நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Friday 28 August 2009

விருது வாங்க வாருங்களேன் !


இந்த சுவாரசிய விருது பலர் வலையங்களை அலங்கரித்துவிட்டதை நீங்கள் அறிவீர்கள். இதை யார் ஆரம்பித்து வைத்தவர் என்று எனக்குத் தெரியவில்லை.
இந்த வலையுலகில் எனக்குக் கிடைத்த அருமை நண்பி சக்தி (வீட்டுப் புறா)
இந்த விருதைக் கொடுத்து என் வலையத்தையும் அலங்கரித்து விட்டார். நன்றி சக்தி.

இந்த விருதை என் வாழ்த்துக்களுடன் சேர்த்து இவர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறேன்.

தமிழரசி- ---------எழுத்தோசை

ரங்கன்------------இது ஒரு கனவுக் காரரின் பக்கம்

உழவன் -----------உழவனின் உளறல்கள்

அ.மு .செய்யது---மழைக்கு ஒதுங்கியவை

R.Gopi-------------எடக்கு மடக்கு

குமரை நிலாவன்--மனம் பேசிய மெளனங்கள்

நேசமித்திரன்----நேசமித்திரன் கவிதைகள்.

பலருக்கும் இதைத் தர மனமிருந்தாலும், காணும் வலையங்கள் அனைத்தையும் இந்த விருது அலங்கரிப்பதால் எனது பட்டியலை இத்துடன் முடித்துவிட்டேன்.
என்றும் போல் இன்றும் என் அன்பும் வாழ்த்துக்களும்.

Tuesday 25 August 2009

ஜேர்மனியில் சில நாட்கள்

அண்மையில் என் குடும்பத்துடன் ஜேர்மனி போயிருந்தேன். தற்போது என் தாயார் அங்கு இருப்பதால் அடிக்கடி போய் வந்து கொண்டிருக்கிறேன். இம்முறை ஒல்லாந்து போய் அங்கு என் சித்தியுடன் சில மணி தங்கி பயணத்தைத் தொடர எண்ணினோம். எப்போதும் காரில் தான் பயணம் செய்கிறோம். லண்டனிலிருந்து கிட்டத்தட்ட பதின் மூன்று மணித்தியால ஓட்டம். எங்களைப் பொறுத்தவரை விமானப் பயணத்தை விட கார்ப் பயணம் மிகவும் சுவாரசியமானது. பல வித சிற்றுண்டிகளும் , கோப்பி, தேனீர் எல்லாம் தயாரித்துக் கொண்டு பயணத்தைத் தொடங்கினோம். அதிகாலை மூன்று மணிக்கு எங்கள் பயணம் தொடங்கியது.
மாலையில் சிறிது நேரம் கண்ணயர்ந்து ஓய்வெடுத்திருந்ததால் எல்லோரும் உற்சாகமாகத்தான் இருந்தோம்.
எங்கள் வீட்டிலிருந்து டோவெர் (Dover) துறைமுகம் சுமார் மூன்று மணி ஓட்டம்.
நான் தான் காரோட்டினேன். இங்கிலாந்தில் மட்டும் தான் என்னால் ஓட்ட முடியும் . ஐரோப்பிய விதிமுறைகள் வேறுபட்டவை என்பதால், அங்கு காரோட்ட எப்பவுமே நான் முயலவில்லை . எமக்குப் பிடித்த பாடல்களுள்ள ஒலித்தட்டுக்கள் எங்கள் பயணத்தை ரம்மியமாக்கின. எப்போதும் பாடல்களுடன் சேர்ந்து நாங்களும் பாடுவோம். காரோட்டுபவர் நித்திரை கொள்ளாமல் இருக்க நாங்கள் கையாளும் முறையிது. பொதுவாக டூயட் பாட்டுக்களைத் தெரிவதால் ஒருவர் முறைக்கு அவர் பாடாவிட்டால் நித்திரையாகி விட்டார் என்று அறிந்து காரை நிறுத்தி ஓய்வெடுப்பொம். டோவெரிலிருந்து கப்பல் ( ferry) மூலம் கலை ( Calais ) துறைமுகத்தை வந்தடைந்தோம்.

அப்போ நன்கு விடியத் தொடங்கியிருந்தது. கப்பலில் ஒன்றரை மணிநேரம் சிறிது கண்ணயர்ந்ததால் எல்லோரும் விழிப்பாக இருந்தோம். நாம் கடந்து சென்ற அழகான இயற்கைக் காட்சிகளையும் ரசிகக்u நிலையில் இருந்தோம். பலமுறை நிறுத்தி இளைப்பாறியதால் மதிய நேரம்தான் என் சித்தி வீட்டையடைந்தோம். என் சித்தியை என் கணவரும் , பிள்ளைகளும் முதல் முறை நேரில் காண்கிறார்கள். அந்தச் சந்திப்பு மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது.
அங்கு மதிய உணவின் பின்னர் சற்று தூங்கி எழுந்தபின்னர் பிற்பகல் ஜேர்மனியை நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது. நள்ளிரவு அங்கு போய்ச் சேர்ந்தோம்.

பலமுறை நாங்கள் அங்கு சென்றதாலும், ஏற்கெனவே பிரபல உல்லாசத் தலங்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டதாலும், இம்முறை எங்கும் போவதில்லை என்று நினைத்திருந்தோம். ஆனாலும் என் தம்பியின் உந்துதலால்
நாம் ஏற்கனெவே பார்வையிடாத சில உள்ளூர் தலங்களைப் பார்வையிடலாமெனப் புறப்பட்டோம். முதல் நாள் ஹடாமர் என்ற இடத்தில் உள்ள ரோஸ் தோட்டத்தைப் பார்வையிட்டோம். இது ஒரு மலை உச்சியில் ஒரு சிறிய தேவாலயததுக் கருகிலிருக்கிறது. இதன் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. மிகச் சிரமப் பட்டு அந்தத் தோட்டத்தைப் பராமரிக்கிறார்கள் என்று தோன்றியது. நான் கண்ட அந்த அழகு வனத்தின் காட்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்துடன் புகைப் படமாக்கினேன்.


அடுத்தநாள் சிலமைல் தூரத்தில் இருந்த லிம்பேர்க் என்ற நரத்திலுள்ள பதின் மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ,ஒரு மலை உச்சியில் அமைந்த தேவாலயத்தைத் தரிசித்தோம். இது பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதுப்பிக்கப் பட்டாலும் உள்ளே காணும் கலை நுட்ப வேலைப் பாடுகள் மிகவும் ஆச்சரியப் படுத்தும் வகையில் இருக்கின்றன. அங்கிருந்து புறப்பட்டு மலையடிவாரத்திலுள்ள நதிக்கரையை வந்து சேர்ந்தோம். கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்து கிடந்த அருவி, பச்சைப் பசேலென இருந்த வெளி, அத்தனையும் இணைந்து தந்த ரம்மியமான சூழல் , மெய் மறக்க வைக்கும் இயற்கைக் காட்சி, என் மனதை இலேசாக்கி இயற்கையின் விந்தையை மெச்சிக் கொள்ள வைத்தன.





முன்பு நாங்கள் ஜேர்மனி வந்திருந்த தருணங்களில், எதையோ தொலைத்துவிட்டுத் தேடும் அவசரத்துடன், பல இடங்களை குறிப்பிட்ட நாட்களில் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கியிருந்தது. இப்படி சாவகாசமாக நடந்து திரிந்து இயற்கையை ரசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 'இத்தனை தூரம் வந்து விட்டோம், அருவியில் வலித்துச் செல்லும் படகில் ஒரு மணி நேரம் போகலாம் ' என்று என் தம்பி சொல்ல, எல்லோரும் அதற்கு இணங்கினோம். சிறிது தொலைவிலுள்ள படகுத் தரிப்பை நாங்கள் அடைந்தபோது நான் கண்ட காட்சியை கிழே புகைப் படத்தில் பாருங்கள்.


இந்தக் காட்சி என்னைச் சிந்திக்க வைத்து கண்கலங்க வைத்து விட்டது. அருவிக்கு மறுபுறத்தில் உல்லாசப் பயணிகள் தங்கியிருந்த காம்பிங் சைட் ( camping site) தான் அதற்குக் காரணம். மாளிகை மாதிரி வீடுகளில் , பல பல உல்லாச வசதிகளுடன் வாழும் மக்கள் , அந்த வாழ்க்கையில் சலிப்படைந்து , விரக்தியினால் , ஒரு மாறுதலுக்காக இங்கே வருகிறார்கள். இங்கே கூடாரங்களில் சில வாரங்கள் இருந்து, பக்கத்திலிருந்த அருவியில் மீன் பிடித்து, ஆதி கால மனிதர்கள் போல் தணலில் உணவைச் சுட்டுத் தின்று கொண்டு இளைப்பாறுகிறார்கள். இது இங்கு சகஜமானாலும் அந்தக் காட்சி , என் தாய் நாட்டில் கல்முனைக் கடற்கரையோரத்தில் நான் கண்ட காட்சியை எனக்கு நினைவு படுத்தி விட்டது. சுனாமி அழிவுக்குப் பின்னால் ஒரு வருடம் கழித்து நான் ஊர் போயிருந்த போது , ஒரு தகரக் கூடாரமே அவர்கள் வீடாக அந்த வருடம் முழுவதும் , நெருப்பு வெயிலில் அவிந்து கொண்டிருந்த பல குடும்பங்களை நான் அங்கு கண்டேன்.அந்தக் காட்சி இன்னும் என் கண் முன் நிற்கிறது. எத்தனை பேர் பணத்தை அள்ளி இறைத்தும் பாதிக்கப் பட்ட அந்த துரதிஸ்ட சாலிகள் வாழ்க்கை மாறவேயில்லை. இற்றைவரை அந்த இயற்கைக் காட்சியை ரசித்த என்னால் அதற்கு மேலும் எதனையும் ரசிக்க முடியவில்லை.
எந்தக் காட்சியும், பார்ப்பவர் கண்ணையும், அவர்கள் நெஞ்சையும் பொறுத்துத் தானே ரம்மியமாகிறது. என்னிடம் தெரிந்த இந்தத் திடீர் மாற்றத்துக்கு என்னைச் சுற்றி இருந்தவர்களுக்குக் காரணம் தெரியவில்லை. அதைச் சொல்லி அவர்கள் மனதை நோகடிக்கவும் நான் விரும்பவில்லை. விந்தையான உலகம் தான். அவர்கள் அங்கே அப்படி! இவர்கள் இங்கே இப்படி!


.

Wednesday 19 August 2009

பர்மா அதிசயம்


பர்மாவில் எடுக்கப்பட்ட ,ஒரு அருவிக்கருகில் அமைந்த ,மலையடிவாரக் காட்சியை இந்தப் புகைப் படத்தில் நீங்கள் காண்கிறீர்கள். இதை எவரும் இலகுவாக எடுத்துவிட முடியாது. இந்தப் புகைப் படத்தை வருடத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டும், சூரியக் கதிர்கள் ஒரு குறித்த கோணத்தில் அந்த மலையில் படும்போது தான் எடுக்க முடியும். இதிலுள்ள சிறப்பம்சம் என்னவென்று புரிகிறதா?
இப்போ உங்கள் தலையை இடது பக்கம் சரித்து , இந்தப் படத்தைத் திரும்பவும் பாருங்கள்........புரிகிறதா?
இதே படத்தை நான் நேராகத் திருப்பி இருக்கிறேன் பாருங்கள்.......





பிற்குறிப்பு.

இந்தப் படம் கொரியாவில் சிறுவர் புத்தகத்தில் வரையப் பட்ட ஒரு ஓவியம் என்பதும் இப்படி ஒரு மலையடிவாரம் கிடையாதென்பதையும் ஒரு வாசகர் எனக்கு அறியத் தந்த floraipuyal என்ற பதிவருக்கு என் நன்றி.
மேலதிக விபரங்களுக்கு
http://www.hoax-slayer.com/burma-rock-formation.html


.

Sunday 16 August 2009

கண்டு பிடியுங்கள்!

நண்பர்களுக்கு ஒரு சின்னக் கேள்வி. பதில் கண்டு பிடியுங்கள். உங்கள் மூளைக்கு சில நிமிட வேலைதான். சரியான பதிலை யார் சொன்னார்கள் என்று நான் பின்னர் சொல்கிறேன்.
*************************************************************************************
இரண்டு நண்பர்கள் ஒரு அறையில் தங்கியிருந்தார்கள். அப்போ அவர்களைச் சந்திக்க ஒரு விருந்தினர் வந்திருந்தார். மூவரும் இருந்த ஆப்பிள் பழங்களைப் பகிர்ந்து சாப்பிட்டார்கள். ஒரு நண்பரிடம் 3 ஆப்பிளும், மற்றவரிடம் 2 ஆப்பிளும் இருந்தது. ஒவ்வொரு பழத்தையும் மூன்று துண்டுகளாக வெட்டிச் சரி சமமாகப் பகிர்ந்தார்கள். கதைத்தபடி 5 ஆபிள்களையும் முடித்து விட்டார்கள். சந்திக்க வந்த நண்பர் புறப் பட்ட போது அவர்கள் தனக்குப் பகிர்ந்து தந்த ஆபிள்களுக்கு 5 டாலர் கொடுத்து விட்டுப் போனார். அந்தப் பணத்தை நண்பர்கள் எப்படிப் பகிர்வதென்று தெரியாமல் திக்கு முக்காடினார்கள்.
விட்டு விட்டுப் போன குடையை எடுக்கத் திரும்பி வந்த விருந்தினர், அந்தப் பணத்தை சரியாக அவர்களிடையே பகிர்ந்து கொடுத்து அந்தப் பிரச்சனையை தீர்த்து வைத்தார். கேள்வி இதுதான். இரண்டு நண்பர்களுக்கும் கிடைத்த டாலர் எவ்வளவு? உங்கள் பதிலை ஆவலுடன் பார்த்திருக்கிறேன்.



.

Friday 7 August 2009

கோபம்


ஒரு போதகர் தன் சீடர்களிடம் ஒருநாள் '' நீங்கள் கோபப்படும் போது ஏன் உரத்துக் கத்துகிறீர்கள்? என்று எப்போதாவது சிந்தித்தீர்களா? '' என்று கேட்டார். சில நிமிடங்களின் பின்னர் ஒருவர் '' நாங்கள் கோபப் படும்போது எங்கள் அமைதியை இழக்கிறோம். அதனால் தான் சத்தமாகக் கத்துகிறோம் '' என்று சொன்னார்.
போதகர் அந்தப் பதிலை ஏற்றுக் கொள்ளவில்லை. '' நீங்கள் அமைதியை இழந்தாலும் கேட்பவர் பக்கத்தில் இருக்கும் போது நீங்கள் அவர் காது கிழியக் கத்துவது ஏன்? ஏன் நீங்கள் அதே விடயத்தை கத்தாமல் , மெல்லிய குரலில் சொல்லக் கூடாது ?'' என்று திரும்பவும் கேட்கிறார். எவருக்கும் சரியான பதில் தெரியவில்லை.
அவர் தந்த விளக்கம் இதுதான் . இரண்டு பேர் ஒருவரோடு ஒருவர் கோபப்படும் போது அவர்களது மனங்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகித் தூரத்தில் போகின்றன. அதனால்தான் அந்தத் தூரத்தைத் தாண்டி நீங்கள் சொல்லும் சொற்கள் மற்றவரைச் சென்றடைய எங்களையறியாமல் எங்கள் குரலை உயர்த்துகிறோம். எங்கள் கோபம் அதிகரிக்க , அதனால் மனங்களின் இடைவெளி மேலோங்க , அதற்கேற்ப எமது குரலும் மேலோங்குகிறது.

இருவர் ஒருவரை ஒருவர் காதலிக்கும் போது என்ன நடக்கிறது? இதற்கு எதிர்மாறாக அவர்கள் மனங்கள் நெருங்கிப் போகின்றன. அதனால் தான் அவர்கள் மெதுவான குரலில் பேசுகிறார்கள். இன்னும் நெருங்கிப் போனதும் அது கிசு கிசுப்பாக மாறி விடுகிறது. காதல் முற்றிப் போய் விட்டால் அங்கு வார்த்தைகளே தேவையில்லாமல் போய் விடுகிறது. மௌனமே ஒரு மொழியாகி விடுகிறது . இது அவர்கள் மனங்களின் நெருக்கத்தைக் காட்டுகிறது.

என்ன அழகான விளக்கம் இது. நீங்கள் ஆத்திரப்பட்டுப் பேசும்போது மற்றவர் மனங்களைத் தூரத்தில் விலக்கும் வார்த்தைகளை பாவிக்காதீர்கள்.


.