நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Sunday 31 May 2009

நான் ஏன் இப்போ கண் கலங்குகிறேன்?


பிள்ளைகள் வெளியில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். குளிர் காலம் முடிந்து இன்றுதான் ஓரளவு வெட்கையாக இருக்கிறது. இதற்காகவே காவல் இருந்ததுபோல் காலை முதல் இவர்கள் வெளியில் உருண்டு பிரண்டு விளையாடுகிறார்கள் . சமையலறையில் பாத்திரங்களைக் கழுவியபடி ஜன்னல் வழியாக எனது ரோசாத் தோட்டத்தைப் பார்க்கிறேன். எல்லாச் செடிகளும் ஒரே நேரத்தில் பூத்து ஒரு கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. இந்த வீட்டுக்கு நாங்கள் குடிவந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது. நான் இங்கு வந்ததும் நாட்டிய ரோசாத் தடிகள் இப்போதான் முதல் முறையாகப் பூக்கத்
தொடங்கியிருக்கின்றன. என் கண்ணே பட்டிடும் என்றெண்ணி என் கவனத்தை பிள்ளைகள் பக்கம் திருப்பினேன் .

எனது கடைக்குட்டி விஜி எப்படியோ ஆப்பிள் மரத்தில் ஏறியிருந்தாள். கீழே இறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன் .சின்ன வயதில் நானும் தம்பியும் மாமரத்தில் ஏறி பஸ் வண்டி விளையாட்டு விளையாடியது நினைவு வந்தது. இங்கு இவர்கள் சூரியனைக் கண்டதும் வருடத்தில் இரண்டு மூன்று மாதங்கள் தோட்டத்துக்கு ஓடுவதைக் காணப் பரிதாபமாக இருந்தது. விஜியை மரத்திலிருந்து இறக்கிவிட்டு கவனமாக அவர்களை விளையாடச் சொல்லிவிட்டு உள்ளே வந்தேன்.அவர்களுக்குப் பிடித்த கொத்து ரொட்டி செய்யலாம் என்று தோன்றியது. எனக்கும் கூட சூரியனைக் கண்டால் தான் வேலை செய்யும் மூடே வருகிறது.

ஒரு மணிநேரும் போயிருக்கும் என்று நினைக்கிறேன். சமையலை முடித்துவிட்டு பாத்திரங்களைக் கழுவப் போனபோது எதேச்சையாக என் ரோசா தோட்டத்தை பார்த்து அப்படியே அதிர்ந்து போனேன் .மரத்தில் ஒரு பூ தன்னும் இல்லை.நடந்ததை என்னால் ஊகிக்க முடிந்தது. ஆனாலும் என்னால் அதனைத் தாங்க முடியவில்லை.

கல்யாணம் ஆன புதிதில் என் கணவர் எனக்கு ஒரு நாள் கஷ்டப்பட்டு வீட்டை அலங்கரித்திருந்தார். வீட்டுக்குள் நுழைந்தபோது கம கம என வாசனை வந்தது. கூடம் பளீர் என்று இருந்தது . எனக்காக ரொம்ப நேரம் ஒதிக்கி அத்தனையும் செய்திருந்தார் என்று தெரிந்தது. இவருக்குக் கூட இப்படியெல்லாம் செய்ய தெரிகிறதே என மகிழ்ந்து முத்தமிட்டு நன்றி சொன்னேன் . சாப்பாட்டு அறைக்குள் புகுந்ததும் மேசையில் அழகாக என்னைப் பார்த்து சிரித்த சிகப்பு ரோஜாக்கள் என்னை நிலை குலைய வைத்தன.அதிர்ந்து போய் என் செடியைப் பார்த்தபோது என் கண் கலங்கி விட்டிருந்தது . எனது திடீர் மாற்றத்தைக் கண்டு என் கணவர் பதறிப் போய் விட்டார். அந்தப் பூக்கள் செடியில் தான் மிக அழகாக இருந்தன என நான் விளக்கியபோது அவரால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை .இனி எப்பவுமே என் செடியில் இருந்து பூப் பறிக்க மாட்டேன் என்று சொன்னார்.

வெளியே போய் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் அவர்களைக் காணவில்லை .கவலையும் கோபமும் முட்டி மோத வீட்டின் முன்பக்கம் போகிறேன் .பக்கத்துக்கு வீட்டிலிரிந்து அவசரமாக ஓடி வருகிறார்கள் . ‘ யாரைக் கேட்டு பக்கத்துக்கு வீட்டுக்குப் போனீர்கள்? விளையாடியது காணும் உள்ளே வாருங்கள்" என்கிறேன்.என் பின்னால் வருகிறார்கள் ."தோட்டத்திலிருந்த பூக்கள் அனைத்தையும் யார் பறித்தது? என்று கேட்கிறேன்.ஒருவரை ஒருவர் திரு திரு என்று பார்க்கிறார்கள். ஒரே நேரத்தில் 'விஜி தான்' 'இந்து தான் ' என்று தொடங்குகிறார்கள். 'போதும் ,போதும் இப்போதான் பார்த்து ரசித்தேன் .அதற்குள் இப்படிப் பண்ணிவிட்டீர்கள் ' சொல்லும் போதே என் கண் கலங்கி விடுகிறது. 'மம்மி டோன்ட் கிறை ‘என்றபடி ஓடிவந்து என்னைச் சுத்தி பின்னிக் கொள்கிறார்கள் .அவர்களின் அன்புப் பிணைப்பில் என் அசடுத்தனம் அப்படியே காற்றில் பறந்து விடுகிறது. ஒரு சின்ன விடயத்துக்கு என் குழந்தைகளை இப்படிக் கலங்க வைக்கிறேனே என என் மேலேயே எனக்கு கோபம் வருகிறது.

அவர்கள் கைகால் அலம்பி வந்ததும் இரவு உணவு பரிமாறுகிறேன். சாப்பிடும் போது தயங்கித் தயங்கி 'மம்மி .பூக்களை நாங்கள் என்ன செய்தோம் என்று நிங்கள் கேட்க இல்லையே' என்கிறாள் இந்து. பார்வையாலே’ சொல்லு’ என்கிறேன். பக்கத்துக்கு வீட்டு அண்டி மரியா வாசலில் நாங்கள் பூக்களால் கோலம் போட்டோம் .’இட் இஸ் சோ பிரிட்டி ' என்கிறாள் இந்து. மனதுக்குள் 'ஒ மை கோட் 'என்கிறேன். மரியா இந்த வருடம் எண்பத்தி ஆறு வயதாகி விட்டார். சில மாதங்களாக உடம்புக்கு முடியாமல் போய், வீட்டு வேலைக்கு ஒரு பெண்ணை ஒழுங்கு பண்ணி இருக்கிறார்.ஷாப்பிங் செய்யவும் தோட்டம் செய்யவும் அவரது மகன் அப்பப்ப வந்து போவார். மரியா வாசலில் இவர்கள் விளையாடி குப்பையைப் போட்டு வந்திருக்கிறார்கள் என்று ஆதன்கித்து விடிந்ததும் போய் துப்பரவு செய்து வர வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்.
அடுத்தநாள் காலை சண்டே என்பதால் மிக தாமதமாக எல்லோரும் எழுந்திருக்கிறோம் . கதவடியில் ஒரு சின்னப் பார்சல் என் கண்ணை கவர்கிறது.என் பிள்ளைகள் பேருக்கு மரியா இடமிருந்து வந்திருக்கிறது. அவசரமாக அதனைப் பிரிக்கிறேன். அதற்குள் மணிகளால் கோத்துக் கட்டிய மூன்று கைச்சங்கிலிகள் இருந்தன. தனது நினைவாக இதனை வைத்திருக்கும் படியும் தன் வாசலை அலங்கரித்ததுக்கு நன்றி சொல்லியும் ஒரு செய்தி அதற்குள் இருந்தது. நான் இதனை எதிர்பார்க்கவே இல்லை.அப்படியே அதிர்ந்து போனேன். எப்போதும் என் கணிப்புத் தான் சரி என்ற என் நினைப்புக்கு இது ஒரு நெத்தி அடி. அவர்கள் போட்ட கோலத்தைப் பார்க்காமலேயே எடை போட்ட என் அசட்டுத் தனத்தை நொந்து கொள்கிறேன். ஓடிப்போய் மரியா வாசலை எட்டிப் பார்க்கிறேன். மிக அழகான பூக் கோலமொன்று அவர் வாசலை அலங்கரித்து இருந்தது. இப்போ நான் ஏன் கண் கலங்குகிறேன்?

உள்ளே சென்றபோது இந்துவும் விஜியும் ஷங்கவியும் ஓடி வருகிறார்கள். 'உங்கள் கோலத்தைப் பார்த்தேன் மிக அழகாக இருக்கிறதுஎன்று சொல்லி மரியாவின் பரிசை அவர்களுக்குக் கொடுக்கிறேன். அவர்களது மலர்ந்த முகங்கள் அந்த ரோசாப் பூக்களை விட அழகாக இருக்கின்றன.



Wednesday 20 May 2009

என்ன தவம் செய்தேன்? பகுதி 2

என் நெஞ்சு பட படவென அடித்துக் கொள்ள, கால்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொள்ள ஒருபடியாக அவர் சொன்ன இடத்தை வந்தடைகிறேன். அதே சிரிப்புடன் வரவேற்கிறார். மெதுவாக 'உமக்கு இவ்வளவு அவசர மென்றால் கல்யாணத்தை இந்த மாசமே வைத்து விடுவோமா? ' என்று கேட்டு நையாண்டி பண்ணுகிறார். தடுமாறி ''அப்படி இல்லை'' என்று அவசரமாகச் சொல்லுகிறேன். அவர் நகைச் சுவையை ரசிக்கும் நிலையில் நான் இல்லை. என் உடம்பில் ஓடும் இரத்த மெல்லாம் வேகத்தோடு என் தலைக்குள் பாய்ந்துவிட்ட உணர்வில் முகம் சிவந்து போனேன்.

நான் சில  வருடங்கள் முன்பாக வசந்தனை பல்கலைக் கழகத்தில் காதலித்ததையும் , அவனுடன் பழகிய பின்னர்  மனதளவில்  எம்மிருவருக்கும் எந்தப் பொருத்தமும் கிடையாது என்பதை அறிந்து , அந்த உறவை முறித்து ,அவனது  நினைவை அப்படியே ஒரு கெட்ட கனவென நான் மறக்க முயற்சிப்பதையும் , எப்படி இவரிடம் சொல்வது? எப்படி ஆரம்பிப்பது? ஆனால்  எப்படியும் சொல்லித்தானே ஆக வேண்டும்! மனப் போராட்டத்துடன் , தட்டுத் தடுமாறி ' என் இறந்த காலம் உங்களுக்குத் தெரிய வேண்டும் ' என்கிறேன். என்னை உற்றுப் பார்த்தவர்  ' உம்மை இப்படிக் கவலையாய்ப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை' என்கிறார். சிறிது இடை வெளிக்குப் பிறகு ' உமது இறந்த காலம் உமக்கு மட்டும் தான் சொந்தம். அதில் நான் பங்கு கேட்கவும் முடியாது. எனக்குப் பிடிக்கவில்லை என்று மாற்றியமைக்கவும் முடியாது. ஆனால் உமது வருங்காலம் உமக்கும் எனக்கும் மட்டும் சொந்தமாக இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன்'. என்கிறார். எத்தனை பெரிய உண்மையை, சுருக்கமாக அவரின் இயல்பான புன்னகையுடன் சொல்கிறார். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? என்னால் நடப்பவை கனவா நனவா என்று ஜீரணிக்க முடியவில்லை. கண்கள் கலங்க அவரைப் பார்க்கிறேன். 'எனக்கு எல்லாம் தெரியும். நீர் எதையும் எப்பவும் எனக்குச் சொல்ல வேண்டாம். உம்மைப் பார்த்ததும், நீர் தான் என் மனைவி என்று நான் முடிவு செய்து விட்டேன்' என்கிறார். நொடிப் பொழுதில் என் கனத்த மனம் பஞ்சாய்ப் போனதுபோல உணர்ந்தேன். கண்களைத் துடைத்த வண்ணம் அவரை நேருக்கு நேர் பார்க்கிறேன். என் கண்களில் தெரிந்த மலர்ச்சியைக் கண்டு அவரும் புன்னகைக்கிறார். 'நல்ல செய்தியை அம்மாவிடம் சொல்லி விடவா' என்று கேட்கிறார். 'இல்லை, நாங்கள் சந்தித்தது ஒருவருக்கும் தெரிய வேண்டாம். அப்பா செய்தி சொல்லுவார்' என்று உரிமையுடன் சொல்கிறேன். நாங்கள் பேசியது சில நிமிடங்கள் என்றாலும் அவை என் மனதில் பதிந்து விட்ட பொன்னான நிமிடங்கள் .

மூன்றாம் முறை, என் பிறந்த நாளன்று ஒரு பரிசோடு எங்கள் வீட்டுக்கு வருகிறார்.அழகான ஒரு புடவையைத் தந்து விட்டு ' தங்கை தான் தேர்ந்தெடுத்தாள். உமக்குப் பிடிக்காவிட்டால் அவள் தொலைந்தாள்'  என்று சொல்லிச் சிரிக்கிறார். அப்போது எங்கள் திருமண நாள் நிச்சயமாகியிருந்தது. அன்று என்னைக் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அவ்வளவுதான். பிறகு வருவார் என்று எதிர் பார்த்தேன். வரவேயில்லை , திருமண நாள்வரை தினமும் தொலை பேசியில் ' காலை வணக்கம்' சொன்னார். மொத்தமா இவருடன் எனக்கு மூன்று மணி நேரப் பழக்கம் மட்டும் தான். என்னால் நம்ப முடியவில்லை. இந்தத் தாலியின் வித்தையிது என்று சொல்லி விடவும் முடியவில்லை. ஏதோ ஒரு …….....எனக்கு என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

இப்படியே நடந்தவைகளை என் மனம் அசைபோட அவர் மார்பில் சாய்ந்திருந்தது மட்டும் நினைவிருக்கிறது. அப்படியே அயர்ந்து தூங்கி விட்டேன் என்று நினைக்கிறேன். இவர் நன்றாகத் தூங்கவில்லையோ? அல்லது அதிகாலையில் விழித்து விட்டாரோ? என்னவோ. என் கன்னத்தில் விழுந்திருந்த தலை முடியை விரல்களினால் சுருட்டிக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வு . எனக்குத் தூக்கம் கலையவில்லை. என்னை அறியாமலேயே 'சும்மா இரும் வசந்த்....' என்றவள் , என் குரலே என் காதில் நாராசமாக ஒலிக்கத் திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன். உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல் விறைத்து,  நான் கண்டது கனவா நினைவா என்று தெரியாமல் அலமந்து போனேன். ஏன் அந்தப்  பாவியின் பெயர் ஏன் நாவில்? அதுவும் திருமணமாகி முதல் நாளில்........கண்களைத் திறக்கவே எனக்குப் பயமாகி விட்டது.
'ராஜி' என்று இவர் கூப்பிட வேறு வழியில்லாமல் கண்களை மெதுவாகத் திறக்கிறேன். என் முகத்திற்கு அருகில் குனிந்த அவர் முகத்தில் அதே புன்னகை. எனக்கு ' அப்பாடா' என்று இருந்தது. பாழாப் போன கனவு என்னை இப்படிப் படுத்தி விட்டது என்று ஆசுவாசப்பட்டேன். போன உயிர் திரும்பி வந்த மகிழ்ச்சி எனக்கு .'' ராஜி, எனக்கு அருண் என்ற பெயர் நல்லாப் பிடித்திருக்கிறது. அம்மா ஆசையாய் வைத்தது '' என்று இவர் என் காதில் கிசு கிசுக்கிறார். . அப்படியே தூக்கி வாரிப் போட்டது.. அவர் முகத்தைப் பார்க்கும் சக்தியில்லாமல் கைகளால் என் முகத்தை மூடி விம்மத் தொடங்கி விட்டேன். ' அசடு , அசடு ,அழாதே. இங்கே என்னைப் பார்' என்று என்னை ஆசுவாசப் படுத்துகிறார். 'நீயென்ன வேண்டுமென்றா செய்தாய்? உன் வாய் தவறி அவன் பெயர்  வந்ததிற்கு நீ என்ன செய்ய முடியும்.? எல்லாம் என் தப்பு . எனக்குக் கேட்டதாகவே காட்டியிருக்கக் கூடாது' என்று என்னென்னமோ சொல்கிறார். என்னைத் தேற்றி சகல நிலைமைக்கு நான் திரும்ப சில மணி நேரம் எடுத்தது.
ஒன்று மட்டும் எனக்கு நன்றாகப் புரிந்தது. இப்படி மனிதர்கள் உலகில்  மிக அருமையாகத்தான் இருப்பார்கள். அந்த அருமையான பிறவியை , என்  கணவனாக அடைய, நான் முற்பிறப்பில் ஏதோ ஒரு பெரிய தவம் செய்திருக்கிறேன்.




.

Saturday 16 May 2009

என்ன தவம் செய்தேன்? பகுதி 1

அன்று எனது திருமணம். நள்ளிரவு வரை கொண்டாட்டம் முடியவில்லை .
நண்பர்கள் உறவினர் சேர்ந்து அரட்டை அடித்ததில், நேரம் போனதே தெரியவில்லை. நான் எப்போதும் இப்படி களைத்துப் போனது கிடையாது. யாரோ அடித்துப் போட்டதுபோல் உணர்வு . இன்னும் கொஞ்சம் நேரம் போனால் மயங்கி விடுவேனோ என்ற பயம் எனக்கு .போதாக் குறைக்கு என் புதுச் செருப்பு என் காலைப் பதம் பார்த்து  புண்ணாகி விட்டிருந்தது. என் கணவரைப் பார்க்கிறேன். நான் ஒரு வார்த்தை தன்னும் சொல்லாமல் இருந்த போதும், அப்பிடியே என் மனதைப் படம் பிடித்தவர் போல் ‘நன்றாகக் களைத்துப் போனீர் ‘என்கிறார்.ஒருபடியாக எல்லாம் ஓய்ந்து போய் எங்களுக்கு ஒதுக்கப்பட அறைக்குள் வந்தபோது எனக்கு போதும் போதும் என்றாகி விட்டது..

என் கணவர் ‘முழு நாளையும் வேஸ்ட் ஆக்கிவிட்டார்கள் ‘என்று சொல்லிச் சிரிக்கிறார்.அந்தக் கள்ளம் கபடமில்லாத சிரிப்பு என் களைப்பை விரட்டியடித்தது. அப்படியே அவர் மார்பில் சாய்கிறேன், இறுகக் கட்டி அணைக்கிறார். ‘ பூர்வ ஜென்ம சொந்தம்’ என்று சொல்வார்களே! அதை அப்போ நான் உணர்ந்தேன் .அந்த அணைப்பில் காமம் இல்லை. ஒரு அமைதி, சாந்தம் இருந்தது. அவரது முதல் அணைப்பை, அந்தக் கணத்தை.....அப்படியே அடி மனதில் தங்க வைத்துக் காலால காலமும் காக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவர் ஏதோ சொல்ல முயன்றபோது வேண்டாம் என்பதுபோல் அவர் வாயை என் விரல்களால் மூடுகிறேன். இது மனங்கள் சங்கமிக்கும் நேரம். வார்த்தைகள் இங்கு தேவையில்லை என்று தோன்றுகிறது.
இத்தனைக்கும் இவரை நான் கல்யாணத்திற்கு முன்பு மூன்று தடவை தான் சந்தித்திருக்கிறேன். முதல்முறை அவர் குடும்பத்தோடு என்னை முறைப்படி பெண் பார்க்க வந்தபோது …... அவரது ஆழமான கண்கள் அப்படியே என் கண்களுக்குள் புகுந்து மனதைத் தொட்ட உணர்வு. அவருக்கு என்னை பல  வருடங்களுக்கு முன்னரே  தெரியுமாம் .அவர் தங்கை படித்த அதே ஸ்கூலில் என்னை அவர் பலமுறை பார்த்தாராம் .எனக்கு இவரைக் கண்ட நினைவில்லை . ஒரு வேளை இந்த இடைக்காலத்தில் இவர் முகம் நன்றாக மாறிப் போய் இருக்கின்றதோ ? முறைக்காக எல்லார் முன்னாலும் என்னிடம் ஏதோ கேட்டார் .நானும் பதில் சொன்னேன். என்ன கேட்டார் என்றே எனக்கு நினைவில்லை . அவரது ஊடுருவும் கண்கள் தான் நினைவில் நின்றது. மிக நெருங்கி வந்த ஒரு உணர்வு  எனக்கு. இப்படி முதல் பார்வையிலேயே யாரையும் எனக்குப் பிடித்தது கிடையாது .எனக்கே என் உணர்ச்சிகளை நம்ப முடியாதது போல் இருந்தது.

தனியக் கதைக்க வேண்டுமென்றால் அவர் என்னுடன் கதைக்கலாம் என என் அப்பா சொல்கிறார். இவர் அவசரப்பட்டு ' தேவையில்லை,எனக்கு அவவைப் பிடித்திருக்கிறது .உங்கள் முடிவைச் சொல்லி அனுப்புங்கள் ' என்கிறார். இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதரா? என வியந்து ஆச்சரியத்தோடு இவரைப் பார்க்கிறேன். இவரது தாயார் அதனைக் கவனித்துவிட்டு 'ராஜி ஏதோ கதைக்க விரும்புகிறா போல ' என்று சொல்கிறா .'நோ,நோ 'என்று நான் என்னைச் சுதாகரித்துக் கொள்கிறேன்.  உண்மையில் அவருடன் கதைக்கும் வாய்ப்புக்காக நான் எதிர்பார்த்திருந்தேன். அவர் தலையில் என் இறந்த காலச் சுமையை இறக்கி வைத்து அதன் பின்னரும் என்னைக் கட்டிக்கொள்ள சம்மதமா எனக் கேட்க நான் தவித்துக் கொண்டிருந்தேன். அதற்கு சந்தர்ப்பமே கிடயாததால் குழம்பிப்போய் ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் நிலத்தைப் பார்த்த வண்ணம் இருந்தேன்.

அவர்கள் விடைபெற்றுப் போனபோது ஓடிப்போய் என் அறைக்குள் புகுந்து கதவை இறுகச் சாத்திக் கொள்கிறேன். அம்மாவின் ஆதங்கம் அவள் என்னை அழைத்த விதத்தில் தெரிந்தது. அப்பா சைகையால் ஏதோ சொல்லி இருப்பார் என நினைக்கிறேன். யாரும் அதன்பின் என்னை தொந்தரவு செய்யவில்லை. இரண்டு நாள் இரவும் பகலும் யோசனை செய்து, என் நெருங்கிய நண்பியுடன் கலந்தாலோசித்து , அவரைத் தொலைபேசியில் அழைக்க முடிவு செய்தேன். என் குரலிலைக் கேட்டு அப்படியே அதிர்ந்து விட்டார் என்று நினைக்கிறேன். பதில் வர சில வினாடிகள் எடுத்தது. 'உங்களை நான் சந்திக்க வேண்டும்’ என்று சுருக்கமாகச் சொன்னேன். ‘இப்பவே ரெடி’ என்கிறார். வேலை முடிய அருகிலுள்ள ஐஸ் கிரீம் பார்லர் ஒன்றில் சந்திக்க முடிவு செய்கிறோம். என் நெஞ்சு பட படவென அடிக்க ஆரம்பித்து விட்டது. மிகத் துணிவாக அவரைக் கூப்பிட்டு விட்டேன். என்ன சொல்லப் போகிறேன்? எப்படிச் சொல்லப் போகிறேன்? இவர் அதனை எப்படி எடுக்கப் போகிறார்?  எனக்கு அன்று முழுவதும் வேலையில் கவனம் செல்லவில்லை. தலையில் ஒரு பாராங்கல்லைச் சுமந்து கொண்டு திரிந்ததைப்போல் ஒரே தலை வலி.

விரைவில் தொடரும் ...............

Tuesday 12 May 2009

கண்ணீர் வெள்ளம்


வண்ண வண்ணக் கண்ணழகன்-என்
எண்ணம் எல்லாம் நிறைந்திட்டான்.
கண்ணன் ராதை என்றெண்ணி -நான்
விண்ணை மண்ணில் கண்டிட்டேன்.

சுற்றிச் சுற்றி வந்து நின்றான்-என்
உற்றம் உறவும் மறக்க வைத்தான் .
கொற்றம் அவனே என்றெண்ணி- நான்
சுற்றுச் சூழல் மறந்து விட்டேன்.

கண்ணன் மனதில் கள்ளமடி- அவன்
எண்ணம் எல்லாம் குற்றமடி.
வண்ணம் எல்லாம் கலைந்ததெடி- இந்தப்
பெண்ணின் கண்ணீர் வெள்ளமடி.


.