் இப்படியெல்லாம் ஆகப் போகுது என்று உங்கள் காலத்தில் கண்டு பிடித்தார்களே! அதைத் தடுக்க நீ என்ன செய்தாய்?'' என்று கேட்கும்போது வெட்கித் தலை குனிந்து நிற்காமல் இருப்பதற்காகவேனும் எம்மை மாற்றிக் கொண்டு, '' உங்களுக்கு சுத்தமான நீர் கிடைப்பதற்காக நான் இத்தனை செய்தேன் '' என்று தலை நிமிர்ந்து , மார் தட்டிச் சொல்ல எங்களைத் தயார் படுத்திக் கொள்வோம்.


உலக
வங்கியின் அண்மைய மதிப்பீடின்படி உலகம் முழுவது தேவையான குடி நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய சுமார் US$ 600 பில்லியன் தேவைப்படும் எனத் தெரிகிறது.

தண்ணீருக்காக பல நாடுகளில் குழந்தைகள் படும் பாட்டையும் முன்னேறிய நாடுகளில் மக்கள் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு அள்ளித் தெளிக்கும் பணத்தையும் ஒப்பிட்டு ஒரு வீடியோ பார்த்தேன். அதனை உங்களுக்காக இங்கே இணைத்துள்ளேன்.


என்னை இத்தொடருக்கு அழைத்த தோழி மாதேவிக்கு என் மனமார்ந்த நன்றி.
அவரது விரிவான பதிவை இங்கே நீங்களும் படிக்கலாம்.
உங்கள் கருத்துகளையும் நண்பர்களுக்குச் சொல்வதற்கு நான்
கலகலப் பிரியா, கவிநயா இருவரையும் அழைக்கிறேன்.


.

Saturday 13 March 2010

நாகரீகமென்ற அநாகரீகம் ( Adults only )

அண்மையில் பத்திரிகையில் நான் படித்த செய்தியொன்று என்னை அதிர வைத்தது. பெண்கள் தினத்தையொட்டி பலரும் ஆணாதிக்கம் பற்றியும், பெண் அடிமைத்தனம் பற்றியும் சக்கை போடு போடும் இந்த நேரத்தில் இந்தப் பதிவு அவசியம் தேவையென்றும் தோன்றியது. என்னைப் போலவே பலரும் இந்த விடயத்தை முதன் முதலாக அறிந்து மிரண்டு போகலாம். நாகரீகம் என்ற பெயரில் பல வளமான நாடுகளில் நடைபெறும் இந்த அநாகரீகங்கள் நாங்கள் ஒரு கலிகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தெட்டத் தெளிவாகக் கூறுகிறது.
ஜப்பானிய உணவான சூஷி ( Sushi) பற்றியறிவீர்களா? சில பிரபல நட்சத்திர ஹோடேல்களில் இந்த உணவு , கிட்டத்தட்ட நிர்வாணமான பெண்ணின் உடல்மேல் பரிமாறப் படுகிறது. ஜப்பானில் பல வருடங்களுக்கு முன்பாகவே இந்த வழக்கம் இருந்தாலும் சரியாக எப்போ இந்தக் காட்டு மிராண்டித் தனம் ஆரம்பித்ததென்பது தெரியவில்லை. இதற்கு காரணமாக Sushi உடல் வெப்ப நிலையில் பரிமாறப் படும் போது அதன் உருசி பேணப் படுவதாகச் சொல்கிறார்கள். ஜப்பானில் தொடங்கிய இந்த வியாதி இப்போ நாகரீகமாக மேற்கத்திய நாடுகளுக்கும் பரவி விட்டது. நான் படித்த செய்தி இங்கிலாந்தில் ஆரம்பிக்கப் பட்ட இத்தகைய ஹோட்டல் பற்றியதுதான் .




பேரழகுள்ள மாடல்கள் இந்த வகையில் தங்களைத் தாழ்த்தி ,கேவலம் எச்சி இலையாகி பெண்மையை விலை பேசி விற்கிறார்கள். இதற்காகவே அந்த ஹோடேல்களைத் தேடிச் செல்லும் கேடுகெட்ட பணக் காரக் கும்பல் இந்த உணவைப் பெண்ணுடலில் பரிமாற பத்து மடங்கு அதிகமாகப் பணம் செலுத்துகிறார்கள்.

இதை எதிர்த்துப் போராடும் பல பெண்ணினவாதிகள் இந்த வழக்கத்தை நிறுத்த முயன்றாலும் ரகசிய அறிவித்தல்களோடு வெவ்வேறு நட்சத்திர ஹோடேல்களில் இந்த கேளிக்கை விருந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சீனா மட்டும் இதனை எதிர்த்து சட்டம் கொண்டுவந்து, முற்றாக ஜப்பானிய நிர்வாண Sushi ஹோடேல்களைக் களைந்தெறிந்துள்ளது . மற்றைய நாடுகள் சீனாவைப் பின் தொடர்ந்து எப்போ இதனை சட்ட விரோதமாக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

(ஒரு நண்பர் தந்த கருத்தினை ஏற்று இங்கே நான் பிரசுரித்த சில படங்களை அகற்றி அதற்கான இணைப்புகளைத் தந்திருக்கிறேன்.)

http://en.wikipedia.org/wiki/Nyotaimori

http://images.google.co.uk/imgres?imgurl=http://i.dailymail.co.uk/i/pix/2008/10_06/SushiBodyMPA_650x4

.

Thursday 11 March 2010

சிற்பமாய் உன்னுருவம் ..



நீ சொல்லாத வார்த்தைகள்
சொன்ன அர்த்தங்கள் அதிகம்
நீ சொல்லித் தீர்த்தவை
என் நெஞ்சிலே தஞ்சம் .


உன்னை மறக்க நினைத்தால்
என்னை வெறுக்குது நெஞ்சம்
உன்னை வெறுக்க முனைந்தால்
முள்ளாய்க் குத்துது மஞ்சம்.

அற்பமாய் எனை நினைத்து
நீ கொட்டிய வார்த்தைகள்
என் இதயத்தில் உளியாகி
சிற்பமாய் உன்னுருவம் .


.

Monday 8 March 2010

மீண்டு வந்த ஆலயம்



1960 ஆம் ஆண்டு கட்டலோனியா ( Catalonia) என்ற நகரில் ஏற்பட்ட வரட்சியைப் போக்க அங்கே நீரைக் கொண்டு வந்து தடாகம் அமைப்பதற்காக சான்ட் ரோமா ( Sant Roma) என்ற நகர், திட்டமிடப்பட்டு வெள்ளத்தால் மூழ்கடிக்கப் பட்டது. அப்போது அந்த ஊரில் 1200 பேர் குடியிருந்தார்கள். அவர்களை அவசரமாக வெளியேற்றினார்கள். அந்த நகரம் முழுவதும் நீரில் முழ்கியபோது, பதினோராம் நுற்றாண்டைச் சேர்ந்த, பிரசித்தமான ஒரு கல்லினால் கட்டப்பட்ட தேவாலயமும் முழ்கியது. எல்லா கட்டடங்களும் முற்றாக மூடப் பட்டாலும் தேவாலயத்தில் மணிக் கோபுரம் மட்டும் வெளியே தெரிந்தது.






ஆனால் அண்மையில் 2008 ஆம் ஆண்டு , சுமார் 50 வருடங்களின் பின் பூமி வெப்பமானதால் ஏற்பட்ட அதீத வரட்சியினால், அந்தப் பிரதேசம் குடிக்கத் தண்ணீர் இல்லாத அளவுக்குப் பாதிக்கப் பட்டது. அப்போது அருகிலிருந்த அணை வற்றியதால் கொஞ்சம் கொஞ்சமாக இந்தத் தேவாலயம் வெளிப் பட்டது. சித்திரை மாதம்( 2008 ) முழுதாக வெளிவந்ததால் ,அந்தக் காட்சியைக் காண உல்லாசப் பயணிகள் படையெடுத்தனர்.





தொலைக் காட்சியில் இந்தச் செய்தியை ஒலி பரப்பி தேவாலயம் வெளிவந்ததை எண்ணியும், உல்லாசப் பயணத் துறை விரிவடிந்ததை நினைத்தும் மகிழ்வதா? அல்லது அங்கே கப்பல்களில் வந்திறங்கிய குடிநீர் போதாமல் மக்கள் படும் அவஸ்தையை நினைத்து கலங்குவதா? என்ற தெரியவில்லை என்றார்கள்.
மொத்தத்தில் இது சொர்க்கமா? நரகமா? என்று தெரியாமல் அங்குள்ள மக்கள் கலங்கினார்கள்.
ஆனால் இப்போ தண்ணீர் தடாகங்கள் கட்டப் பட்டு குடிநீர் பிரச்சனை தீர்க்கப் பட்டு விட்டது. தேவாலயமும் முற்றாக வெளிப் பட்டுள்ளது.











.